தலையங்கம்
தமிழக
மாணவர்களின் சுயமரியாதையை விலை பேசுகிற அஇஅதிமுக ஆட்சி
தமிழ்நாட்டில்
நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போதுதான், சில மாதங்களாகத்தான் தமிழக அமைச்சர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள்; நடக்கிறார்கள். இப்போது எந்த கார் டயருக்கும்
அவர்கள் வணங்கி வணக்கம் சொல்வதில்லை. ஜெயலலிதாவின் மறைவும் சசிகலாவின் சிறை
வாசமும் அவர்கள் முதுகை சற்று நிமிர்த்தியுள்ளன. கால் பிடிக்கும் தொழிலில்
அவர்களுக்கு சங்கடமோ, இழிவோ
இருந்ததில்லை.
அது அவர்களது சில பல நூறு கோடிகள் வருமானம் தொடர்பானது. அதனால்
அம்மாக்கள் முன்னால் குனிந்து நிற்க, கும்பிடு போட, வாய்ப்புக்
கிடைக்காதா என்று எப்போதும் காத்திருந்தார்கள். வாய்ப்பு கிடைத்தபோது
பயன்படுத்திக் கொண்டார்கள். சுயமரியாதையாவது? வெங்காயமாவது?
ஆனால் அவர்கள்,
தமிழக மக்களும்
தங்களைப்போல் சுயமரியாதையற்றவர்கள் என்று எப்படி முடிவுக்கு வந்தார்கள்? தமிழக மாணவர்கள் மீது மோடி அரசால்
திணிக்கப்பட்ட நீட் தேர்வு, தமிழக மாணவர்களை
அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதோ என்று கருத்து உருவாகும் அளவுக்கு, மருத்துவர்
கனவுகளுடன் தேர்வு எழுத வந்த மாணவர்கள் கெடுபிடி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு
துன்புறுத்தப்பட்டார்கள். மக்கள் பிரச்சனைகள் எவற்றுக்கும் செயல்படும் பதில்
எதுவும் சொல்லாத மத்திய, மாநில
ஆட்சியாளர்கள், சொந்த நாட்டு
மக்களை துன்புறுத்தும், அவமானப்படுத்தும்
நடவடிக்கைகளை மட்டும் மிகக் கறாராக நிறைவேற்றுகிறார்கள்.
ஆட்சியாளர்கள்,
அதிகாரிகளின் கறார்
நடவடிக்கைகள் எல்லாம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த அடுத்த
மூன்று மணி நேரத்தில் சந்தி சிரித்தது. பத்து மொழிகளில் வெவ்வேறு கேள்விகள்,
சில மொழிகளில் எளிதான
கேள்விகள், மற்றவற்றில்
கடினமான கேள்விகள் என்று, மோடி அரசு
மாணவர்கள் மீது திணித்த பொதுத் தேர்வில் எந்த பொதுத் தன்மையும்
கடைபிடிக்கப்படவில்லை. இந்த பொதுத்தன்மை அற்ற தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ
படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. மோடியின் அசாத்திய திறமைகள்
பற்றி பஞ்ச் வசனங்கள் தயாரிப்பவர்கள் இந்த படுகேவலமான குளறுபடிக்கு, குறைந்தபட்ச திறனின்மைக்கு என்ன பெயர்
சொல்வார்கள்?
மருத்துவ
படிப்பில் இடம் கிடைத்தால்போதும் என்று மாணவர்களும் பெற்றோர்களும்
துன்புறுத்தல்களை, அவமானங்களை
சகித்துக் கொண்டார்கள். அந்த சகிப்புத்தன்மைக்கும் பொருளற்றுப் போய்விட்டது. தமிழக
மாணவர்கள் சந்தித்த துன்புறுத்தல்களுக்கு மத்திய அரசு காரணம் என்று சொல்லி தமிழக
அமைச்சர்கள் தப்பித்துவிட முடியாது. கண்டெடுக்கப்படுகிற பணம், வருமான வரித்துறை நடத்துகிற சோதனைகள், வெளியிடுகிற பட்டியல்கள், ஆவணங்கள் எல்லாம் பார்க்கும் போது, அஇஅதிமுக ஆட்சியாளர்கள் தமிழக மாணவர்களின்
சுயமரியாதையை விலை பேசி விட்டார்கள் என்று சந்தேகிக்க நேருகிறது.
முதுகுத் தண்டின்
வலிமை குன்றி குனிந்து பழக்கப்பட்டவர்கள், இன்று மோடியின் முன் குனிந்து நிற்கிறார்கள். அவர்களால் டாஸ்மாக் கடைகளை
மட்டும்தான் காப்பாற்ற முடிகிறது. தமிழக மக்களின் நலன்களை முடிந்த அளவு மண்ணில்
புதைத்துவிட்டவர்கள், இன்று மிச்சம்
இருக்கும் சுயமரியாதை போன்ற அரிய மாண்புகளை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனித
வேட்டையாடும் கார்ப்பரேட் ஆதரவு சக்திகளிடம் இருந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை
பாதுகாக்கப் போராடும் அதே நேரத்தில், தமிழக மக்களின் கவுரவத்தை, சுயமரியாதையை விலை
கேட்கும் நடவடிக்கைளுக்கு எதிராகவும் தீவிரமான போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.