COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 1, 2017

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய
இகக மாலெ போராட்டங்கள் வெற்றி 

பழ.ஆசைத்தம்பி
ஜீவா புகழ்வேந்தன்

புதுக்கோட்டையில்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. ஒரு பகுதியில்  விளைநிலத்தின் மத்தியில் கூட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மூடப்பட்ட கடைகள் வேறு இடங்களில் திறக்கப்படக் கூடாது என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் வலுக்கின்றன.
பள்ளி செல்லும் சிறுவன் கூட, பள்ளிச் சீருடையுடன் புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டு, டாஸ்மாக் கடை வேண்டாம் என்ற வாசகம் தாங்கிய அட்டையை கையில் தூக்கிக் கொண்டு போராட்டத்தில் இறங்குவதை தமிழ்நாடு காண்கிறது. (ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது குழந்தைகளுக்கு சாராயம் புகட்டப்பட்டதையும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் மது அருந்தியதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்).
புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சியாக எழும் மக்கள் போராட்டங்களை காவல்துறை இருக்கிற எல்லா பலமும் கொண்டு ஒடுக்குகிறது. கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்துகிறது. திருப்பூரில் வெறி கொண்ட காவல் அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கன்னத்தில் அறைந்தது தமிழ்நாட்டையே அறைந்ததுபோல் இருந்தது. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய காவல்துறை, குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு வேறு ஒரு மாநிலத்தில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விசுவாசமாக செயல்படுகிறது. அவர் சிறையில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அவரது சாராய ஆலைகளுக்கான, சாராய வியாபாரத்துக்கான சந்தையைப் பாதுகாக்க ஆனதெல்லாம் செய்கிறது.
என்ன ஒடுக்குமுறை இருந்தபோதும், டாஸ்மாக் கடைகளால் ஏற்கனவே பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிற மக்கள் புதிய கடைகளை அனுமதிக்க, பலவிதங்களிலும் பறிபோகும் வாழ்வாதாரத்தை அரசே ஊற்றித் தரும் சாராயத்தாலும் பறிகொடுக்கத் தயாராக இல்லை. தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் விடாப்பிடியாகத் தொடர்கின்றன. வலுக்கின்றன. இகக மாலெயும் இந்தப் பிரச்சனையில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி வெற்றிகரமான போராட்டங்கள் நடத்தியுள்ளது.
மிகவும் பின்தங்கிய, வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இவற்றில் 91 கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்தக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் 7 கடைகள் மூடப்பட்டன. இந்த 7 கடைகளையும் வேறு இடங்களில் திறப்பதற்கு எதிராக இகக மாலெ தலைமையில் பொது மக்கள் திரண்டு வெற்றிகரமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
திருச்சி அஇஅஇதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் சொந்த ஊராட்சியான புனல்குளத்தில் உள்ளது தெற்குவாசல்பட்டி கிராமம். இங்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பகுதி மக்கள் இகக மாலெ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்ட இடத்துக்கு வந்த அதிகாரி கள் அந்தக் கடை மூடப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதனால் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், அனைத்து சமூகப் பிரிவினர் என 200 பேர் இகக மாலெ தலைமையில் மனுநீதி நாள் அன்று (25.04.2017) பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றனர். அனைவரிடமும் அந்தக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியருக்குத் தர மனு இருந்தது.
இத்தனை பேர் ஆட்சியரைப் பார்க்க முடியாது, பத்து பேர் மட்டும் ஆட்சியரைச் சந்திக்கலாம் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனு நீதி நாள் ஆட்சியரை நேரில் சந்திக்கத்தான் நடத்தப்படுகிறது, எனவே அவரவர் தனித்தனியே ஆட்சிரை சந்தித்தே ஆக வேண்டும் என அங்கு திரண்டிருந்த மக்கள் வலியுறுத்தினர். பின்னர் அனைவரும் ஆட்சியரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். 200 மனுக்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே மனுவாக தர வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் சொல்லப்பட்டது. இதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் இத்தனை பேர், இந்தப் பிரச்சனையில் மனு கொடுத்திருக்கிறோம் என்பது பதிவாக வேண்டும் என்று அவர்கள் சொன்ன பிறகு வேறு வழயின்றி 200 மனுக்களும் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. இந்தப் போராட்டத்துக்குப் பிறகு அந்தக் கடை இப்போது மூடப்பட்டுள்ளது.
வாண்டையான்பட்டி கிராமம் கந்தர்வக் கோட்டையில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்துக்கு இன்று வரை பேருந்து வசதி இல்லை. இந்த கிராமத்துக்குச் செல்லும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சவுக்கு தோப்புகள் உள்ளன. இந்த வழியாகத்தான் எல்லா தேவைகளுக்கும் மக்கள் மூன்று கி.மீ நடந்து செல்கின்றனர். இங்கு திறக்கவிருந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி இகக மாலெ தலைமையில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் சாதி வேற்றுமைகள் கடந்து அனைத்து பிரிவு மக்களும் கலந்துகொண்டனர். அஇஅதிமுககாரர்கள் சிலர் கூட கரை வேட்டிகளுடன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் பெற்ற பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், அந்தக் கடை மீண்டும் அதே இடத்தில் திறக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்தன.
அந்தக் கடை நஞ்சை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நஞ்சை நிலத்தில் கட்டிடம் கட்டப்படுமானால் அதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை அகற்றுவதற்குப் பதிலாக, வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தக் கட்டிடத்துக்கு வீட்டு வரி ரசீது தந்திருந்தார். சாலை மறியலில் கலந்துகொண்ட மக்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது, இரு சக்கர வாகனங்களுக்கு தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் கடை வைக்கப் போவதாக உரிமையாளர் சொன்னதால் அனுமதி தந்ததாக அவர் சொன்னார். அப்படி அனுமதி வாங்கப்பட்ட இடத்திற்கு வீட்டு வரி ரசீது எப்படி தரபட்டது, வாட்டர் சர்வீஸ் என்றால் சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டதா என்று பார்த்தீர்களா என்று அடுத்தடுத்த கேள்வி எழுந்ததும், அந்த அதிகாரி பின்வாங்கி, அந்த ரசீது ரத்து செய்யப்பட்டதாக எழுதித் தந்ததுடன், அந்த ரசீதுடன் வந்தால் மின்இணைப்பு தரக் கூடாது என்று சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு ஒரு கடிதமும் உடனடியாக அனுப்பினார். வட்டாட்சியரும் டாஸ்மாக் அதிகாரியும் அந்தக் கடை திறக்கப்பட மாட்டாது என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.
இவ்வளவுக்கும் பிறகு அந்தக் கடையில் சரக்கு இறக்கப்பட்டது. இதனால் 15.05.2017 அன்று ரேசன் அட்டைகள், ஆதார் அட்டைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் அவற்றை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து பெண்கள் வீடு திரும்ப அந்தக் கடை பக்கமாக வந்தபோது, அந்தக் கடைக்கு அருகிலேயே சாராய விற்பனை செய்து கொண்டிருந்த சிலர் பெண்களை கேலி செய்துள்ளனர்.  பெண்கள் இதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்திலேயே சாலை மறியல் நடத்தினர். போராட்டம் நீடித்ததால் வேறு வழியின்றி வட்டாட்சியர் அந்தக் கடைக்கு பூட்டு போட்டார். பெண்களை தரக் குறைவாக பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அதற்கான  நடவடிக்கைகள் எடுக்க வட்டாட்சியர் உறுதியளித்தார்.
அரவம்பட்டி, மெய்குடிபட்டிதீத்தானிபட்டி, ஆதனகோட்டைஆகிய பகுதிகளிலும் டாஸ்மாக் கடை திறக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தி இகக மாலெ தலைமையில் நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டங்களுக்குப் பிறகு அந்தக் கடைகள் திறக்கப்படவில்லை.
தீத்தானிபட்டியில் திறக்கப்பட்ட கடையை மூட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த எல்லா போராட்டங்களிலும் எல்லா சமூகத்தினரும் கலந்துகொண்டனர். ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் என நூற்றுக்கணக்கில் பகுதி மக்கள் அணிதிரண்டனர். மெய்குடிபட்டியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் தங்கள் மனுவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்:
நாங்கள் உழைப்பில், உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் அல்ல. திருடுவது எங்கள் தொழிலாக இருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்ச மாக உழைத்து, உற்பத்தியில் ஈடுபடுகிறோம். கல்வி கற்கிறோம். நாங்கள் கவுரவமாக வாழ்க்கையை நடத்துகிறோம். இந்த நிலையில் இந்த சாராயக் கடை திறக்கப்பட்டால் எங்கள் வாழ்வு சீரழிந்து பழைய நிலைக்கே மீண்டும் தள்ளப்பட்டுவிடும். எனவே இந்த சாராயக் கடைகள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.
வாண்டையான்பட்டியில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு, கடை மூடப்படும் என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்த டாஸ்மாக் அதிகாரி, எப்படியாவது கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு உள்ளது, டாஸ்மாக் கடைகளை திறக்க விடாதீர்கள் என்று உங்கள் மாநிலத் தலைமை உங்களுக்குச் சொல்லியிருக்கிறதா, மாநிலம் முழுவதும் உங்கள் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள், கடைகளை மூட வைக்கிறார்கள் என்றார்.
இகக, இககமா கட்சியினர் இந்த வெற்றிகரமான போராட்டங்களை முன்னெடுக்கும் இகக மாலெவை பாராட்டினர்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பரந்துபட்ட மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு இருப்பது இந்தப் போராட்டங்களின்போது தெரிய வந்தது. எனவே, தமிழக மக்கள் எதிர்க்கிற மதுக்கடைகள் வேண்டாம், பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும், சாராய ஆலைகள் மூடப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 23.05.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் பிரச்சனைகள் மீது தொடர் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிற புதுக் கோட்டை மாவட்ட இகக மாலெ தோழர் கள், அடுத்த கட்ட வேலைகள் நோக்கி நகரும் முன், மே 25, நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்தினர்.

சென்னையில்

2016ல் வரதராஜபுரத்தில் மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை, இகக மாலெ தலைமை யில், பகுதி மக்கள் நடத்திய விடாப்பிடியான பல கட்ட போராட்டங்கள் மூலம் மூடப்பட்டது. இப்போது, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் பின்னணியில், டி.ஜி.அண்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்ட கடை மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்ரல் மாத இறுதியில் இகக மாலெ தலைமையில் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்தியும், அந்தப் போராட்டங்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் தந்த உத்தரவாதத்தை மீறியும் கடை திறக்கப்பட்டது.
உடனடியாக அந்தக் கடை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மாநகர கமிட்டி உறுப்பினர் தோழர் வீரப்பன் மற்றும் தோழர் ஜீவா புகழ்வேந்தன் ஆகியோர் மே 15 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தத் துவங்கினர்.
இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்ததே நிர்வாகத்துக்கு நெருக்கடி தந்த நிலையில் வட்டாட்சியர் நேரில் வந்து பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் கடை மூடப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் முற்றுகை போராட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டதால், கடை மூடப்பட்டால் மட்டுமே பட்டினிப் போராட்டம் முடித்துக் கொள்ளப்படும் என்று பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
போராட்டத்துக்கு மக்கள் ஆதரவும் பெருகி வந்ததால் வேறு வழியின்றி வட்டாட்சியர் டாஸ்மாக் கடையை பூட்டி சீல் வைத்தார்; அதன் பிறகு பட்டினிப் போராட்டம் நடக்கும் இடத்துக்கு மீண்டும் வந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தோழர்கள் வீரப்பன், ஜீவா புகழ்வேந்தன் இருவருக்கும் பழச்சாறு தந்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இப்போது கடை உரிமையாளர் மற்றும் காவல்துறை சார்பாக பகுதியின் இகக மாலெ தோழர்களுக்கு, இது போன்ற போராட்டங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அநாமதேய மிரட்டல்கள் வருகின்றன.
ஆனால் எந்தப் பிரச்சனையானாலும் இகக மாலெதான் விடாப்பிடியாக மக்கள் பக்கம் நின்று போராடும் கட்சி என்று பகுதி மக்கள் கருதுகின்றனர். அதை இந்தப் போராட்டங்களில் பேசும்போதும் பகுதிகளில் மக்கள் மத்தியில் பேசும்போதும் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடுகிற அமைச்சர்களும் அதிகாரிகளும் சாராயக் கடைகள் மூடப்பட்டதால் வேலையிழக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளவர்கள் போல் பேசுகிறார்கள். தமிழக அரசில் காலிப் பணியிடங்களுக்குப் பஞ்சமில்லை. அந்தப் பணியிடங்களை நிரப்பி அவர்களுக்கு வேலை தந்து தமிழக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அத்தியாவசியமான பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். ஆக சாராயக் கடைகள் ஒழிக்கப்படுவதால் மக்கள் மதுவின் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன் மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சேவைகளை நிறை வேற்றும் ஊழியர்கள் கிடைப்பார்கள். அந்த ஊழியர்களுக்கும் கவுரவமான வேலை ஒன்று தந்ததாக இருக்கும்.
ஆட்சியாளர்களின் பொறுப்பான நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் காத்திருக்கும் போது, அமைச்சர்களும் உயரதிகாரிகளும் இருக்கிற காலத்தில் செல்வம் சேர்ப்பதில் கவனம் குவித்துள்ளனர். சாராய ஆலைகளை, சாராய விற்பனையை பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் எலும்புத் துண்டுகளைக் கவ்விக் கொள்ள போட்டி போடுகின்றனர். மத்தியில் உள்ள கொலைகார மோடி ஆட்சி தமிழ்நாட்டில் வந்தால் விவசாயப் பிரச்சனை தீரும் என்று சொல்லி வெளிப்படையாக ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தவும் தமிழ்நாட்டில் நிலவும் சூழல் பாசிச சக்திகளுக்கு வாய்ப்பு தந்துள்ளது.
ஆட்சியாளர்களின் அப்பட்டமான ஆதரவு, காவல்துறை ஒடுக்குமுறை ஆகியவற்றையும் எதிர்கொண்டு அரசு சாராயக் கடைகளுக்குப் பூட்டுப் போட அதிகாரிகளை நிர்ப்பந்திக்கும் மக்கள் போராட்டங்கள், தமிழக அமைச்சர்களின், அதிகாரிகளின் சொத்து சேர்க்கும் கனவுகளுக்குப் பூட்டுப் போடும் வரை தொடர வேண்டும். பாசிச சக்திகளின் அதிகாரக் கனவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பரவ வேண்டும்.

சில புத்திசாலி அதிகாரிகளின் கேள்விகளும் நமது பதில்களும்

கேள்வி: டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று சொல்கிறீர்களே, மக்கள் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தால் என்ன செய்வது?
பதில்: உங்கள் கேள்வி சரிதான். அரசு அதிகாரிகளாகிய நாம் மக்கள் வரிப்பணத்தில்தான் ஊதியம் பெறுகிறோம். நாம் இருக்கும் போது வேறு யாரோ ஒரு கள்ளச் சாராய வியாபாரியின் சாராயத்தால் மக்கள் கொல்லப்படுவது என்ன நியாயம்? நமது அரசு தரும் சாராயம் கொண்டு, நாம்தான் மக்களைக் கொல்ல வேண்டும்.
கேள்வி: உங்கள் கட்சிக்காரர்கள் மட்டும்தான் டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்கி றீர்கள். எல்லா பகுதிகளிலும் இந்தக் கடைகள் வேண்டாம் என்று எதிர்ப்பு இல்லையே?

பதில்: அரசியல் சாசன சரத்து 21ன்படி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்/மகளுக்கும் கண்ணியமாக வாழ உரிமையுண்டு. சாராயக் கடைகளால் எனது கண்ணியமான வாழ்க்கைக்கு ஆபத்து என்று ஒரு குடிமகன்/மகள் சொன்னால் கூட அது மூடப்படத்தான் வேண்டும். அனைவரும் சொல்ல வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை.

Search