நெருக்கடியில்
சிக்கித் தவிக்கும்
தமிழக
விவசாயிகளுக்கு ஆதரவாக
இகக மாலெ பொது
வேலை நிறுத்தம்
தமிழ்நாட்டில்
நிலவும் வறட்சி, விவசாய நெருக்கடி,
விவசாய தொழிலாளர்கள்
வாழ்வாதாரம் இழத்தல் போன்றவற்றுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயம், விவசாயி, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை
பாதுகாக்க, விவசாயக் கடன்கள்
தள்ளுபடி செய்யப்பட வேண்டும், விவசாய, கிராமப்புற தொழிலாளர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை
கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை
நிறைவேற்றிட
மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஏப்ரல் 25 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு
விடுத்தது.
பொது வேலை
நிறுத்தத்தையொட்டி திருபெரும்புதூரில் சிபிஅய்(எம்எல்), ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து விவசாயிகளுக்கு
ஆதரவாக, கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஅய்(எம்எல்) கட்சியின் மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் எஸ்.ராஜகுரு தலைமை தாங்கினார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏசியன்
பெயிண்ட்ஸ் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி தோழர் தினகர்
முழக்கமிட்டார். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.இரணியப்பன், சிபிஅய்(எம்எல்) சென்னை மாவட்டக் குழு உறுப்பினர்
தோழர் வி.ராஜேஷ், திருபெரும்புதூர்
கிளை செயலாளர் தோழர் கே.ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஅய்எம்எல்
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் ஆர்ஒய்ஏ தேசிய செயலாளருமான தோழர் கே.பாரதி
சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஹ÷ண்டாய், ஏசியன்
பெயிண்ட்ஸ், டென்னகோ, சான்மினா, டைமன்ட் இன்ஜினியரிங், சவுந்தர்யா டெக்கரேட்டர்ஸ், பத்மா மெட்டல்ஸ், அய்பி ரிங் மற்றும் பல தொழிற்சாலை தொழிலாளர்
தோழர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சை, கோவை, திருவள்ளூர், நெல்லை ஆகிய
மாவட்டங்களிலும் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி இககமாலெ பதாகையில்
ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை, விழுப்புரம், தருமபுரி ஆகிய
மய்யங்களில் அனைத்துத் தொழிற்சங்க மறியல் போராட்டங்களில் பங்கேற்றது.
கோவையில்
ஏஅய்சிசிடியு தலைமையில் இயங்கும் பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்
சங்கங்கள் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தன. தொழிலாளர்
முன்னோடிகள் இரண்டு பேர் ஆயுள் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யும் தயாரிப்புகளில் இருக்கும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு இந்த நேரத்தில்
நெருக்கடி தர பிரிக்கால் நிர்வாகம் முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக வேலை
நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பளப் பிடித்தம் செய்யப்படும்
என்று அறிவித்துள்ளது. பிரிக்கால் நிர்வாகம் நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கப் போவதாகச்
சொல்லி தொழிலாளர் ஊதியத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் பிடித்தம் செய்ததை
பிரிக்கால் நிர்வாகத்துக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆற்று நீரைப் பாதுகாக்க
அமைப்பு நடத்துவதாகச் சொல்பவர்கள் நடத்தும் ஒரு நிர்வாகம் விவசாயிகளுக்கு ஆதரவாக
வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை சம்பளப் பிடித்தம் செய்து தண்டிப்பதில் இருந்து
நிர்வாகத்தின் உண்மை முகத்தை தெரிந்துகொள்ள முடியும்.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)