நேற்று இறால்
பண்ணைகள்....
இன்று ஓஎன்ஜிசி
எண்ணெய் கிணறுகள்....
நாளை
ஹைட்ரோகார்பன்....?
இந்தியாவில்
உலகமயம் அமலாகத் துவங்கிய போது தமிழ்நாட்டின் விவசாயத்தில் அதன் நுழைவு இறால்
பண்ணைகள் வடிவத்தில் நிகழ்ந்தது. அப்போது, பகுதி மக்களிடம் வளம் வருகிறது என்றார்கள். மணிசங்கர அய்யர் பகுதியை துபாயாக
மாற்றப் போவதாகச் சொன்னார்.
இன்னும் பல விசயங்கள் சொல்லி ஏமாற்றினார்கள். நிலத்தை
தந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை பல வழிகளிலும் உருவாக்கினார்கள். இன்று
அந்தப் பகுதியில் முற்றிலும் விவசாயம், வாழ்வாதாரம், நீர், காற்று என எல்லாம் அழிந்துபோய்விட்டது. வளம்
வரவில்லை. கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப் பாதை அடுத்து விவசாய நிலங்களில் அனல்மின்
நிலையங்கள் என்ற வடிவத்தில் வந்தது. இப்போது ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் விவசாய
நிலங்களை விவசாயத்தை விவசாய சமூகத்தை அழிக்கின்றன. இந்த ஒவ்வொரு கட்டத்திலும்
பல்வேறு வழிகளில் சாமான்ய மக்கள் ஏமாற்றப்பட்டு கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டன.
இன்று ஹைட்ரோகார்பன்
திட்டத்திலும் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். வேலைவாய்ப்பு என்கிறார்கள். இந்தப்
பின்னணியில் இறால் பண்ணைகள் வந்த பகுதிகளில் இன்று மக்கள் வாழ்நிலைமைகள் எப்படி
உள்ளன என்று தெரிந்துகொள்ள அவிகிதொசவின் தோழர் அமிர்தலிங்கம், இகக மாலெ நாகை - தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர்
எஸ்.இளங்கோவன், அகில இந்திய
மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர், ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர்
புவனேஸ்வரி ஆகியோர் கொண்ட குழு, ஏப்ரல் 2,
3 தேதிகளில் கொள்ளிடம்
ஒன்றியத்தில் இறால் பண்ணைகளாலும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளாலும் வாழ்வாதாரம் இழந்த
மக்களைச் சந்தித்து உரையாடியது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வெளிப்படுத்துகிற
விசயங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை இறுதி வரை உறுதியாக எதிர்ப்பதன் அவசியத்தை
அழுத்தம்திருத்தமாக எடுத்துச் சொல்கின்றன.
அவ்வளவு நேரம்
அமைதியாகப் பேசிக் கொண்டிருந்த பூசமணி, நீங்கள் அரசியல் அல்லவா பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, வெடித்தார். ‘நான் சொல்றதுல என்னங்க அரசியலு...? எங்க வாழ்க்கை போச்சுன்னு சொன்னா அது
அரசியலா...? அரசாங்கம் எங்களை
வஞ்சித்துவிட்டது’ அடுத்து ஒரு
கேள்வி கேட்டால் அறைந்துவிடுவார் போல் இருந்தது. அவர் வன்முறையாளர் அல்ல.
வாழ்வாதாரத்தை இழந்த ஒரு விவசாயி. அவர் மனதில் இருக்கும் கொந்தளிப்பு
வெளிப்பட்டபோது மிகவும் உக்கிரமானதாகவே இருந்தது.
வீட்டுக்கு
வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் தரும் பழக்கம் நகர்ப்புறங்களில் கூட இன்னும்
இருக்கிறது. கிராமப்புறங்களில் அது மிகவும் இயல்பாக நடக்கும். பூசமணியோ, அவரது அக்கம்பக்கத்தாரோ குடிக்க தண்ணீர்
வேண்டுமா என்று கேட்கக் கூட இல்லை. குடிநீர் வாரத்தில் இரண்டு நாட்கள், இரண்டு மணி நேரங்களுக்கு அவர்கள் வீடுகள்
அருகில் உள்ள குழாய்களில் வருகிறது. அனைவருமாகச் சேர்ந்து இரண்டு குடங்கள்
பிடித்துக் கொள்ள லாம். குடிக்க, சமைக்க வைத்துக்
கொள்கிறார்கள். வேறு தேவைகளுக்கு அங்கு தண்ணீர் இல்லை.
கொள்ளிடம்
தாலுகாவின் காட்டூர் ஊராட்சியில் உள்ள காட்டூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்
பூசமணி. தலித். 40 வயது
இருக்கலாம். அங்கு அவருடன் அவரைப் போல் இன்னும் 40 குடும்பங்கள் உள்ளன.
இவர்கள் வாழும்
பகுதிக்கு அருகில் இதே ஊராட்சியைச் சேர்ந்த செம்மங்காடு என்ற கிராமம் இருக்கிறது(?).
அங்கு இருந்த 45 குடும்பங்கள் அருகில் உள்ள ஆரப்பள்ளம்
ஊராட்சியில் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். செம்மங்காடு இப்போது கிட்டத்தட்ட ஓர்
அத்திப்பட்டி. ஒரே ஓர் ஆறுதல். இதுதான் செம்மங்காடு என்று அடையாளம் காட்ட
முடியும். ஊர் முடியும் இடத்தில், இறால் பண்ணைகள்
துவங்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தன என்று சொல்கிறார்கள்.
நம்ப முடியவில்லை. அதற்கு எந்த அடையாளமும் அங்கு பார்க்க முடியவில்லை. அருகில்
சதுப்பு நிலக்காடு. அதுவும் காய்ந்து போய்தான் கிடக்கிறது.
செம்மங்காடு
கிராமத்தில், இப்போது, ஒரு காலத்தில் மக்கள் பயன்படுத்திய பாதை ஒன்று
உள்ளது. இரண்டு பக்கங்களிலும் வீடுகள் இருந்த இடத்தில் இப்போது அடர்த்தியாக கருவேல
மரங்கள் உள்ளன. மக்கள் செழிப்பாக வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
செம்மங்காடு மக்களின் இன்றைய வாழ்க்கையை, புத்தியை உலுக்கும் விதத்தில் வெளிப்படுத்தும் காட்சி அது. அவர்களுக்காக இறால்
பண்ணை முதலாளிகள் கட்டத் துவங்கிய கோவில் ஒன்று, அந்த மக்கள் வாழ்க்கை போலவே, அதற்கு சாட்சி சொல்வதுபோலவே கட்டி முடியாமல்,
பாழ் பட்டு நிற்கிறது.
‘இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வந்து பார்த்தீர்கள் என்றால்
நாங்கள் வாழ்ந்த சுவடு கூட இங்கு இருக்காது’ என்றார் பூசமணி. ‘எங்கள் ஊரில் இன்று மூளை வளர்ச்சியற்ற 13 குழந்தைகள் இருக்கிறார்கள். இறால் பண்ணைகள்
வந்த பிறகுதான் இது நடந்தது. அதற்கு முன்பு ஒருவர் கூட இங்கு அப்படி பிறந்ததில்லை’.
‘எங்கள் கிராமம்
வளமானது. பசுமையானது. விவசாயம் எங்கள் வாழ்க்கையாக இருந்தது. அறுவடைக்கு, கட்டுத் தூக்குவதற்கு, உளுந்து அடிப்பதற்கு உள்ளூர் ஆட்கள் போதாமல்
எங்கள் ஊர் பெண்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் ஊர்களில் இருந்து எங்கள்
மருமகன்களை வரவழைத்து விவசாயம் பார்த்த ஊர் இது. இன்று எங்களுக்கு குடிக்க தண்ணீர்
இல்லை. எப்படியோ கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அதற்கு படாத பாடு
படுகிறோம்’.
‘எங்கள்
நிலங்களில் உப்பு பாய்ந்துவிட்டது. நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. காற்று
உப்பாகிவிட்டது. அதில் ரசாயனம் கலந்துவிட்டது. எங்களுக்கு சுவாசிக்க சுத்தமான
காற்று கூட கிடையாது’.
அவர்கள் இப்போது
குடியிருக்கிற காட்டூர் கிராமத்துக்கு அருகில் இறால் பண்ணைகள் உள்ளன. இவர்கள்,
இவர்களைப் போன்றவர்கள்
வேறு வழியில்லாமல் கொடுத்த நிலங்களில் அவை அமைக்கப்பட்டுள்ளன. ‘20 வருடங்களுக்கு முன்பு இறால் பண்ணைகள் அமைக்க
இங்கு திட்டங்கள் வந்தபோது எங்களுக்கு விவரம் தெரியவில்லை. கூடுதல் வருமானம்
நல்லதுதானே என்று நினைத்தோம். இப்போதுதான் அது எந்த அளவுக்கு நாசகரமானது என்று
எங்களுக்குப் புரிகிறது. அன்று ஏதேதோ சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள். பெரிய
அளவில் நிலம் கொடுத்தவர்கள் நன்றாக சம்பாதித்து விட்டு ஊரை விட்டு
போய்விட்டார்கள். சிலர் இன்னும் இறால் பண்ணைகள் நடத்துகிறார்கள்’.
‘இங்கு இறால்
பண்ணைகள் வருவதற்கு முன்பு, கடல்நீர்
விளைநிலத்தில் ஏறினாலும் நல்ல நீர் வந்தால் உப்பு அடித்துக் கொண்டு போய்விடும்.
அதன் பிறகு விவசாயம் செய்ய முடிந்தது. எங்கள் நிலங்களுக்கு பக்கத்தில் இருந்த
நிலத்தில் இறால் பண்ணை வந்ததால் எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் போனது.
வேறு வழியின்றி நாங்கள் எங்கள் நிலத்தையும் இறால் பண்ணைகளுக்கு தந்து விட்டோம்.
அன்று ஒரு குழிக்கு 15 ரூபாய்க்கு
எங்கள் நிலத்தை விற்றோம். (1 குழி 144 சதுர அடி. 100 குழி 1 ஏக்கர்) இன்று அது போல் விற்ற நிலங்களில் அவர்கள் பெருமளவில்
சம்பாதிக்கிறார்கள். எங்களுக்குத்தான் ஏதும் இல்லாமல் போய்விட்டது. இந்த சுனாமி
வீடுகளைத் தவிர எங்களிடம் எதுவும் இல்லை’.
‘எங்கள் ஊரில்
உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த 125 ஏக்கர் நிலத்தில் 85 ஏக்கர் நிலம் இறால் பண்ணையாக உள்ளது. மீதி
நிலம் வீணாக உள்ளது. நிலம் விற்ற காசை வைத்து பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. 2 ஏக்கர் நிலம் விற்ற காசில் 2 ஆடுகள் வாங்கியவர்கள் கூட இருக்கிறார்கள்’.
‘இறால் பண்ணைகள்
எங்கள் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டன. இதற்கு மேல் ஏதாவது கேட்டால் நான்
அழுதுவிடுவேன்’.
அதற்கு மேல்
அவரிடம் எதுவும் கேட்கவில்லை. வேறு சிலர் பேசத் துவங்கினார்கள். கொடுங்கதைகள்
சொன்னார்கள். அவர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. வேறு
மாவட்டங்களுக்குச் சென்று பிழைக்கிறார்கள். இறால் பண்ணைகளில் சிலர் வேலை
செய்கிறார்கள். அருகில் உள்ள பழையாறு துறைமுகத்தில் சிலருக்கு வேலை கிடைக்கிறது.
சிலர் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவை நிரந்தரமற்ற வாழ்வாதாரங்கள். நாசம்.
சுற்றிலும் நாசம். அதன் நடுவில் நாளும் நாசமாகும் வாழ்க்கை.
செம்மங்காட்டில்
பாதை மட்டும் எப்படி அப்படியே வாகனம் செல்லும் அளவுக்கு வசதியுடன் இருக்கிறது?
இறால் பண்ணைக ளுக்குச்
செல்ல அதுதான் வழி!
கொள்ளிடம்
ஒன்றியத்தின் பழையபாளையம் ஊராட்சியின் கொடைகாரன்மூலை என்ற கிராமத்தில் இருக்கும்
தலித் மக்கள் நிலைமையும் கிட்டத்தட்ட இதே போன்றது. அவர்கள் கூடுதலாக இன்னும் ஒரு
துன்பம் பற்றி சொல்கிறார்கள். அரசாங்கம், பெரிய நிலவுடைமையாளர்கள், இறால் பண்ணை
முதலாளிகள் என வஞ்கத்தை எதிர்கொண்ட தலித் மக்களுக்கு உச்சவரம்பு நில விநியோகத்தில்
ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது. அதற்கு ஏதோ பணம் செலுத்தியிருக்கிறார்கள். எவ்வளவு,
ரசீது உள்ளதா என்ற
கேள்விகளுக்கு அவர்களால் தெளிவான பதில்கள் சொல்ல முடியவில்லை. அந்த நிலம் இறால்
பண்ணைகளுக்கு அருகில் இருந்ததால், அதை இறால்
பண்ணைகளுக்கு தந்துவிட்டு மாற்று நிலம் பெற்றார்கள். அதில் விவசாயம் செய்ய
முடியும். பகுதியில் காவிரி மட்டுமே நீராதாரம் என்பதால் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தண்ணீர் வராததால் விவசாயம்
இல்லை. அந்த நிலம் அவர்கள் பெயர்களில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. உரிமையாளர்
பெயர்களில்தான் உள்ளது. தங்கள் பெயர்களுக்கு பதிவு செய்துகொள்ள அவர்கள் எடுக்கும்
முயற்சிகள் பயனற்று போகின்றன.
இறால் பண்ணைகளில்
இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்திலும் நிலத்தடி நீர்
உப்பாகி பயனற்று போய்விட்டது. அவர்கள் கிராமத்தில் சாதாரணமாக வரும் மரங்கள்
செடிகள் கூட இறால் பண்ணை காற்று பட்டு காய்ந்துபோய் விடுவதாக அவர்கள்
சொல்கிறார்கள். கொடைகாரன்மூலை கிராமத்தில் இது போன்ற துன்பங்கள் பற்றி அந்த மக்கள்
பேசிக்கொண்டிருக்கும் போதே மறுபுறம் ஓஎன்ஜிசி உயரதிகாரிகள் சிலர் கிராமத்தின்
முன்னோடிகள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். (அவர்கள் எதற்கு வந்தார்கள்,
என்ன பேசினார்கள் என்பதை
அடுத்த பகுதியில் பார்க்கலாம்).
இந்த இரண்டு
பகுதிகளிலும் உள்ளவர்களிடம் பேசியதில் தலித் மக்கள், நிலமற்றவர்கள் இன்று கடுமையான துன்பத்தில்
இருப்பது தெரிகிறது. இறால் பண்ணைகளால் விவசாயம் போனதால் விவசாய வேலை இல்லை. உச்ச
வரம்பு நில விநியோகத்தில் கிடைத்த ஒரு ஏக்கர் நிலம் பாசனமின்றி வறண்டு கிடக்கிறது.
நூறு நாள் வேலை, ஆண்டில் இருபது
அல்லது முப்பது நாட்கள் கிடைக்கிறது. மேல்சாதியினர், பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள், இறால் பண்ணைகள், மீதமுள்ள நிலத்தில் விவசாயம் என அவர்கள்
வாழ்க்கை நடக்கிறது. இறால் பண்ணைகள் அமைக்க அரசு மானியம், கடன் உதவி என பலவும் பெற்றுக்கொள்கிறார்கள்.
வாழ்விழந்து நிற்பது கடைசி படியில் இருப்பவர்கள்தான். இப்போது என்னதான் செய்வது?
என்னதான் தீர்வு? காவிரி வரவில்லை என்றால் என்ன செய்வது? இந்தக் கேள்விகளுக்கும் பூசமணி சில பதில்கள்
சொன்னார். அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
இறால்கள்
வளர்க்கப்படும் குட்டையின் கீழே இருக்கும் மண்ணை கொட்டும் இடத்தில் புல்
முளைப்பதில்லை. இங்கு ஆடு மாடு மேயக் கூட வழியில்லை. விவசாயம் செய்துகொண்டிருந்த
மக்களைச் சுற்றி இப்போது இறால் பண்ணைகள், ஓஎன்ஜிசி கிணறுகள், அனல் மின்
நிலையங்கள்தான் உள்ளன.
மத்திய மாநில
அரசுகளின் இத்தனை ஆண்டு கால நல நடவடிக்கைகள் எதுவும் இந்தப் பகுதி மக்களின்
வாழ்நிலைமைகளில் மாற்றம் கொண்டு வரவில்லை. மொத்த விவசாயமும் அழிந்துவிட்டது.
அடித்தட்டு மக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை, தண்ணீர், வீடு, சுகாதாரம், உணவு, வாழ்க்கை எல்லாம் போய்விட்டது.
இது தனி தொகுதி.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் இது வரை வந்திருக்கிறார்கள். போயிருக்கிறார்கள். யாரும்
இந்தத் தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவில்லை. ஒரு சுதந்திர
நாட்டின், ஜனநாயக நாட்டின்,
குடிமக்களாக இங்குள்ள
மக்கள் தங்களை கருதிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் முற்றிலுமாக
அலட்சியப்படுத்தப்படுகிறார்கள்.
- இளங்கோவன்