COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 15, 2017

மகிழ்ச்சி, தோழர் சீதாராம் யெச்சூரி!
ஆனாலும்.........

நாடோடி

கோன்தி தெற்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு, 13.04.2017 அன்று வந்தது. இந்தத் தொகுதி, மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் உள்ளது. திரிணாமூல் 95,369 வாக்குகளும், பாஜக 52,843 வாக்கு களும், இடது முன்னணியின் இகக 17,423 வாக்குகளும், காங்கிரஸ் 2,270 வாக்குகளும் பெற்றன.

2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சுமார் 15,000 வாக்குகள் பெற்றது. 2016ல் காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி 60,000 வாக்குகள் பெற்றது. ஒரு வருட இடைவெளியில், திரிணாமூல் காங்கிரசின் முதன்மைப் போட்டியாளர் நிலையை, இடது முன்னணியிடமிருந்து பாஜக கைப்பற்றி உள்ளது.
இந்தப் பின்னணியில், தோழர் சீத்தாராம் யெச்சூரி தி டெலிகிராப் நாளேட்டிற்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம் 09.05.2017 தீக்கதிரில் பிரசுரம் ஆகிஉள்ளது.
தோழர் யெச்சூரியின் பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்பட்டுள்ளன:
எங்களது கட்சியின் விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டின் 2ஆவது மாநாட்டில், எங்களது சொந்த பலத்திலும், அரசியல் தலையீட்டிற்கான திறனிலும் ஏற்பட்டுள்ள சரிவை எவ்வாறு சரி செய்வது என்பதே பிரதானமான விஷயமாக விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டிற்கு முந்தைய பத்தாண்டு காலத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், தேர்தல் உடன்பாடு பற்றி நாங்கள் பேசும்போது, மதவாத சக்திகளின் எழுச்சியை எதிர்கொள்வது போன்ற இன்ன பிற பெரிய விஷயங்கள் முன்னுக்கு வந்த அதேநேரத்தில் மக்கள் நலனுக்கு எதிராக இருந்த பிரச்சனைகள் பின்னுக்கு போயின. இதன் காரணமாக எங்களது சுய அடையாளத்தை நாங்கள் இழக்க நேர்ந்தது’.
உழைப்பாளி மக்கள் வலதுசாரி சக்திகள் பக்கம் செல்வது தமக்குக் கவலை அளிப்பதாகச் சொன்ன தோழர், மேலும் தொடர்ந்தார்:
உழைப்பாளி மக்களிடையே அதிருப்தி காணப்படுகிறது. ஆனால், நாம் மீண்டும் அடிப்படைக்குச் செல்ல வேண்டும். தொழிலாளர்களை அணிதிரட்டத் துவங்கி, போராட்ட இயக்கங்களுக்கு அவர்களை ஊக்குவித்திட வேண்டும். உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்படும் சமாளிப்பு நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. மீண்டும் நாம் மக்களிடையே செல்ல வேண்டும். மக்களிடையே வேலை செய்வது என்ற எங்களது அடிப்படையான கொள்கைகளை நாங்கள் பொருட்படுத்தாது இருக்க துவங்கியிருந்தோம். அங்குதான் இடைவெளியும் தோன்றியது. 35 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது, இடதுசாரி அரசியலின் கூர்மையை மழுங்கடித்தது. மக்களைத் திரட்டுவதை நாங்கள் கை விட்டோம். அரசின் மூலமாக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் சுயவிமர்சனமாக இதை ஒப்புக்கொண்டு அந்தத் தவறை ஏற்றுக் கொள்கிறோம்’.
இடது முன்னணி ஆட்சியின் இறுதிப் பகுதியில் நடந்த விஷயங்களைப் பற்றிக் கவலையுடன் குறிப்பிட்டார்.
ஆனால், அவர்களை களைவதற்குள் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன. நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது கடைசி சில ஆண்டுகளில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். எனவே, ஏராளமான தவறுகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். இவர்கள் நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்பதால் கட்சிக்குள் வந்தவர்களேயன்றி, தத்துவார்த்தரீதியாக இல்லை. எனவே, அவர்களை வெளியேற்றிட வேண்டியிருந்தது. ஆனால், இது போன்றவை அனைத்தும் நாளுக்குநாள் அதிகரித்து கடுந்தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவர்களாக எங்களை ஆக்கியிருந்தன’.
எதிர்த்தாக்குதலை நாங்கள் ஏன் நடத்திடவில்லை என்ற கேள்வியே எப்போதும் எங்களிடம் கேட்கப்படுகிறது. 35 ஆண்டு காலம் ஆட்சியதிகாரத்தில் இருந்ததால் எங்களது எதிர்ப்பாற்றல் மழுங்கிப் போயிருந்தது. இது அரசினுள் ஏற்பட்ட முதலாளித்துவ தாக்கத்தால் ஏற்பட்ட விளைவாகும்’.
1. காங்கிரஸ் மற்றும் பாஜகவிடமிருந்து சமதூரத்தில் விலகி நிற்பது என்ற நிலைப்பாட்டைக் கடைபிடிப்பதில் எப்போதும் வெளிப்படையாக எழும் கருத்து வேறுபாடுகளை நீங்கள் களைந்து விட்டீர்களா?
2. அத்தகைய நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான காலம் வந்து விட்டதா என்ற கேள்விகள் தோழரிடம் எழுப்பப்பட்டன. தோழரது பதில் பின்வருமாறு அமைந்திருந்தது:
மேற்கு வங்கச் சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவது என்பது எங்களது கொள்கையுடன் ஒத்துப் போகாது. அது தவறு என்பதனை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். அதே நேரத்தில், மதவாதிகள் அபாயகரமாக வளர்ச்சி பெற்று வருகின்றனர். எனவே, அவர்களுக்கு எதிராகப் பரந்த மேடை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் குறிப்பிடுகிறோம். அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும், அரசியல் கட்சிகளை மட்டும் நான் குறிப்பிடவில்லை, கூடிய விரைவில் பரந்த மேடையில் இணைவதை நீங்கள் விரைவில் காண்பீர்கள். இந்தியாவில் இன்று நிலவும் சூழலில் அது அவசியம் என நான் நம்புகிறேன்’.
இன்று நம்முன் உள்ள சவால் மிகப்பெரியது. இந்தியா எனும் கருத்துருவாக்கத்தின் மீது விடப்படும் சவால் இது. இது முன்னெப்போதையும் விட பெரியதாக உள்ளது. நமது அரசியல் சாசனம் கூட தற்போதைய நிலையிலேயே தொடர்ந்திடுமா? இச்சவால் அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்த்திட வேண்டிய ஒன்றல்ல. எல்லா விதமான சக்திகளும் இதில் ஒன்றி ணைந்திட வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பற்றி மட்டும் சிந்தித்திடாதீர்கள். இது மிகவும் விரிவடைந்த கூட்டணியாக அமைந்திட வேண்டும். இத்தகையதொரு கூட்டணி அமைந்திடும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்’.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, இடதுசாரி முகாமின் கரிசனங்கள் மற்றும் அக்கறைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளார். அது நிச்சயம், மகிழ்ச்சி தரும் நல்ல விஷயம்தான்.
1.            மதவாத எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, மக்கள் நலனுக்கு எதிராக இருந்த பிரச்சனைகளைப் பின்னுக்குச் செல்ல விட்டு விட்டோம். இதனால் இடதுசாரி சுய அடையாளத்தை இழக்க நேர்ந்தது.
2.            வெவ்வேறு கட்சிகளுடன் அணிசேர்க்கை உருவாக்கும் உயர்மட்ட சமாளிப்பு நடவடிக்கைகள் பயனளிக்காது. மக்களிடம் செல்ல வேண்டும். மக்கள் போராட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
3.            35 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது இடதுசாரி அரசியலின் கூர்மையை மழுங்கடித்தது. மக்களைத் திரட்டுவதை நாங்கள் கைவிட்டோம். அரசின் மூலமாக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம்.
4.            35 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தால் எங்களது எதிர்ப்பாற்றல் மழுங்கிப்  போனது. இது, அரசினுள் ஏற்பட்ட முதலாளித்துவ தாக்கத்தின் விளைவாகும்.
5.            மேற்கு வங்கச் சூழலில், காங்கிரசுடன் இணைந்து செயல்படுவது என்பது, எங்கள் கொள்கையுடன் ஒத்துப் போகாது.
தோழர் சொல்லும் விஷயங்களைத் தொகுத்துக் காணும்போது, வலதுசாரி திரிணாமூல், வலதுசாரி பாஜக, மேற்குவங்கத்தில் பலம் பெற, இடது முன்னணியும் தன் பங்கிற்கு உதவி உள்ளது தெளிவாகும். தனது சுயவிமர்சனங்களைச் சொல்லி உள்ள இகக(மா), இடது திசையில் பயணம் மேற்கொள்வதை இடதுசாரி முகாம் ஆர்வத்துடன் வரவேற்கும்.
மகிழ்ச்சிதான் என்று சொல்லிவிட்டு, ‘ஆனாலும்என்று ஏன் இழுக்க வேண்டி உள்ளது? மேற்கு வங்க சூழலில் காங்கிரசுடன் செயல்படுவது இகக(மா)வின் கொள்கைக்கு முரணானது என்ற இகக மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு முடிவுகளை, இககவின் மிகவும் சக்திவாய்ந்த மேற்குவங்க மாநிலக் குழு ஏற்றுக் கொண்டுவிட்டதா? அவர்கள், தோழர் யெச்சூரி போல் இன்று வரை, பகிரங்கமாக, காங்கிரசுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது தவறு என்று சொல்லவில்லையே. எது எப்படியானாலும், இகக(மா)வின் பொதுச் செயலாளர், முதலாளித்துவ ஊடகத்தில் பகிரங்கமாக அளித்துள்ள பேட்டியே, அவர்களது அதிகாரபூர்வமான நிலைப்பாடு என நாம் ஏற்கலாம்.
அடுத்து ஒரு பிரச்சனை வருகிறது.
அ) மதவாத எதிர்ப்பும், பெரும் தொழில் குழும முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை எதிர்ப்பும் தனித்தனி விஷயங்களா? தனித்தனி பெட்டிகளில் அவற்றைப் போட முடியுமா?
ஆ) தேர்தல் காலத்தில் அல்லாத மக்கள் இயக்கங்களில் ஏற்படுகிற போராட்ட உறவுகளுக்கும், தேர்தல் உறவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதா?
சங்பரிவார் அரசியலில் இருந்து மட்டும் அல்லாமல், கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பெரும் பசியுடன் காத்திருக்கும் பெரும் தொழில் குழும உலகில் இருந்தும், மோடி, இன்று தம் சக்தியைப் பெறுகிறார் என்பதை நாம் காணத் தவறக் கூடாது. மோடி எதிர்ப்பை, ‘மதவெறி எதிர் மதச்சார்பற்ற சக்திகளுக்குஇடையிலான போராட்டம் என்று தட்டையாகக் சுருக்கி அணுக முடியாது. மோடி எதிர்ப்பு, உழைக்கும் மக்களின் ஜனநாயகத்திற்கான மற்றும் பெரும் தொழில் குழும வளர்ச்சிப் பாதை எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்தே வலிமை பெற முடியும். சாதி ஆதிக்க எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பெரும் தொழில்குழும எதிர்ப்பு, தனித்தனிப் பெட்டிகளில் அடைக்கப்பட வேண்டியவை அல்ல; இந்த எதிர்ப்புகள் பிளவுபடுத்த முடியாத, பிரித்துப் பிரித்து நிறுத்த முடியாத, அனைத்தும் தழுவிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தைக் கோருகின்றன. சாதி ஆதிக்கம், மதவாதம், பெரும் தொழில் குழும ஆதிக்க எதிர்ப்பு என்பது ஓர் ஒருங்கிணைந்த முழுமையாகும். பெரும் தொழில் குழும வளர்ச்சிப் பாதை அரசியலை முன் எடுப்பவர்களுடன், மதவாத எதிர்ப்புக் கூட்டணி என்பது நிராகரிக்கப்பட வேண்டும்.
மக்களின் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும், இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்தி வாய்ந்த தலையீடும் மட்டுமே, நாடு ஒட்டுமொத்தமாக பெரும் தொழில் குழும பாசிச கையகப்படுத்துதல் ஆபத்துக்களுக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்.
தேர்தல் காலம் அல்லாத நேரங்களில் மக்கள் போராட்டங்களில் கூட்டாளிகளாகச் சேரக் கூடியவர்களைத் தாண்டி, தேர்தல் காலத்தில் இடதுசாரிகளுக்கு வேறு கூட்டாளிகள் எப்படி அமைய முடியும்? தமிழ்நாடு இகக (மா), மக்கள் பிரச்சனைகளில் திமுகவோடு கூட்டணி என்பது வேறு, திமுகவோடு தேர்தல் கூட்டணி வேறு எனச் சொல்கிறது.
திமுக, ஊழல் கட்சி மட்டுமல்ல. திமுக, கியா மோட்டார்ஸ் ஏன் தமிழ்நாட்டை விட்டுப் போனது, கங்கைகொண்டான் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் ஏன் அய்க்கிய அமெரிக்க கம்பனி தொழில் துவங்காமல் பின்வாங்கிவிட்டது என்பது பற்றி மட்டுமே கவலைப்படும். நிசானுக்கு எப்படி ரூ.2,500 கோடி வரித் தள்ளுபடி தர அரசு முன்வந்தது எனக் கேட்காது. அஇஅதிமுகவைக் காட்டிலும் மூலதன சேவையில் தானே மேலான கட்சி எனப் போட்டியிடும். திமுகவோடு சேர்ந்து எப்படி மக்கள் பிரச்சனைகளில் போராட முடியும்? மக்கள் பிரச்சனைகள் மீதான போராட்டத்தின் தொடர்ச்சியாக தேர்தல் போராட்டம் அமைய வேண்டாமா?
சமஸ் போன்ற, கூர்மை இல்லாத முனை மழுங்கிய தாராளவாத இடதுசாரி அரசியலை முன் நிறுத்துபவர்களை, காலச் சக்கரத்தை 1950 1960 நோக்கித் திருப்பி திராவிட இயக்க மேன்மையை மீட்கச் சொல்பவர்களை, குழம்புபவர்களை, குழப்புபவர்களை, தோழர்களாக, இடதுசாரி ஆதரவாளர்களாக பார்க்கும் பலவீனம் எப்படி இடதுசாரிகளுக்கு வந்தது? கத்தி போன்ற முருகதாஸ் - விஜய் கூட்டணியின் விறுவிறுப்பான வர்த்தக மசாலா திரைப்படத்தில், மக்கள் சார்பு முற்போக்கை, தமிழக இடதுசாரிகளால் எப்படிக் காண முடிந்தது? வைகோ விஜயகாந்த் வகையறாக்களுடன் எப்படி மக்கள் நலக் கூட்டணி அமைக்க முடிந்தது?
தேர்தல் அல்லாத காலத்தின் தந்திரங்கள் வகுப்பதிலும், அதற்கு பொருத்தமான தேர்தல் கூட்டாளிகளை நாடுவதிலும், இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுதந்திரமாக சொந்தக் காலில் நின்றால், சிறிய சக்தியும் பெரிய சக்தியாக முடியும். அதற்கு, அரசியல்ரீதியாக, சாத்தியமானவற்றை மட்டுமே செய்வதைத் தாண்டி, அவசியமானவற்றைச் செய்யத் துணியும், போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்க அரசியல் கருத்தியல், இடதுசாரிகளுக்கு மிகமிகத் தேவையாகும்.

Search