தலையங்கத்துக்குப்
பதிலாக
மாட்டுக்கறி எனது
உரிமை
சுகிர்தராணி
மாட்டுக்கறியே
என் வாழ்க்கை
மாட்டுக்கறியே
என் கொண்டாட்டம்
மாட்டுக்கறியே
என் திருவிழா
மாட்டுக்கறியே
என் வாழ்வு
நான் பிறந்து
கண்விழித்தபோது
உலர்ந்த உப்புக்
கண்டத்தின்
பெருவாசனையே
எனக்கு முதல்
சுவாசம்.
கைகால்களை
உதைத்து உதைத்து
நான் வீறிட்டு
அழுதபோது
என் குடிசை
வீட்டுத் தாழ்வாரத்தில்
செருகியிருந்த
எலும்புத் துண்டுகளே
எனக்குக்
கிலுகிலுப்பை.
பசிக்காக
உதடுகளைச் சப்புக்
கொட்டியபோது
இரவடுப்பில் வேக
வைக்கப்பட்ட
மாட்டிறைச்சிச்
சாறே
எனக்குத்
தாய்ப்பால்.
கறியின் மீது
கவிழ்ந்திருக்கும்
மஞ்சள் நிற
கொழுப்புத் துண்டுகளை
உச்சி வெயிலில்
உலர்த்தியெடுத்து
பனியென உருகும்
ஊன் நெய்யில்
சுட்டு எடுப்பதே
என் பலகாரம்.
மாட்டுக் கறித்
துண்டுகளை
நீளவாக்கில்
அரிந்தெடுத்து
வீட்டின்
முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட
முட்செடியின்
நெருங்கிய கிளைகளில்
பரப்பிவைத்து
உலர்த்துகையில்
கருப்புத்
துணியேந்தி காகம் விரட்டுவதே
எனக்குப்
பொழுதுபோக்கு.
களிமண்ணால்
தேய்த்துக் குளித்து
ஆடையணிந்து வெளிச்செல்கையில்
என் மீது வீசும்
புலால் நாற்றமே
எனக்கு நறுமணத்
தைலம்.
வார்களால்
இழுத்துக் கட்டப்பட்டு
இடுப்பு
இறக்கத்தில் தொங்கும்
மாட்டுத் தோலின்
பறையொலியே
எனக்கு ஆதிதாளம்.
சடங்குகளுக்கும்
சாவுக்கும்
ஆணும் பெண்ணுமாய்
அடவு கட்டி ஆடும் குத்தாட்டமே
எனக்கு
நாட்டியம்.
நல்ல மாட்டை
அறுத்து
பசிய
தென்னங்கீற்றின் மேல்
பத்தும்
இருபதுமாய் பங்குபோட்டு
சாணம் மெழுகிய
மூங்கில் கூடையில்
செஞ்சிவப்பு
மாட்டுக்கறியை அள்ளிச் செல்லும்
வாரத்தின் வெள்ளி,
சனி நாட்களே
எனக்குத்
திருவிழா.
இதுவே என்
வாழ்க்கை
இதுவே என்
கொண்டாட்டம்
இதுவே என்
திருவிழா
இதுவே என் வாழ்வு
இதுவே என் உணவு.
இது என் ஆளுகைப்
பிரதேசம்
பிரவேசிக்க நீ
யார்?
எங்கிருந்து
வந்தவன்?
எங்கிருந்து
கிடைத்தது
உனக்கிந்த
காவியாடை?
எனக்கான உணவை
நான் தான் விழுங்க வேண்டும்
எனக்கான எச்சிலை
நான்தான் உமிழ வேண்டும்.
என் கருத்த
தோலின் மீது
உன்
காவிச்சாயத்தைப் பூசாதே
விரித்துப் போட்ட
என் கூந்தலை
உச்சிக்
குடுமியாய் மாற்றாதே
புனிதம் புனிதம்
என்கிறாய்
எது புனிதம்?
யார் புனிதம்?
புனிதம் என்னும்
சொல்லே
ஓர்
ஒடுக்குமுறைச் சொல்தான்...
உன் காவி-இந்தி
அகராதியிலிருந்து
புனிதத்தை நீக்கு
மனிதத்தை நோக்கு
மாட்டுக் கறி
வாசனை வீசும் நான்
புனிதமற்றவள்தான்..
என்னை
புனிதமானவளாக்குவதற்கு
பசு மூத்திரத்தை என் மீது தெளிக்காதே
எரித்த சாணத்தை
என் நெற்றியில் பூசாதே.
கோமாதா உனக்குத்
தெய்வமா?
அந்தத்
தெய்வத்தின் தோலையா
செருப்பாக
அணிந்து கொள்கிறாய்?
கோமாதா உனக்குக்
கடவுளா?
அந்தக் கடவுளின்
இரத்தத்தையா
நீ பாலாகக்
குடிக்கிறாய்?
மாட்டுக்கறியை
நான் தின்கிறேன் என்று
கூப்பாடு போடும்
நீ
என்னைச்
செருப்பணிய விட்டாயா?
பசுவை
வீட்டுக்குள் வரவழைக்கும் நீ
என்னைச்
சேரியிலிருந்து ஊருக்குள் வரவிட்டாயா?
கோவிலுக்குள்
மணியாட்டி கற்பூரம் காட்டும் நீ
கைத்தொழ
கருவறைக்குள் என்னை விட்டாயா?
மதத்திற்கும்
மாட்டுக்கும் முடிச்சு போடும் நீ
மதத்திற்கும்
மதச்சார்பற்ற நாட்டிற்கும்
முடிச்சுப்
போட்டுப் பார்த்தாயா?
இது மதச்சார்பற்ற
நாடு...
மதத்தைத்
தேர்ந்தெடுக்கவும் எனக்கு உரிமை உண்டு.
மாட்டுக்கறியைத்
தேர்ந்தெடுக்கவும் உரிமையுண்டு.
என்ன உரிமை
இருக்கிறது உனக்கு
என்னை ஆள?
மாட்டுக்கறி
வைத்திருந்ததற்காக
தாத்ரியில்
அடித்துப் படுகொலை செய்தாயே....
ஏற்றுமதி
செய்வதற்காக
மாடுகளையே
வெட்டிக் கொல்லும்
உன்னை என்ன
செய்வது?
நீ
மாட்டிறைச்சிக்கு தடை போட்டால்
மாட்டிறைச்சித்
திருவிழா நடத்துவோம்
மாட்டிறைச்சித்
திருவிழாவுக்கே தடை போட்டால்
இனி தெருவுக்கொரு
மாடறுப்போம்
மாட்டிறைச்சி என்
வாழ்வு
மாட்டிறைச்சி என்
பயணம்
மாட்டிறைச்சி என்
வாழ்க்கை
மாட்டிறைச்சி என்
உரிமை
வேண்டுமானால்
உன் மலத்தை நீ
தீர்மானித்துக் கொள்
என் உணவை, என்
மாட்டுக்கறியை
நான்தான்
தீர்மானிப்பேன்.