நக்சல்பாரியின்
அய்ம்பது ஆண்டுகள்
சங் பரிவார்
ஆட்சியில் இருக்கும் இந்த நேரத்தில்
ஒரு புதிய
அரசியல் ஆற்றல் அவசியம்
திபங்கர்
இந்திய - நேபாள
எல்லைக்கருகே, மேற்குவங்கத்தின்
டார்ஜிலிங் மாவட்டத்தில், அது வரை எவர்
கண்ணிலும் படாமல் இருந்த பகுதியான நக்சல்பாரி, இந்திய அரசியல் சொல்லாடல்களில் புயல் போல்
நுழைந்து அய்ம்பது ஆண்டுகள் ஆகின்றன.
அது ஒரு மாறுபட்ட
விவசாய எழுச்சி. மாறிக் கொண்டிருந்த நில உறவுகள் பிரச்சனையை, அரசு அதிகாரத்தின் வர்க்க அமைப்பாக்கத்தில்
மாற்றம் என்ற மட்டத்துக்கு அது உயர்த்தியது.
கம்யூனிஸ்டுகள்
தலைமையிலான அந்த எழுச்சியை, அது
துவங்கும்போதே நசுக்கிவிட அரசு ஆனதெல்லாம் செய்தது. காவல்நிலைய படுகொலைகள்,
போலி மோதல் படுகொலை கள்,
இளம்செயல்வீரர்களும்
அவர்களது குடும்பங்களும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவது, மூன்றாம் தர சித்திரவதை, மனம் போன போக்கில், விசாரணை இல்லாமல் காலவரையற்ற சிறை -
நக்சல்பாரிக்கு அரசின் பதில்வினையாக உருவான இவை, இன்று அரசு ஒடுக்குமுறை என்ற பொருளில் அன்றாட
நிகழ்வுகளாகிவிட்டன.
கொடூரமான
ஒடுக்குமுறைக்கு அக்கம்பக்கமாக, நக்சல்பாரி
இயக்கத்தை திட்டமிட்ட விதத்தில் சாத்தான்மயமாக்கும் நடவடிக்கை களிலும் அரசு
இறங்கியது; நக்சலிசத்தை
பயங்கரவாதத்தோடு சமனப்படுத்தியது; தேசப்
பாதுகாப்புக்கு மிகப்பெரிய உள்நாட்டு ஆபத்து என்று அதற்கு முத்திரை குத்தியது.
ஆயினும்
நக்சல்பாரி எழுச்சியின் அய்ம்பது ஆண்டுகள் நிறைவுறுகிறபோது, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா,
தனது வங்க லட்சியத்தின்
துவக்கப் புள்ளியாக, ஆரவாரமாக
நக்சல்பாரிக்குச் செல்கிறார். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக, மேற்குவங்க பயணத்தின் முதல் சுற்று முடிந்த
உடனேயே, நக்சல்பாரியில்
அவருக்கு விருந்தளித்த தம்பதியர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரசில்
இணைந்தனர்.
மத்தியிலும்
மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கிற கட்சிகளுக்கு இடையில், நகசல்பாரி தொடர்பாக நடக்கும் இழுபறி ஒரு
விசயத்தை தெளிவுபடுத்துகிறது: ஒடுக்குமுறை, சாத்தான் மயமாக்கம் ஆகியவற்றுக்கு
உள்ளாக்கப்பட்ட போதும், நக்சல்பாரி
இறந்துவிட்டதாக பல முறை அறிவித்த ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளிலேயே, நக்சல்பாரி உள்ளாற்றல் மிக்க குறியீடாக
இன்னமும் இருக்கிறது.
நக்சல்பாரிக்கான
உத்வேகம்
குறியீடுகளுக்கு
அப்பால், நக்சல்பாரியின்
வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அதன் சமகால அதிர்வுகள் பற்றி பார்க்கலாம். பல
இடங்களிலும் இன்று கார்ப்பரேட் நிலப்பறிக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின்,
பழங்குடி மக்களின்
எழுச்சிபோல், நக்சல்பாரி
திடீரென்று, தன்னெழுச்சியாக
நிகழ்ந்த விவசாய எழுச்சியல்ல.
தெபாகா மற்றும்
தெலுங்கானாவின் உணர்வை மீண்டும் புத்தெழுச்சி பெறச் செய்ய, கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட உணர்வு பூர்வமான,
அமைப்பாக்கப்பட்ட,
நீடித்த முயற்சியில் அது
வேர் கொண்டிருக்கிறது. 1940 களின்
பிரிக்கப்படாத வங்கத்தின் விவசாயிக ளின் புரட்சிரப் போராட்டம்தான் தெபாகா.
மதரீதியாக சீர்கெட்டுப் போயிருந்த சமூகச் சூழலில் வர்க்க ஒற்றுமை, அதன் போர்க்குணம் ஆகியவற்றுக்கு அது பெயர்
பெற்றது. சாரு மஜும்தார், நக்சல்பாரியின் அவரது சக சிற்பிகள், அமைப்பாளர்கள் பலரும், தெபாகா கிளர்ச்சியின் செயல்வீரர்களாக
இருந்தவர்கள். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியின் முக்கிய மய்யங்களாக,
வடக்கு வங்கத்தின் நக்சல்பாரியும்
அதை ஒட்டிய பகுதிகளும் இருந்தன.
இந்த
உணர்வுபூர்வமான முயற்சியின் கூடவே, கம்யூனிஸ்ட்
இயக்கத்தில் கூர்மையான கருத்தியல் போராட்டமும் நடத்தப்பட்டது. தெபாகா, தெலுங்கானா நாட்களில் இருந்து, விவசாயப் பிரச்சனையும், விவசாயப் புரட்சியின் உள்ளாற்றலும் இந்தியாவில்
முழுமையாக நிராகரிக்கப்படுகிறது என்று கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் ஒரு காத்திரமான
பார்வை இருந்தது.
கம்யூனிஸ்ட்
தலைமை தெலுங்கானா போராட்டத்தை அதிகாரபூர்வமாக திரும்பப் பெற்றபோது, இயக்கத்தின் நாடாளுமன்றம் தவிர்த்த பரிமாணத்தை,
ஒரு மேலோங்கிய நாடாளுமன்ற
நோக்குநிலைக்கு திறன்மிக்க விதத்தில் கீழ்ப்படுத்தியபோது, அந்த விவாதம் மேலும் கூர்மையடைந்தது.
இந்த கருத்தியல்
அரசியல் விவாதம் பற்றிய ஓர் உண்மையான, உள்ளார்ந்த சித்திரத்தை சாரு மஜும்தாரின்
பிரபலமான எட்டு கட்டுரைகள் காட்டுகின்றன.
நக்சல்பாரியின்
வேர்கள்
இந்திய கம்யூனிச
இயக்கத்துக்குள் நக்சல்பாரியின் பின்னணிக்கு, வேர்களுக்கு அழுத்தம் தருவது முக்கியமானதாகும்.
ஏனென்றால், நக்சல்பாரி,
சீன கலாச்சார புரட்சியைப்
போல் செய்யப்பட்ட ஒன்று என்று சொல்லப்படுகிறது.
நக்சல்பாரி
சீனத்தில் இருந்து பெருமளவு உத்வேகம் பெற்றது உண்மைதான். சீன கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியாவில் வசந்தத்து இடி முழக்கம் என்று அதைச் சொன்னது. இந்திய கம்யூனிஸ்ட்
புரட்சியாளர்கள், சீனத்தின் தலைவர்
மா சே துங், எங்களது தலைவர்
என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்கள்.
ஆனால், நக்சல்பாரியின் சாரத்தை புரிந்து கொள்ள
வேண்டுமானால், கொந்தளிப்பான 1960களின் இந்தியப் பின்னணியில் அதை சரியாகப்
பொருத்திப் பார்க்க வேண்டும். ஆளும் வர்க்கங்களின், இந்திய அரசின் நெருக்கடி அப்போது ஆழமடைந்து
கொண்டிருந்தது; இந்திய
மக்களுக்கு இது ஒரு புரட்சிகர வாய்ப்பு என்று இந்தக் கட்டத்தை கைகொள்ள வேண்டிய,
ஆழமாக உணரப்பட்ட தேவை
கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் இருந்த நேரம் அது.
அடுத்தடுத்த
இரண்டு போர்கள் மக்கள் மீது கடுமையான பொருளாதார சுமையை ஏற்றியிருந்தன. நாட்டு
விடுதலை இயக்கத்தில் தூண்டப்பட்ட கனவுகள், கடுமையான உணவு பஞ்சம், கட்டுக்கடங்காத
விலைஉயர்வு, தேங்கி நின்ற
விவசாயம், அதிகரித்து வந்த
வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் மத்தியில் மக்களின் ஆழமான ஏமாற்றமாக கரைந்து போயின.
நேருவும் அவரைத்
தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரியும் இறந்த பிறகு, தலைமை மாற்றம் என்ற குழப்பமான இயக்கப்போக்கில்
காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. 1967ல் 9 மாநி லங்களில் அது ஆட்சியை இழந்தது; காங்கிரசின் தேர்தல் தோல்விகளின் முதல்
அறிகுறிகள் அப்போதே தெரியத் துவங்கின. மேற்குவங்கத்திலும் கம்யூனிஸ்டுகள்
மிகப்பெரிய அங்கமாக இருந்த கூட்டணி அரசாங்கம் காங்கிரசை விரட்டியடித்தது.
இந்தப்
பின்னணியில் நக்சல்பாரி நிகழ்ந்தது. இந்த விவசாய எழுச்சியை நசுக்கிவிட அரசு முடிவு
செய்தபோது, நக்சல்பாரி தீயை
நாடு முழுவதும் பரப்ப, 1970களை இந்திய
மக்களின் விடுதலையின் பத்தாண்டாக மாற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அழைப்பு
விடுத்தனர்.
நக்சல்பாரி
எழுச்சி நடந்து இரண்டு ஆண்டு களில், நக்சல்பாரியின் சிற்பிகள், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கம்யூனிஸ்ட்
கட்சியைக் கட்டும் அடுத்த பணியை முன்னெடுத்தனர். புரட்சிகர கம்யூனிஸ்ட் அணிகள் மத்தியில்
மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கட்சி, இந்தியாவெங்கும்
வேகமாகப் பரவியது. அதன் முந்தைய அமைப்புகளான இகக, இககமாவில் இருந்து கூர்மையாக மாறுபட்டு
நின்றது.
இகக தெலுங்கானா
போராட்டத்தை திறன்மிக்க விதத்தில் கைவிட்டது; ஆனால் இகக மாலெ நக்சல்பாரி தீயை வளர்த்தெடுப்பது,
அதைப் பரப்புவது என்ற
அறிவிக்கப்பட்ட இலக்குகளோடு உருவானது. இககவுக்குள் நடந்த செங்குத்தான பிளவின்
விளைவாக இககமா உருவானது; இககமாவின்
ஸ்தாபகத் தலைவர்கள் அனைவரும் பிளவுபடாத இககவின் மூத்த தலைவர்கள். இகக மாலெயின்
ஸ்தாபகத் தலைவர்கள் பெரும்பாலும் இகக மாவின் மாவட்ட மட்ட தலைவர்கள்.
சமூகத்தை
ஜனநாயகப்படுத்துவதில் விவசாயப் புரட்சியே திறவுகோல் தன்மை கொண்டது, விவசாய மாற்றத்திற்கு தலைமை தாங்கும் சக்தி
நிலமற்ற வறியவர்கள் என்ற புரிதலுடன், இகக மாலெ, சமூகப் பிரிவு
என்ற பொருளில் பெரும்பாலும் தலித்துகளாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக, பழங்குடி மக்களாக இருக்கிற ஒடுக்கப்பட்ட கிராமப்புற வறியவர் மத்தியில்
வரவேற்பு பெற்றது.
கடுமையான அரசு
ஒடுக்குமுறை, அரசு ஆதரவு கொண்ட
நிலப்பிரபுக்களின் தனியார் படைகள் நடத்திய
நிலப்பிரபுத்துவ வன்முறை ஆகியவற்றை எதிர்கொள்ள, ஒடுக்கப்பட்ட வறிய மக்கள் மத்தியிலான ஆழமான
வேர்தான், இகக மாலெயின்,
போராட்ட வலிமையின்,
தாக்குப்பிடிக்கும்
தன்மையின் மிகப் பெரிய ஆதாரமாக இருந்தது. இதுபோன்ற கடுமையான ஒடுக்குமுறையை
சந்தித்தும் இகக மாலெ தாக்குப் பிடித்து நிற்பதைப் போல் வேறெந்த கட்சியும் வேறெந்த
இயக்கமும் நின்றதில்லை.
சாரு மஜும்தார் வகுத்த கொள்கை
இகக மாலெயை,
அல்லது அது ஜனரஞ்சகமாக
விவரிக்கப்படுவதைப்போல், நக்சலிசத்தை,
அதன் துவக்க கட்டத்தில்,
அது கடைபிடித்த போராட்ட
வடிவங்கள் மூலம் ஊடகவியலா ளர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். 1960களின் இறுதிப் பகுதியில் இருந்த சூழலை ஒரு
சாதகமான புரட்சிகர சூழல் என்று இகக மாலெ வரையறுத்தது. அதற்கேற்ப, புரட்சியே நேரடியான, உடனடி நிகழ்ச்சி நிரலாக அப்போது இருந்தது.
பகுதி
கோரிக்கைகள், வெகுமக்கள்
அமைப்புகளின் அன்றாட பணிகள், தேர்தல் தலையீடு
ஆகிய அனைத்தும் பின்னுக்குப் போயின. ஆயுதப் போராட்டம் மய்யமான கவனக் குவிப்பு
புள்ளியாக இருந்தது.
ஆனால், இகக மாலெயின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய
நீண்ட கால பார்வையில், இகக மாலெ எந்த
ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்தையும் உயிரற்ற வழிபாட்டு பொருளாக மாற்றவில்லை
என்பதும், நிலவுகிற
சூழலுக்கும் புறநிலைக்கும் ஏற்ற குறிப்பிட்ட வடிவங்களின் திறமும் மற்றும்
பொருத்தமும் தெளிவாகத் தெரியும்.
நக்சல்பாரியின்
கருத்தியல் அரசியல் அடிப்படைகளை முன்வைக்கும் ‘எட்டு கட்டுரைகள்’ எந்த போராட்ட வடிவத்தையும் தவிர்க்கவில்லை.
அணிதிரட்டலுக்கும் செயலுக்கும் ஆயுதப் போராட்டம்தான் மய்ய வடிவம் என்று
முன்வைத்தபோது கூட, சாரு மஜும்தார், ராணுவவாத ஆபத்துக்கு எதிராக எச்ச ரிக்கை
செய்தார். அரசியலை ஆணையில் வைக்க வேண்டும் என்றும் வெகுமக்களின் முன்முயற்சியை
கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
1971 தேர்தல் வெற்றி
மற்றும் பங்களாதேஷ் போருக்குப் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சி உறுதிப்பட்டதைத்
தொடர்ந்து நடந்த கடுமையான ராணுவ ஒடுக்குமுறை, பாதகமான மாற்றங்கள் என்ற பின்னணியில், சாரு மஜும்தார், தனது கடைசி கட்டுரையில், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒரு பரந்த
எதேச்சதிகார எதிர்ப்பு கூட்டணியின் அவசியம் பற்றி வலியுறுத்தினார். ‘மக்கள் நலனே கட்சியின் நலன்’ என்று தனது தோழர்களுக்குச் சொன்னார்.
1970களில் இகக மாலெ
சந்தித்த பின்ன டைவுகளில் இருந்து மீண்டு எழுந்தது, கம்யூனிஸ்ட் புரட்சிகர முகாமுக்கு ஒரு மிகப்
பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு பின்னடைவுக்கும் பிறகு நடப்பதுபோல, சிலர் ஒட்டு மொத்த இயக்கத்தையும் கைவிட்டார்கள்;
மொத்த விசயமும் ஒரு
மிகப்பெரிய தவறு என்று சொன்னார்கள். மறுபக்கத்தில், ஆயுதப் போராட்டத்தை மட்டுமே ஒரே போராட்ட வடிவம்
மற்றும் போராட்ட அரங்கமாகக் கொண்டு சிலர் தொடர்ந்தார்கள்; விளைவாக அவர்கள் இககமாலெ நீரோட்டத்தில் இருந்து
தங்களை துண்டித்துக் கொண்டார்கள்; தங்கள் அமைப்பின்
பெயரை இகக (மாவோயிஸ்ட்) என்று மாற்றிக் கொண்டார்கள்.
மத்திய
இந்தியாவின் காடுகளில் மாவோயிஸ்டுகளுக்கு சாதகமான இடம் இருந்தது. புத்துயிர்ப்பு
பெற்ற இகக மாலெ பீகார் மற்றும் ஜார்க்கண்டின் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வறியவர்
மத்தியில் ஆழமாக வேர் கொண்டது. கிராமப்புற வறிய மக்களின் சக்திவாய்ந்த
போராட்டங்கள் மூலம், அடிப்படை மாற்றத்துக்கான
மாணவர்கள் மற்றும் பெண்களின் அறுதியிடல் மூலம் தனது இருத்தலை வெளிப் படுத்தியது.
பீகாரிலும் ஜார்க்கண்டிலும் இருந்த வெகுமக்கள் ஆதரவு, சில தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளையும்
தந்தது. நீடித்த அரசியல் தலையீடுகளும் சாத்தியமாயின.
அரசுடனான மோதலின்
முதல் கட்டத்தில், அப்போதுதான்
உருவாகியிருந்த கட்சிக்கு அதன் அனுபவங்களை பரிசீலனை செய்யவும் சரியான படிப்பினைகள்
பெறவும் குறைவான வாய்ப்புகளே இருந்தன. பழைய தவறுகளை சரி செய்தபோது அது, ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் தங்கள்
அனைத்து விதமான உரிமைகளுக்காகவும் போராட, அறுதியிட புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டது.
நக்சல்பாரி
உணர்வு
வரலாற்றுச்
சிறப்புமிக்க நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டை நாம் அனுசரிக்கிற இந்த நேரத்தில்,
அந்த இயக்கத்தின் முக்கிய
படிப்பினைகளையும் அதன் சமகால பொருத்தப்பாட்டையும் பார்க்கலாம். சில அம்சங்கள் நமது
உடனடி கவனத்தை கோருகின்றன.
ஒடுக்கப்பட்ட
நிலமற்ற வறிய மக்களின் வலியையும் சீற்றத்தையும் சக்திவாய்ந்த எதிர்ப் பாக மாற்றிய
விவசாய எழுச்சிதான் நக்சல்பாரி. இன்றைய விவசாய நெருக்கடி காலகட்டத்தில் நக்சல்பாரியின்
செய்தி வலுவான தெளிவான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த வலி ஏற்கனவே கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. கடன் பிடியில், நெருக்கடியில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான
விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொண்டுவிட்டார்கள்; ஆனால், கட்டாய நிலப்பறி நடக்கிற, விவசாயிகளுக்கு
அநீதி இழைக்கப்படுகிற ஒவ்வொரு நிகழ்வுக்கு எதிராகவும் எதிர்ப்பின் எரிதழல்
பிரகாசமாக எரிகிறது.
நாட்டு விடுதலை
போராட்டத்தில் மாணவர்கள் ஆற்றிய பாத்திரத்தின் தீவிரம், அளவு, தியாகம் ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு நக்சல்பாரி, அடிப்படை மாற்றம் விரும்பிய மாணவர்களின்
எழுச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான நகர்ப்புற மாணவர்கள், நேரடியாக புரட்சிகர அரசியலில் குதித்தார்கள்.
ஒடுக்கப்பட்ட கிராமப்புற வறிய மக்களுடன் ஒன்றுபட கிராமப்புறங்களுக்குச்
சென்றார்கள். ‘மக்கள்தான்
முதலில்’ என்ற
தேசப்பற்றின் புதிய பொருளை முன்வைத்தார்கள். உலக வர்த்தக மய்யத்தின்
கட்டளைப்படியான வணிகமயம் மற்றும் சங்பரிவாரின் சீர்குலைவு நடவடிக்கைகள் என்ற
இரட்டை இயக்கப்போக்குகள் மாண வர்கள் மீது ஓர் உண்மையான போர் தொடுத்திருக்கிறபோது,
ஒவ்வொரு பல்கலை கழகத்தையும் ஒரு போர்க்களமாக மாற்றியிருக்கிறபோது, நக்சல்பாரியின் இந்த உணர்வு இன்று பல்கலை கழக
வளாகங்கள் முழுவதும் எதிரொலிக்கிறது.
கட்டுக்கடங்காத
இந்து பெரும்பான்மை வாதம் என்று தேசியம் மறுவரையறை செய்யப்படும் முயற்சிகள்
நடக்கும்போது, நக்சல்பாரி
பிரபலப்படுத்திய ‘மக்கள்தான்
முதலில்’ என்ற
தேசப்பற்றுதான், ஒற்றைமயமாக்கும்,
மய்யக் கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வரும் பாசிச திட்டத்துக்கு எதிராக, பல்கலாச்சார இந்தியாவின் ஜனநாயக
பன்மைத்தன்மையைப் பாதுகாக்க மிகவும் திறன்மிக்க அரணாக இருக்கும்.
நக்சல்பாரி
ஆற்றல் மீண்டும் அவசியம்
நக்சல்பாரியில்
இருந்து இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய அணுகுமுறை துவங்கியது. ஆட்சியாளர்கள்
கண்கள் மூலம் வரலாற்றைப் பார்க்கும் மேலாதிக்க சட்டகத்தை மீறி, ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு நோக்கி பார்வை
திரும்பியது. பழங்குடி மக்கள் கிளர்ச்சிகளின், விவசாய எழுச்சிகளின் பெயர் தெரியாத கதாநாயகர்கள்
ஒரு வழியாக வரலாற்றின் பக்கங்களில் தங்கள் இருத்தல் உணரப்படுவதையும் நிகழ்த்தத்
துவங்கினார்கள்; வரலாற்றியலின்
விளிம்பு நிலை மக்கள் தொடர்பான பாடப் பிரிவு துவங்கியது.
இன்று
இந்தியாவில் வேறு ஒரு முனையில் இருந்து வரலாற்றின் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளதை
நாம் பார்க்கிறோம். பண்டைய வரலாற்றின் இடத்தை புராணக் கதைகள் பிடித்துக்
கொள்கின்றன. மத்தியகால வரலாறு மீண்டும் காலனிய - மதவெறி படிமங்களுக்கு
உட்படுத்தப்படுகிறது. நவீன வரலாறு ‘இடித்து நொறுக்கு,
கைப்பற்று’ நடவடிக்கைக்கான பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
காந்தி, சுபாஷ் போஸ் முதல் பகத் சிங், அம்பேத்கர் வரை, நவீன வரலாற்றின் ஒவ் வொரு புகழ்மிக்க
தலைவரையும் கைப்பற்றிக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன. காவி ஆட்சியாளர்கள், தங்களது ‘வரலாற்றுப் பற்றாக்குறையை’ நிவர்த்தி செய்ய மூர்க்கத்தனமாக முயற்சி
செய்கிறார்கள்!
இந்திய
கம்யூனிஸ்ட் இயக்கத்தை அடிப்படையில் மாற்றியமைத்த மகத்தான தருணம்தான் நக்சல்பாரி
என்பது மிகவும் முக்கியமானது. வர்க்கப் போராட்டம் பற்றிய, பொருளாதார தளத்துக்குள்ளோ, நாடாளுமன்ற அரசியல் எல்லைகளுக்குள்ளோ சுருங்கி
விடாத, சமூக இருத்தலின் ஒவ்வாரு
தளத்திலும் ஒடுக்குமுறைக்கு, அநீதிக்கு
எதிராகப் போராடும் கடப்பாடு கொண்ட புதிய வரையறையை உருவாக்கியது. சாதி, பாலினம், இனம், தேசம், மொழி, கலாச்சாரம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகள்,
வர்க்கப் போராட்டத்தின்
இந்த புதிய நடைமுறைக்குள் அவற்றுக்கே உரிய இடத்தில் இருந்தன.
இன்று
அதிகாரத்தில் இருக்கிற சங் பரிவார், இந்தி - இந்து - இந்துஸ்தான் என்ற
நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கார்ப்பரேட் கொள்ளை, மதவெறி துருவச் சேர்க்கை என்ற இரட்டை
சக்கரத்தின் கீழ் இந்தியாவை நசுக்கி விட மூர்க்கத்தனமாக முயற்சி செய்கிறது. இந்தப்
பின்னணியில், அடிப்படை
மாற்றத்துக்கான ஆற்றலும் நக்சல்பாரியின் தாக்குப் பிடிக்கும் தன்மையும்
முன்னெப்போதையும் விட அவசியம்.