COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 2, 2017

நேற்று இறால் பண்ணைகள்....
இன்று ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள்.... நாளை ஹைட்ரோகார்பன்....?

இறால் பண்ணைகளால்
நாசமாகிவிட்ட புளியந்துறை ஊராட்சி

புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், இறால் பண்ணைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியவர். இன்று புளியந்துறை பகுதி மக்களுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. அரிகிருஷ்ணன் இறால் பண்ணையால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி கேட்டபோது சொன்னார்:

‘2000ஆம் ஆண்டுக்கு முன்பு முப்போகம் சாகுபடி நடந்த இடம் இது. இறால் பண்ணைகள் வந்த பிறகு பக்கத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் எல்லாம் கருகிப் போயின’.
காட்டூர் ஊராட்சியில் பெரிய அளவில்  ஆற்று புறம்போக்கு நிலத்தை எல்லாம் வளைத்து இறால் பண்ணை அமைத்துவிட்டார்கள். அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டபோது, அவர்கள் வெட்டிவிட்டார்கள், இனி என்ன செய்வது, அதற்கு வரி வாங்கிவிடலாம் என்று  சொல்லி அங்கு குட்டைகள் அமைக்கப்பட்டதை முறைப்படுத்திவிட்டார்கள்’.
அதிகாரிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுகின்றனர். அரசியல் கட்சிகள் பொறுத்த வரை ஆட்சியில் இருப்பவர்கள் இறால் பண்ணைகள் அமைப்பவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்று விட்டுவிடுகின்றனர். எதிர்க்கட்சியினர் நாளை ஆட்சிக்கு வரவேண்டியிருக்கும் என்பதால் கண்டுகொள்வதில்லை. மக்கள் இந்தக் கட்சிகளில்தான் இருக்கிறார்கள். அவர் களுக்கு தலைவர்கள் சொல்வதற்கு மேல் எதுவும் செய்ய முடிவதில்லை. இறால் பண்ணைகள் அமைக்கக் கூடாது என்று போராடியதால் நான் தடியடி சந்தித்துள்ளேன். என் மீது வழக்குகள் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்டுள்ள தகவல்கள்படி காட்டூர், புளியந்துறை, பழையபாளையம் என்ற மூன்று ஊராட்சிகளில் மட்டும் 1800 ஹெக்டேர் நிலத்தில் இறால் பண்ணைகள் உள்ளன.
புளியந்துறையில் மட்டும் 60 ஹெக்டேர் நிலத்தில் இறால் பண்ணைகள் இயங்குகின்றன. இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஓஎன்ஜிசி கிணறுகள் இருந்தாலும் இங்கும் நிலத்தடி நீரில் அதன் பாதிப்புகள் உள்ளன. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இங்கு மக்கள் தங்க முடியுமா என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது’.
இன்று ஓஎன்ஜிசி
கண்ணன். 35 வயதுக்குள் இருக்கலாம். பழையபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர். இங்கு ஓஎன்ஜிசியின் பிரதான கிணறு உள்ளது. இன்னும் 18 கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த ஊராட்சியில் அமைத்துள்ளது. ஓஎன்ஜிசி செயல்பாடுகளுக்கு எதிராக பல முயற்சிகள் எடுத்தும் தோல்வி கண்டும் மீண்டும் முயற்சி செய்ய வாய்ப்பு வராதா என காத்திருக்கிறார். நம்பிக்கையிழக்கவில்லை. எங்களுக்காக உறுதியாக நிற்கும் தலைமை இருந்தால் நாங்கள் போராடத் தயார் என்கிறார்.
அவர் சொன்ன விசயங்கள் ஓஎன்ஜிசியின் செயல்பாடுகளால் நிகழ்ந்து கொண்டிருக்கிற அழிவை, கிராமப்புற வறிய மக்கள் வஞ்சிக்கப்படுவதை விவரிக்கின்றன.
இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களை நம்பி மட்டும் இனி போராட்டங்களில் இறங்க முடியாது. எங்களை பல்வேறு விதங்களிலும் பிரித்து நிறுத்திவிட்டார்கள். எங்களின் ஒரு பிரிவினரையே எங்களுக்கு எதிராக நிறுத்தி விட்டார்கள். என்னால் இங்கு இளைஞர்கள் 100 பேரை திரட்ட முடியும். ஆனால் இந்தப் பிரச்சனையில் போராட இந்த எண்ணிக்கை போதாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்ததுபோல் மாணவர்கள் ஆதரவு இருந்தால் போராட்டம் நடத்தலாம். இங்குள்ள கல்லூரிகளின் மாணவர்களிடம் ஆதரவு கேட்டு போராட்டத்தில் இறங்கலாம் என்று நான் நினைக்கிறேன்’.
‘2013ல் ஓஎன்ஜிசி செயல்பாடுகள் இங்கு துவங்கின. துவக்கத்தில் அவர்கள் பேசுவது போல் யாரும் பேசமாட்டார்கள். எங்கள் வேலை எல்லாம் முடித்துவிட்டு நிலத்தை பழைய நிலைமையில் சீராக்கித் தந்து விடுவோம் என்று சொன்னார்கள். துவக்கத்தில் நிலத்தை எடுத்துக் கொண்டு எங்களை விவசாயம் செய்யவும் அனுமதித்தார்கள். ஒரு கிணறு அமைக்கும் இடத்தில் அதைச் சுற்றி 10 ஏக்கர் நிலம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு கிணறு தோண்டினார்கள். பிறகு வேலி போட்டார்கள். பிறகு வரப்புகளைக் கூட எடுத்து விட்டார்கள். எந்த நிலம் யாருடையது என்று கூட இப்போது எங்களுக்குத் தெரியாது. வேலி போட்ட பிறகு எங்கள் நிலத்துக்குள் நாங்கள் இப்போது செல்ல முடியாது’.
ஓஎன்ஜிசி போடுகிற குழாய்கள் 5 கி.மீ தூரத்துக்கு இருப்பவற்றை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை என்று சொல்லப்படுகிறது. ஒரு கிணற்றைச் சுற்றி இவ்வளவு தூரத்துக்கு நிலத்தடி நீர் பாழாகிவிடும். அதிலும் ஏதோ வேதிப் பொருட்கள் போடுவதாகச் சொல்கிறார்கள். என்ன வேதிப் பொருள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் நிலமும் போய், நிலத்தடி நீரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டதன் விளைவை நாங்கள்தான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்’.
எங்களது நிலம் எங்களது பெயர்களில் இல்லை. அது குத்தகை நிலமாக நிலஉடைமையாளர்கள் எங்கள் முன்னோர்களுக்குத் தந்தது. அந்த நிலத்தில் நாங்கள்தான் விவசாயம் செய்தோம். நெல் குத்தகை தந்து வந்தோம். அதற்கான ரசீதுகள் எல்லாம் எங்களிடம் முறையாக இல்லை. ஓஎன்ஜிசிக்கு நிலம் தந்தபோது ஒரு ஏக்கருக்கு ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை ஆண்டில் இரண்டு தவணைகளாக தந்தார்கள். இந்தத் தொகையை ஆட்களுக்கு ஏற்றாற்போல் நிர்ணயிக்கிறார்கள். எங்கள் நிலங்களுக்கு முதல் ஆண்டு இரண்டு தவணைகளாக ரூ.40,000 கிடைத்தது. அதன் பிறகு நிலத்துக்கு சொந்தக்காரர்களுக்கு அந்தத் தொகை சென்றுவிடுகிறது’.
நிலத்துக்குச் சொந்தக்காரர்கள், எங்கள் தந்தைக்கு உங்கள் தந்தை வேலை செய்ததால் அவருக்கு எங்கள் தந்தை நிலம் தந்தார், நான் ஏன் உங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்களிடம் எந்த ஆவணமும் இல்லாததால் யாரிடம் சென்று என்ன முறையிடுவது என்று தெரியவில்லை’.
நிலத்தைப் பெற வரும்போது ஓஎன்ஜிசிகாரர்கள் நேராக நிலத்துக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்து அவர்களிடம் நேரடியாகச் சென்று பேசி விடுகிறார்கள். வருவாய் அதிகாரிகளிடம் இருந்து விவரங்கள் பெற்றுவிடுகிறார்கள். எங்களிடம் எதுவும் பேசுவதில்லை. ஏதோ கையெழுத்து கேட்கிறார்கள். விவசாயம் செய்யாமலே காசு வரப்போகிறதே என்று நாங்களும் போட்டோம். முதல் முறை வந்ததுதான்; பிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இறால் குட்டைகள் வந்தபோதும் விவசாயம் செய்வதை விட கூடுதல் வருமே என்றுதான் ஆசை காட்டினார்கள். இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ள நிலங்கள் எல்லாம் அதனால் பாழாயின. இப்போது ஓஎன்ஜிசி வந்துள்ளது’.
இந்த விசயத்தில் போராடத் தயாரான போது, பெரியவர்கள் சிலர், நாங்கள் இப்படித்தான் ஒரு முறை போராடினோம், ராணுவம் வந்தது, அவர்களுக்கு நமது மொழி தெரியவில்லை, அவர்களிடம் நம்மால் எதுவும் விளக்க முடியவில்லை, எங்களை தாக்கியது, சிறைக்கு அனுப்பியதுதான் நடந்தது, இப்போது போராடினாலும் அப்படித்தான் நடக்கும் என்று சிலரிடம் சொல்லிவிட, அவர்கள், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தடுத்துவிட்டார்கள். அதனால் எங்களால் போராட முடியாமல் போனது’.
ஓஎன்ஜிசி தினமும் பழையபாளையத்தில் 60 டன் எண்ணெய் எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. அது நாட்டுக்குள்ளாவது பயன்படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை. ஓஎன்ஜிசியால் வளர்ச்சி என்று சொன்னார்கள். யாருக்கு என்ன வளர்ச்சி வந்தது என்று தெரியவில்லை’.
கோயில் திருவிழா நடத்த ஒரு முறை அவர்களிடம் நிதி கேட்டோம். அப்போது, கெயில் திட்டத்துக்கு நீங்கள் ஒப்புதல் தந்தால் உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் செய்து தருகிறோம் என்று சொன்னார்கள். இவர்கள் வந்ததில் இதுவரை அவர்கள் செய்தது என்றால் அரசு நிதியுதவி ரூ.15,000, இவர்கள் நிதி ரூ.10,000 போட்டு கழிப்பறைகள் கட்டியதுதான். அதைத் தவிர எங்களுக்கு வேலை வாய்ப்போ, வேறு வசதிகளோ எதுவும் வரவில்லை. நாங்கள் சந்திப்பது இழப்பு மட்டும்தான்’.
‘20 கிலோ அரிசி கிடைத்த வரை எங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைத்தது. இப்போது 20 கிலோ அரிசி கிடைப்பதில்லை. 15 கிலோ, 12 கிலோ என்று குறைந்துவிட்டது. இங்கு இருப்பவர்கள் 2 வேளை உணவுதான் உண்கிறார்கள்’.
ஓஎன்ஜிசி வந்த பிறகு நிலத்தடி நீர் பாழாகி விட்டது. சில இடங்களில் எண்ணெய்ப் படலம் கூட காணப்படுகிறது. நீர் உப்பாகிவிட்டது. இது சமீபத்தில் கடந்த ஆறு மாதங்களாக இருக்கிற நிலைமை. எங்களுக்கு இப்போது குடிக்க எல்அண்டுடி தண்ணீர்தான். இன்னும் 10 வருடங்கள் கழித்து வந்து பார்த்தீர்கள் என்றால் இங்கு யாரும் இருக்கமாட்டார்கள்’.
இந்த ஓஎன்ஜிசி, இறால் பண்ணைகள் எல்லாவற்றையும் இங்கிருந்து விரட்ட வேண்டும். விவசாயம் செய்ய வேண்டும். மழை இந்த ஆண்டும் போன ஆண்டும் இல்லைதான். ஆனால் மழை இனிமேல் வரவே வராது என்று சொல்ல முடியாது. மழை வந்தால், இந்த நிறுவனங்கள் இங்கு இல்லையென்றால் நாங்கள் விவசாயம் செய்வோம்’.
கண்ணன் சொல்வது போல் ஓஎன்ஜிசி தினமும் 60 டன் எண்ணெய் எடுத்துப் போகிறதா இல்லையா என்ற விவாதத்தை அறிவார்ந்தோர் செய்யட்டும். ஏதேதோ செயல்பாடுகள் இருந்தும் வளர்ச்சியோ வளமோ பகுதி மக்களுக்கு, நிலம் தந்தவர்களுக்கு வரவில்லை என்பதுதான் பிரச்சனை. வறுமை பெருகுகிறது. வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாய் கண் எதிரில் அழிந்து கொண்டிருக்கிறது. அதைப் பாதுகாக்க, அழிவைத் தடுக்க வழி தெரிந்தும் வாய்ப்பிருந்தும் செய்ய முடியவில்லை.
கொள்ளிடம் ஒன்றியத்தில் பழையபாளை யம் ஊராட்சியில் மட்டும்தான் ஓஎன்ஜிசி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 2000 ஏக்கர் நில விவசாயம் இதனால் பாதிக்கப்பட்டுவிட்டதாக கண்ணன் சொல்கிறார். அடுத்தடுத்த பகுதிகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த ஓஎன்ஜிசி உயரதிகாரிகள் நேரடியாக மக்களைச் சந்திக்கின்றனர். அவர்களிடம் வளம் வரும் என்று பொய் சொல்லி ஆசை காட்டுகின்றனர்.  மோடி போல் தேசப்பற்று உணர்ச்சி மேலிட பேசுகின்றனர்.
கொடைக்காரன்மூலையில் பகுதி மக்கள் இறால் பண்ணை அழிவு பற்றி பேசிக்கொண்ருந்தபோது, ஓஎன்ஜிசி அதிகாரிகள் அங்கு வந் தார்கள். பகுதி முன்னோடிகள் சிலரிடம் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று வந்தவர் களில் ஒருவரிடம் விசாரித்தபோது, கிணறு அமைக்க பகுதி மக்கள் ஒப்புதல் பெறுகிறோம் என்று சொல்லியிருக்கிறார். முன்னோடிகள் சிலரிடம் தாங்கள் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு, அதை பகுதி மக்கள் கிணறு அமைக்க ஒப்புதல் தந்துவிட்டதாக கணக்கு காட்டுகிறார்கள் என்று தெரிந்தது.
வந்தவர்களில் பெரிய அதிகாரி ஒருவர் ஆளுமையுடன் பேசும் தோற்றத்துடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. கேட்கவும் முடிந்தது. அவர் அந்த முன்னோடிகளிடம் கேட்டார்: இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வெளிநாட்டிடம் எண்ணெய் கேட்டு கையேந்துவது?’ வளர்ச்சிக்காக நாட்டின் ஒரு பகுதியை தியாகம் செய்வதில் தவறில்லை என பாஜக இல.கணேசன் சொல்வதை ஓஎன்ஜிசி அதிகாரிகள் பேசுவதுடன் இணைத்துப் பார்த்தால், மத்திய பாஜக அரசாங்கம் தமிழ்நாட்டின் விவசாயத்தை அழிக்க திட்டமிட்ட சதியில்  ஈடுபடுவது தெரியும்.
தொகுத்துச் சொன்னால்
பூசமணி, கண்ணன், அரிகிருஷ்ணன் மூவரும் கொடைக்காரன்மூலையைச் சேர்ந்த மக்களும் இறால் பண்ணைகள், ஓஎன்ஜிசி நிறுவன செயல்பாடுகளுக்குப் பிறகு தங்கள் வாழ்நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாதிப்புகள் பற்றி பேசும்போது, ஒரே விசயத்தைச் சொல்லி முடிக்கிறார்கள்: இன்னும் பத்து ஆண்டுகளில் இங்கு யாரும் இருப்பார்களா என்பது சந்தேகம்’.
என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கும் சீரான பதில் ஒன்று சொல்கிறார்கள்: இறால் பண்ணைகள் மூடப்பட வேண்டும். ஓஎன்ஜிசி செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். விவசாயம் மீட்டெடுக்கப்பட வேண்டும்’. இவர்களுடன் பேசும்போது கூட இருந்தவர்களும் இதே கருத்தையே சொல்கிறார்கள்.
இறால் பண்ணைகளும் ஓஎன்ஜிசியும் வந்ததால் அழிவுதான் வந்துள்ளதே தவிர வளர்ச்சி வரவேயில்லை. இதற்கும் மேல் இறால் பண்ணைகளும் ஓஎன்ஜிசி செயல்பாடுகளும் நீடித்தால் மக்கள் தங்கள் இடங்களில் வாழவே முடியாமல் அங்கிருந்து வெளியேற நேரும். சம்மங்காடு சாட்சி. அங்கிருந்து ஆரப்பள்ளம் போனவர்கள் சாட்சி.
என்ன செய்வது?
இந்த நிலங்களை அரசு சீர்செய்து விவசாயத்துக்கு ஏற்றாற்போல் எங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்றார் காட்டூரைச் சேர்ந்த பூசமணி. இது சாத்தியமா என்று கேட்டபோது, ‘ஏன் சாத்தியமில்லை? ஏதேதோ விஞ்ஞான வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள். முதலில் இதற்கு எதையாவது செய்யட்டும். அரசு நினைத்தால் செய்ய முடியும். மழை வந்த காலங்களில் நாங்கள் வெள்ளத்தால் தவித்திருக்கிறோம். தண்ணீர் வீணாக கடலில் செல்லாமல்  தடுப்பணைகள் கட்ட முடியும். காட்டூர் எல்லையில் கொள்ளிடத்தின் முகத்துவாரத்தில் கட்டினால்ராஜன்வாய்க்கால், நடுவண்காடு, வடரங்கம் என நீரை திருப்பிவிட்டு விவசாயத்துக்குப் போக சிதம்பரத்துக்குக் கூட குடி நீர் தர முடியும். காவிரியைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லைஎன்று உறுதியாகச் சொல்கிறார். வெள்ளைமணல் என்ற இடத்தில் தடுப்பணை கட்டினாலும் நீரை சேமித்து விவசாயம் செய்ய முடியும் என்று காட்டூரைச் சேர்ந்த இன்னொரு விவசாயி சொன்னார்.
பூசமணி சொல்வதுபோல் தடுப்பணைகள் கட்ட முடியுமா என்ற தொழில்நுட்பரீதியான விவாதங்களை கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்தட்டும். ஆனால், தடுப்பணைகள் கட்டுவது என்று ஒரு தீர்வு உள்ளது. வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பாதுகாத்து விவசாயம் செய்யும் சாத்தியப்பாடு அற்றுப் போய்விடவில்லை. எப்படி கட்டுவது, எங்கு கட்டுவது என்பதைத் திட்டமிடத்தான் விதவிதமாக துறைகள், அதிகாரிகள், அவர்களுக்குச் சம்பளம், துறைகளுக்கு நிதி என ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஆற்று ஆற்று என்று ஆற்றுகிறார்கள்.
சீர்காழியில் திருநகரி, திட்டை பகுதிகளில் இறால் பண்ணைகள் உள்ளன. இந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இங்கு 20 கி.மீ நீளமுள்ள உப்பனாறு தேனூர் வரை செல்கிறது. இந்த ஆற்றில் கடல் நீர் ஏறிவிடுகிறது. அதனால் அந்த ஆற்று நீர் உப்பாகிவிட்டதுடன், ஆற்றின் பாதையில் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் உப்பாகி விட்டது. இதனால் கடல் நீர் ஆற்றில் ஏறாமல் தடுக்க தடுப்பணை வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். அங்கு தடுப்பணை கட்டினால் இறால் பண்ணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் தடுப்பணை கட்டும் கோரிக்கையை கிடப்பில் போடுகிறார்கள். இப்போது உப்பனாறு பெயருக்கு ஏற்றாற் போல் உப்பாகவும் தேனூர் பெயருக்கு மாறாக உப்பூராகவும் மாறிக் கிடக்கின்றன.
உப்பனாறு நீர் உப்பானதற்கும் அதன் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதற்கும் இறால் பண்ணைகள் நேரடி காரணம் அல்ல. ஆனால் இறால் பண்ணைகளுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, தடுப்பணை கட்ட வேண்டிய இடத்தில் கட்டாமல் விடப்பட்டதால் நிலம், நீர் எல்லாம் வீணாகிக் கிடக்கின்றன.
உப்பனாற்றில் தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு மார்ச் 16 அன்று பகுதி விவசாயிகள் மனிதத் தடுப்பணை போராட்டம் நடத்தினர். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இதற்கு ரூ.5.5 கோடி செலவாகும் என்று சொல்கிறது. ஆனால், பகுதியின் விவசாயிகள் இந்த செலவில் மூன்று தடுப்பணைகள் கட்டிவிட முடியும் என்கின்றனர். அதிகாரிகள் சொல்வதில் முதல் தடுப்பணை அரசியல்வாதிகளுக்கு, இரண்டாவது தடுப்பணை அதிகாரிகளுக்குப் போய் மூன்றாவது தடுப்பணைதான் மக்களுக்கு வரும் என்று விவசாயிகள் சங்கம் ஒன்றின் தலைவர் இமயவரம்பன் சொல்கிறார். அவர் இந்திய உணவு கழகத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
புளியந்துறையின் அரிகிருஷ்ணன் நீர் நிலைகளை உருவாக்க வேண்டும். எண்ணெய் எடுக்க வருபவர்களையோ, இறால் குட்டை வெட்ட வருபவர்களையோ உள்ளே நுழைய விடக்கூடாது. இருக்கிற இறால் குட்டைகளை மூட வேண்டும். அவை இருக்கிற வரை தீங்குதான்என்கிறார். அத்துடன் அவர் முடித்துக் கொள்ளவில்லை. விவசாயம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயம் பொய்த்துப் போனதால் கடன் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்என்றார்.
(அரிகிருஷ்ணன் மாலெ கட்சியையோ, அவிகிதொசவையோ சேர்ந்தவர் அல்ல. அவர் இறால் பண்ணைகளால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் விவசாயி. அவரைப் போன்றவர்கள் கோரிக்கைகளைத்தான் மாலெ கட்சியும் அவிகிதொசவும் முன்வைத்துள்ளன).
இறால் பண்ணை பழைய கதையல்ல முடிந்துபோன கதையுமல்ல
இன்று ஒரு புறம், நடந்துகொண்டிருக்கும் விவசாயத்தைப் பாதுகாக்க தமிழக விவசாயிகள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கி றார்கள். சிறுநீர் குடிப்பது வரை தங்களை வருத்திக் கொண்டு ஏதேதோ வடிவங்களில் மோடியின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து பார்த்தார்கள். அவர்களால் ஒரு விசயம் சாத்தி யமானது. மோடியை, அவரது வெற்று வாய் வீச்சுக்களை 40 நாட்களும் அம்பலப்படுத்தினார்கள். மோடிக்கு அம்பானியும் அதானியும்தான் முக்கியம் உழைக்கும் விவசாயிகள் துச்சம் என்பதை அம்பலப்படுத்தினார்கள்.
மறுபுறம் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் தமிழக விவசாயத்துக்கு ஹைட்ரோகார்பன் வடிவத்தில் வரும் பேராபத்துக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. மோடி அரசாங்கத்தின் குற்றமய அலட்சியத்தை நெடுவாசலில் ஏற்கனவே நடந்த போராட்டமும் அப்போது தரப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுவதைத் தொடர்ந்து நடக்கும் இரண்டாம் கட்ட போராட்டமும் அம்பலப்படுத்துகின்றன.
இறால் பண்ணைகளின் செயல்பாடுகள் துவங்கி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதால் அது பழைய பிரச்சனை ஆகிவிடாது. அது இன்றும் மக்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கொள்ளிடம் ஒன்றிய மக்கள் வாழ்க்கை சொல்கிறது. இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் சாமான்ய மக்கள் வாழ்க்கை முடிந்துவிட முடியாது. எங்கள் பழைய வாழ்க்கை எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். மீட்டெடுக்கும் சாத்தியப்பாடுகள் உள்ளன என்கிறார்கள். இந்தக் குரல் நெடுவாசல் போல் பெரிய குரலாக ஒலிக்கவில்லை என்பதால் இது பிரச்சனை என்ற வரையறைக்குள் வராமல் போகாது. தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுவதுதான் பிரச்சனை என்ற தோற்றத்தை உருவாக்க கார்ப்பரேட் ஊடகங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிக்கி மக்கள் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது.
ஓஎன்ஜிசி நடவடிக்கைகள் பல பத்தாண்டுகள் முன்னரே காவிரி வடிகால் பகுதிகளில் துவங்கிவிட்டன. நரிமணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் போனது, வளர்ச்சி வரவில்லை என்பதும் நிலத்தடி நீர் பாழாகி குடிநீர் இன்றி தவிப்பதும் இன்றும் அந்தப் பகுதி மக்களின் புகாராக உள்ளது.
கடலூரின் பெரியகோயில்குப்பம் கிராமத்தில் ஓஎன்ஜிசி இயற்கை எரிவாயு எடுக்கிறது. 2013ல் துவங்கிய இந்த செயல்பாடுகளால் அங்கு நிலத்தடி நீர் நிறம் பழுப்பாகி உப்பாகிவிட்டது, குடிநீர் கிடைப்பதில்லை என்று கிராம மக்கள் சொல்வதாகவும் செய்திகள் உள்ளன.
தற்போது நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டங்கள், நிலவுகிற நெருக்கடி, எதிர்வருகிற ஆபத்து ஆகியவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பது போல், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிற அழிவுகளை தடுத்து நிறுத்தும் முயற்சிகளையும் எடுக்க வேண்டியுள்ளது. மறு புறம், இறால் பண்ணைகளாலும் ஓஎன்ஜிசி செயல்பாடுகளாலும் நிகழ்ந்துகொண்டிருக்கிற அழிவுகள், எந்தக் காரணத்தாலும், அதிகாரிகளின் வஞ்சக பேச்சுகளை நம்பியோ, அரசாங்கத்தின் பொய் வாக்குறுதிகளுக்கு இடம் தந்தோ, ஹைட்ரோகார்பன் திட்டம் வருவதை அனுமதித்துவிடக் கூடாது என்பதற்கு மிகவும் வலுவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
தற்போதைய தேவை
ஸ்மார்ட் நகரங்கள் அல்ல
விவசாய கிராமங்களே
ஸ்மார்ட் சிட்டி அமைப்பது பற்றி மோடி பேசுகிறார். டிஜிட்டல் பண பரிவர்த்தனை பற்றி பேசி நாட்டின் சாமான்ய மக்களை எள்ளி நகையாடுகிறார். அவரது ஆட்சியில் இந்தியா அதிநவீனமாக முன்செல்வதாக பொய்த்  தோற்றம் தர கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்துகிறார். அவர் சொல்கிற ஸ்மார்ட் நகரங்களில் இணையம் எல்லா சேவைகளையும் பணிகளையும் இணைக்கும் வசதி இருக்கும். ஆனாலும் அங்கிருப்பவர்கள் சாப்பிடுவதற்கு நெல்லோ, கோதுமையோ, பருப்பு வகைகளோ, பிற தானியங்களோதான் தேவைப்படும். ஒரு வேளைக்கு 1 ஜிபி சாப்பிட்டால் பசி தீரும் என்ற வளர்ச்சி ஸ்மார்ட் நகரங்களிலும் நமக்கு இன்னும் கண்ணுக்கும் கருத்துக்கும் தென்படவில்லை. எனவே ஸ்மார்ட் சிட்டிக்களை விட பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதிகள் மிகமிக அத்தியாவசியமானவை.
வளர்ச்சி என்று பொய் சொல்லி வந்து தமிழக விவசாயத்தை அழித்துவிட்ட, அழித்துக் கொண்டிருக்கிற இறால் பண்ணைகள் வேண்டாம். ஓஎன்ஜிசி கிணறுகள் வேண்டாம். அடுத்து வரவிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம். இவற்றுடன் கூட வரும் காவிரி அரசியல் வேண்டாம். அய்ம்பதாண்டு காலமாக தமிழ்நாட்டின் விவசாயம் நாசமாகக் காரணமான அதிமுக, திமுக கட்சிகளின் நாடகங்கள் வேண்டாம்.

மக்கள் வாழ விவசாயம் வேண்டும். சோறு வேண்டும். வாழ்க்கை வேண்டும். நீராதாரம் பாதுகாக்கப்பட, மேம்படுத்தப்பட நடவடிக்கைகள் வேண்டும். விவசாயத்தை கட்டுப்படியானதாக்கும் லாபகரமானதாக்கும் கொள்கைகள், திட்டங்கள், நடவடிக்கைகள் வேண்டும். இந்த கோரிக்கைகள் அரசியல் நிகழ்ச்சிநிரலின் மய்யத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். இவை நடக்க காட்சிப்படுத்துதலுக்கும் கூடுதலாக சாமான்ய மக்களின் தீவிரமான போராட்டங்கள் வேண்டும்.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)

Search