COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, April 13, 2017

விவசாய கடன்கள் தள்ளுபடி தவறு
கார்ப்பரேட் கடன் தள்ளுபடி நல்லது
முதலாளித்துவம் இப்படித்தான் இயங்குகிறது

பணமதிப்பகற்றும் நடவடிக்கை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடியபோது, சாமான்ய மக்களை அதன் விளைவுகள் இன்றும் விரட்டும்போது, கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானபோதும், அந்த நடவடிக்கை பற்றி எதுவும் பேசாத ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று பேசியிருக்கிறார். வாய் பேசாத முடியாத பிள்ளை முதல்முதலாக பேசிய போது தாயைப் பார்த்து ஏதோ கேட்டதாக ஒரு மோசமான ஆணாதிக்க சொல் வழக்கு உண்டு.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள, பஞ்சாபில் விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி பற்றி அதன் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கிற, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் டில்லி சென்று, நாட்டின் பிற பகுதி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிற பின்னணியில் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி உர்ஜித் படேல் பேசியிருப்பது அந்த சொல் வழக்கை நினைவுபடுத்துகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் மிகவும் விரிவாக விளக்கமாக இது பற்றி பேசுகிறார். ஒழுங்கு, நேர்மை பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை வந்துவிட்டது. விவசாய கடன் தள்ளுபடி, ‘நேர்மையான கடன் கொள்கையை பாதிக்கும், கடன் வழங்கும் ஒழுங்குமுறையை பாதிக்கும், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படும், வரி கட்டுபவர்களை கடன் வாங்குபவர்களாக மாற்றி விடும், அடுத்த முறை கடன் வாங்குபவர்கள் கடனைச் செலுத்த யோசிப்பார்கள், கடன் செலுத்துபவர்களின் நேர்மையை பாதிக்கும்...அதீதமான அக்கறை...
விவசாயிகள் கடன் தள்ளுபடி கடன் ஒழுங்கின்மைக்கு இட்டுச் செல்லும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாக தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் சொன்னார்.
இவர்கள் இரண்டு பேரும், உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்த போது எதுவும் பேசவில்லை. இப்போது விவசாயிகளுக்கு, அதுவும் ஏழை விவசாயிகளுக்கு ஏதோ கொஞ்சம் போகப் போகிறது என்றதும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள்.
மாநிலங்களிடம் நிதி ஆதாரம் இருந்தால் செய்து கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சரும் மிகவும் பெருந்தன்மையாகசொல்கிறார்.
கடன் தள்ளுபடி இந்திய விவசாய நெருக் கடியைத் தீர்க்காது என்று உலக வங்கி கூட சொல்லிவிட்டதாம். 2008க்கு முன் நியாயமாகக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்கள் கூட கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பிறகு கடன் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் 2013ல் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு சொல்கிறது.
ஏதேதோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் அன்றாட வாழ்க்கை அன்றாடம் மோசமாகிச் கொண்டு இருப்பதை அனுபவிக்கும் சாமான்ய மக்களுக்கு சாதாரணமாக ஒரு கேள்வி எழுகிறது.
ஏண்டா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சம் லட்சம் கோடியா கடன் தள்ளுபடி செஞ்சதுல அவங்க நெருக்கடி தீந்துதான்னு எதாவது ஆய்வு செஞ்சீங்களாடா...? அப்பல்லாம் நீங்கல்லாம் எங்கடா போனீங்க?
இப்படி கேட்பது நாகரிகம் இல்லை என்று மெத்தப் படித்த கனவான்கள் சொல்வார்கள் என்றால் சற்று நாகரிகமாக, மத்திய அரசு தரும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே சில கேள்விகள் கேட்கலாம்.
பொதுத் துறை வங்கிகளில் உள்ள மொத்த  வாராக்கடன் ரூ.6.8 லட்சம் கோடி. இதில் 70% கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டும். விவசாயிகள் வாங்கியுள்ள கடன் வெறும் 1%தான். உர்ஜித் படேல் சொல்லும் நேர்மையான கடன் கொள்கை இதுதானா?
ஒழுங்கின்மை பற்றி கவலைப்படும் அருந்ததி பட்டாச்சார்யா தலைவராக இருக்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மட்டும் வாராக் கடன்களாக வைத்திருப்பது டிசம்பர் 2016ல் ரூ.1.08 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.72,792 கோடியாக இருந்ததை விட 48.6% அதிகம். இதனால் எந்த ஒழுங்கின்மையும் ஏற்படவில்லையா?
பொது கணக்கு கமிட்டியின் தலைவர் கே.வி.தாமஸ் தரும் தகவல்கள் படி, மார்ச் 2016ல் ரூ.5.02 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன்கள் டிசம்பர் 2016ல் ரூ.6.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அருண் ஜெட்லி வாராக்கடன்கள் அதிகரிக்கும் வேகம் இறுதி காலாண்டில் குறைந்துள்ளது என்று சொல்கிறார். அப்படியானால், வாராக்கடன் இன்னும்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடன் செலுத்துபவர்கள் நேர்மையானவர்கள் என்று உர்ஜித் படேல் சொல்வாரென்றால், இந்த அளவுக்குக் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்கள் நேர்மையற்றவர்கள் என்று கொள்ளலாமா?
2012 முதல் 2015 வரை ரூ.1.14 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ரூ.4 லட்சம் கோடிக்கும் மேலான கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்று இந்தியா ரேட்டிங் என்ற கடன் தர நிறுவனம் சொல்கிறது. உருக்கு, எரிசக்தி, உள்கட்டுமானம், ஜவுளி ஆகிய துறைகளின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் வாராக்கடன்களுக்கு முக்கிய காரணம் என்று அருண் ஜெட்லி சொல்கிறார். கடன் திரும்பச் செலுத்தாதவர்களுக்கு மேலும் மேலும் கடன் தள்ளுபடி செய்வது எந்த விதத்தில் மக்களின் வரிப் பணத்தை பாதுகாக்கும் என்று உர்ஜித் படேல் விளக்குவாரா?
விவசாய கடன்கள் தள்ளுபடி விவசாய நெருக்கடியைத் தீர்க்காது என்று உலக வங்கியின் ஆய்வு சொல்வதை, உலக வங்கி சொல்ல வரும் கோணத்தில் இருந்து அல்லாமல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகள் கோணத் தில் இருந்து நாமும் ஒப்புக்கொள்ளலாம். விவசாய கடன் தள்ளுபடி விவசாய நெருக்கடியைத் தீர்க்காது. இன்றைய உத்தரபிரதேச அரசு, நேற்றைய அய்முகூ அரசு, அஇஅதிமுக அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி எல்லாம் ஒரு விவசாயிக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாதவை. தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு சொசைட்டி கடன் தள்ளுபடி ஒரு விவசாயிக்கு ரூ.7,000 என்ற அளவில்தான். மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதக் கொள்கைகளால் பல ஆண்டுகளாக குவிந்து தீவிரமாகிவிட்ட நெருக்கடியை இந்த தள்ளுபடி நடவடிக்கை மட்டும் தீர்த்து விடாது. தண்ணீருக்கு மேல் தலையை வைத்துக் கொள்ளக் கூட உதவாது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது இதுவரை எந்த நல்விளைவையும் உருவாக்கவில்லை என்று நமக்கு நன்கு தெரிகிறது. ஆனால், தள்ளுபடி தருவதில் எந்த சுணக்கத்தையும் இன்று உள்ள மத்திய அரசு வரை, வங்கிகளின் மிகமிக உயர் அறிவு பெற்ற உயர்உயர் அதிகாரிகள் என யாரும் இன்று வரை காட்டவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசே ஒவ்வோர் ஆண்டும் ஆசையாக தரும் வரி விலக்குகளுக்கு மேல் ஒவ்வோர் ஆண்டும் இது நடந்துகொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில், வாராக்கடன்களுக்கு பொறுப்பான வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்கள் வெளியிட வேண்டும் என்ற விவாதம் வந்தபோது அது பற்றி அருண் ஜெட்லி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன்களை தள்ளுபடி செய்வதில் பொருள் உள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் சொல்கிறார். முதலாளித்துவம் இப்படித்தான் இயங்குகிறது என்கிறார் அவர். அவர் ஒருவர்தான் உண்மை பேசியிருக்கிறார். பிரச்சனையின் அடிநாதத்தை தொட்டிருக்கிறார்.

முதலாளித்துவம் இப்படித்தான் இயங்குகிறது. கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அம்பானி, அதானிகளின் ஆட்சியை மோடி ஆகச் செம்மையாக நடத்திக்  கொண்டிருக்கிறார். நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் இருப்பதையும் பறித்துவிடும் ஆட்சி, அதைத் தொடர, 10 ரூபாயை கீழே போட்டு லட்சம் ரூபாயை திருடிவிடும் உத்தியாக ஏதாவது செய்துவிடும்போது, கார்ப்பரேட் ஆதரவாளர்கள் அந்த நடவடிக்கைகளை எதிர்ப்பது மிக இயல்புதான். முதலாளித்துவத்தின் இந்த இயக்கத்துக்கும் எல்லைகள் உண்டு என்பது அரவிந்த சுப்ரமணியன் வாதத்தின் மறுபக்கம்.  உர்ஜித் படேலும் அருந்ததி பட்டாச்சார்யாவும் இந்த குறுகிய எல்லைகள் உருவாக்கும் மேலும் ஆழமான நெருக்கடிகளுக்கு பதில் சொல்லும் நிலையில் நிச்சயம் இருக்க மாட்டார்கள்.

Search