காஷ்மீரில்
எப்போது அமைதி திரும்பும்?
மசூதி இடிப்பில்
எப்படி நியாயம் கிடைக்கும்?
எஸ்.குமாரசாமி
2016 இறுதி வரையிலும்
2017 துவக்கத் திலும்
காஷ்மீரில் கொந்தளிப்பு அடங்கவில்லை. பொருளாதார வளர்ச்சி, சலுகைகள், கூடுதல் நிதி ஒதுக்கீடு என்ற ஆசை வார்த்தைகள்,
அங்கு எடுபடவில்லை.
காஷ்மீர் மக்கள், காஷ்மீரின் ஆண்
பெண் இளைஞர்கள், இந்திய அரசின்
மீது நம்பிக்கை வைக்க முடியுமா?
நேற்றைய இளைஞர்
ஒருவர், இன்றைய இளைஞர்
ஒருவர் என இரண்டு பேரின் நிஜக் கதைகளில் இருந்து, நாம் காஷ்மீர் மக்கள் உணர்வுகளைப் புரிந்து
கொள்ளப் பார்ப்போம். 2016ல் புர்ஹான் வானி
கொல்லப்பட்டதால், காஷ்மீர்
கிளர்ந்து எழுந்தது. 2017ல் இந்திய
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், குல்சார் அகமது வானி என்ற காஷ்மீரி பற்றி மனம்
உருகிப் பேசுகிறார். குல்சார் அகமது வானி, உச்சநீதிமன்றத்தின் வழக்குப் பட்டிய லில், இர்ஷாத், அஷ்ரப், அப்துல் ஹமித் என்ற பெயர்களாலும்
அழைக்கப்பட்டிருந்தார். ஒரு மனிதருக்கு எதற்கு 6 புனை பெயர்கள் என விளக்குமாறு கெஹர் கேட்டார்.
உத்தரபிரதேச, டில்லி அரசுகள்,
பயங்கரவாதி வானிக்கு 12 புனை பெயர்கள் என அடித்துச் சொன்னார்கள். வானி
மீது 11 பயங்கரவாத வழக்குகள்.
வானி ஜ÷லை 2001ல் கைது செய்யப்பட்டார். பட்ட மேற்படிப்பு
முடித்த ஆய்வு மாணவரான வானி 2001ல் கைது
செய்யப்பட்டபோது அவருக்கு வயது 28. 16 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு இது வரை பிணை (பெயில்)
கிடைக்கவில்லை. 10 வழக்குகளில்
அவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். 11ஆவது வழக்கு, சபர்மதி
எக்ஸ்பிரஸ் ரயிலில் 2000ல் வெடிகுண்டு
வெடிக்கக் காரணமாயிருந்தார் என்கிறது. அந்த வழக்கில் அவருடன் குற்றம்
சுமத்தப்பட்டவர்கள் பிணையில் வந்து விட்டனர். 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 44 வயதில், இளமையைத் தொலைத்த வானி, இந்திய அரசைக் கொண்டாட முடியுமா? தலைமை நீதிபதி கெஹர், ‘என்ன வெட்கக்கேடு? அவர் மீது சுமத்தப்பட்ட 11ல் 10 வழக்குகளில், விசாரணை
நீதிமன்றத்தில் எந்த நம்பகமான சாட்சியமும் இல்லாமல், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறை
சாட்சியம் இல்லாமலே சிறையில் வைத்துள்ளது’ என வருத்தத்துடன் சொல்லி, எது
எப்படியாயினும், வானி நவம்பர் 1,
2017 முதல் பிணையில்
விடுவிக்கப்படுவார் என உத்தரவிட்டுள்ளார்.
2017 ஏப்ரலில்
அகப்பட்டுக் கொண்டவர், பரூக் தார் என்ற
இளைஞர். ஏகப்பெரும்பான்மை மக்கள் சிறீநகர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்த
போது, பரூக் தார்
வாக்களித்துவிட்டார். ஆனால் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் அவரைக் காப்பாற்றவில்லை.
பட்கம் மாவட்டத்தில் அவர் இந்திய படையினரிடம் சிக்கிக் கொண்டார். காஷ்மீர்
மக்களால் ஆக்கிரமிப்பு ராணுவம் என வெறுக்கப்படும் படையினர், தங்கள் ராணுவ ஜீப்பின் முன் மனிதக் கவசமாக
பரூக் தாரை கட்டிவைத்தார்கள். ‘நான் கல் எறிபவன்’
என எழுதிய காகிதத்தை,
அவர் மேல் ஒட்டி, கிராமம் கிராமமாக அவரை இழுத்துச் சென்றார்கள்.
பரூக் தார், இனி தேர் தலில்
வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் என்றார். அவர் மனதிற்குள்
வேறு என்னென்ன எண்ணங்கள் வந்தனவோ?
காஷ்மீர் என்ன
நினைக்கிறது எனத் தெரிந்து கொள்ள, ஏப்ரல் 9,
2017 அன்று ஒரு வாய்ப்பு
வந்தது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்றும், ‘பாகிஸ்தான் வசம்’ உள்ள காஷ்மீரும் இந்தியாவிடம் வர வேண்டும்
என்றும் இந்திய நாடாளுமன்றம் 1993ல் ஏகமனதாக
தீர்மானம் நிறைவேற்றியதில் இருந்தே, காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய அளவுக்கு நாடாளுமன்ற தேர்தல்களைப்
புறக்கணித்துள்ளனர்.
1998 முதல்,
70% முதல் 80% வரையிலான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. 2014ல் 74% பேர் வாக்களிக்கவில்லை. 09.04.2017 சிறீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில், 7.17% பேர் மட்டுமே வாக்களித்தனர். நூற்றில் 92 பேர் வாக்களிக்க விரும்பவில்லை.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது, மிகப் பெரும் சீற்றத்தில் உள்ளனர் என்பது,
திரும்பவும் நிரூபணமாகியுள்ளது.
இந்தியா -
பாகிஸ்தான் - காஷ்மீர் என்ற மூன்று தரப்பினரும் பேசித் தீர்வு காண வேண்டும் என்று
சொன்னால், அது தேச விரோதமா?
அதுதானே காஷ்மீர் மக்கள்
மற்றும் இந்திய மக்களுக்கு நல்லதா?
சங் பரிவார்
மட்டுமல்ல, இந்திய ஆளும்
வர்க்கக் கட்சிகள், அரசுகள் அனைவருமே,
காஷ்மீர் பற்றி பேசினாலே
தேசவிரோதம் என்கிறார்கள். நடந்த விஷயங்களை, உண்மைகளை, அவற்றின் அடிப்படையான நியாயங்களை, மக்கள் மத்தியில் சொல்லாமல் மறைக்கிறார்கள்.
இராக் மீது போர் தொடுக்க சதாம் உசேனிடம் பேரழிவு ஆயுதம் இருப்பதாக, ஒரு கருத்தை, அய்க்கிய அமெரிக்கா உருவாக்கி அதை எங்கும்
பரப்பியது. அதுபோலவே, அடுத்தடுத்த
இந்திய அரசுகளும் எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அவர்களுக்கு துணை போகும் தேசவிரோத சக்திகள்தான்,
காஷ்மீர் பிரச்சனை
நீடிக்கக் காரணம் எனப் பொய் சொல்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனையை இந்து முஸ்லீம் பிரச்சனையாக
திசைத் திருப்புகிறார்கள். பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தியின் உரைகல்லாக, காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது.
காஷ்மீர்
பிரச்சனைக்கு மூன்று தரப்பினர் உள்ளனர் என்று தொடங்கினால் மட்டுமே, தீர்வு நோக்கிச் செல்ல முடியும். குழந்தைகள்
சிறுவர்கள் இளைஞர்கள் பார்வையிழப்பு, பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை, காணாமல் போவது,
பெண்கள் மீது பாலியல்
பலாத்காரம் உள்ளிட்ட வன்முறைகள், தோளில்
சுமத்தப்பட்ட ராணுவ நுகத்தடி என்ற அநியாயங்கள் முடிவுக்கு வர, காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும். காஷ்மீரில்
அமைதி திரும்புவது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் நல்லது. அதற்கு முத்தரப்பு
பேச்சு வார்த்தைகள், அவசர அவசிய
தேவையாகும்.
அக்டோபர் 1947ல் நேரு சொன்னார்: ‘அமைதியும் ஒழுங்கும் திரும்பியவுடன் நாங்கள்
காஷ்மீரிலிருந்து திரும்பிச் செல்வோம், காஷ்மீரின் எதிர்காலம் பற்றிய முடிவை அந்த மக்களிடமே விட்டுவிடுகிறோம். இந்த
வாக்குறுதி காஷ்மீர் மக்களுக்கும் உலகத்துக்கும் தரப்படுகிறது’.
துணைப் பிரதமர்
வல்லபாய் பட்டேல் 30.10.1948ல் சொன்னார்: ‘சிலர், ஓர் இசுலாமிய பெரும்பான்மைப் பகுதி, பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாக அவசியம் இருக்க வேண்டும் என, கருதுகிறார்கள். காஷ்மீர் மக்கள் இருக்கச்
சொன்னதால் நாம் அங்கே இருக்கிறோம் என்பதே, எளிமையான பதிலாகும். காஷ்மீர் மக்கள் கேட்டுக் கொண்டதால் நாம் காஷ்மீரில்
இருக்கிறோம். காஷ்மீர் மக்கள் நாம் அங்கு இருக்க வேண்டாம் என நினைத்தால், நாம் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்க மாட்டோம்.
நாம் ஏன் காஷ்மீரில் இருக்கிறோம் என்ற கேள்விக்கான பதில் தெளிவானதாகும்.
காஷ்மீரில் இசுலாமியர்கள் நம்மை வெளியே போகச் சொன்னால் நாம் வெளியேறிச் சென்று
விடுவோம். நாம் காஷ்மீர் மக்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்’.
01.01.1952 அன்று
கொல்கத்தாவில் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சொன்னார்: ‘நாளை ஷேக் அப்துல்லா காஷ்மீர் பாகிஸ்தானோடு
இணைய வேண்டும் என விரும்பினால், அதனை என்னாலோ
இந்தியா முழுவதும் உள்ள சக்திகளாலோ தடுக்க முடியாது. ஷேக் அப்துல்லா முடிவு
செய்வதுதான் நடக்கும். ஜன சங்கம் அல்லது அது போன்ற ஒரு மதவாதக் கட்சி
ஆட்சியிலிருந்தால், காஷ்மீரில் என்ன
நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். காஷ்மீர் மக்கள் எங்களுக்கு மதவாதம்
அலுத்து சலித்துவிட்டது என்கிறார்கள். எப்போதும் ஜனசங்கமும் ஆர்எஸ்எஸ்சும் எங்களை
முற்றுகையிட்டிருக்கும் நாட்டில் நாங்கள் ஏன் வாழ வேண்டும் எனக் கேட்கிறார்கள்?’
இந்தியப் பிரதமர்
நேருவும் துணைப் பிரதமர் பட்டேலும் காஷ்மீரிகள் விரும்பாவிட்டால் காஷ்மீரில்
இருக்க மாட்டோம் என, காஷ்மீர்
மக்களுக்கும் உலகத்துக்கும் தந்த வாக்குறுதிக்கு, என்னதான் பொருள்? சத்தியமேவ ஜெயதே, அதாவது வாய்மையே வெல்லுமாம். இந்திய அரசு
சொன்னதை இந்திய அரசு செய்ய வேண்டும் என்று சொல்வது, ஒரு போதும் தேசவிரோதமாகாது.
இந்தியாவும்
பாகிஸ்தானும் 13.08.1948, 05.01.1949 தேதிய இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அய்க்கிய நாடுகள் கமிஷன் தீர்மானங்கள்
மூலம், காஷ்மீர் தொடர்பாக போர்
நிறுத்தம் செய்துகொள்ளவும், காஷ்மீர் மக்கள்
மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவும், ஒப்புக்கொண்டுள்ளனர். 1972 போருக்குப்
பிறகு, 02.07.1972 தேதிய சிம்லா
ஒப்பந்தப்படி, காஷ்மீர்
விஷயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும், இருக்கும் நிலை (ஸ்டேட்டஸ்கோ) தொடர ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியாவும்
பாகிஸ்தானும் அவர்களுக்கு வசதியான காஷ்மீரின் பூகோளப் பரப்பு, முறையே தத்தமது நாடுகளின் பிரிக்க முடியாத
பகுதி என, வாதாடுகின்றன.
இரு நாடுகளின் அரசியல் சண்டைகளில், புவி அரசியல்
போட்டியில் காஷ்மீரும் காஷ்மீர் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமகால
உலக நிலைமைகளில், காஷ்மீர் மக்கள்
மத்தியிலிருந்து வருகிற கருத்துக்களை அவர்களது விருப்பங்களை கணக்கில்கொண்டு,
அவற்றுக்கேற்ப
இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து கொள்ள வேண்டும். அமைதியான சூழலை உருவாக்கி,
முத்தரப்பு
பேச்சுவார்த்தைகள் நடத்தியே, காஷ்மீர்
பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
மசூதி இடிப்பில்
நியாயம் வேண்டும்
இந்தியா தன்னை,
ஓர் அரசியலமைப்புச் சட்ட
ஜனநாயக நாடு என பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறது. இந்திய உச்சநீதிமன்றம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் ‘அடிப்படைக் கட்டமைப்பை’ நாடாளுமன்றம் சட்டம் இயற்றியும் கூட
மாற்றிமைக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது. மசூதி இடிக்கப்பட்ட 06.12.1992 அன்றும், அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழிந்த பின்பும், இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற குடியரசு
என்றுதான் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது,
06.12.1992 அன்று
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் கல்யாண்சிங் முதல்வராக இருந்தபோது, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உலகறிய நாடறிய ஊரறிய, ஊடக வெளிச்சத்தில் ஒரு மிகப் பெரிய
வெறிக்கூட்டம் சங் பரிவார் தலைவர்கள் முன்னிலையில், பல நூற்றாண்டுகளாக இருந்த பாப்ரி மசூதியை
தகர்த்துத் தரைமட்டமாக்கினார்கள். அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், ராம்விலாஸ் வேதாந்தி, கல்யாண் சிங் ஆகியோர் மீது, மசூதி இடிக்க சதி செய்ததாக வழக்கு போடப்பட்டது.
சொத்தையான
தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி, அந்த வழக்கை
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.
உச்சநீதிமன்றத்தில் சிபிஅய்க்காக மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் ஆஜராகி, மசூதி இடிப்பு குற்றச் செயல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்,
வழக்கை விரைந்து
விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போதைய தலைமை நீதிபதி தத்து, இந்த வழக்கை தேசிய குற்றம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றெல்லாம்
குறிப்பிட வேண்டாம் என, எரிச்சலுடன்
சொன்னார். மசூதி இடிப்பு, தேசிய குற்றம்,
தேசிய முக்கியத்துவம்
வாய்ந்தது எனச் சொல்லப்பட்டதை, இந்திய
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே நிராகரித்தார். இப்போது இந்த வழக்கில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ராபின்டன் நாரிமன் அடங்கிய உச்சநீதிமன்ற
அமர்வம், 19.04.2017 அன்று தீர்ப்பு
வழங்கியுள்ளது. வானமே இடிந்தாலும், இது, நீதி நிலைநாட்டப்பட வேண்டிய வழக்கு என்றும்,
மசூதி இடிப்பு, அரசியல் சட்டம் உறுதியளிக்கும் மதச்சார்பின்மை
இழையை அறுக்கும் கொடிய குற்றம் என்றும், நீதிபதி ராபின்டன் நாரிமன் சரியாகவே குறிப்பிட்டார். காலக்கெடு வைத்து,
வாய்தா தராமல், வழக்கை தினமும் நடத்தி முடிக்கச்
சொல்லியுள்ளனர்.
அத்வானிக்கு,
குடியரசுத் தலைவர்
பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு தார்மீகரீதியாக பறிபோய் உள்ளது. சட்டத்தை
மதிக்காதவர் என்பதால், உமாபாரதி,
19.04.2017 தீர்ப்புக்குப் பிறகும்,
மத்திய அமைச்சராகத்
தொடர்வார். கல்யாண் சிங் இப்போது ஆளுநர் என்பதால், வழக்கிலிருந்து தப்பிக்க அவருக்குச் சட்டப்
பாதுகாப்பு உண்டு. விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் முன்னாள் பாஜக
எம்பியுமான ராம் விலாஸ் வேதாந்தி, கோவில் இருந்த
இடத்தில் ஒரு கட்டுமானம் அமைந்திருந்தது, அது இருந்த இடத்தில் மகத்தான கோயில் ஒன்று கட்டவேண்டும் என்பதால், அதனை இடித்தோம் என்கிறார்.
19.04.2017 தீர்ப்புக்கு
பிறகு, பகிரங்கமாக தாங்கள்தான்
மசூதியை இடித்தோம் என, ஒப்புக்கொள்கிறார்.
மசூதி இடிப்பு ஒரு குற்றமே அல்ல, ராமன் பிறந்த
இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என மக்கள் நம்புவதால், அங்கு கோவில் வருவதற்காக மசூதி இடிக்கப்பட்டால்
என்ன என்ற நச்செண்ணம், இந்துக்கள்
மனங்களில் விதைக்கப்பட்டது. இந்த நஞ்சு, அரசியலமைப்புச் சட்டத்தின் தூண்களான நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவி, அவற்றை அரித்துப் போக வைத்தது.
வழக்கு நடந்து
சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்திய தண்டனைச்
சட்டம் 120 பி பிரிவு படி
சதி வழக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், அன்று அங்கிருந்த சங் பரிவார் தலைவர்கள் அனைவருமே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 149ன் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள்.
சட்டவிரோதமாக, குற்றச் செயல் புரியும்
பொது நோக்கத்துடன் கூடியிருந்த, சட்டவிரோத
கூட்டத்தின் பங்கேற்பாளர்கள், அவர்களில் எவரொருவர் எந்த குற்றச் செயல் புரிந்தாலும்,
ஒவ்வொருவருமே அதற்கு
பொறுப் பாவார்கள். சட்டப்படியும் நியாயப்படியும் மசூதியை இடித்தவர்களும் உமாபாரதி,
முரளி மனோகர் ஜோஷி,
அத்வானி போன்றவர்களும்
இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்ன செய்வது,
நம் நாடு எதார்த்தத்தில்
மதச்சார்பற்ற நாடல்ல என்பதால், இங்கு வன்மையான
இந்துத்துவா முன்பு மென்மையான இந்துத்துவா எப்போதுமே மண்டியிடுகிறது என்பதால்,
மசூதி இடித்த
குற்றத்துக்கு 25 ஆண்டுகளில்
எவரும் தண்டிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றம் 19.04.2017 அன்று, நீதியை நிலை நாட்டியது. அதேபோல் அலகாபாத்
நீதிமன்ற லக்னோ அமர்வத்தின் 30.09.2010 தீர்ப்பையும் கடுமையாக கண்டனம் செய்து ரத்து செய்வதற்கான, மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்கான ஒரு
வாய்ப்பு, உச்சநீதிமன்றத்துக்கு
இருக்கிறது. உச்சநீதிமன்றம் அதை செய்ய முடியும், செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
பாப்ரி மசூதி
அயோத்தியாவின் ஆளுநர் மீர்பாக்சியால் 1528 - 1529ல் கட்டப்பட்டது. மசூதி கட்டப்பட்டு சில
நூறாண்டுகள் கழிந்த பின், இந்துத்துவா
சக்திகள் மசூதி இருந்த இடத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். பைசாபாத் மாவட்ட நீதிபதி
எஃப்.ஈ.ஏ.சேமியர் 18.02.1886 அன்று, மசூதி 356 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு
இருந்துவருவதால், இந்து
வழக்காடிகளின் வருத்தம் மிகமிகத் தாமதமானது என்றார். இரண்டாம் மேல்முறையீட்டில்,
அவுத் ஜ÷டிஷியல் கமிஷனர் டபுள்யு.யங்,
01.11.1886 அன்று, பிரச்சனைக்குரிய நிலத்தின் மீது இந்து வாதி
எந்தப் பொருளிலும் தாமே உரிûயாளர் என உரிமை
கொண்டாட எந்தப் பதிவும் இல்லை எனச் சொல்லி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.
இடம் யாருக்குச்
சொந்தமானது என்ற டைட்டில் சூட்டில், பங்கு பிரிப்பதை (பார்டிஷன்) நீதிமன்றம் செய்தது. இந்திய சாட்சிய சட்டத்தைப்
பொருட்படுத்தாமல், இந்துக்களின்
நம்பிக்கை அடிப்படையில், ராமன் பிறந்த
இடத்தில்தான் மசூதி உள்ளது என்றது. வழக்கமாக சிவில் வழக்குகளில், அட்வர்ஸ் பொசஷன் என்ற கோட்பாட்டை
வலியுறுத்துவார்கள். அதாவது பல ஆண்டுகள் ஒருவருக்கு அனுபவ பாத்தியதை உள்ள சொத்தில்,
வேறொருவர் உரிமை கொண்டாட
முடியாது. பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெயரால் உரிமை கோரப்பட்டதால்,
அங்கே மானுட
சட்டங்களெல்லாம் மீறப்பட்டுவிட்டன போலுள்ளது.
திரேதா யுகத்தில்
பிறந்ததாகச் சொல்லப்ப டும் ராமனுக்கு, ஒரு பிறந்த நாள் உண்டு. அந்த நாள், ராமநவமி என அழைக்கப்படுகிறது. 2017 ஏப்ரல், 5 அன்று, மேற்குவங்கம் நெடுக சங் பரிவார், ராம நவமி பேரணிகளை காவி உடைகளுடன் வாள்களை
உயர்த்திப் பிடித்து நடத்தியது. ஜெய் ஸ்ரீராம் ஹர் ஹர் மகாதேவ் என முழக்கமிட்டது.
வில்லும் அம்பும் ஏந்தி போர் புரிந்த ராமனை வழிபடுபவர்கள், ஆயுதங்களோடு நடமாடுவது இயற்கையானது தானே என,
மேற்குவங்க பாஜக தலைவர்
திலீப் கோஷ் சொன்னார்.
சங் பரிவாரின்
நிறுவனர் சாவர்க்கர் சொன்னார்: ‘மக்களை ஒரு
தேசமாகவும், தேசங்களை ஓர் அரசாகவும், பிணைப்பதற்கு, எல்லாவற்றையும் விட ஒரு பொது எதிரியை
நிறுத்துவதே உதவியாக இருக்கும். வெறுப்பு, பிரித்து நிறுத்துகிறது; அதே நேரம்
ஒன்றுபடுத்துகிறது’.
சாவர்க்கர்
சொன்னது இன்று நாடெங்கும் வெறியுடன் அமல்படுத்தப்படுகிறது.
ராம் ஜென்ம
பூமியில் கோவில் என்ற முழக்கம், காஷ்மீர்
பிரச்சனை ஆகியவை, நாம் எதிர்கொள்ளும்
ஆபத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன. இவ்வளவு தீவிரமான ஆபத்தை முறியடிக்க, எவ்வளவு கடினமான விடாப்பிடியான
அமைப்பாக்கப்பட்ட முயற்சிகள் தேவை என்பதையும் உணர்த்தத்தான் செய்கின்றன.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)