COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 15, 2017

கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்ப வேண்டும்

தென் கொரியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த சமயத்தில்தான், சீனா, அய்க்கிய அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பதட்டம், ஒரு போருக்குச் சென்றுவிடக் கூடாது என கவலை தெரிவித்தது. அய்க்கிய அமெரிக்காதான் கொரிய தீபகற்பத்தை வடகொரியா,
தென்கொரியா எனத் துண்டாடுவதில் முன்கை எடுத்தது. கொரியா விவகாரத்தில் சீனத்தோடு போரிட்டது. வட கொரியாவை எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. அய்க்கிய அமெரிக்கா, தான் அமைதியை விரும்பும் நாடு, வடகொரியா சண்டைக்கார நாடு என்ற மாபெரும் பொய்யை, உலக பொது புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
வடகொரிய ஆட்சி முறை மிகவும் வித்தியாசமானதுதான். ஆனால், அணு ஆயுதக் குவியலின் மீது அமர்ந்து கொண்டிருக்கிற நாடுகள், எங்களை அணு ஆயுதம் வைத்துக் கொள்ளாதே என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற சரியானகேள்வியை வட கொரியா எழுப்புகிறது. பியாங்யாங், வடகொரியாவின் தலைநகரம். வடகொரியாவோடு கூடுதல் நட்பும் உறவும் உள்ள நாடு சீனாதான். வட கொரிய அணு  ஆயுத சோதனையைக் காரணம் காட்டி, வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை வழிநடத்திய அய்க்கிய அமெரிக்கா, டிரம்ப் ஆட்சியின் நூறு நாட்கள் முடியும் முன்பே வட கொரியாவின் கதையைப் போர் தொடுத்து, முடிக்கிறேன் எனப் புறப்பட்டது. வடகொரிய ஆபத்து என்ற பூச்சாண்டி காட்டி, டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபன்ஸ் (டிஎச்எஎடி) என்ற அதி நவீன யுத்த தளவாடங்களை சீனத்திற்கு எதிராக தென் கொரிய மண்ணில் நிறுவியது. சீனா - தென் கொரியா - அய்க்கிய அமெரிக்கா, வடகொரியா - அய்க்கிய அமெரிக்கா உறவுகளில் சிக்கல் என்ற பின்னணியில், தென்கொரியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது.
ஊழல் குற்றச்சாட்டுக்களில் குடியரசுத் தலைவர் பார்க் குன் ஹயி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் குற்றவியல் நடவடிக்கைக்கும் ஆளாகி உள்ளார். இவரோடு, சாம்சங் நிறுவன தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரும் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்.
பார்க் குன் ஹயி, தென் கொரியாவின் கொடூரமான சர்வாதிகாரி பார்க் சுங் ஹ÷வின் மகள். இவர்கள் வழிமரபில், சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகின. குடியரசுத் தலைவர் அதிகாரம் வரம்பற்றதானது. சாய்பால் என்ற பெரும் தொழில் குழும குடும்பங்கள் அரசியலையும் ஆட்சியையும் கட்டுப்படுத்தின. இந்தப் பின்னணியில் வீதிகளில் நடந்த மக்கள் போராட்டங்களாலும், அனைத்து தரப்பு எதிர்ப்பாலும் குடியரசுத் தலைவர் பார்க் குன் ஹயி பதவி விலகினார். குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது.
தென் கொரியாவில், 20 வருடங்களுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான், 77.2% பேர்  வாக்களித்தனர். மனித உரிமை வழக்கறிஞரும் முந்தைய ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியவருமான மூன் ஜா இன் 41% வாக்குகள் பெற்று புதிய குடியரசுத் தலைவர் ஆகி உள்ளார். மிகவும் வெளிப்படையான அரசு, முடிவுகளுக்குப் பொறுப்பேற்கும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடமை உள்ள அரசு எனச் சொல்லி பிரச்சாரம் செய்து அவர் வென்றார்.

தென்கொரியா, அய்க்கிய அமெரிக்க பாதுகாப்பு குடையின் நிழலில் உள்ளது. தென் கொரிய பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, தனது புவி அரசியல் நலன்களிலிருந்து, அய்க்கிய அமெரிக்கா கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளது. தென் கொரிய மக்கள்  மத்தியில், இப்போதும், நாம் கொரியர்கள், கொரிய ஒற்றுமை என்ற எண்ணம் இருக்கவே செய்கிறது. புதிய குடியரசுத் தலைவர் மூன் ஜா இன், தான் வடகொரியாவுடன் பேசத் தயார் எனச் சொல்லியுள்ளார். சீன ஆட்சித் தலைவருடன் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியபோது, ‘வடகொரியா தரப்பிலிருந்து தூண்டுதல்கள் இல்லாவிடில், தாம், தாட் (யுத்த தளவாட) பிரச்சனையைப் பேசித் தீர்ப்பது சுலபம்எனச் சொல்லி உள்ளார். தீபகற்பம் அணு ஆயுதம் இல்லாமல் இருப்பது நல்லது என்கிறார். டிரம்ப்போடு, ஜப்பானிய பிரதமர் அபேயோடு பேசி உள்ளார். அய்க்கிய அமெரிக்காவில் இருந்து சுதந்திரமான அயல் விவகாரக் கொள்கை, உள்நாட்டு பெரும்தொழில் குடும்பங்கள் செல்வாக்கை விலக்கி வைப்பது என்ற சோதனைகள், தென்கொரியா முன் காத்து நிற்கின்றன.

Search