COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 3, 2016

தலையங்கம்

உணவுப் பறிப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது

ஜெயலலிதா உடல்நிலை தேறி விட்டார். இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார். ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல் பற்றி கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நிர்வாகம் பற்றி அமைச்சர்களுடன் விவாதிக்கிறார். சிங்கப்பூர், லண்டன், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நல்ல சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகிறார். ஜெயலலிதா தனது உணவை தானே உண்கிறார். ஜெயலலிதா எழுந்து உட்காருகிறார். ஜெயலலிதா பார்ம் பியில் கையெழுத்து போடவில்லை. கைநாட்டு வைத்திருக்கிறார்! ஜெயலலிதா உடல்நலம் தேறி வருவது பற்றிய செய்திகளில் எப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பரிணாம வளர்ச்சி!
மூன்று தொகுதிகளுக்கான தேர்தல்களில் போட்டிபோட அஇஅதிமுக வேட்பாளர்கள் தந்துள்ள வேட்பு மனுக்களுடன் இணைக்கப்பட்ட பார்ம் பியில் கையெழுத்து போடக் கூட முடியாத அளவுக்கு ஜெயலலிதா உடல் நிலை இருக்கிறது என்றால், இது ஜெயலலிதாவே வைத்த கைநாட்டா என்று மீம்ஸ்வாசிகளின் கற்பனை நிச்சயம் கேட்கும். கேட்டால் கைது செய்யப்படுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்கள் முடியும் வரை ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பார், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பார், மூன்று தொகுதிகள் தேர்தல் முடியும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று தமிழக மக்கள் பலரும் பலவிதமாக பேசிக் கொள்ளத்தான் செய்வார்கள். அவர்கள் அஇஅதிமுககாரர்கள் போல் சிந்தனைக்கு சீல் வைத்து விட்டவர்கள் அல்ல. ஒருவர் வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது. ஒரே ஒரு வழி இருக்கிறது. அவரது உடல் நிலை பற்றிய உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். ஜனநாயக விரோத கைதுகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
உதய் திட்டம் அமலாக்கம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை, முன்பு கடுமையாக எதிர்த்த கொள்கைகளை, திட்டங்களை தமிழக அரசாங்கம் அமல்படுத்தும் வேகத்தைப் பார்க்கும்போது, தமிழக மக்கள் மனங்களில் எழும் கேள்விகளுக்கு கனத்த பொருள் இருக்கிறது. ஜெயலலிதா நேரடியாக ஆட்சி நடத்தும்போது இந்த மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்பதற்காக இந்தச் சூழலில் அவை அமலுக்கு வருகின்றன என்று சொல்லி விட முடியாது. ஜெயலலிதா ஒரு போதும் மக்கள் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. ஆட்சி செயலிழந்துவிட்டது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஆட்சி எப்போதும் போல் சாமான்ய மக்கள் நிலைமைகள், பிரச்சனைகள் பற்றி எந்த அக்கறையும் இன்றி இயங் குவதையும் இந்த நடவடிக்கைகள் போதுமான அளவுக்குக் காட்டுகின்றன. வருகிற மழை காலத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடந்துள்ளதாகக் கூடச் சொல்கிறார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு கூட கிடைக்காமல் பட்டினியாகக் கிடந்தபோது ரூ.100 கோடிக்கு செலவு செய்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சொன்னதை இப்போது நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
உதய் திட்ட அமலாக்கத்தின் தாக்கம் தமிழக மக்களுக்கு நேரடியாகத் தெரிய சில மாதங்கள் ஆகலாம். உணவுப் பாதுகாப்பு உடனடியாக பறிபோகப் போகிறது. தமிழ்நாட்டில் அரிசி ஆட்சிகளைத் தீர்மானித்தது. ஒரு ரூபாய்க்கு மூணு படி அரிசி எனத் துவங்கியது இன்று 20 கிலோ விலை இல்லா அரிசி வரை வந்துள்ளது. தமிழக மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுகோலாக, மக்கள் விரோதக் கொள்கைகளைத் திணிக்கும் ஆட்சியாளர்களின் எதிர்காலம் காட்டும் கண்ணாடி யாக, தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டம் இருந்து வருகிறது. அதில் கை வைத்தால் அவர்களை உயர்அழுத்த மின்சாரம் தாக்கும்.
ஒரு பக்கம் மதவெறியுடனும் மறுபக்கம் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுடனும் நாட்டு மக்கள் மீது போர் தொடுத்திருக்கிற மோடி அரசு, தமிழக மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாராமான பொது விநியோகத் திட்டத்தில் கை வைக்கிறது. நவம்பர் 1 முதல் இது வரை தந்து வந்த அரிசி ஒதுக்கீடு, விலை இனி கிடையாது என்றும் கூடுதல் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் மிரட்டுகிறது. அஇஅதிமுக பொய் வாக்குறுதிகள் அளித்து மக்கள் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டு நூறு நாள் சாதனை என்று ஒரு பொய் அறிக்கையை படித்துவிட்டு, தேர்தல்களை சந்திக்கிற சமயத்தில் கூட, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு துணை போகிறது. தமிழக அரசுக்கு ரூ.1,200 கோடி, ரூ.2,300 கோடி, ரூ.2,700 கோடி கூடுதல் செலவு என்று விவரங்கள் தரப்படுகின்றன. இந்தத் தொகை எல்லாம் இன்றைய தமிழ் நாட்டில் ஒரு விசயமே அல்ல. தமிழக அமைச்சர்கள் வைத்திருக்கிறார்கள். அல்லது பச்சமுத்து போன்ற  ‘கல்வியாளர்களிடம்இருந்து வாங்கி விட முடியும். இங்கு பணம் கொட்டிக் கிடக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் இது பற்றி பேசும் அஇஅதிமுககாரர்கள், இந்தச் சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது என பெரிய தியாகம் செய்த குரலில் பேசுகிறார்கள். அரசாங்கத்துக்கு பணம் மக்கள் செலுத்தும் வரி மூலம் வருகிறது. அரசு பணம் மக்கள் பணம். அஇஅதிமுககாரர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து எடுத்துத் தந்து இந்த கூடுதல் செலவை செய்யப் போவதில்லை. எந்த இழப்பையும் ஈடு செய்யப் போவதில்லை.
இப்போது பிரச்சனை இந்த நிதிச் சுமை அல்ல. மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்குத் தரும் பரிசுகளை வெட்டினால், இது ஒரு விசயம் இல்லை. ஆபத்து பொது விநியோகத் திட்டத்துக்கு. தமிழக மக்களின் வாக்குகளால் அமலாகிக் கொண்டிருக்கிற பொது விநியோகத் திட்டம் சிறப்பானது என்று மதிப்பிடப்படுகிறது. குறிவைக்கப்பட்ட பொது விநியோகம் நடைமுறைக்கு உதவாது என்று சொல்பவர்கள், அனைத்தும் தழுவிய பொது விநியோகம்தான் சிறந்தது என்று நிறுவ முற்படுபவர்கள் தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தை உதாரணமாகக் காட்டுகிறார்கள்.
இப்போது மத்திய அரசு சொல்லும்படி நடந்துகொண்டாலும் தமிழ்நாட்டில் இருக்கிற நிலைமைகள் தொடரும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் அறிவிப்பில் இருக்கும் பளபளப்பு அமலாக்கத்தில் இருப்பதில்லை என்பதையே பார்த்து வருகிறோம். ரேசன் கடைகளில் உணவுப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகாருக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 20 கிலோ விலையில்லா அரிசி உரியவர்கள் அனைவருக்கும் முறையாகக் கிடைப்பதில்லை. இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு 5 கிலோ அரிசி என்று சுருக்கப்பட்டால், ஏற்கனவே 20 கிலோ அரிசி விலையில்லாமல் பெற்ற இரண்டு பேர் கொண்ட குடும்பம், புதிய திட்டத்தின் படி 16 கிலோவை காசு கொடுத்து வாங்குமா? விலையில்லாமல் வாங்குமா? மற்ற பொருள்கள் எப்படி கிடைக்கும்? இருக்கும் நடைமுறை தொடருமா? நடைமுறைக் கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் வரவில்லை. என்ன நடந்தாலும் அவற்றுக்கு விளக்கம் தரும் வழக்கம் அஇஅ திமுககாரர்களுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோ, பொறுப்பேற்றலோ சற்றும் இல்லாத ஓர் அரசாங்கம் நடந்துகொண்டிருக்கும்போது, நவம்பர் 1 முதல் அமலாகும் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், படிப்படியாக உணவுப் பறிப்புத் திட்டமாக மாறலாம்.
தற்போதைய நிலைமைகளில் தமிழ்நாட்டில் சாவுகளுக்குப் பஞ்சமில்லை. கல்லூரிக்குச் செல்ல தெருவோரமாக தங்கள் கனவுகள், பிரச்சனைகள் பற்றி பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்த மூன்று மாணவிகள் மீது, முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத பிரேக் பிடிக்காத லாரி ஏறி சாகடித்தது. இன்னொரு மாணவி மறு நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவகாசியில் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள உடல் பரிசோதனை மய்யத்துக்கு வந்தவர்கள் செத்துப்போனர்கள். ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் கையேந்தி நின்றவர்கள் சாவு. திருவள்ளூர், சென்னை, காஞ் சிபுரம் மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் சாவு.
இவற்றுடன் பொது விநியோகத் திட்டம் ஒழித்துக் கட்டப்பட்டால் பட்டினிச் சாவுகள் சேர்ந்துகொள்ளும். பொது விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டியது அரசாங்கங்களின் பொறுப்பு. பொறுப்பை நிறைவேற்ற வக்கில்லாமல் மக்கள் வயிற்றிலடிப்பது மோசடி. எலி தின்னட்டும், அழுகிப் போகட்டும், பசித்த மக்களுக்குத் தர முடியாது என்று சொல்வது வஞ்சகம். காட்டுமிராண்டித்தனம். மோடி அரசின் இந்த காட்டுமிராண்டித்தன நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைபோவதை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது.

குருமூர்த்தி மதச்சார்பற்றவர் என்றால் கேட்பவர் கேனயரா என்ன?

பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுத தயாரிப்புகளில் இருந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தியின் கட்டுரை தின மணி நாளிதழில் வெளியானது. பொது சிவில் சட்டம் பற்றி எழுதுவதை விட இந்து பாசிச வெறியை பரப்பும் குருமூர்த்தியின் கட்டுரைக்கு பதில் எழுதுவது கூடுதல் அவசியமாகிவிட்டது. எனவே இந்தக் கட்டுரை.
ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி மீண்டும் ஒரு முறை மதவெறி விஷம் கக்கியிருக்கிறார். இந்த முறை அது பொது சிவில் சட்டம் பற்றியது.
பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் தற்போது நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உருவாக்கியிருக்கும் பின்னணி ஒன்று பற்றி அவர் தனது அக்டோபர் 25 தேதிய கட்டுரையில் சொல்கிறார். ‘தற்போது நாடு முழுவதும் இசுலாமிய அடிப்படைவாதம் பெருகி வருகிறதுஎன்பது அவர் சொல்லும் பின்னணி. ஆர்எஸ்எஸ்காரர்கள் பாசிஸ்டுகள் என்று நமக்கு மிக நன்றாகத் தெரியும். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என நம்ப வைக்கும் ஹிட்லர் உத்தியை, கோயபல்ஸ் உத்தியை, பாசிச உத்தியை குருமூர்த்தியும் கையாள்கிறார்.
இன்று நாட்டில் இந்துத்துவ அடிப்படைவாதம்தான் மதம் தலைக்கேறி வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. குருமூர்த்தி சொல்வதுபோல் இசுலாமிய அடிப்படைவாதம் அல்ல. பசுவைப் பாதுகாப்பதாகச் சொல்லி மனிதர்களை கொலை செய்தது இந்துத்துவ பாசிச கும்பல்கள்தான். இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள், ஒரு தலைக்கு நூறு தலை என்று சொல்லித் திரிவது இந்துத்துவ பாசிச மதவெறியர்கள்தான். மக்களால் நேசிக்கப்பட்ட ஓர் இளைஞனை பாதுகாப்புப் படை கொண்டு கொன்றுவிட்டு, அதையே காரணம் காட்டி இசுலாமிய இளைஞர்களை அதிகாரத்தைப் பிரயோகித்து பிணமாக்குவதும் முடமாக்குவதும் பாசிச பாஜகதான். உள்நாட்டு பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்க முயற்சி செய்வதும் அண்டை நாட்டுடன் எப்போதும் பதட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு தேசப்பற்று என்று பெயர் சொல்வதும் மதவெறி தலைக்கேறிய பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம்தான். பாதுகாப்புப் படைகள் கொண்டு அதிகாரபூர்வமாகவும் இந்துத்துவ வெறிகும்பல்கள் கொண்டு சட்டவிரோதமாகவும் இசுலாமியர்களை வேட்டையாடுவது இந்துத்துவ பாசிச சக்திகள்தான்.
குருமூர்த்தி சொல்வதுபோல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இசுலாமிய அடிப்படைவாதத்தால் எந்தத் தாக்குதலும் யாருக்கும் எங்கும் நேரவில்லை. இசுலாமியர்கள்தான் தாக்கப்படுகிறார்கள். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு, வேலை கிடைக்காமல், வாடகைக்கு வீடு கிடைக்காமல் அலைய நேர்ந்து சாதாராண வாழ்க்கை வாழ முடியாமல் போவது முதல், இந்துத்துவ குண்டர்களின் மதவெறித் தாக்குதல்களுக்கு இரையாக்கப்படுவது வரை, துன்பத்தில், அச்சத்தில் வாழ்கிறார்கள். அடையாளங்களை மறைத்துக் கொள்ள நேருகிற இசுலாமியர்களை கூட நாம் கடந்து வருகிறோம்.
இசுலாமிய அடிப்படைவாதம் பெருகி வருவதற்கும் பொது சிவில் சட்டத்துக்கும் என்ன தொடர்பு, திரு.குருமூர்த்தி அவர்களே? 1937க்கு முன் இந்துக்கள் சட்டங்களைத்தான் இசுலாமியர்கள் கடைபிடித்தார்கள், முஸ்லீம் லீக்தான் ஷரியத் சட்டத்தைத் திணித்தது என்று குருமூர்த்தி சொல்கிறார். ஷரியத் சட்டம் திணிக்கப்பட்டது என்று குருமூர்த்தி சொல்லித்தான் கேட்கிறோம். நாடு முழுவதும் உள்ள இசுலாமியர்கள் அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் படி நடந்துகொண்டிருக்கிறார்கள். குருமூர்த்தி போன்றவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பிதம் செய்வதையே வாழ்நாள் வேலையாக வைத்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் இந்துச் சட்டத்தின்படி நடந்து கொண்டார்கள் என்று சொல்லப் பார்ப்பது இந்த வாதத்தில் இருக்கும் இன்னொரு நச்சுப் பல். வழக்கத்தில் இருந்து வாரிசுரிமை சட்டத்தை பின்பற்றிய இசுலாமியர்கள் திருமணம் உள்ளிட்ட விசயங்களிலும் பொது சிவில் சட்டத்துக்குத் தகுந்தாற்போல் தங்கள் ஷரியத் விதிகளை மாற்றிக் கொண்டிருக்கலாமே என்று திரு.குருமூர்த்தி மேட்டிமை கேள்வி கேட்கிறார். அது அந்த சமூகத்தினரின் விருப்பம். தேவை என்றால் எடுத்துக் கொள்வார்கள். இல்லை என்றால் விட்டுவிடுவார்கள். அவர்கள் இந்தச் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவர்களை வற்புறுத்த முடியாது. ஆனால், பொது சிவில் சட்டம், பொது சிவில் சட்டம் என்று ஆண்டுக்கணக்கில் கத்திக் கொண்டிருக்கிறார்களே, அப்படி ஒரு சட்டம் உண்மையில் என்னவாக இருக்க வேண்டும் என்கிறார்கள்? இந்துக்கள் பின்பற்றும் சட்டத்தை பொது சிவில் சட்டம் என்று சொல்லி இசுலாமியர் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்.
பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை  மீண்டும் சர்ச்சைப் பொருளாகியிருக்கிறது என்று குருமூர்த்தி தனது கட்டுரையை துவங்குகிறார். சமீபத்தில் ஷயரா பானு வழக்கு நடந்த பின்னணி தவிர மற்ற நேரங்களில் இந்துத்துவ வெறியர்களாலேயே இந்த சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இதனால் நாட்டில் இசுலாமிய ரத்தம் ஓட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் இந்துத்துவ வெறியர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதை கவனமாக கடந்து விடுகிறது இந்திய மக்களின் ஜனநாயக விருப்பம். இப்போதும் உத்தரபிரதேசத்தில் தேர்தல்களை சந்திக்க வேண்டியிருக்கிற நேரத்தில்தான் போர்வெறி கூச்சல் முதல் பல்வேறு மூர்க்கமான முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சர்ச்சையையும் இந்துத்துவ வெறியர் கூட்டம் துவக்கி வைத்திருக்கிறது. அது தானாக விவாதப் பொருளாக மாறுவதில்லை. இந்துத்துவக் கூட்டம்தான் தனது பல்வேறு விதமான ஆதாயங்களுக்காக துவக்குகிறது.
அரசியல் சாசனம் சொல்பவை நாட்டு மக்கள் நலன்களுக்கு உகந்தவையாக இருக்கும் வரைதான் அவற்றை ஏற்றுக் கொண்டு நடை முறைப்படுத்த முடியும். அல்லாதபோது அவற்றையும் திருத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அரசியல்சாசனத்தைப் பாதுகாக்கத்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று குருமூர்த்தி சொல்கிறார். மசூதியை இடிக்கச் சொல்லி எந்த அரசியல் சாசனம் சொன்னது? கருவுற்றிருந்த இசுலாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து எரியும் நெருப்பில் போடு என்று அரசியல் சாசனத்தில் எங்கே எழுதப்பட்டுள்ளது? ஒரு மனிதனை கும்பலாக சூழ்ந்து கொண்டு கை, கால்கள் ஒவ்வொன்றாக வெட்டி எறி என்று அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு வலியுறுத்துகிறது? பெண்களை கும்பலாகச் சேர்ந்து வன்முறை செய் என்று திருத்தம்தான் ஏதாவது செய்தோமா? குருமூர்த்தியிடம் பதில் இருக்கிறதா? அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பது பற்றிப் பேச பாசிச மதவெறி கும்பலுக்கு, அவற்றின் பிரதிநிதிகளுக்கு தகுதியில்லை.
பொது சிவில் சட்டத்தை ஆதரித்தால் நீங்கள் மதச்சார்பற்றவராகிவிடுவீர்களா திரு.குருமூர்த்தி அவர்களே? சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதத் தாக்குதலான காந்தி படுகொலை முதல், இன்று வரை, உங்கள் கூட்டம் நடத்திய மதவெறியாட்டத்தின் ரத்தக் கறையை நீங்கள் புனிதமாய் கருதும் கங்கையில் மூழ்கி எழுந்தாலும் போக்கிவிட முடியாது. உங்கள் வெற்று வாய்வீச்சுக்களும் புரட்டல் வாதங்களும் எங்களுக்குப் பழகிவிட்டன.
இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் பிளவு என்று கட்டுரை குறிப்பிடுகிறது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் பிளவு இருப்பதாக யார் சொன்னது? யார் பார்த்தது? இந்து பாசிச வெறியர்கள்தான் அவ்வப்போது கொளுத்தி விடுகிறார்கள். பிரிட்டிஷ்காரனை விட மிக மோசமான பிரித்தாளும் பிளவுபடுத்தும் சூழ்ச்சியை கையாளுகிறார்கள்.
சிறுபான்மையினரே முன்வந்து தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று அவரது கட்டுரையின் இறுதி வரி சொல்கிறது. அவர்கள் தேசிய நீரோட்டத்தில்தான் இருக்கிறார்கள் திரு.குருமூர்த்தி அவர்களே. உங்கள் இந்து பாசிசக் கூட்டம்தான் அவர்களை வெளியேற்றப் பார்க்கிறது. நீங்கள் வரையறுக்கும் தேசிய நீரோட்டம், தேசிய நீரோட்டம் ஆகி விடாது. பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட இந்திய மக்களின் புரிதலின்படியான தேசிய நீரோட்டம் அனைத்து மத நம்பிக்கைகளையும்  உள்ளடக்கியது. அந்த தேசிய நீரோட்டம் பல்வேறு அச்சுறுத்தல்களை, ஆபத்துகளை எதிர்கொண்டு இது வரை எந்தக் கேடும் இன்றி சீராக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் இந்து பாசிச மதவெறி கும்பலின் முயற்சிகள் அந்த பன்முகத்தன்மை கொண்ட, அதே நேரம் ஒன்றுபட்ட தேசிய நீரோட்டத்தின் வலிமை முன் தோற்றுப் போகும்.

பொது சிவில் சட்டம்
ஆடு நனைவதற்காக ஓநாய் ஒருபோதும் அழுவதில்லை

வேலை வாய்ப்பு உருவாக்குவதில் இந்தியா இந்த ஆண்டும் மிகவும் பின்தங்கியுள்ளது. கருப்புப் பணம் வரவில்லை. கிட்டத்தட்ட 65,000 கணக்குகளில் ரூ.65,000 கோடி அளவுக்கு கணக்கு காட்டப்படாத சொத்துக்கள் திரும்பி வந்தது பெரிய சாதனை என்று மோடி பேசுகிறார். இந்த விசயத்திலும் துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறார். கணக்கில் வந்துள்ள இந்தத் தொகை பெருங்கடலின் சிறுதுளி என்றும் ஆழ்கடலில் அமைதி நிலவுகிறது என்றும் மக்களுக்குத் தெரியும். வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவது என்ன ஆனது என மக்கள் கேட்கக் கூடாது. வேறு ஏதாவது அவர்களை பேச வைக்க வேண்டும். தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் வாக்கு வங்கியை வலுப்படுத்திக் கொள்ளும் பிரச்சனைகளை, மிகவும் குறிப்பாக, மதரீதியான துருவச் சேர்க்கையை உருவாக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல்களில் முசாபர்நகர் கைகொடுத்ததுபோல், இப்போது வேறு ஏதாவது பிரச்சனையை கொளுத்திப் போட வேண்டும். பாகிஸ்தானுடன் போர் என்ற பயங்கரவாத முழக்கம் ஒரு புறமும் பொது சிவில் சட்டம் என்ற மோசடி விவாதம் மறுபுறமும் இந்த முறை கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது.
இசுலாமிய தனிச்சட்டத்தில் உள்ள பல்வேறு ஆணாதிக்க நடைமுறைகளுக்கு முடிவு கட்ட, இசுலாமிய பெண்கள் அமைப்புகள் நடத்துகிற போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் அதே நேரம், தற்போது நிலவுகிற மதவெறி சூழலில், பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தை துவக்கும் முயற்சிகளை எச்சரிக்கையுடன் அணுகுவதும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அவசியம்.
தற்போது விவாதம் எழுந்துள்ள பின்னணி
ஷயரா பானு உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்போது வயது 38. அவருக்கு 2002ல் திருமணமானது. கணவர் வரதட்சணை கேட்கிறார். கணவரால் பலவிதமான கொடுமைகளுக்கு உள்ளாகிறார். 10.10.2015 அன்று தபால் மூலம் தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துவிடுகிறார். நீதிமன்றத்துக்கு வந்த ஷயரா பானு தனக்கு நீதி கேட்டதுடன் தலாக் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு 2016 மார்ச்சில் விசாரணைக்கு வந்தபோது, இந்திய இசுலாமிய சட்ட வாரியம், தானும் ஒரு மனுதாரராக சேர்ந்துகொண்டு இசுலாமியத் தனிச் சட்டத்தில் தலையீடு கூடாது என்ற தனது வாதங்களை முன்வைக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாசிசக் கூட்டத்துக்கு மூக்கு வியர்க்கிறது.
சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் வேண்டுமா, வேண்டாமா, என்ன அம்சங்கள் எப்படி மாற்றியமைக்கப்பட வேண்டும், தலாக் முறை ரத்து செய்யப்பட வேண்டுமா என, ஆம், இல்லை என பதில் தரும்படி சில கேள்விகளும் இன்னும் சில கருத்துக்களைச் சொல்ல இடம் தந்து சில கேள்விகளும் கொண்ட கேள்வித் தாள் ஒன்றை சுற்றுக்கு விட்டு பொது சிவில் சட்டம் பற்றி விவாதம் நடத்த அழைப்பு விடுக்கிறது. இந்திய இசுலாமிய சட்ட வாரியம் இந்த இயக்கப்போக்கை தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தகவல் பரப்பு அமைச்சர் வெங்கய்யா நாயுடு நீளமாக ஒரு கட்டுரை எழுதிவிட்டார். பாசிச சக்திகள் விரும்பியது போல் விவாதம் துவங்கிவிட்டது. தேச ஒற்றுமை, பெண்கள் சமத்துவம், உரிமை பற்றியெல்லாம் வெங்கய்யா நாயுடு பேசுகிறார். இந்த விவாதமே தேச ஒற்றுமைக்கு விரோதமானது.
நிலவுகிற சட்டங்களில் இசுலாமிய பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு
இந்தப் பிரச்சனையில் இசுலாமிய பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் நாட்டில் ஏற்கனவே இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அதன் பொருத்தப்பாட்டை உறுதி செய்திருப்பதாகவும் மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் ஷயரா பானு வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்திய இசுலாமிய சட்ட வாரியம் சொல்லியுள்ளது.
ஷரியத் சட்டம் இருந்தாலும் இசுலாமிய பெண்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று வேறு சட்டங்களின் கீழ் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறார்கள். 1980களில் சர்ச்சை உருவாக்கிய ஷா பானு வழக்கு முதல் தற்போது சர்ச்சை உருவாக்கியுள்ள ஷயரா பானு வழக்கு வரை, இசுலாமிய பெண்கள் வேறு சட்டங்களை நாடும்போது உருவானவை.
ஷா பானுவுக்கு 62 வயதாகும்போது அவர் கணவர் (அவர் ஒரு வழக்கறிஞர்) அவரை விவாகரத்து செய்கிறார். அவரது 5 குழந்தைகளும் ஷா பானுவுடன் சேர்த்து வெளியேற்றப்படுகின்றனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜீவனாம்சம் தருவதையும் நிறுத்திவிடுகிறார். தனக்கு மனைவியும் குழந்தைகளும் இருப்பதாகவும் அவர்களை பராமரிக்க போதுமானது மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் அதற்குக் காரணம் சொல்கிறார். மனைவிகள், குழந்தைகள், பெற்றோர் பராமரிப்பு தொடர்பான குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 125ன் கீழ் தனது கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும் என வழக்கு தொடுக்கிறார். மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறது.
இந்திய இசுலாமிய சட்ட வாரியம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரி என்கிறது. பராமரிப்பு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட குரானின் சில வரிகள் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு வருகிறது. அதன்படி விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயமான ஜீவனாம்சம் தரப்படுவது ஒருவரின் கடமை. இந்த மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என்கிறது. நீதிமன்றம் குரானை வியாக்கியானப்படுத்த முடியாது என்று இசுலாமிய மதத் தலைவர்களிடம் இருந்து இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்தபோது, ராஜீவ் காந்தி அரசாங்கம் இசுலாமிய பெண்கள் (விவாகரத்து தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (1986) கொண்டு வந்து, குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 125ன் கீழ் விவாகரத்து செய்யப் பட்ட இசுலாமிய பெண் தொடரும் வழக்கு இனி இந்தச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இசுலாமிய பெண்களுக்கு  குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 125 பொருந்தாது என்றது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3 (1) () நியாயமான பராமரிப்புக்கு தேவையானது தரப்பட வேண்டும் (reasonable and fair provision to be made and paid to her within the iddat period by her former husband) என்றது. இத்தத் காலத்திலோ, அல்லது விவாகரத்துக்குப் பிந்தைய 90 நாட்களிலோ, ஜீவனாம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்தது.
2001ல் டேனியல் லதீஃப் வழக்கில் உச்ச நீதிமன்றம், இத்தத் காலத்துக்கு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஜீவனாம்சம் இத்தத் காலத்துக்குள் அல்லது விவாகரத்து நடந்து 90 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு இதேபோன்ற தீர்ப்புக்கள் கொல்கத்தா, மும்பை நீதிமன்றங்களிலும் வழங்கப்பட்டன.
2002ல் ஷமீம் அரா வழக்கில் மனம்போன போக்கிலான முத்தலாக் முறை செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. தகுந்த காரணங்கள் இல்லாமல் தனது மனைவியை ஓர் இசுலாமியர் விவாகரத்து செய்ய இசுலாத்தில் இடமில்லை என்பதை சுட்டிக்காட்டி 1971ல் வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்தப் பிரச்சனையில் வழங்கிய தீர்ப்பை தனது தீர்ப்புக்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகிறது.
1986 சட்டப்பிரிவை, இந்தத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல வழக்குகளில் இசுலாமிய பெண்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் தற்போது வழங்கப்பட்டுவருகின்றன. மோடியோ வெங்கய்யா நாயுடுவோ இவற்றை மறுத்துவிட முடியாது.
ஆடு நனைவதற்காக ஓநாய் ஒருபோதும்   அழுவதில்லை
1986 சட்டம், டேனியல் லதீஃப் வழக்கு, ஷமீம் அரா வழக்கு ஆகியவற்றில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆகியவை இசுலாமிய பெண்களுக்கு விரோதமாக இருக்கிற தலாக் முறையில் இருந்து பாதுகாப்பு அளிப்பவையாக உள்ளன.
இருப்பினும், இசுலாமிய தனிச்சட்டத்தில் பெண்களுக்கு விரோதமாக இருக்கிற அம்சங்கள் தொடரவே செய்கின்றன. இதுபோன்ற குறைபாடுகள் இசுலாமிய சட்டத்தில் மட்டும் இல்லை. பெண்களுக்கு விரோதமான, அவர்கள் பாதுகாப்புக்கு பாதகமான அம்சங்கள் மற்ற மதச் சட்டங்களிலும் உள்ளன. இந்தச் சட்டங்களுக்கு எதிரான மாற்றங்கள் அந்தந்த மதப்பிரிவுகளின் பெண்கள் மத்தியில் இருந்து, ஆண்கள் மத்தி யில் இருந்து வர வேண்டும். இந்துத்துவ பாசிச சக்திகள் அவற்றை திணிக்க முற்பட்டால் தீவிர எதிர்ப்பு இருந்தாக வேண்டும்.
இசுலாமியச் சட்டப்படி குழந்தைகள் பராமரிப்பு தந்தையின் கடமை. விவாகரத்து செய்யப்பட்ட பெண் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர அந்தக் குழந்தைகளின் தந்தை யிடம் கட்டணம் கேட்கலாமாம்! எவ்வளவு முற்போக்கான பிரிவு! இது மற்ற சட்டங்களிலும் வந்தால் பெண்களுக்கு நல்லதுதான். ஆனால், இப்போது நடக்கிற விவாதம் பெண்கள் நலன் காக்கும் நோக்கம் கொண்டது அல்ல.
வெங்கய்யா நாயுடு தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார். தேச ஒற்றுமை எந்த விதத்திலும் வந்துவிடக் கூடாது என அல்லும் பகலும் கண் காணிப்புப் பணிகளில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் இருப்பவர்களுக்கு இசுலாமியர் மீதான துவேசத்தை கிளப்பி விட, பரப்ப இந்த விவாதம் மற்றும் ஒரு வாய்ப்பு. 80% பேர் சட்டத்துக்குள் வந்துவிட்டார்கள். இனி மற்றவர்கள்தான் வர வேண்டும் என்கிறார் வெங்கய்யா நாயுடு. இசுலாமியர்களும் இந்துச் சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்கிறார். 20%தானே, இருந்துவிட்டு போகட்டும்.
பல இசுலாமிய நாடுகளில் தலாக் முறை ரத்து செய்யப்பட்டுவிட்டது. நல்லது. அவை இசுலாமிய நாடுகள். இது அரசியல்சாசனரீதியாக மதச்சார்பற்ற ஆட்சி நடத்தப்படும் நாடு. இங்கு இசுலாமியர்கள் எண்ணிக்கைரீதியாக சிறுபான்மையினர். அவர்கள் மீது பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை திணிப்பது பெரும்பான்மைவாதத்தை திணிப்பதாகும். இங்கு இப்போது ஆட்சியில் இருப்பது பெரும்பான்மை இந்துத்துவ பாசிசம். அதனால், இந்தக் கட்டத்தில் பொது சிவில் சட்டம் என்ற விவாதம் இசுலாமியரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட விவாதமேயன்றி பெண்கள் மீதான அக்கறை என்று எதுவுமில்லை. ஆடு நனைவதற்காக ஓநாய் ஒருபோதும் அழுவதில்லை.
பிரதமர் மோடிக்கு சில கேள்விகள்
பொது சிவில் சட்டம் பற்றிய உள்நோக்கம் கொண்ட விவாதத்தை அதிகாரத்தில் உள்ள பாஜக கிளப்பி விட்டிருக்கும் பிண்ணனியில் உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு பேரணியில் பேசிய மோடி பெண்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்று சொன்னார்.
தாயின் கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்லும் இந்து சிறைக்குள் தள்ளப்பட வேண்டும். அதே போல், தொலைபேசியில் ஒருவர் மூன்று முறை தலாக் என்று சொல்லி ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவார் என்றால் அதற்கு எனது இசுலாமிய சகோதரி எப்படி பொறுப்பாக முடியும்?’
இசுலாமிய மகள்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா? இசுலாமிய தாய்களும் சகோதரிகளும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இசுலாமிய பெண்களுக்கு சம உரிமை இருக்கக் கூடாதா? சில இசுலாமிய பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற நீதிமன்றங்களில் போராடுகின்றனர். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று உச்சநீதிமன்றம் எங்களிடம் கேட்டதுதாய்களுக்கு, பெண்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படக் கூடாது என்று, மதத்தின் பெயரால் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று நாங்கள் மிகவும் தெளிவாகச் சொல்லி விட்டோம்’.
சாத்தான்கள் என்றும் அசுரர்கள் என்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரையே பழங்கதைகள்  அடையாளப்படுத்தி வந்துள்ளன. பொதுப்புத்தி அதைச் சார்ந்துதான் இயங்குகிறது. சாத்தான் வேதம் ஓதுகிறது என்ற பழமொழியையும் நாம் சட்டென்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
பிரதமர் மோடி அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பும்போது, மோடியிடம் கேட்க நமக்கும் சில கேள்விகள் உள்ளன.
பெண்கள் சமத்துவம், உரிமைகள் பாதுகாக்கப்படுவது பற்றி நீங்கள் இந்த அளவுக்குத் தீவிரமான அக்கறை காட்டுபவர் என்றால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பல்வேறு நாடாளுமன்றத் தொடர்கள் கடந்தும், நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் ஏன் இன்னும் நிறைவேற்றப்படவில்லை? நிலப்பறிக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டதுபோல், குறுக்கு வழியில் ஆதார் சட்டம் இயற்றியதுபோல், பெண்கள் அதிகாரம் விசயத்தில் ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? ஏன் இது பற்றி உங்கள் கட்சியின் பெண்கள் அமைப்புகள் கூட குரல் எழுப்பவில்லை?
காஷ்மீரில் இசுலாமிய பெண்கள் மீதும் பெல்லட் குண்டுகள் வீசப்பட்டு படுகாயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் இருக்கிறார்கள். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வேண்டாம் என்கிறார்கள். ஷரியத் வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் உங்கள் கண்களில் தெரிவதுபோல், காஷ்மீர், மணிப்பூர் பெண்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
குஜராத்தில், முசாபர்நகரில் காவி பாசிச குண்டர்களால் வன்முறைகளுக்கு ஆளான இசுலாமிய பெண்களுக்கு பதில் வைத்திருக்கிறீர்களா? இசுலாமிய சகோதரிகள் என்று சொல்ல உங்களுக்கு நாக்கு கூசவில்லையா?
பாஜக ஆளுகிற அரியானாவில், ராஜஸ்தானில் சாதியாதிக்கக் கொலைகளின் பூமியாக இருக்கின்றன. பெண் சிசுக்கொலை செய்பவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லும் நீங்கள், பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய், தன் துணையைத் தேடிக் கொள்ளும் பெண்களைப் பாதுகாக்க, சாதியாதிக்கக் கொலைகளைத் தடுக்க, நாட்டின் பல மூலைகளில் இருந்தும் குரல்கள் வந்த பின்னும், ஏன் சட்டம் இயற்றவில்லை?
பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து சில சமயங்களில் பிள்ளைகளும் பெற்றுவிட்டு பிறகு யாருக்கும் எதற்கும் பொறுப்பேற்காமல் ஓடிவிடும் இந்து ஆண்களால் துன்பங்களுக்கு ஆளாகும் இந்துப் பெண்களைப் பாதுகாக்க என்ன உருப்படியான வழி இருக்கிறது? (சரளா முத்கல் வழக்கில் நடந்ததுபோல், அப்படி ஓடிப் போகும் ஆண்கள் எல்லாம் இசுலாத்துக்கு மாறி விடவில்லை. இந்துக்களாகவே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்). அதுபோன்ற ஆண்களை தண்டிக்கும் சட்டம் முறையாக அமலாவதை உறுதி செய்துவிட்டீர்களா?
வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் பெண்கள் மீது தொடுக்கப்படும் பல்வேறு விதமான வன்முறைகளைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் அமலாவதை உறுதி செய்ய உங்கள் ஆட்சி ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
நாட்டில் பல லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் குறைந்தபட்ச உரிமைகள் இல்லாமல், தொழிலாளர்கள் என்ற அந்தஸ்து இல்லாமல் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் நிலைமைகளில் மாற்றம் கொண்டு வர சட்டம் எதுவும் இயற்றும் முயற்சி உங்கள் ஆட்சியில் உள்ளதா? நூறு நாள் வேலைத் திட்டத்தில் பெரிய எண்ணிக்கையில் பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு பல மாதங்களாக செய்த வேலைக்கு கூலி தரப்படவில்லை. அந்தச் சட்டத்தை நிறைவேற்ற சுண்டு விரலையாவது இது வரை அசைத்தீர்களா?
இந்தியப் பெண்களுக்கு, இந்து, இசுலாமிய, கிறித்துவ, இன்னும் வேறுவேறு மதங்களைச் சேர்ந்த இந்தியப் பெண்களுக்கு இன்னும் பல கேள்விகள் உள்ளன. அனைவரும் சேர்ந்து கேட்க விரும்பும் கேள்வி ஒன்றும் இருக்கிறது. பெண்கள் சமத்துவம், உரிமை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 01 – 15) 

Search