COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 1, 2017

மக்களை ஒடுக்கும் காவல்நிலையமா?
மக்கள் எதிர்கால நலனுக்கான பள்ளிக் கூடமா?

அம்பத்தூரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

உபரி மக்கள் தொகை கொட்டப்படும் இடங்களாக நகரங்கள் ஆக்கப்படுகின்றன. இப்படி ஏற்கனவே வந்து சேர்ந்த ஒரு தலைமுறை அம்பத்தூரில் வாழ்கிறது. அந்தத் தலைமுறையினர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை வாய்ப்பு பெற்றனர். பெருவாழ்வு இல்லை என்றாலும் சிறுவாழ்வாவது வாழ்ந்தனர். பெரும்புயலாய் வீசிய உலகமயம் வேலையை, வருமானத்தை, வாழ்க்கையைப் பறித்தது. ஆலைகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் தற்காலிக, ஒப்பந்த வேலைகள், பாதுகாப்புப் பணிகள், சிறுசிறு சொந்த தொழில்முனைவுகள் என்று சிதைந்து போனார்கள். ஆனாலும் அம்பத்தூரை விட்டு அவர்கள் அகற்றப்படவில்லை.

அடுத்து ஒரு தலைமுறையும் கிராமங்களில் இருந்து வந்து இப்போது அம்பத்தூர் பகுதியில் சேர்ந்துவிட்டது. பிற மாநிலத் தொழிலாளர்களும் அம்பத்தூர் பகுதியை நிறைத்திருக்கிறார்கள். அம்பத்தூர் பகுதி இப்போது வெறும் தொழிற்பேட்டை அல்ல. தகவல் தொழில்நுட்ப தொழில் நிறைந்த பேட்டை. ஆலைகள் இருந்த இடங்களில் மேட்டுக்குடியினர் வசிக்கும் அடுக்குமாடி வீடுகள், பளபளப்பான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்துவிட்டன. சைக்கிள்களும் கனரக வாகனங்களும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த தெருக்கள், மகிழுந்துகள் சரசரக்கும் சாலைகளாகியுள்ளன.
அம்பத்தூர் பகுதி வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து, இப்போது, அதுவே ஒரு தனி தொகுதியாகக் கூட மாறிவிட்டது. டாஸ்மாக் கடைகள் பஞ்சமின்றி ஓடுகின்றன.
இத்தனை மாற்றங்கள் வந்த பிறகும், அம்பத்தூர் பகுதிக்கென ஓர் அரசு மருத்துவமனை வரவில்லை. ரயிலில் யாராவது அடிபட்டுவிட்டால் கூட கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கோ எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆகும். ஓர் அரசுக் கல்லூரி இல்லை. அவையும் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளன.  அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. ஆட்சியாளர் யாரும் இது பற்றி அக்கறை கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் காமராஜபுரம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு அருகில் அரசு நிலம் உள்ளது. அந்தப் பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளியாக கட்டித்தர வேண்டும் என பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்புகின்றனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளனர். இப்போது அங்கு காவல் ஆணையர் அலுவலகம் கட்ட அரசு நிர்வாகம் முயற்சி செய்வதை தகவல் அறியும் சட்டம் மூலம் பகுதி மக்கள் அறிந்துகொண்டனர். மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். முன்பு ஒரு காலத்தில் அங்கு காவலர் குடியிருப்பு இருந்ததாகவும் எனவே அங்கு காவல் ஆணையர் அலுவலகம்தான் கட்டப்படும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பகுதியின் அம்பேத்கர் பொது நல மன்ற பதாகையில், இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினரும் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளருமான தோழர் பாரதி தலைமையில் அம்பேத்கர் பொது நல மன்றத்தைச் சேர்ந்த தோழர்கள் டி.உமாபதி, எ.ஆர்.ராமன், டி.ராஜ்மோகன், என்.எலிசா (எ) கணேஷ் ஆகியோர் மே 19 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் இறங்கினர். அம்பத்தூரில் 1000 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைத்திடு, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு என்ற கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டனர்.
பகுதி மக்கள் போராட்ட இடத்துக்கு வருவது, ஆதரவு தெரிவிப்பது என முதல் நாள் பட்டினிப் போராட்டம் கழிந்தது. இரண்டாவது நாள் பகுதியின், பாஜக தலைவர்கள் உட்படஅனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மூன்றாவது நாள் போராட்டம் அக்கம்பக்கம் பகுதி மக்களை ஈர்த்தது. இககமாலெதான் மக்கள் பிரச்சனைகளில் விடாப்படியாக தலையிடுகிறது என பேச வைத்தது. மே 21 அன்று ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் இருந்த தோழர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாவது நாள் போராட்டத்தின்போது, நாளேடுகளில் பட்டினிப் போராட்டம் பற்றி செய்திகள் வெளியாயின. இந்தப் பிரச்சனையில் காவல்துறையினருடன் மக்கள் மோதிக் கொண்டிருப்பதால், காவல் துறையினர், செய்தி வெளியிட்டவர்களை தொலைபேசியில் பேசி மிரட்டியதாக தகவல்கள் வந்துள்ளன.
மே 22 அன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கையை முன்வைக்கும் செய்தியை பகுதி மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், அந்த சந்திப்புக்கு மக்களை அணிதிரட்டவும் மே 21 அன்று பகுதிக்குள் இககமாலெ மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன் தலைமையில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மே 22 அன்று தோழர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக ஆவன செய்வதாகவும் பட்டினிப் போராட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் யாரையாவது உடனடியாக அனுப்புவதாகவும் ஆட்சியர் உறுதியளித்ததன் அடிப்படையில் தோழர்கள் திரும்பினர். அன்று மாலை காவல்துறை துணை ஆணையர்  போராட்டத்தில் இருந்த தோழர்களைச் சந்தித்தார். அந்த இடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கித் தருவதாகவும் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதன் பின்னர் நான்காவது நாள் இரவு பட்டினிப் போராட்டத்தை தோழர்கள் முடித்துக் கொண்டனர்.
இத்துடன் பிரச்சனை முடிந்துவிடும் என்று நமக்கு மாயை இல்லை. அதிகாரிகள் அளித்துள்ள உறுதியை செயல்படுத்த தொடர்நிர்ப்பந்தங்கள் தர வேண்டியுள்ளது. மக்கள் நலனே கட்சியின் நலனாகக் கொண்டுள்ள மாலெ கட்சி, மக்களை ஒடுக்கும் காவல்நிலையமா, மக்கள் எதிர்கால நலனுக்கான பள்ளிக் கூடமா என்ற கேள்வியில் மக்கள் நலன் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகளில் உள்ளது.

அகில இந்திய விவசாயிகள் மகாசபையின்
அகில இந்திய மாநாட்டிற்கான பிரச்சார இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மே 5 முதல் மே 22 வரை அகில இந்திய விவசாயிகள் மகாசபை அகில இந்திய மாநாட்டிற்கான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. மே 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவிகிதொச மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட அமைப்பாளர் தோழர் கலியமூர்த்தி, செண்பகவள்ளி, கந்தசாமி, ஏழுமலை, கலாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அய்சிஅய்சிஅய் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் கணக்கு புத்தகம் வழங்காமல் ஏமாற்றும், முதியோர் உதவித் தொகை மற்றும் தேசிய ஊரக வேலைக்கு வழங்கப்படும் சம்பளம் வழங்காமல் ஊழல் முறைகேடுகள் தொடரும் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடு, வீட்டுமனைப் பட்டா, வீடு அற்றவர்களை வருவாய் துறை, கிராமப்புறங்களில் கணக்கெடுப்பு நடத்தி வீட்டுமனை பட்டா வழங்கு, விழுப்புரம் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட, அதிர்ச்சி மரணம் அடைந்த விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய், வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கு, ஆறுகள் ஏரிகள் குளங்கள் ஓடைகள் இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புனரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடு, சர்க்கரை ஆலைகள், ஒழுங்குமுறைக் கூடங்களில் உள்ள விவசாயிகளின் பணத்தை உடனடியாக வழங்கு, மாவட்டம் முழுவதும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்கு, நாள் கூலி ரூ.500 வழங்கு, பாக்கி கூலி உடனடியாக வழங்கு ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

(மாலெ தீப்பொறி 2017 ஜுன் 01 – 15)

Search