தமிழக இளைஞர்கள்
நிரந்தரமாக நிரந்தரமற்ற தொழிலாளர்களா?
நீதி கேட்டு
புரட்சிகர இளைஞர் கழகம் சிறை நிரப்பும் போராட்டம்
தமிழகத்தின்
இளைஞர்கள் பன்னாட்டு, இந்நாட்டு தொழில்
நிறுவனங்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக, பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளில் கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்படும்
நிலைமைகளில் ஓரளவு மாற்றம் கொண்டு வரக்கூடிய நிலையாணைகள் திருத்தச் சட்டம்
அமலாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, பகத் சிங் தூக்கில் ஏற்றப்பட்ட நாளில்
திருபெரும்புதூரில், புரட்சிகர இளைஞர்
கழகம் பேரணி, பொதுக் கூட்டம்
நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மே 31 அன்று தொழிலாளர் அலுவலகக் கதவுகள் தட்டப்படும்
என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மே 31 அன்று புரட்சிகர இளைஞர் கழகம் சென்னையில் சிறை
நிரப்பும் போராட்டம் நடத்தியது.
நீதிமன்றக் காவல்
என்றாலும் செய்யட்டும் என்று தயாராக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த இளைஞர்கள், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர்
பாரதி தலைமையில், தேனாம்பேட்டை
தொழிலாளர் அலுவலகத்துக்குச் சென்றார்கள். அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் அவர்களை
காவல்துறை தடுத்தது. தடுப்பரண்களை தாண்டிக் கடந்த தோழர்கள் அலுவலகத்துக்குள் நுழைய
முயன்றபோது, காவல்துறையினர்
நடத்திய தடியடியில் புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல்,
மாநிலச் செயலாளர் தோழர்
ராஜசங்கர், சென்னை மாவட்ட
அமைப்பாளர் தோழர் கண்ணன், கோவை மாவட்ட
அமைப்பாளர் தோழர் பெரோஸ் பாபு ஆகியோர் தாக்கப்பட்டனர். ஆயினும் அலுவலகத்துக்குள்
செல்ல தோழர்கள் முயற்சி செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு, தி.நகரில் திருமண மண்டபத்துக்கு எடுத்துச்
செல்லப்பட்டனர்.
அங்கு சென்றவுடன்,
அவர்கள் அமைச்சரை
சந்தித்து, தங்கள்
கோரிக்கைகளை முன்வைக்க முடியாமல் போனால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் மறியல் செய்வார்கள் என இளைஞர்கள்
காவல்துறையினரிடம் உறுதியாகச் சொன்னதால், காவல்துறையினர் தொழிலாளர் அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.
தோழர்கள் பாரதி,
தனவேல், பெரோஸ் பாபு, அதியமான், திருமேனிநாதன் ஆகியோர் கொண்ட குழு காவல்துறை
வாகனத்தில் அமைச்சர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டது. அவர்களுடன் ஜனநாயக
வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர்கள் சுரேஷ், சங்கர் ஆகியோரும் அமைச்சருடன் நடந்த
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். மார்ச் 22 அன்று அமைச்சருக்கு அளித்த கடிதத்தில் இருந்த
கோரிக்கைகளை தோழர்கள் விளக்கிச் சொன்னபோது, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை ஆண்,
பெண் சம ஊதியம்
தொடர்பானதா என்று அமைச்சர் கேட்டார். அதுமட்டும் அல்ல, நிரந்தர மற்றும் நிரந்தமற்ற தொழிலாளர்களுக்கு
சம வேலைக்கு சம ஊதியம் என்று அவருக்கு விளக்கப்பட்டது.
மற்ற கோரிக்கைகள்
பற்றியும் கேட்டறிந்த அமைச்சர், அவற்றின் மீது
அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு
காவல்துறை, அந்தக் குழுவை
மீண்டும் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது. கைது செய்யப்பட்ட அனைவரும்
அன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் தமிழக
இளைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை செல்லத் தயாராக இருந்தாலும் அவர்களை கைது
செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு தயாராக இல்லை. இந்தப் போராட்டத்துக்குப்
பிறகும் தமிழக இளைஞர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டால், தீவிரமான போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள
புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் முடிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட
தோழர்கள் மத்தியில் இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர்
எ.எஸ்.குமார் உரையாற்றினர்.