தோழர் மோகன் மீது
போடப்பட்ட
பொய் வழக்கு
தள்ளுபடி
தோழர் மோகன் மீது
அம்பத்தூர் காவல் துறையினர் தொடர்ந்த பொய் வழக்கில் அவர் குற்றவாளி அல்ல என்று
நீதிமன்றம் ஏப்ரல் 24 அன்று தீர்ப்பு
வழங்கியுள்ளது. மாலெ கட்சியின் தொடர் செயல்பாடுகள் காவல் துறையினருக்கு இடையூறாக
இருக்கும் பின்னணியில் இந்த பொய் வழக்கு வெறும் காழ்ப்புணர்ச்சியில் போடப்பட்டது.
தோழர் மோகன் இகக
மாலெ சென்னை மாநகரக் கமிட்டி உறுப்பினர். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர். முழுநேர ஊழியர். இந்தச்
சொற்களுக்கு மிகமிகப் பொருத்தமான ஒரு தோழர். தனது முழு நேரமும் கட்சிப் பணி
ஆற்றுபவர். இரவு, பகல், விடுமுறை நாள் என்று எந்தக் கணக்கும் அவருக்கு
எப்போதும் இருப்பதில்லை.
தோழர் மோகன்
கட்சி வேலைகள் தொடர்பாக தோழர் பாரதியைச் சந்தித்து சில விவரங்கள் பெறுவதற்காக
அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அம்பத்தூரில் உள்ள அந்த
சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தலைமை காவலர், தோழர் மோகன் வாகனத்தை மறித்து இரு சக்கர வாகன
உரிமம், காப்பீடு,
பதிவு போன்ற விவரங்களைக்
கேட்டார். தோழர் மோகனும் அனைத்து விவரங்களையும் தந்தார். அனைத்தும் சரியாக
இருந்ததால் அந்தக் காவலர் அவரைச் செல்ல அனுமதித்தார்.
பிறகு தோழர்
பாரதியைச் சந்தித்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதே வழியில் தோழர் மோகன்
திரும்பினார். திரும்பியபோது அதே காவலர் அதே சந்திப்பில் இருந்தார். மீண்டும்
தோழர் மோகன் வாகனத்தை மறித்து வாகனத்துக்கான விவரங்களைக் கேட்டார். தோழர் மோகன்
இப்போது, அரை மணி நேரம்
முன்புதானே எல்லா விவரங்களையும் தந்தேன், மீண்டும் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்க, கேட்டால் தந்துதான் ஆக வேண்டும் என்று
சொன்னதுடன் வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டார். சாவி தரும்படி தோழர் மோகன்
கேட்டபோது, தோழர் மோகனை தகாத
வார்த்தைகளால் ஏசினார்; இதற்கு தோழர்
மோகன் எதிர்ப்பு தெரிவித்தபோது, தோழர் மோகனை அந்த
போக்குவரத்து காவலர் அடித்து விட்டார்.
கூட்டம்
கூடுகிறது. தோழர் மோகனை கைது செய்து அருகில் இருந்த ஆட்டோவில் ஏற்ற காவலர் முயற்சி
செய்கிறார். தோழர் மோகன் ஆட்டோவில் ஏற மறுக்கிறார். இந்த நடப்புகளை பார்த்துக் கொண்டிருந்த
பழ வியாபாரி ஒருவர் தோழர் ராஜா வுக்கு தொலைபேசியில் தகவல் தரு கிறார்.
செங்குன்றத்தில் இருந்த தோழர் ராஜா அம்பத்தூர் தோழர்களுக்கு தொடர்பு கொண்டு
பிரச்சனையைச் சொல்ல, இரண்டு தோழர்கள்
இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து, நடப்பதை
புரிந்துகொண்டு உடனடியாக, அங்கு வந்த வேறு
ஓர் ஆட்டோவில் தோழர் மோகனை ஏற்றி அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அவர்களும்
அங்கிருந்து சென்று விடுகிறார்கள். நிகழ்விடத்தில், கைது மிரட்டலை பொருட்படுத்தாமல் தோழர் தேவகி
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் மோகனின் இருசக்கர வாகனம் போக்குவரத்து
காவலர் கைகளுக்குச் சென்றது.
2010 ஆகஸ்ட் 31 அன்று இது நடந்தது. அன்று மாலையே கட்சித்
தோழர்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு நியாயம் கேட்டுச் சென்றனர். தோழர்
மோகனைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அந்தக்
காவலரும் அப்போது அங்கு இருந்தார்.
காவல்நிலையத்தில்
இருந்த காவலர்கள் லாக் அப்பில் இருந்தவர்களைக் கூட அவசர அவசரமாக வெளியேற்றிவிட்டு
காவல் நிலையத்தின் கதவுகளை, ஜன்னல்களை மூடத்
துவங்கினர். அருகில் இருந்த காவல்நிலையங்களில் இருந்தும் காவலர்களை வரவழைத்தனர்.
காவல்நிலையத்துக்கு வந்த தோழர்களை அதிரடிப் படை கொண்டு தாக்கி கைது செய்து
ரிமாண்ட் செய்வது அவர்கள் நோக்கமாக இருந்தது. காவல்நிலையத்துக்குள் இருந்த
தோழர்கள் பாரதி, சுரேஷ் ஆகியோர்
வழக்கறிஞர்கள் பலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடக்கும் விசயங்களை விளக்க,
காவல்துறையினர்
அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல நேர்ந்தது. காவல்துறையினர்,
பகுதியைச் சேர்ந்த தோழர்
பார்வதியை தனியாக அமர வைத்தனர்.
காவல்துறையினர்,
வழக்கறிஞர் தோழர் சுரேஷ÷டன் வேண்டும் என்றே தகராறு செய்து ஒரு
மோதலுக்கு முயற்சி செய்தனர். தோழர்கள் எ.எஸ்.குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் காவல்நிலையத்துக்குச்
சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய பிறகு, தோழர்களின் உறுதி மற்றும் அவர்களுக்கு கிடைத்த
ஆதரவு ஆகியவற்றால் காவல்துறை பின்வாங்கி, கதவுகளைத் திறந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தோழர் மோகன் வாகனம் பெற்றுக்
கொள்ளப்பட்டது.
இத்துடன்
முடிந்திருந்தால் இது பற்றி எழுத நேர்ந்திருக்காது. அப்படி முடியவில்லை. தோழர்
மோகன் மீது, கூர்மையான
ஆயுதங்கள் கொண்டு தாக்கினார் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பொய்
வழக்கு தொடுக்கப்பட்டது.
தோழர் மோகன் எந்த
நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்ததால், முன்ஜாமீன் பெறும் வரை அவர் வெவ்வேறு இடங்களில்
தங்கியிருந்து கட்சிப் பணியாற்றினார். அதன் பிறகு அதே காவல்நிலையத்துக்குச் சென்று
கையெழுத்து போடுவது, அந்த தலைமை
காவலரையும் அவ்வப்போது பார்க்க நேர்வது என்று நாட்கள் நகர, வழக்கு 2011ல் விசாரணைக்கு வரத் துவங்கியது. 2017 ஏப்ரல் 24 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி திருமதி
அனிதா ஆனந்த் ஆண்டுப் பட்டிகை வழக்கு எண் 169/2011ல், இந்த வழக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன்
போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, குற்றச்சாட்டுக்கள்
சந்தேகத்துக்குரியவை எனச் சொல்லி இந்திய தண்டனைச் சட்டம் 321 (தெரிந்து காயம் உண்டாக்குவது), 332 (தெரிந்து அரசு ஊழியர் பணி செய்ய விடாமல் காயம்
உண்டாக்குவது), 353 (அரசு ஊழியர் பணி
செய்ய விடாமல் தடுக்க அவரைத் தாக்குவது) என்ற பிரிவுகளின் கீழ் தோழர் மோகன்
குற்றவாளி இல்லை என விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் இந்திய
தண்டனைச் சட்டம் 307 பிரிவின் கீழ்
கொலை முயற்சி என்று கதை எழுதிய காவல்துறை, தானே பின்பு தான் முன்னர் மிகையாகச் சொல்லிவிட்டதாக எழுத்துபூர்வமாக
பின்வாங்கியது. தோழர் மோகனுடன் இருந்த ‘மர்ம நபர்’, தோழர் மோகனிடம்
இருந்த ‘மர்ம ஆயுதம்’
பற்றி சாட்சி சொல்லக் கூட
முயற்சி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட காவலர் பீட் சென்றதற்கு ஆதாரமான ஆவணங்கள்
எதையும் தாக்கல் செய்யவில்லை. வழக்கறிஞர்கள் பாரதி, சுரேஷ், சங்கர், ரகுநாதன், புகழ்வேந்தன், அம்பத்தூர் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர்
டி.கே.முருகேசன் ஆகியோர் வழக்கு வெற்றி பெற பெரிதும் உதவினர்.
இந்த இடைப்பட்ட
காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் என்ற பொருளில் தோழர் மோகன் சந்தித்தவை பற்றி
அவர் சொல்கிறார்:
‘2012ல் அய்சிஎஃப்
காலனி பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க
வேண்டும் என்று கோரி தோழர் பசுபதி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி மக்கள்
திரண்டு சாலை மறியல் நடத்தினர். அந்தச் சாலை மறியலில் தடியடி நடத்தப்பட்டது.
நானும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். மக்களை சமாதானப்படுத்தி கலைந்து
செல்ல சொல்ல வேண்டும் என்று என்னிடம் காவல்துறையினர் சொல்ல, அவர்கள் கோரிக்கைகளை பற்றி பேசாமல் அப்படிச்
செய்ய முடியாது என்று நான் சொன்னேன். அதன் பிறகுதான் தடியடி நடத்தப்பட்டது.
பகுதியில் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு காவல்துறையினருக்கு எரிச்சலை
உருவாக்கியதால் இந்தப் போராட்டத்துக்குப் பிறகு என் மீது போடப்பட்ட பொய் வழக்கு
துரிதப்படுத்தப்பட்டது’.
‘இந்த ஆறு ஆண்டு
காலத்தில் 63 முறை
விசாரணைக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறேன். இந்த வழக்கு எனக்கு கட்சிப் பணியில்
ஒரு பகுதி. போனேன். வந்தேன். ஆனால், சாமான்யர் ஒருவர் எனது நிலையில் இருந்திருந்தால் அவருக்கு எந்த அளவுக்கு
துன்பங்கள் ஏற்பட்டிருக்கும்? பிழைப்பை
விட்டுவிட்டு அலைய நேர்ந்திருக்கும். நானும் கைதை தவிர்ப்பதற்காக தலைமறைவாக இருந்த
நேரம் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. காவல்துறையினர் வசதி
படைத்தவரிடம் இதுபோல் நடந்து கொள்வதில்லை. தலை காய்ந்தவர்களைத்தான் இப்படி அலைக்
கழிக்கிறார்கள். வேறு யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டிருந்தால், அவரது மொத்த குடும்பமும்
பாதிக்கப்பட்டிருக்கும். வழக்கு நடத்துவது, வழக்கறிஞர் கட்டணம், இத்யாதிகளுக்கு பெருமளவில் செலவு செய்திருக்க
நேர்ந்திருக்கும். அதற்கு கடன் வாங்க நேர்ந்திருக்கும். அல்லது, முதல் நாளே கைது செய்யப்பட்டு, லாக் அப்பில் முதலில் தாக்கப்பட்டு பிறகு பொய்
வழக்கில் சிறையில் இருந்திருக்க நேர்ந்திருக்கும்’.
‘இந்த வழக்கில்
எனது உறவினர் ஒருவர் கூட காவல்துறையினரால் மிரட்டப்பட்டார். நம்மால் இதுபோன்ற
விசயங்களை சமாளித்து மீண்டு விட முடிகிறது. ஆனால் சாமான்யர் என்ன செய்வார்?
காவல்துறையினர் என்றால்
பொதுமக்களுக்கு அச்சமும் அசுயையும்தான் ஏற்படுகிறது. அவர்கள் அப்படித்தான் நடந்து
கொள்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தைக் காட்ட எப்போதும் முயற்சி செய்கிறார்கள்’.
‘நீதிமன்றத்தில்,
விசாரணைக்குச் செல்லும்
போது, போலீஸ்காரரை அடிச்ச
வழக்கு, 169 என்றுதான் என்னை
அடையாளப்படுத்துவார்கள். எனது பெயர் சொல்லி என்னை அழைப்பது அரிது. சாமான்யர்கள்
விசயத்தில் முதலாளித்துவ நடைமுறைகள் மரியாதைக் குறைவாகத்தான் இருக்கும் என்று
நமக்குப் புரிவதால் இவற்றை கடந்து சென்றுவிட முடிகிறது. ஆனால், எந்தத் தவறும் செய்யாமல் பொய் வழக்கில் சிக்க
வைக்கப்பட்டு, இது போன்ற
நடைமுறைகளை முதன்முதலாகச் சந்தித்து, அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்?
இந்த மன உளைச்சலுக்கு
யார் பதில் சொல்வார்கள்? இதோ எனது
வழக்கில் நான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது. நான் இதற்காக
செலவழித்த நாட்களை எனக்கு எந்த நீதிமன்றம் அல்லது எந்த காவல்நிலையம் அல்லது எந்தக்
காவலர் திருப்பித் தருவார்? இதே போன்ற ஒரு
வழக்கில் ஒரு சாமான்யர் சிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர் குற்றமற்றவர் என்று
தீர்ப்பு வருகிற நேரம் அவரும் அவரது குடும்பத்தாரும் பல்வேறு இழப்புகளை
சந்தித்திருப்பார்கள். இவற்றை யாரால் நேர் செய்ய முடியும்? ஒரு வேளை அவருக்கு தண்டனை உறுதி
செய்யப்பட்டிருந்தால் அந்த அநீதிக்கு யார் பொறுப்பேற்பார்கள்?’
‘தீர்ப்பு வந்து
நான் விடுவிக்கப்பட்ட பிறகு இதுபோல் பல கேள்விகள் என்னுள் எழுந்தவாறு இருக்கின்றன.
ஒரே தீர்வுதான். ஈவிரக்கமற்ற இந்த முதலாளித்துவ சமூகத்துக்கு முடிவு கட்டி
பாட்டாளிகளின் அதிகாரம் கொண்டு வரப்பட வேண்டும். அங்கு எல்லோரும் சமம். பணமில்லை
என்பதால் ஒருவர் துன்பத்துக்கு ஆளாக மாட்டார். பணம் இருக்கும் ஒருவர் பணத்தைக்
காட்டி குற்றங்களில் இருந்து தப்பிவிட முடியாது’.
‘அதிகாரம்
படைத்தவர்கள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள, தங்கள் அதிகாரத்தை காட்டிக் கொள்ள, நிலைநிறுத்திக் கொள்ள போடும் பொய் வழக்குகளில்
அலைச்சலுக்கு உள்ளாகி வாழ்க்கையை தொலைப்பவர்கள் பற்றி ஏதாவது செய்தாக வேண்டும்’.
கோவையில்
நடக்கவுள்ள மே தின பேரணி தயாரிப்பு, தீப்பொறி வேலைகள், மாருதி தொழிலாளர்
ஒருமைப்பாட்டு நிதி திரட்டல் என தோழர் மோகன் தொடர் வேலைகள் இருந்ததால் பல முறை
முயற்சி செய்தும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. மாருதி தொழிலாளர்களுக்கு நிதி
திரட்ட திருவெற்றியூர் சென்றிருந்தபோது, இடைப்பட்ட நேரத்தில் அலைபேசியில் இந்த விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
நமது தோழர்கள்
காவல்துறையைச் சேர்ந்தவரை தாக்கியதாக, காவல்நிலையத்தை முற்றுகையிட்டதாக காவல்துறையினர் தொடர்ந்து சொல்லி வந்தபோதும்,
இந்த வழக்கில், அவர்களது முகத்திரை கிழிந்துள்ளது.
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)