COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 15, 2017

சங் பரிவாரின் பொற்காலம்?

எஸ்.குமாரசாமி

மோடியின் ஆட்சி மத்தியில் வந்து 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தியாவில் ஆகக்கூடுதல் மக்கள் வாழும் உத்தரப்பிர தேசத்தில், காவி உடையணிந்த, தலையை மொட்டை அடித்துக் கொண்ட ஒரு சாமியார், கோரக்பூர் மடாதிபதி யோகி ஆதித்யநாத், முதல்வராகிவிட்டார்.
ஒரு கட்சி, ஒரு மொழி, ஒரு மதம்என மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் பாஜக முன்னேறுகிறது. பழைய இருண்ட காலம் நோக்கிய நகர்வுகளுக்கு அக்கம்பக்கமாக, சர்வதேச நிதி மூலதனத்துடன் இந்தியாவை இணைப்பதும், கார்ப்பரேட் வளர்ச்சிக்கு ஆனதெல்லாம் செய்வதை இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்வதும், நடக்கிறது.
தூய்மைக் கோட்பாடுநாட்டை உலுக்குகிறது. புனிதமான பசுவைக் கொல்கிற உண்ணுகிற இசுலாமியர்களும் தலித்துகளும் தூய்மையானவர்கள் அல்ல என்று சொல்லப்படுகிறது. (தூய்மைக் கோட்பாட்டின் அடிப்படையில்தான், அகமணமுறை மூலம், சாதி தாண்டிய திருமணத்துக்கு கதவு அடைக்கப்பட்டு ஆதிக்கக் கொலைகள் நடக்கின்றன). சமஸ்கிருதம் தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச பாஷைகள். இந்தியே இந்தியாவின் மொழி. அது இராஷ்டிர பாஷா. ஆர்யர்கள் மேலானவர்கள் என்பதால் வெள்ளைத் தோல் உயர்வானது; கருப்புத் தோல் தாழ்ந்தது; பலமான மத்திய அரசு வேண்டும்; வலுவான ஒற்றை ஆட்சியே, மத்திய ஆட்சியே நாட்டுக்குத் தேவை; மாநிலங்கள் இருந்து விட்டுப் போகலாம். இவையே சங் பரிவாரின் நிலைப்பாடுகள்.
இந்திய வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இசுலாமியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்; இந்துக்களை அடக்கி வைத்தவர்கள்; இந்து இந்திய பாரம்பரியத்தைச் சிதைத்தவர்கள்; இந்தியா, இந்து நாடு எனத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஒருபுறம் கருத்து உருவாக்கமும் கருத்து திணிப்பும் நடக்கின்றன. மறுபக்கம் கல்வி நிறுவனங்கள் துவங்கி நாடெங்கும், கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் எல்லாம், தேசவிரோதப் போராட்டங்கள் எனச் சித்தரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகள் வலுவூட்டப்படுகின்றன. பாகிஸ்தானுட னும் சீனத்துடனும் பகை வளர்க்கப்படுகிறது. ஆயுதப் போட்டியும் ஆபத்தான ஆயுதக் குவிப்பும் நடக்கின்றன. காங்கிரஸ் முக்த் பாரத்’ - காங்கிரஸ் இல்லாத இந்தியா என் பதை, இன்று கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா, நாளை எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்பதாக ஆக்குவதை நோக்கி நகர்கிறார்கள். இந்து யுவ வாஹினி, பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத் என வீதிகளில், இசுலாமியர், தலித்துகள், பெண்கள், பகுத்தறிவாளர், மாற்றுக் கருத்துடையோர், இடதுசாரிகள் ஆகியோருக்கு எதிராக, குஜராத் முதல் உத்தரபிரதேசம் வரை திட்டமிட்டு வன்முறையை ஏவிய கூட்டம், அந்த வன்முறையோடு தன் அரசு அதிகார நடவடிக்கைகளின் ஆசியை இணைத்துள்ளது. ஸ்ட்ரீட்டும் ஸ்டேட்டும்’, தெருவும் அரசும், சங் பரிவாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குஜராத் பரிசோதனை, டெல்லி  சிம்மாசனம் நோக்கி நகர உதவியது. நாட்டின் பல மாநிலங்கள், மிகவும் முக்கியமாக உத்தரபிரதேசம் நம் வசம் வந்துவிட்டது; யோகியைச் சுலபமாகவும் இயல்பாகவும் முதல்வராக்கி விட்டோம்; உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிப் போகின்றன. சிபிஅய்யிலிருந்து, நிதி ஒதுக்கீடு வரை மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த ஆயுதங்கள் கைவசம் உள்ளன. ஆகவே இது நமது (சங்பரிவாரின்) பொற்காலம், இந்தியா மொத்தத்தையும் வாரிச் சுருட்ட, வசப்படுத்த, பன்மைத்துவத்தின் சுவடு தெரியாமல், கார்ப்பரேட் மதவெறி சாதி ஆதிக்க பாசிசம் நிறுவ இப்போதில்லாவிட்டால் எப்போதும் முடியாது (நவ் ஆர் நெவர்) என பாஜக செயல்படுகிறது.

ஓரிரவில் நடந்ததா இந்த மாற்றம்?
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, அரசியலோடு மதத்தைக் கலந்த இந்துத்துவாவும், இந்துக்கள் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியா இந்து நாடு என்ற கருத்துக்களும், அவற்றை நிறுவும் அமைப்புக்களும், இருந்து வந்துள்ளன. அந்த இந்துத்துவாதான் காந்தியை கொன்றது. அந்த இந்துத்துவா, காங்கிரஸ் மீதும் செல்வாக்கு செலுத்தியது. அந்த இந்துத்துவா, அம்பேத்கரை ஆளுகை முறையிலிருந்து விலக வைத்தது.
சோசலிச சரிவுக்குப் பின், உலகெங்கும் வலதுசாரி சக்திகள் வளர்ந்தபோது, இந்தியாவில் பாஜகவும் வளர ஆரம்பித்தது. பாரதிய ஜனதாவின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்ல முடியும்.
1.            உலகமயம் தாராளமயம் தனியார்மயம் என்ற நவதாராளவாத பொருளாதார வளர்ச்சிப் பாதைக் கொள்கையில், கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை, வளர்ச்சி விகித உயர்வைக் கொண்டாடும் கொள்கையில், பாகிஸ்தான், சீனாவோடு பகைமை, அய்க்கிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் நட்பு என்ற அயல் விவகாரக் கொள்கைகளில், வன்மையான அரசு, கடுமையான சட்டங்கள் என்ற ஆட்சி முறைக் கொள்கையில், எல்லா முதலாளித்துவ கட்சிகள் மத்தியிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டது. முதலாளித்துவ நெருக்கடி முற்றிப் போகும்போது, இந்தக் கொள்கைகளைத் தயக்கமின்றி வேகமாய் அமல்படுத்தும் கட்சியாக, பாஜக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
2.            இயல்பாக ஏற்கனவே இருப்பதோடு, மனித சிந்தனையை திட்டமிட்டு  கட்டமைக்கப்படும் எல்லா முயற்சிகள் மூலமும் உருவாக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி (காமன் சென்ஸ்), நாளும் வலுப்படுத்தப்படுகின்ற பொதுப்புத்தி, இரண்டாவது ஆபத்தாகும்.
இசுலாமியர்கள் அதிகமுள்ள பாகிஸ்தான் இசுலாமிய நாடு எனும்போது, இந்துக்கள் அதிகமுள்ள இந்தியா ஏன் இந்து நாடாகக் கூடாது என, இந்தப் பொதுப்புத்தி (காமன் சென்ஸ்) சுலபமாகக் கொளுத்திப் போடுகிறது.
பசுஇந்து மதத்திற்கு புனிதமானது. இந்தியா இந்து நாடு. ஆகவே பசு காக்கப்பட வேண்டும். ஆகவே, மாட்டிறைச்சியோடு தொடர்புடைய இசுலாமியர்களுக்கு, தலித்துகளுக்கு தெருவில் கும்பல் கூடி, பெரும்பான்மைவாத தண்டனை கொடுப்பதில் என்ன தவறு என இந்தப் பொதுப் புத்தி கேட்கிறது.
உனாவை, அக்லக் தொடங்கி நாடெங்கும் நடந்த பசுப் பாதுகாப்பு(!) கொலைகளை நியாயப்படுத்துகிறது.
இந்துப் பெண் இசுலாமியரோடு சென்றால், சாதி இந்துப் பெண் தலித்தோடு சென்றால், குடும்ப கவுரவத்துக்குக் களங்கம், கலாச்சாரத்துக்கு ஆபத்து என்று தாங்கள் நினைப்பதில், தண்டிப்பதில் என்ன தவறு எனப் பொதுப்புத்தி கேட்கிறது.
பணமதிப்பகற்றுதல் நடவடிக்கை என்பது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, பணமதிப் பகற்றுதல் நடவடிக்கையை எதிர்ப்பது கருப்புப் பண ஆதரவு - ஊழல் ஆதரவு என இந்தப் பொதுப் புத்தி  சொல்கிறது.
காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி, காஷ்மீர் மக்கள் பற்றி யாராவது கவலைப்பட்டால் அவர்கள் தேசவிரோதிகள் என இந்தப் பொதுப்புத்தி சொல்கிறது.
சொந்த நாட்டு மக்கள் மீது இந்தியாவின் பல பகுதிகளில் இராணுவத்தையும் துணை இராணுவத்தையும் ஏவிப் போர் தொடுத்துள்ள அரசு மற்றும் படையினரின் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பதே தேச விரோதம் என இந்த பொதுப்புத்தி சொல்கிறது.
நாட்டு விடுதலைப் போராட்ட காலத்தில் தண்டி யாத்திரை நடந்தது. உப்பு சத்தியா கிரகம் நடந்தது. இன்று நாடெங்கும் நடக்கும் ஆர்எஸ்எஸ் ஷகாக்களும், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெள்ளையரிடம் விசுவாசம் காட்டிய இந்துத்துவாவினரும், இந்திய மக்களின் மிகப்பெரும் பகுதியினருக்கு எதிராக, ‘தடியாத்திரை நடத்துகின்றனர். மெய் உலகு மெய் நிகர் உலகு எங்கும், சங்பரிவார் வன்முறை நச்சுக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
இந்த பொதுப்புத்தியின் முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மண்டியிடுகின்றன. ஒரே ஓர் உதாரணம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். சிறீநகர் நாடாளுமன்ற இடைத் தேர்தலை காஷ்மீர் மக்கள் பெருமளவுக்கு புறக்கணித்தனர். 7% பேர்தான் வாக்களித்தனர். அவர்களில் 612 என்ற பட்டியல் எண்ணில் வாக்களித்தவர் பரூக் அகமது தார் என்ற இளைஞர். (அவர் வாக்களித்தாரா இல்லையா என்பது தீர்மானிக்கும் விஷயம் அல்ல). அவர் துக்கம் விசாரிக்க ஓர் இரு சக்கர வண்டியில் போய்க் கொண்டிருந்தார். ஆடைகளில் அலங்காரம் செய்யும் ஏழைத் தொழிலாளியான தாரை, இந்திய இராணுவ மேஜர் கோகாய் தமது ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டிப் போடுகிறார். அவரை மனிதக் கவசமாக்கி, பல கிலோ மீட்டர் தூரம், பல கிராமங்களில் இழுத்துச் செல்கிறார்.
மேஜர் கோகாயின் செயல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு, மனித கவுரவத்துக்கு, சர்வதேசக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. அவர் மீது, காஷ்மீர் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அவரது செயலை விசாரிக்க, இராணுவம் விசாரணை நீதிமன்றம் அமைத்துள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பரேஷ் ராவல், மனித உரிமைப் போராளியும் சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுப்பவருமான அருந்ததி ராயை அவ்வாறு இராணுவ ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றிருக்க வேண்டும் எனவும், அவரிடம் அருந்ததி ராய் போல் வேறு பலர் பெயரும் பட்டியலில் இருப்பதாகவும் பகிரங்கமாகச் சொல்கிறார். அவர் பதிவு கண்டு, இந்துத்துவா கூட்டம் அகமகிழந்தது.
மூன்று நட்சத்திர இராணுவ ஜெனரலாகப் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ். பனாக், மேஜர் கோகாயின் செயல், இந்திய தேசத்தையும் இராணுவத்தையும் காலமெல்லாம் வாட்டி வதைக்கும் என்கிறார். வியத்நாம் போரின்போது, அய்க்கிய அமெரிக்க நாபாம் குண்டு வீச்சால், உடல் முழுவதும் பற்றி எரிந்து வெந்து ஓடி வந்த சிறுமியின் உருவம் போல், தாரின் உருவம் மானுட மனசாட்சியைக் கேள்வி கேட்கும் என்கிறார்.
ஆனால் இந்தியாவின் தலைமை ராணுவ தளபதி ராவத், கோகாயின் வீரத்துக்கு விருது வழங்குகிறார். ராணுவ விசாரணை எல்லாம் கண் துடைப்பு என்றாக்கிவிட்டார். பஞ்சாபில் வெற்றிபெற்று காங்கிரஸ் முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுக்கெதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டப் பார்க்கும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அமரீந்தர் சிங், மேஜர் கோகாயின் செயலைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
இதுதான் பொதுப்புத்தியின் வல்லமை. தங்களது தேசவிரோத மக்கள் விரோத கருத்துக்களுக்கு மிகவும் தந்திரமாகவும் சில நேரங்களில் முரட்டுத்தனமாகவும் ஏற்பையும் இசைவையும், பாஜக பெற்று வருகிறது.
3.            பாஜகவின் வெற்றிக்குப் பின்னால், நாடெங்கும் ஆக்டோபஸ் வலைப்பின்னல் கொண்ட, அரை ரகசிய சதிகார ஆர்எஸ்எஸ் உள்ளது. வதந்திகளைப் பரப்புவது, பொய்யைத் துணிந்து பேசுவது என்பவற்றோடு, நல்லவர்கள் போல், கலாச்சாரம் காப்பவர்களாக, மக்கள் சேவை செய்பவர்களாக, நாடகமாடுவதிலும் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இந்திய சமூகத்தின் எல்லா துறைகளிலும் ஊடுருவியுள்ள இவர்கள், சமூகப் பொறியியல் (சோஷியல் இன்ஜினியரிங்) மூலம் பழங்குடியினர், தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரை ஊடுருவியுள்ளனர். மிகவும் கவனத்துடன், பாஜக, பார்ப்பன பனியா கட்சியல்ல என்றக் கருத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளனர். இது ஆர்எஸ்எஸ், பாஜகவின் பெரும் பலம் ஆகும்.
மதவாதம், அராஜகம், அடாவடி... அவ்வளவுதானா பாஜக?
பாஜகதான், மூலதனத்தின் தலைசிறந்த இந்தியப் பூசாரி. நாட்டின் வளங்களையும் மனித வளங்களையும், மூலதன பலிபீடத்தில் காவு கொடுப்பதில், பாஜகவே முதலிடத்தில் உள்ளது. பாஜக பதவிக்கு வந்த 26.05.2014 அன்று மும்பை பங்குச் சந்தையில் பதிவு பெற்றுள்ள 2,800 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75 லட்சம் கோடி. மோடியின் மூன்று ஆண்டு கால ஸ்திரமான, பலமானஆட்சியில், இவர்களது சந்தை மதிப்பு ரூ.125 லட்சம் கோடி. ரூ.1,25,63,952 கோடி. வெறும் 2,800 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றே ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசசின் சந்தை மதிப்பு, ரூ.5,08,232.48 கோடி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டடின் சந்தை மதிப்பு, ரூ.4,34,326.63 கோடி. எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4,16,517.28 கோடி. அய்டிசியின் சந்தை மதிப்பு ரூ.3,74,928.98 கோடி. பலகோடி இந்தியர்கள், இந்த மூன்று ஆண்டுகளில், வளர்ச்சியை முட்ட முட்டத் தின்று, நல்ல காலங்களை தொப்புளுக்கு மேல் கஞ்சியாக குடித்து மந்தமாகிப் போனார்கள் என்று பாஜக சொல்கிறது. ஆனால், அவர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்தாலும் மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை சம்பாதிக்கவே சிரமப்பட்டார்கள்!
31.03.2016 அன்று, இந்திய வங்கிகளின் செயல்படாச் சொத்துக்கள், (நான் பெர்ஃபார் மிங் அசெட்ஸ்) ரூ.6,11,607 கோடி. வங்கிக் கடன்களில், பெரிய கம்பனிகளுக்குத் தரப்பட்டுள்ளது 56%. வாராக் கடன்களில் 88%, பெரு நிறுவனங்கள் பெற்ற கடன்களே ஆகும். ரிசர்வ் வங்கி, உத்தரபிரதேசத்தின் 2 கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.36,359 கோடி கடன் தள்ளுபடி செய்வது, ‘மோசமான பொருளாதாரம்என்கிறது. மோடி, வங்கிகளையும் வங்கிக் கடன்களையும் மறுகட்டமைப்பு செய்கிறார். தேசத்திற்கு நஷ்டம். கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளையோ கொள்ளை லாபம். இது போதாதென்று, ரிசர்வ் வங்கி, வங்கி துவங்க, ஆதித்யா பிர்லாவின் நோவோ, ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, வோடாபோன் எம் - பேசா, ஏர்டெல் உள்ளிட்ட 20 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
மோடி அரசுஉந்தித்தள்ளும் பிளாஸ்டிக் பணத்தால், நிதி தொழில் நுட்ப நிறுவனங்கள், மற்றும் நிதி மூலதனத்தின் காட்டில் மழை. நாடு முழுவதற்கும் பண்டங்கள் மற்றும் சேவை வரி ஒன்றே என்பது உள்ளிட்ட பாஜக  அரசின் பொருளாதார நடவடிக்கைகள் விலை உயர்வை, சொல்லொணாத் துயரங்களை மட்டுமே மக்களுக்கு அளிக்கும்.

பாஜகவுக்கு பலவீனங்களே இல்லையா?
நிச்சயமாய், பாஜகவுக்கு பெரிய பலவீனங்களே உண்டு. அவற்றைப் பாஜகவுக்கு எதிராக நிறுத்தும் திறமையை, வலுவை, அரசியல் சூழலை, எதிர்ப்பாளர்கள் உருவாக்க வேண்டும். வேலை வாய்ப்பு என்ற அடிப்படையான விசயத்தில், பாஜக முற்றிலுமாக தோற்றுப் போய்உள்ளது. 120 கோடி பேர் உள்ள நாட்டில் அனைவர்க்கும் வேலை என்பதெல்லாம் நடக்கிற காரியமா என அமித் ஷா அறிவு பூர்வமாய்க் கேட்கிறார். அய்டி+அய்டி=அய்டி என்ற மோடி மாய்மாலம், 3 வருடங்களில் 6 லட்சம் பேரின் அய்டி வேலைகள் போகும் என்ற யதார்த்தத்தால், அம்பலமாகி நொறுங்கிவிட்டது.
2014ல் மோடி, தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று கொன்னது எடுபட்டது. ஆனால் ஷத்திரியர்கள், அதாவது ராஜ்புத்/தாகுர் ஆட்சி நடப்பதாக இன்று 2017ல் வட இந்தியா பேசத் துவங்கிவிட்டது. உத்தரபிரதேசம், உத்தர்கண்ட், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் ராஜ்புத்கள். இந்திய இராணுவ தலைமை தளபதி ராஜ்புத். ரா அமைப்பை நடத்துபவர் ராஜ்புத். சந்திரகுப்த மவுரியனின் வாளும் சாணக்கியனின் உச்சிக் குடுமியும் சேர்ந்து, மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவின. பன்மைத்துவத்துக்கு எதிரான சங்பரிவாரின் போரால், இன்று அதிகரித்த அளவிலான மக்கள், பார்ப்பனீய, சத்திரிய பனியா மேல் சாதி ஆட்சி மீட்கப்பட்டுவிட்டது எனக் கருதுகிறார்கள்.
பாஜகவால் இந்திய விவசாய நெருக்கடியைத் தீர்க்க முடியவில்லை. பண்டங்கள் மற்றும் சேவை வரியால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மொத்தத்தில் பாஜக ஆட்சி இந்திய மக்களுக்கு நல்வாழ்வு தரவில்லை. மாறாக அவர்களை மேலும் மேலும் துன்பங்களுக்கு ஆளாக்கியுள்ளது.

எதிர்ப்புப் போராட்டங்கள்
உனா தலித் எழுச்சி, சுயமரியாதையும் நிலமும் கோரியது. சஹரன்பூரில் பீம் படை எழுச்சி, சந்திரசேகர் ஆசாத் ராவண் மூலம், கல்வி, சமத்துவம், அதிகாரம் என முழங்குகிறது. பரவும் பாசிசத்தை அதன் கொள்கைகளை மாற்றுக்களுடன், அம்பலப்படுத்தி சவால் விட்டு, எதிர்த்திடுவோம். மக்கள் ஏற்கத்தக்க விதத்தில், மதச்சார்பற்ற, ஜனநாயக, பகுத்தறிவு பூர்வமான பொது புத்தியை, வேர்க்கால் மட்டம் வரை கொண்டு செல்வோம். இப்போதே, இங்கேயே (ஹியர் & நவ்) என எங்கேயும் பாஜகவுக்கு எதிரான விளைவு தரத்தக்க தலையீடுகளை மேற்கொள்வோம். எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டமைப்போம். நமது கருத்துத் தளப் பணியும் களப்பணியும், பாஜகவை அதன் தோற்ற அளவில் மட்டுமல்லாமல் அதன் சாரத்திலும் எதிர்ப்பதாக அமைய வேண்டும்.

பாசிசம், எந்த நாட்டிலும், தேர்தல்கள் மூலம் மட்டும் வெற்றி பெற்று வந்ததும் இல்லை. தேர்தல்கள் மூலம் மட்டும் வீழ்ந்ததும் இல்லை. நெருக்கடி காலங்களில் மக்கள் ஆதரவு பெற்றுதான் வென்றுள்ளது. நெருக்கடியைத் தீர்க்க முடியாமல், நெருக்கடிக்குப் பலியாகித்தான் தோற்றுள்ளது. சங் பரிவாரின் கடைசி அத்தியாயத்தை மக்கள் போராட்டங்களால் எழுதுவோம்.

Search