சமூக
மாற்றத்துக்கு பங்காற்றுங்கள்!
தி இந்து தமிழ்
நாளேட்டின் திரு.சமசுக்கு, அவர்கள்
பத்திரிகையில் வெளியிடக் கோரி இந்தக் கட்டுரை அனுப்பப்பட்டுள்ளது.
பெறுவதற்கு
பொன்னுலகு என்ற உன்னத லட்சியம், அதை எட்டுவதற்கான
நீண்டகால நோக்குநிலை, அந்த
நோக்குநிலையில் இருந்து உருவாகும் சமூகப் பொறுப்புணர்வு, இன்னும் இவற்றை ஒட்டிய பல்வேறு இயல்புகள்,
நட்பு முரண்பாடு
கொண்டவர்களும் இடதுசாரிகள் மீது சேறு வீசுகிறபோது, இடதுசாரிகளை அமைதி காக்க வைக்கின்றன. அதனால்,
அடிப்படைகளை கணக்கில்
கொள்ளாமல், சொல்ல வேண்டும்
என்பதற்காக மட்டும் சொல்லப்படும் அந்த விமர்சனங்களை இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டு
விட்டார்கள் என்று பொருளாகாது.
சமூகம்
வர்க்கங்களாக பிளவுண்டுள்ளது; வர்க்கங்கள்
அரசியல் கட்சிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன; அரசியல் கட்சிகளுக்கு தலைவர்கள் தலைமை
தாங்குகிறார்கள். இன்று கார்ப்பரேட் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடக்கிற
விவாதங்கள், எழுதப்படுகிற கட்
டுரைகள், வடிவமைக்கப்படுகிற
கருத்துக்கள், நாம் ஏதோ
வர்க்கங்கள் அற்ற சமூகத்தில் வாழ்வதாக ஒரு கருத்தை, தோற்றத்தை தரப் பார்க்கின்றன.
இடதுசாரிகள்
எப்போதும் வர்க்கம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்திய சமூகத்தின்
குறிப்பியல்புகள் பற்றி அக்கறையில்லை என்று அவர்கள் உடனே பொங்கி வருவார்கள்.
இந்திய சமூகம்
பற்றி இடதுசாரிகள் போல் அக்கறை கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை என்பதற்கு, அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விமர்சிப்பதாகச்
சொல்பவர்களே சாட்சி. அது போன்றவர்கள் தோழர்கள் என்று பிறரால் அழைக்கப்படுவதில்
அப்படி ஒரு பெருமிதம்! வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி. கருணாநிதி கூட தன்னை
கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்வதுண்டு. தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர்
வைத்ததை தானும் கம்யூனிஸ்ட் என்பதற்குச் சான்றாகச் சொல்வார்.
இன்று நாட்டை
கூறுபோடப் பார்க்கும் பாரதிய ஜனதா கட்சி எந்தப் பொருளாதாரக் கொள்கையும் இல்லாமலா
இயங்குகிறது? இந்துத்துவா
என்று மட்டுமா அவர்கள் பேசுகிறார்கள்? கார்ப்பரேட் ஆதரவு ஆட்சிதானே நடக்கிறது? அவர்களுக்கான கொள்கைகளே அமல்படுத்தப்படுகின்றன.
மறுபுறம் சாமான்ய மக்களை வறுத்தெடுக்கும் நடவடிக்கைகள் தொய்வின்றி தொடர்கின்றன.
இந்துக்கள் வறுபடுகிறார்கள் என்று அவர்கள் அக்கறையா காட்டுகிறார்கள்?
இந்த
ஆட்சியாளர்களை எதிர்கொள்ள வர்க்க அரசியல் மிகமிக அவசியம் என்பதைக் காணத் தவறினால்,
அது அவர்களுக்கு மிகப்
பெரும் வலிமையைத் தந்துவிடும்.
வர்க்கம்,
பொருளாதாரம்தான் அடிப்படை
இல்லை என்றால் நாம் ஏன் இடஒதுக்கீடு பற்றி விடாது பேசுகிறோம்? இடஒதுக்கீடு இருந்தால், கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்தால் வரும் பொருளாதாரரீதியான மாற்றம், சமூகரீதியாக மாற்றம் கொண்டு வரும் என்பதை
நேரில் பார்க்கிறோம். தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு இடஒதுக்கீட்டால் ஏற்படும்
பொருளாதார மாற்றம் தீர்வு என்று இடதுசாரிகள் ஒரு போதும் சொல்லவில்லை. அது ஒரு படி
மேலே செல்ல வாய்ப்பு தருகிறது என்பதை மறுக்க முடியாது.
ஒடுக்கப்பட்ட
பிரிவினருக்கு அதிகாரத்தில் ஒதுக்கீடு கேட்கிறோம். ஏனென்றால் காலம் காலமாக
அதிகாரமும் பொருளும் ஒரே இடத்தில்தான் இருக்கிறது. பொருள் அதிகாரத்துக்கு, அதிகாரம் பொருளுக்கு இட்டுச் செல்கிறது.
மார்க்சியம்
வழக்கொழிந்த சிந்தனை என்றால் அது பற்றி ஏன் நூறாண்டுகளுக்கு மேல் ஆன பின்பும்,
அதைச்
சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? இவர்களில்
யாராவது மார்க்சின் உபரி மதிப்பு தத்துவத்தை தவறு என மெய்ப்பித்துள்ளார்களா?
வல்லான் வகுத்தது எல்லாம்
வாய்க்காலாகிவிடுவதே பிரச்சனை. அதுதான் வாய்க்கால் என்று பிறகு அனைவரும் நம்பத்
துவங்கி, சொல்லத்
துவங்கிவிடுவதுதான் அதைத் தொடரும் பிரச்சனை.
வர்க்கங்களின்
சமனிலைக்கேற்ப அரசியல் நிகழ்வுகள் நகர்கின்றன. இந்தச் சமனிலையை ஏகப்பெரும்பான்மை
மக்களுக்கு உகந்ததாக மாற்றும் பணி, பெரும்பான்மை
வர்க்கத்துக்கு அதிகாரம், பின்னர் அதன்
மூலம் வர்க்கங்கள் அற்ற நிலைக்கு நகர்த்தும் பணி கம்யூனிஸ்டு களுடையது. அதைத்தான்
செய்துகொண்டு இருக்கிறோம்.
வர்க்கங்களாகப்
பிளவுண்டுள்ள சமூகத்தில் அந்த வர்க்கங்கள் சார்ந்த நிலைப்பாடுகள்தான் இருக்க முடியும். நடுநிலை என்ற ஒரு பார்வை
இருக்க முடியாது.
அரசியல்
விவாதங்கள் நடத்துவதாகச் சொல்கிற ஒரு பிரபல தொலைக்காட்சி அலைவரிசையில் அன்றைய காலை
விவாதத்தில் முதல் கேள்வி கேட்கிறார் அந்த நெறியாளர். மதுரையில் கள்ளர் ஆற்றில்
இறங்குகிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன? மக்கள் பிரச்சனைகளை திசைத்திருப்புவது, பின்னுக்குத் தள்ளுவது என்பதைத் தவிர இந்தக்
கேள்விக்கு அரசியல் விவாதத்தில் வேறு என்ன இடம் இருக்க முடியும்?
அஇஅதிமுக
உட்கட்சிப் பூசல் மற்றும் இணைப்பு முனைவுகள் பற்றிதான் பல நாட்களாக எல்லா தொலைக்காட்சி
அலைவரிசைகளும் பேசிக் கொண்டிருக்கின்றன. அதுதான் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனை
என்பது போல் காட்டப்படுகிறது. விவசாயிகள் பிரச்சனைகள் பேசப்பட்டன. அவை மட்டும்தான்
பிரச்சனைகளா? விவசாயத்
தொழிலாளர்கள் என்ற ஒரு மிகப்பெரிய மக்கள் பிரிவும் விவசாய நெருக்கடியால்
வாழ்வாதாரம் இழந்துள்ளது. அது பற்றி பெரிதாகப் பேசப்படவில்லை. அச்சு, காட்சி, சமூக ஊடக வெளிச்சத்தில் வராதவர்கள், வர முடியாதவர்கள் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல்
வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று பொருளாகிவிடுமா?
இன்று
கருத்துக்கள் பிரம்மாண்டமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த உற்பத்தி நடக்கும்
இடத்தில் இருப்பவர்களுக்கு இகக மாலெ விடுதலை இயங்குவது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இகக, இககமாவிலிருந்து மாறுபட்டு இயங்குவது
நன்கு தெரியும். சமூக அக்கறையுடன்
செயல்படுபவர்கள், நடக்கிற எந்தப்
பிரச்சனையிலாவது இகக மாலெ கருத்து என்ன என்று கேட்டிருக்கிறீர்களா? அதையும் மக்கள் மத்தியில் சொல்வது நடுநிலை
காக்கும் அறத்துக்குள்தான் அடங்கும். ஒரு கண்ணோட்டத்தையே இருட்டடிப்பு
செய்துவிட்டு, இந்திய
இடதுசாரிகளை குறை சொல்வது என்ன வகை ஊடக அறம்? இடதுசாரிகளை விமர்சனம் செய்கிற இதே தீவிரம்
வலதுசாரிகளை சாடுவதில் காட்டப்படுவதில்லை என்பதையும் நாம் காண முடிகிறது. இன்டியா
வான்ட்ஸ் டு நோ என்று கத்தி கத்தி கேள்வி கேட்ட அர்ணாப், 2011ல் ஜெயலலிதா வெற்றி பெற்றபோது சென்னை வந்து
ஜெயலலிதாவை பேட்டி கண்டார்.
துரதிர்ஷ்டவசமாக,
இடதுசாரிகளை விமர்சனம்
செய்வதுதான் அறிவாற்றலின் பிரதான அடையாளமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டின்
அறிவுலகைப் பிடித்திருக்கிற நோய் அது.
நல்லது. அது
உங்கள் கருத்தாகவே, செயலாகவே
தொடரட்டும். ஆனால், தோழர் என்று
அழைக்கப்படுவதில் பெருமிதம் கொள்ளும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து
ஏதாவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இணையுங்கள். அதன் திட்டத்தின் கீழ் அமைப்பு
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செயல்படுங்கள். அமைப்புக்குள் இருந்து அந்த அமைப்பை,
அதில் பிழைகள், குறைகள், தவறுகள் இருக்குமானால் அவற்றை மாற்ற
செயலாற்றுங்கள். அல்லது, இருக்கிற
கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடு சரியில்லை என்று உண்மையில் கருதுவீர்கள் என்றால்,
நீங்கள் அனைவருமாகச்
சேர்ந்து ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சியையாவது கட்டுங்கள். அதற்கு திட்டம்
வகுத்துக் கொள்ளுங்கள். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுங்கள். தியாகம்,
அர்ப்பணிப்பு, கடின உழைப்புடன் அதை குற்றமற்றதாக
முன்எடுத்துச் செல்லுங்கள்.
சமூக மாற்றத்தை
நிகழ்த்தவிருப்பது பாட்டாளி வர்க்கம். அதை நிகழ்த்த அந்த வர்க்கத்துக்கு ஓர்
அமைப்பு தேவை. அந்த அமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி. அப்படி ஓர் ஆயுதம் இல்லாமல்
காற்றில் கத்தி சுழற்ற முடியாது. அந்த ஆயுதத்தை பலவீனப்படுத்தாமலாவது இருப்பது,
இன்றைய கருத்து
உற்பத்திச் சூழலில், மூளைக்கு
போடப்பட்டுள்ள விலங்குகளை மேலும் இறுக்கும் பிற்போக்கு சக்திகள் பலம் பெற்றுள்ள
நேரத்தில், சமூக
மாற்றத்துக்கு பங்காற்றியதாக இருக்கும்.
(மாலெ தீப்பொறி 2017 மே 16 – 31)