தொட்டியப்பட்டி
தலித் மக்கள் மீது
தாக்குதல்
நடத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்!
விருதுநகர்
மாவட்டத்தில் ராஜபாளையம் அருகில் உள்ள தொட்டியப்பட்டியில் தலித் மக்கள் மீது,
அவர்களது உடைமைகள் மீது
ஆதிக்க சாதியினர் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். 43 வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. 5 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலித்
மக்கள் பலர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர். தொலைக் காட்சி பெட்டிகள், குளிர்பதனப் பெட்டிகள், பிற வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்து
நொறுக்கப்பட்டுள்ளன. தங்கள் மிகவும் சாதாரண உரிமையான குடிநீர் உரிமையை செயல்படுத்த
முயன்றதுதான் மார்ச் 30 அன்று தலித்
மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது.
தலித் மக்கள்
வீடுகள் தாக்கப்பட்டதையறிந்து விருதுநகர் மாவட்ட இகக மாலெ தோழர்கள் ஆவுடையப்பன்,
கூடலிங்கம், மாநாடு, பொன்னையன், ராசையா ஆகியோர் கொண்ட குழு ஏப்ரல் 5 அன்று தொட்டியப்பட்டிக்குச் சென்றது.
அங்கிருந்த வர்களிடம் நிலைமை பற்றி கேட்டறிந்தது.
1000 நாயக்கர்
குடும்பங்களும் 50 தலித்
குடும்பங்களும் இருக்கும் தொட்டியப்பட்டியில் பல வழிகளிலும் தீண்டாமை
கடைபிடிக்கப்படுகிறது. ஊரில் உள்ள சமுதாயக் கூடத்தை இன்றும் தலித் மக்கள்
பயன்படுத்த முடியாது. தற்போதைய தாக்குதல் பொதுக் குழாயில் தலித் மக்கள் குடிநீர்
பிடிப்பதை ஒட்டி நடத்தப்பட்டுள்ளது.
ஊரில் உள்ள
பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை உருவாகி அது
தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அதன் பின்னர், தலித்துகள் 2 மணி நேரம் மட்டும்தான் தண்ணீர் பிடிக்க
முடியும் என்று அந்த ‘அமைதிப்
பேச்சுவார்த்தையில்’ முடிவாகி
இருக்கிறது. தண்ணீர் குழாய்க்கான சாவி ஆதிக்க சாதிக்காரர் ஒருவரிடம் இருக்கிறது.
அந்தக் குழாயில் குறிப்பிட்ட நேரம் தண்ணீர் பிடிக்காமல் வேறொரு நேரம் தண்ணீர்
பிடிக்க தலித் மக்கள் சென்றதால், குழாயைத் திறந்து
விட மறுத்து ஆதிக்க சாதியினர் தகராறு செய்துள்ளனர். தகாத வார்த்தைகளில்
ஏசியுள்ளனர். தலித் மக்கள் தங்கள் உரிமையை கேட்டுள்ளனர்.
வழக்கம்போல்,
கீழ்சாதியினருக்கு
செருக்கா என்று கேட்டு ஆதிக்க சாதி செருக்கு, ஆதிக்க சாதி வன்மம் தலித் மக்கள் வாழும்
பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. தலித் தெருவுக்குள் கும்பலாக வந்த
ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். கம்புகளுடன், கட்டைகளுடன், கொடூரமாக தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளனர்.
கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கியுள்ளனர். தாக் குதலுக்கு உள்ளான ஒரு தலித் பெண்
கர்ப்பிணி. மற்றொரு தலித் பெண் ஆடை கிழிக்கப்பட்டு பாலியல்ரீதியாக தாக்கப்பட்டார்.
தாக்குதல்
நடத்தியவர்கள், தாக்குதலுக்கு
காரணமானவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்களில் முக்கியமானவர்கள்
இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தலித் மக்கள் சொல்கிறார்கள். காவல்துறையினர்
பொதுவாக ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே நடந்துகொள்வதாகவும் தங்களது புகார்கள் மீது
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கையே மேற்கொள்ளப்படுவதாகவும்
அவர்கள் சொல்கின்றனர். பகுதியில் இருக்கும் பல்வேறு சாதிரீதியான ஒடுக்குமுறைகள்
தொடர்பாக தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது உள்ளிட்ட பல முயற்சிகளை
மேற்கொண்டிருப்பினும் தலித் மக்களுக்குச் சாதகமாக பொதுவாக நடவடிக்கைகள்
எடுக்கப்படுவதில்லை என்பது மாவட்ட நிர்வாகத் தரப்பின் நடவடிக்கையாக இருக்கிறது.
தாக்குதலுக்குக்
காரணமானவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், அனைத்து விதமான தீண்டாமை நடைமுறைகளும் உடனடியாக
தடுக்கப்பட வேண்டும், வீடுகள் இழந்த,
பாதிக்கப்பட்ட தலித்
குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள் புதிதாகக்
கட்டித் தரப்பட வேண்டும், படுகாயமுற்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தரமான சிகிச்சை தரப்பட வேண்டும்
(மருத்துவர்கள் தங்களை வீட்டுக்குச் சென்று விடச் சொல்வதாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள தலித் மக்கள் சொல்கின்றனர்), ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக நடந்து கொள்ளும்
காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும், தலித் மக்களின்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தின் இகக
மாலெ தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின்
தென்பகுதியில் குடிநீர் கேட்டது குற்றம் என்று தாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து
ஒரு பிரிவு மக்கள் நிற்கும் போது, தமிழ்நாட்டின்
வடபகுதியில் இடைத்தேர்தல் நடக்கிற ஒரு தொகுதியில் பணம் ஆறாகப் பாய்கிறது.
அமைச்சர்கள், நாடாளு மன்ற
உறுப்பினர்கள் வீட்டில் பணம் இருப்பதாகச் செய்தி கிடைத்து வருமான வரித்துறை சோதனை
நடக்கிறது. ஆட்சியிலும் ஆளும் கட்சியிலும் இருப்பவர்கள், உரிமையிழந்து உடமையிழந்து நிற்கிற மக்களுக்கு
ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை. இழப்பீடு, நிவாரணம், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை என
எதுவும் பேசவில்லை. தொட்டியப்பட்டி தலித் மக்களுக்கு உதட்டளவில் கூட ஆதரவு
காட்டாதவர்கள், அவர்களை
முற்றிலுமாக அலட்சியப்படுத்துபவர்கள்,
தமிழ்நாட்டின் வேறொரு
பகுதி மக்களிடம் ஊழல் அரசியல்வாதியின்
பெயரால் வாக்கு கேட்டு அலைகிறார்கள். நேற்று மட்டுமல்ல, இன்றும், நாளையும் கூட ஊழல் செய்து கொள்ளையடிப்பது,
சொத்து சேர்ப்பது தவிர
வேறெதிலும் அஇஅதிமுககாரர்கள் அக்கறையற்றவர்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
தொட்டியப்பட்டி
தலித் மக்கள் போல், நியாயம் கோரி,
நீதி கோரி கடலூரில் பாதாள
சாக்கடைக்குள், அடுத்து வேலை
வேண்டும் என்றால் குழிக்குள் இறங்கு என்று மிரட்டப்பட்டு கட்டாயமாக இறக்கப்பட்டு
உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்கள் நிற்கின்றன. இந்தக் கொடூரமான
உயிரிழப்புகளுக்கு தனியார் யாரோ காரணமல்ல. அரசுப் பணிகளை எடுத்துள்ள
ஒப்பந்ததாரர்கள் நேரடியாக பொறுப்பு. இந்த உயிரிழப்புகளிலும் ஆட்சி நடத்துகிற
அஇஅதிமுக எந்த ............ பிடுங்கவில்லை என்றுதான் நமக்குச் சொல்ல
வேண்டியிருக்கிறது.
தலித் மக்கள்
உயிர்களுக்குப் பொருளுண்டு என்று ஜெயலலிதா ஆட்சி நடத்தும் காலம் முழுவதும் கத்த
வேண்டியிருந்தது. அவரது பெயர் சொல்லி இன்று ஆட்சி நடத்துபவர்கள் தலித் மக்கள்
மீதான ஒடுக்குமுறைகளுக்கு தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு
ஆதரவளித்தவர்கள் என ஏற்கனவே பெயர் பெற்றவர்கள். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்று
வரை பதில் எதுவும் சொல்லாமல் ஆட்சி நடத்துபவர்கள். தலித் மக்கள் பிரச்சனைகளை கண்டு
கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் கருதுபவர்கள். இந்தக் கேளாச் செவியினருக்குக்
கேட்க வேண்டும் என்றால் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான
குரல்கள் மிகவும் வலுவாக எழுந்தாக வேண்டும்.