COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 1, 2017

போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தில் வெளிப்பட்ட
நாம் எதிர் அவர்கள்

உலகெங்கும் வலதுசாரி சக்திகள் ஆட்சிகளைக் கைப்பற்றுகிறார்கள். உழைக்கும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி சமூக வாழ்வின் பல தளங்களிலும் பதட்டம் தணியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மிக அடிப்படையாக அவர்களுக்கு கைகொடுப்பது இல்லாத ஓர் எதிரியை இருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்வதுதான். அய்க்கிய அமெரிக்காவின் புஷ்ஷுக்கு அது பேரழிவு ஆயுதங்கள் என்றால் இந்தியாவின் மோடிக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், மாட்டிறைச்சி என்று பலவித வேறுபாடுகள். நாம் எதிர் அவர்கள் என்ற வலதுசாரி உத்தி, சமீப காலங்களில் அவர்களுக்கு வெற்றியும் செல்வாக்கும் தேடித் தந்துள்ளது.

வலதுசாரிகள் முன்னிறுத்தும் நாம் எதிர் அவர்கள் வேறுபாட்டில் உண்மையான நாம் எதிர் அவர்கள் மறைக்கப்பட்டுவிடுகிறது. நாம் இன்று வாழும் சமூகத்தில் உண்மையான நாம் எதிர் அவர்கள் என்றால் அது தொழிலாளர்கள் எதிர் முதலாளிகள்தான். இந்த உண்மையான முரண்பாட்டை பின்னுக்குத் தள்ளும் முயற்சி அவர்கள் சொல்லும் நாம் எதிர் அவர்கள் வேறுபாட்டில் இருக்கிறது.
இந்த உண்மையான நாம் எதிர் அவர்கள் முரண்பாடு போக்குவரத்துத் தொழிலாளர்களின் சமீபத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தெளிவாக, காத்திரமாக வெளிப்பட்டது.

அவர்கள் என்ன செய்தார்கள்?

முதலாளித்துவ சமூகத்தில் நீதிமன்றங்கள் பெரும்பான்மை மக்களுக்கானவை அல்ல என்று நமக்குத் தெரியும்.
தங்களுக்கு மிக நியாயமாகச் சேர வேண்டிய, அரசு தருவதாக ஒப்புக்கொண்ட, நீண்ட கால தாமதத்துக்குப் பிறகும் தராத பாக்கிகளை உடனடியாகத் தர வேண்டும் என்று கோரிதான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தங்களுக்கு இப்போது அரசு தருவதற்கு மேல் வேண்டும் என்று அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அரசு அவர்களை மோசடி செய்திருக்கிறது. குற்றமிழைத்திருக்கிறது. அரசு குற்றவாளி. அந்தக் குற்றவாளியை கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தி தண்டனை தர இன்றைய ஜனநாயகத்தில் வழியில்லை. அவர்களுக்கு அதற்கு அதிகாரம் இல்லை. எனவே போராடினார்கள்.
பொதுமக்களுக்கு பாதிப்பு என்று சொல்லி எஸ்மா பாயும் என்று எச்சரித்த உயர்நீதிமன்றம் இப்போது தானாக முன்வந்து, அவர்களுக்குச் சேர வேண்டியவை பற்றி அரசு அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இன்றைய அரசு அதை ஒழுங்காகத் தந்து விடுமா என்ற அய்யம் நமக்கு உள்ளது. தொழிலாளர்கள் மீது எஸ்மா பாயும் என்று சொன்ன உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள் பணத்தை அரசு கையில் வைத்துக்கொண்டதற்கு தண்டனை தர முடிவு செய்கிறது என ஓர் இனிய கற்பனை கூட செய்யலாம்.... அப்படி தண்டனை தந்தால் யாருக்குத் தரும்? கருணாநிதிக்கா? ஜெயலலிதாவுக்கா? போக்குவரத்து அமைச்சர்களுக்கா? அதிகாரிகளுக்கா? யாருக்கும் இல்லை என்பதுதான் எளிதான பதில்.
ஆனால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கியபோது அவர்களை குறை சொல்ல எங்கிருந்தெல்லாமோ புறப்பட்டு வந்தார்கள். தமிழ்நாட்டு விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று சொன்ன தமிழகத்தின் கொள்ளை கும்பல் ஆட்சியாளர்கள், தொழிலாளர்கள் போராடியபோது திடீரென சுறுசுறுப்பானார்கள். அமைச்சர்களை எல்லாம் அவரவர் மாவட்டங்களுக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டாராம்.
என்ன நிலைமை? என்ன கட்டு? ஓர் உதாரணம் பார்க்கலாம். மே 16 அன்று புரட்சிகர இளைஞர் கழக மாநிலச் செயலாளர் தோழர் ராஜேஷ் பணிக்குச் செல்ல பேருந்தில் ஏறினார். பேருந்தில் கடுமையான நெரிசல். பயணச்சீட்டு வாங்கினார். வழக்கமாக அந்தத் தடத்தில் செல்லும் அவர், ரூ.9க்கு பயணச் சீட்டு வாங்குவார். அன்றும் அவருக்கு ரூ.9 பயணச்சீட்டு தரப்பட்டது. அவர் ரூ.10 கொடுத்திருந்தார். நடத்துநர் ரூ.1 மீதம் தருவார் என எதிர்ப்பார்த்தார். அவர் தரவில்லை. இவர் கேட்டார். அவர் மறுத்தார். மீதம் தர முடியாது. இன்று இப்படித்தான் என்றார். தோழர் ராஜேஷ் பயணச்சீட்டு போக மீதி தொகையை, அது ரூ.1 என்றாலும் தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நடத்துநர் நியாயமாக அந்த ரூ.1அய் தருவது என்பதற்குப் பதிலாக, பேருந்தை நிறுத்தினார். போராட்டத்தை கட்டுக்குள்வைக்க காவல்துறையினர் எங்கும் இருந்தனர். அவர்களில் ஒருவரிடம் புகார் செய்தார். தோழர் ராஜேஷ் தன் பக்கம் உள்ள நியாயத்தை அந்த காவலரிடமும் பேசிப் பார்த்தார். அவரிடமும் அது எடுபடவில்லை. அத்துடன் முடியவில்லை. அந்தக் காவலர் தோழர் ராஜேஷைத் தாக்கினார். துரதிர்ஷ்டவசமாக, பொதுப்புத்தி அன்று தோழர் ராஜேஷ÷க்கு எதிராக இருந்தது. அவர்  பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
தோழர் ராஜேஷின் ரூ.1 அவரது கடின உழைப்பில் கிடைத்தது. யாருக்கும் அவரவர் உழைப்பின் பயன் மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டின் அமைச்சர்களும் அதிகாரிகளும் சேர்ப்பது போல் சேர்த்த பணம் அல்ல அது.
அன்று தோழர் ராஜேஷின் நோக்கம் அந்த ரூ.1அய் திரும்பப் பெறுவது என்பதை விட போராடும் தொழிலாளர்கள் மீது மக்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய வருத்தத்தை அதிகப்படுத்த எடுக்கப்படும் முயற்சியை அம்பலப்படுத்துவதும் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரவர் விருப்பத்துக்கு மக்களிடம் இருப்பதைப் பறிக்கும் முயற்சியை அம்பலப்படுத்துவதுமே.
அவர்களின்பிரதிநிதியாக செயல்பட்ட காவலரால் நமதுபிரதிநிதியாக செயல்பட்ட தோழர் ராஜேஷ் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புரட்சிகர இளைஞர் கழகமும் இகக மாலெயும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டன. மே 15 அன்றே திருபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது காவல்துறையினர் புகார் பதிவு செய்ய மறுத்தனர். அவருக்குப் பதிலாக வேறொரு காவலர், தான் மன்னிப்பு கேட்பதாகக் கூடச் சொன்னார். ஆனால், அத்துமீறி நடந்துகொண்ட காவலரை கண்ணில் காட்டக் கூட காவல்துறையினர் மறுக்கின்றனர். தோழர் ராஜேஷ் மீது மிகவும் காலதாமதமாக, பின் சிந்தனையுடன் பொய் வழக்கு போட காவல்துறையினர் முயற்சிப்பதாகத் தெரிய வருகிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முறியடிக்க, அவர்கள் போராட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் காட்ட மக்கள் விரோத தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்தது. தனியார் பேருந்துகள், அனுபவம் இல்லாத அல்லது ஓய்வு பெற்ற ஓட்டுநர்களால் இயக்கப்பட்டன. கார்ப்பரேட் ஆதரவு அரசுக்கு ஒரு நெருக்கடி என்றால் கார்ப்பரேட் உலகம் ஓடோடி வராதா? தானாடியதால் தசையும் ஆடியது.
இன்றைய தமிழ்நாட்டின் இளைஞர்கள் எவ்வளவு கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை அளக்க ஹ÷ண்டாய் நிறுவனத்தின் செயல்பாடுகளை அளவுகோலாகக் கொள்ளலாம். தனது தொழிலாளர்கள் வீடு விட்டால் ஆலை, ஆலை விட்டால் வீடு, இடையில் வேறு எதும் இல்லை என்று இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குகிற பேருந்துகளை மே 15 மற்றும் 16 தேதிகளில் அரசு பேருந்து தட எண்கள் பலகையை பொருத்திக் கொண்டு அரசுப் பணிசெய்தது. ஆனால், இதை அரசுப் பணி என்று எப்படிச் சொல்ல முடியும்? தமிழர்கள் பெயர் சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள், உண்மையில் ஹ÷ண்டாய் போன்ற நிறுவனங்களின் ஆட்சிதானே நடத்துகிறார்கள். ஹ÷ண்டாய் நிறுவனம், தனது ஆலை தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வேறு எந்தத் தொழிலாளி போராட்டத்தையும் சகித்துக் கொள்ளாது.

நாம் என்ன செய்தோம்?

தோழர் ராஜேஷ் எடுத்த முயற்சி நமது செயல்பாட்டு வகை.
மே 15 அன்றே தோழர் ராஜேஷ் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இகக மாலெ சென்னை மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் ராஜேஷைத் தாக்கிய காவலர் மீது புகார் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்தபோது, காவல்நிலையம் முன்பாகவே புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மே 15 அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கிய சில மணி நேரத்தில் ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள காஞ்சி காமகோடி மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வாயிலில், அவர்கள் போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள்என்னதான் முயற்சிகள் எடுத்த போதும் நாம்நடத்திய போராட்டம்தான் வெற்றி பெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ரூ.7,000 கோடி பாக்கியில் ரூ.250 கோடிக்கு மேல் எதுவும் தர முடியாது என்று சொன்ன அரசாங்கம் ரூ.1,250 கோடி தர முன்வந்தது. மீதமுள்ள பிரச்சனைகளை செப்டம்பருக்குள் பேசி முடிப்பதாகச் சொல்லியுள்ளது. போராட்டத்தின் முன்னாலே யார் ஆட்டமும் செல்லாது.

இறுதியாக, பிரிக்கால் நிர்வாகத்தின் கவனத்துக்கு: போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு நாட்ககளும் விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் அவர்கள் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு சரத்து. எட்டு நாட்கள் சம்பள வெட்டு என்று தமிழக அரசால் பொங்க முடியவில்லை.

Search