சோவியத் ரஷ்யா
இரண்டாம் உலகப்
போரை எதிர்கொள்ள நேர்ந்தது
இந்தப் போர் நம்
மீது திணிக்கப்பட்டுள்ளது; ஜெர்மானிய
தொழிலாளர்களோ, விவசாயிகளோ,
அறிவாளிகளோ இதைச்
செய்யவில்லை; அவர்கள் படும்
துன்பங்களை நாம் நன்கு புரிந்துகொண்டிருக்கிறோம்; பிரான்ஸ், செக்கோஸ்லோவகியா, போலந்து, செர்பியா, நார்வே, பெல்ஜியம், டென்மார்க், ஹாலந்து, கிரீஸ் மற்றும் பிற நாடுகளின் மக்களை
அடிமைப்படுத்தியுள்ள, ஜெர்மனியின்
ரத்தவெறி பிடித்த பாசிச ஆட்சியாளர்களால் இந்தப் போர் நம் மீது
திணிக்கப்பட்டுள்ளது.
நமது வீரமிக்க
படையும் கப்பற்படையும் சோவியத் விமானப் படையின் வீரமிக்க பால்கன்களும்
(விமானங்கள்) தங்கள் தந்தை நாட்டுக்காக, சோவியத் மக்களுக்காக தங்கள் கடமையை நிறைவேற்றியதற்காக தங்களை கவுரவித்துக்
கொள்வார்கள், ஆக்கிரமிப்பு
சக்திகளை நசுக்கி விடும் தாக்குதலை அவர்கள் மீது தொடுப்பார்கள் என்ற தனது அசைக்க
முடியாத நம்பிக்கையை, சோவியத் யூனியன்
அரசாங்கம் தெரிவிக்கிறது.
வி.எம்.மாலடோவ்,
சோவியத் வெளியுறவு
அமைச்சர், ஜ÷ன் 22, 1941
முதல்
அய்ந்தாண்டு திட்டத்தின் முதல் நான்காண்டுகளில் சோவியத் ரஷ்யா கண்ட முன்னேற்றங்கள்
பற்றி பல்வேறு தலைப்புகளில் மத்திய கமிட்டி மற்றும் மத்திய கட்டுப்பாட்டு கமிசனின்
கூட்டு கூட்டத்தில் ஸ்டாலின் விரிவாக முன்வைத்த விசயங்களில் இரண்டு தலைப்புகள்
பற்றி மட்டுமே தீப்பொறி இதழில் வெளியிடப்பட்டது. அந்த நான்காண்டுகளில் மக்கள்
வாழ்க்கையில் சோவியத் ஆட்சி அனைத்து விதங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி
ஸ்டாலின் அந்தக் கூட்டத்தில் முன்வைத்தார். சோவியத் ரஷ்ய மக்கள் வாழ்வை
மேம்படுத்தும் முயற்சிகள் அனைத்து அரங்கங்களிலும் திட்டமிட்டபடி தொடர்ந்தன.
அப்போதுதான்
உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்த புதிய சமூக அமைப்பு மிகக் குறுகிய காலத்தில்
மிகப்பெரிய போரைச் சந்திக்க நேர்ந்தது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவை பாதுகாக்க
ஸ்டாலின் தலைமையில் ரஷ்ய மக்கள் அணிவகுத்தனர்.
போர் என்றால்
புதிய சந்தைகளைப் பிடிப்பது, உலகத்தை
மறுபங்கீடு செய்வது என்று, ஏகாதிபத்தியம்:
முதலாளித்துவத்தின் உச்சகட்டம் நூலில் லெனின் சொல்கிறார். முதல் உலகப் போரில் ஜார்
மன்னன் ரஷ்ய மக்களை ஈடுபடுத்தியபோது, உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுங்கள் என்றார். போர் வேண்டாம், ரொட்டி வேண்டும், சமாதானம் வேண்டும் என்று முழக்கத்துடன்,
ரஷ்ய மக்கள் புரட்சியை
நடத்தி முடித்தார்கள்.
1918ல் போர்
நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு 1919ல் நேச நாடுகளான
பிரிட்டன், பிரான்ஸ்,
ஜப்பான், இத்தாலி, அய்க்கிய அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மய்ய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகியவற்றுக்கிடையில் அமைதி ஒப்பந்தமான
வெர்செய்ஸ்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் உலகப் போர் முடிவுக்கு கொண்டு
வரப்பட்டது. ஜெர்மானிய பேரரசு வீழ்ந்தது. ஜெர்மனி மீது கடுமையான நிபந்தனைகள்
இருந்த ஒப்பந்தத்தில், போரை
தவிர்ப்பதற்காக, அது
கையெழுத்திட்டது. அதன் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆயுதக் குறைப்பு செய்ய
நேர்ந்தது. போர் இழப்பீடுகள் தர ஒப்புக்கொள்ள நேர்ந்தது. போலந்து, செக்கோஸ்லோவகியா நாடுகளின் சுதந்திரத்தை
அங்கீகரிக்க நேர்ந்தது.
போரில் சந்தித்த
இழப்புகளை ஈடு செய்து, ஜெர்மானிய
குடியரசு நிலைத்தன்மை பெறும் முன்னரே சர்வதேச பொருளாதாரம் மாபெரும் நெருக்கடியில்
சிக்கியது. ஜெர்மனியில் அதிகரித்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய
பிரச்சனையாக மாறியது. கிளர்ச்சிகளுக்கு இட்டுச் சென்றது. பணவீக்கம் பன்மடங்கு
அதிகரித்தது. ஜெர்மனியே துன்பத்தில் இருக்கும்போது பிரான்சுக்கு ஏன் இழப்பீடு தர
வேண்டும் போன்ற நாஜிக்களின் முழக்கங்கள் பொருளாதார நெருக்கடியால் துன்புற்ற மக்கள்
மத்தியில் எடுபட்டன. முதல் உலகப் போரில் சந்தித்த தோல்வியின் அவமானத்தாலும்
பொருளாதார நெருக்கடியாலும் நிலவிய அமைதியின்மையை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மானிய பெருமிதத்தை மீட்பதாகச் சொல்லி
நாஜிக்கள் ஆட்சியைப் பிடித்தனர்.
ஹிட்லர்
தலைமையிலான ஜெர்மனி வெர்செய்ல்ஸ் ஒப்பந்தங்களை, ஒவ்வொன்றாக மீறியது. ஆஸ்திரியாவை தன்னுடன்
இணைத்துக் கொண்டது. ராணுவ தளங்களை விரிவுபடுத்தியது. போலந்தை ஆக்கிரமித்தது. அமைதி
ஒப்பந்தத்தை மீறியதால் ஜெர்மனி மீது பிரான்சும் இங்கிலாந்தும் போர் தொடுப்பதாக
அறிவித்தன. இரண்டாம் உலகப் போர் துவங்கியது.
ஜெர்மனியைப்
போலவே, அமைதி ஒப்பந்தத்தில்
திருப்தி அடையாத, ஜப்பானும்
இத்தாலியும், முதல் உலகப்
போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளுடன் இருந்திருந்தாலும் இப்போது ஜெர்மனியோடு
சேர்ந்து கொண்டன. ஆசியா ஆசியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்த ஜப்பானுக்கு ஆசிய
பசிபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் கனவு இருந்தது; இத்தாலிக்கு புதிய ரோமானிய சாம்ராஜ்யத்தை
உருவாக்கும் நோக்கம் இருந்தது. ஜப்பான் ஏற்கனவே சீனத்தை ஆக்கிர மிக்கத்
துவங்கியிருந்தது. அய்க்கிய அமெரிக்காவை சீனத்தில் இருந்து விரட்டுவதில் வெற்றி
பெற்றிருந்தது. ஏற்கனவே ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை துவங்கிவிட்ட ஜெர்மனியும்
ஜப்பானும் இத்தாலியும் அச்சு நாடுகளாக அணிசேர்ந்து இரண்டாம் உலகப் போரைச் சந்தித்தன.
(மாலெ தீப்பொறி 2017 மே 16 – 31)