மதவெறிக்
கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்
ஏப்ரல் இரண்டாவது
வாரத்தில் ஒரு நாள், ஏஅய்சிசிடியு
தேசிய செயலாளரும், டெல்லி போக்குவரத்து
கழக தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் தலைவருமான தோழர் சந்தோஷ் ராய் டெல்லி மெட்ரோவில்
பயணித்துக் கொண்டிருந்தார். முதியவர்களுக்கான இருக்கையில் இரண்டு இளைஞர்கள்
உட்கார்ந்திருந்தனர். அப்போது
இசுலாமியர் போல் தோற்றமளித்த (மீசையில்லாமல் தாடி
மட்டும் வைத்திருந்தார்) ஒரு முதியவர் அந்த இளைஞர்களிடம் தனக்கு இருக்கை
அளிக்குமாறு கேட்டார். அதை அந்த இளைஞர்கள் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் அந்த
முதியவர் கேட்டபோது இந்த இருக்கைகள் இந்தியர்களுக்கானது, உங்களைப் போல் பாகிஸ்தானியர்களுக்கு அல்ல,
வேண்டுமென்றால்
பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றனர்.
இதைக் கேட்டுக்
கொண்டிருந்த தோழர் சந்தோஷ் ராய், இது போன்ற
வெறுப்பைக் கக்கும் வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்கு மாறும் அந்த முதியவருக்கு
இருக்கை அளிக்குமாறும் அந்த இளைஞர்களிடம் சொன்னார். அதற்குள் வேறு சில இளைஞர்களும்
அவர்களுடன் சேர்ந்து கொண்டு தோழர் சந்தோஷ் ராயின் சட்டைக் காலரைப் பிடித்து நீயும்
பாகிஸ்தானுக்குப் போ என்றனர்.
ஆனால் தோழர்
சந்தோஷ் ராய் உறுதியாக நின்றார். அவருடன் மற்ற பல பயணிகளும் சேர்ந்து கொண்டனர்.
கான் மார்க்கெட் இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது பெட்டியில் ஏறிய கார்டுடன்,
அந்த இசுலாமிய முதியவரும்,
தோழர் சந்தோஷ் ராயும்
பண்டரா ரோடு காவல் நிலையத்திற்கு சென்றனர். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக வந்த மற்ற
இளைஞர்கள் சத்தமில்லாமல் ஒதுங்கிவிட்டனர். அந்த இரண்டு இளைஞர்களும் எங்களுடைய
ஆட்கள் வருவார்கள் என மிரட்டினர். அதற்கடுத்து தொடர்ந்து தோழர் சந்தோஷ் ராய்க்கு
காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. அந்த இளைஞர்கள்
மன்னிப்பு கோர விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தனக்கு அவர்கள் மன்னிப்புக்
கேட்பதில் விருப்பம் இல்லை, அவர்கள் அந்த
இசுலாமிய பெரியவரிடம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தோழர் சந்தோஷ் ராய்
சொல்லிவிட்டார்.
தோழர் சந்தோஷ்
ராய் காவல்நிலையத்திற்குச் சென்றபோது அந்த இசுலாமிய பெரியவர், அந்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக்
கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டார் என்று தெரியவந்தது. அந்த இளைஞர்கள் தோழர்
ராயிடமும் பலமுறை மன்னிப்புக் கோரினர். அங்கிருந்த அவர்களது பெற்றோர்களும் தங்கள்
பிள்ளைகளின் அவமானகரமான செயலுக்காக மன்னிப்பு கோரினர். அந்த இசுலாமிய பெரியவர்
மிகவும் பெருந்தன்மையுடன் அந்த வழக்கை தொடர விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்.
நாட்டில் நிலவும்
மதவெறி சூழல், இது போன்ற
மதவெறிச் செயல்களில் ஈடுபட இளைஞர்களுக்கு துணிச்சல் தருகிறது. இது போன்ற மதவெறி
நடவடிக்கைகளுக்கு எல்லோரிடமும் ஒப்புதல் இருக்காது என்பதும் அதைச் செய்தவர்களை
மன்னிப்புக் கேட்க வைக்கவும் முடியும் என்பதும், அருகில் உள்ளவர்கள் அனைவரும் வெறுமனே வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதும் உறுதியாகி இருக்கிறது. தோழர் ராயின்
தலையீடு, அந்த இளைஞர்கள்
போன்றவர்கள் மறுபடியும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன் சிந்திக்க
வைக்கும்.
நம்மைச் சுற்றி
மதவெறி சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிறுபான்மையினர்
துன்புறுத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படும்போது ஒவ்வொரு இந்தியனும்
அதற்கெதிராக நிற்க வேண்டும்.
2014ல்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயுதமேந்தியவர்கள் பொதுமக்களை பிணைக் கைதிகளாக
பிடித்து வைத்திருந்தபோது, அங்கிருந்த
இசுலாமிய மக்கள் தாக்கப்படலாம் என அச்சமடைந்தனர். ஆனால் ஆஸ்திரேலியர்கள் ‘நீங்கள் பயப்படாதீர்கள் நாங்கள் உங்களுடன்
பாதுகாப்பிற்காக பயணம் செய்கிறோம்’ என சமூக
வலைத்தளங்கள் மூலம் குறுஞ் செய்திகள் அனுப்பினர். 2016ல் அமெரிக்காவில் குயின்ஸ் என்ற இடத்தில் ஓர்
இசுலாமிய இமாம் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அமெரிக்கர்கள் அங்குள்ள இசுலாமிய மக்களுக்கு ‘உங்கள் தொழுகைக்குச் செல்ல உங்களுடன்
பாதுகாப்பாக நாங்கள் நடந்து வருகிறோம்’ என்று குறுஞ்செய்திகள் அனுப்பினர்.
பசு பாதுகாப்பு
என்ற பெயரிலும், ரோமியோ தடுப்பு
சேனை என்ற பெயரிலும் இசுலாமிய மக்கள் நாட்டில் கொல்லப்படுகின்றனர். பொது
வெளிகளிலும், அவர்களின்
வீட்டிற்குள்ளும் கூட அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மீரட் பூங்காவில்
குழந்தைகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு சிறு தகராறின் காரணமாக அங்குள்ள வால்மீகி பிரிவு
பெண்கள், இசுலாமிய பெண்களை
தாக்கியிருக்கிறார்கள். அங்கு உடனிருந்த அவர்களது கணவன்மார்கள், ‘உங்கள் அப்பன் யோகி இப்போது இங்கு இருக்கிறார்.
எச்சரிக்கை’ என்று
மிரட்டியிருக்கிறார்கள். நாட்டில் பல்வேறு கல்வி வளாகங்களிலும் இசுலாமியர்கள்
வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இங்கு ஆப்பிரிக்க மக்கள் அடிக்கடி
வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். திருடர்கள் என்று சொல்லப்பட்டு ஏழைகள் படுகொலை
செய்யப்படுகின்றனர்.
பாதிப்புக்கு,
வன்முறைக்கு
துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் இசுலாமிய மக்களிடம், ‘நான் உங்களுடன் நிற்கிறேன்’ என்று ஒவ்வொரு இந்தியனும் சொல்ல வேண்டிய தருணம்
இது. அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
நாம் அனைவரும்
தோழர் சந்தோஷ் ராய் போல் சமூக அக்கறை உள்ளவர்களாக செயலாற்ற வேண்டும். காஷ்மீர
மக்களும் இசுலாமியர்களும் ஆப்பிரிக்கர்களும், வன்முறைக்கும் தாக்குதல்களுக்கும்
ஆளாக்கப்படும்போது நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும்.
(மாலெ தீப்பொறி 2017 மே 16 – 31)