நாகையில் தலித்
இளைஞர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல்
தமிழ்நாட்டில்
செயல்படுவது காவல்துறையா?
கொலைகார படையா?
நாகை
மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டினம் கிராமத்துக்கு சீர்காழி பகுதியைச் சேர்ந்த தலித்
இளைஞர்கள் நான்கு பேர் மே 7 அன்று தங்கள்
நண்பர்களைச் சந்திக்க இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சென்ற இடத்தில் ஒரு சாலையோர
தேநீர் கடையில் நின்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களது வாகனத்தில் அம்பேத்கர் படம்
ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த,
பகுதியின் ஆதிக்க
சாதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர்களை வம்புக்கு இழுத்தார். சாதாரண வாய்த்
தகராறு ஏற்பட்டது. தலித் இளைஞர்கள் வழக்கம்போல் கொச்சையான வசவுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களும் திரும்ப பதில் சொல்லியுள்ளனர்.
உள்ளூரைச்
சேர்ந்த அந்த ஆதிக்க சாதி இளைஞர் ஊருக்குள் சென்று தங்கள் சாதியினரையும் கூடவே
காவல் துறையினரையும் அழைத்து வந்துள்ளார். காவல்துறையினரும் ஆதிக்க சாதியினரும்
எந்த வித காரணமும் இல்லாமல் தலித் இளைஞர்களை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக கம்பு
கொண்டு தாக்கியுள்ளனர். நாங்கள் இங்கிருந்து சென்று விடுகிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த தலித்
இளைஞர்கள் சொன்ன பிறகும் அவர்கள் மீதான கொடூரமான தாக்குதலை ஆதிக்க சாதியினரும்
காவல்துறையைச் சேர்ந்தவர்களும் நிறுத்தவில்லை. பிறகு அந்த நான்கு தலித் இளைஞர்கள்
மீது பொய் வழக்கு போட்டு அவர்களில் மூன்று பேரை திருச்சி சிறையிலும் ஒருவரை தஞ்சை
சீர்திருத்தச் சிறையிலும் காவல் வைத்துள்ளனர்.
புதுப்பட்டினத்தில்
காவல்துறையினர் தாக்கியதால் தலித் இளைஞர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு
ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவர் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவரை
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சிறையில் அவரைப்
பார்க்க அவரது உறவினருக்குத் தெரிந்த ஒருவர் சென்றபோது, அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அறிந்து
அதன் பிறகு சிறை அதிகாரிகளிடம் பேசி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
காவல்துறையினர்
தலித் இளைஞர்கள் மேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாகை - தஞ்சை
மாவட்ட இகக மாலெயும் புரட்சிகர இளைஞர் கழகமும் உடனடியாக சுவரொட்டி இயக்கம்
நடத்தின. மே 16 அன்று
ஆர்ப்பாட்டம் நடத்தின. தலித் இளைஞர்கள் மேல் கொடூரமான தாக்குதல் நடத்திய
புதுப்பட்டினம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள்
மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்களுக்கு
முறையான சிகிச்சையும் உரிய இழப்பீடும் தரப்பட வேண்டும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் எந்தவித
நிபந்தனையும் இன்றி திரும்பப் பெறப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்
முன்வைக்கப்பட்டன.
பொது இடங்களை
பயன்படுத்த, அம்பேத்கர் படம்
ஒட்டிய இருசக்கர வாகனத்துடன் பொது இடத்தில் நின்று கொண்டிருக்க தலித்
இளைஞர்களுக்கு உரிமை மறுக்கப்படும் சூழலே தமிழ்நாட்டில் இன்னமும் நிலவுகிறது
என்பதை, ஊழல் செய்யும்
அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏவல் செய்யும் தமிழ்நாட்டின் காவல்துறையில்
சாதிவெறி ஆழ வேர் விட்டிருப்பதை, மக்கள் நலனில்
அக்கறையற்று பதவியைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மும்முரமாக
ஈடுபட்டிருக்கும்போதும் தலித் மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு சற்றும்
சளைக்கவில்லை என்பதை, தலித் இளைஞர்கள்
மீது நடந்துள்ள இந்த கொடூரமான தாக்குதல் காட்டுகிறது.
(மாலெ தீப்பொறி 2017 மே 16 – 31)