COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 15, 2017

நான் இடதுமில்லை வலதுமில்லை என்று சொல்லும்
எம்மானுவேல் மேக்ரன்தான்
பிரான்சின் புதிய குடியரசுத் தலைவர்

மே மாதம் 7 ஆம் நாள், பிரான்சின் குடியரசுத் தலைவர் தேர்தலின் இறுதிச் சுற்று நடைபெற்றது. ஏப்ரல் 23 நடந்த முதல் சுற்றில் போட்டியிட்ட எவருக்கும் 50% வாக்குகள் கிடைக்காததால், மேக்ரனும் லீ பென்னும் மோதினார்கள். 26% பிரான்ஸ் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. 42 லட்சம் வாக்காளர்கள் யாருக்கும் வாக்கில்லை என வாக்களித்தனர். உற்சாகம் வடிந்த தேர்தல். அதில், மேக்ரன் 2 கோடியே 74 லட்சத்து 3 ஆயிரத்து 128 வாக்குகளும், மரீன் லீ பென் 1 கோடியே 63 லட்சத்து 8 ஆயிரத்து 475 வாக்குகளும் பெற்றனர்.

மேக்ரன் அரசியல் அனுபவம் இல்லாத புதியவர், அரசியல் நிறுவனங்களுக்கு வெளி ஆள், டிரம்ப் போன்றவர் எனச் சொல்லப்படுகிறது. இது தவறு. மேக்ரன், முன்னாள் அதிபர் சார்கோசியுடன் நெருக்கமாக இருந்தவர். 39 வயதான, இன்வெஸ்ட்மென்ட் பேங்கரான மேக்ரன், முந்தைய அதிபர் பிரான்குவா ஹாலண்டேயின் ஆட்சியில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தவர்.
முதலில் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து விலகியவர், 06.04.2016ல் ஆன் மார்ச்செ (முன்னேறு) இயக்கம் தொடங்கினார். இப்போது அது, குடியரசே முன்னேறு என்ற கட்சியாக உருமாற்றம் பெற்றுள்ளது. 30.08.2016ல்தான், அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். 16.11.2016 அன்று தம்மைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.
இனவெறி நிறவெறி அரசியல், குடியேறியவர்களுக்கு எதிரான தீவிர வலதுசாரி பிற்போக்கு அரசியல் அடிப்படையில் லீ பென்னால் சில பத்தாண்டுகள் முன்பு தேசிய முன்னணி உருவானது. சிராக்குக்கு எதிராக லீ பென் போட்டியிட்டபோது 19% வாக்குகளே பெற்றார்.
இப்போது சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, பிரெக்சிட் (பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது) வெற்றி, அய்க்கிய அமெரிக்கா முதலில் என்று சொல்லும் டிரம்ப்பின் வெற்றி, அய்ரோப்பா நெடுக பரவி வரும் இசுலாமியர் வெறுப்பு, குடியேறியவர்கள் மீது வெறுப்பு என்ற பின்னணியில், லீ பென்னின் மகள் மரின் லீ பென் 2017ல் கிட்டத்தட்ட 35% வாக்குகளை, அவர் தந்தை பெற்ற வாக்குகளை விட சுமார் இரு மடங்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஹாலெண்டேயின் ஆட்சியில் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 1.2%தான் வளர்ந்தது. 24 வயதுக்கு உட்பட்டோரில் 25% பேருக்கு வேலையில்லை. பயங்கரவாதத் தாக்குதல்கள், கடுமையான ஒடுக்குமுறை அரசு நடவடிக்கைகள், மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. பிரான்சின் அடையாள இழப்பு, உலகமய எதிர்ப்பு, அய்ரோப்பியமய எதிர்ப்பு என்ற ஒரு முடிச்சை லீ பென் வாக்காளர்களிடம் முன்வைத்தார். கிட்டத்தட்ட 35% வாக்குகள் பெற்றார்.
பிரான்சின் அனைத்து பிரிவினர் மத்தியில் அனைத்து பகுதிகளிலும் மேக்ரன் கூடுதல் வாக்குகள் பெற்றார். ஆனால், ஆலைப் பாட்டாளிகள், சங்கம் அமைப்பு உள்ள ஊழியர் கள் கணிசமாக லீ பென்னுக்கு வாக்களித்துள்ளனர். வித்தியாசமான வலது இடது விவகாரம் அரங்கேறுகிறது. சமூகரீதியில், மேக்ரன், இசுலாமியர்களைக் குறி வைப்பதை எதிர்க்கிறார். குடியúறுபவர்களுக்கு கதவை மூட மாட்டேன் என்கிறார். சலுகைகள் தருவேன், திறமைகளுக்கேற்ப விசா தருவேன் என்கிறார். 5 ஆண்டுகளில், 50 பில்லியன் யூரோ முதலீடு போட்டு, பொருளாதாரத்தை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகள் பெருக்குவேன், காலியான அரசுப் பணியிடங்கள் 1,20,000 நிரப்பாமல், கஜானாவுக்கு 6 பில்லியன் யூரோ மிச்சம் பிடிப்பேன் என்கிறார். பொருளாதாரத்தில் சுதந்திரச் சந்தை, சுலபமாக்கப்பட்ட அமர்த்து துரத்து எனப் பேசுகிறார். இடதும் இல்லை. வலதும் இல்லை என்பவர், அவரவர்க்கேற்ப தலையையும் வாலையும் காட்டப் பார்க்கிறார்.

லீ பென்னின் நிறவெறி இனவெறி வேண்டாம் என்பதற்காக பிரெஞ்சு மக்கள் மேக்ரனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மேக்ரன் புதிய கட்சியுடன் அடுத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. கூட்டணிகள் அவசியமாகலாம். ஹாலன்டே கணிசமான பிரெஞ்சு மக்களை, தீவிர வலதுசாரிகள் பக்கம் தள்ளினார். மேக்ரன் என்ன செய்யப் போகிறார் எனப் பார்க்க வேண்டி உள்ளது. 

Search