நக்சல்பாரி
தோற்றுவிட்டதா?
இடதுசாரி
இயக்கத்திற்கு எதிர்காலம் கிடையாதா?
எஸ்.குமாரசாமி
நக்சல்பாரி
இயக்கம் தோன்றியதன் 50ஆவது ஆண்டை (1967
- 2017), சோவியத் புரட்சியின்
நூறாவது ஆண்டை (1917 - 2017), இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -
லெனினிஸ்ட்) அனுசரித்துக் கொண்டிருக்கும் போது, நக்சல்பாரி தோற்றுப்போன இயக்கம், இடதுசாரிகளின் காலம் முடிந்துவிட்டது என்ற
குரல்களும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.
நக்சல்பாரி
இயக்கத்தின் தோல்வியைக் கொண்டாடுபவர்கள், தோழர் சாருமஜ÷ம் தாரை, ஆர்எஸ்எஸ்சின்
குருமார்களில் ஒருவரான ஹெக்டேவரோடு ஒப்பிடவும் தயங்கவில்லை. நக்சல்பாரி
இயக்கத்தின் மீது மரியாதை கொண்டுள்ளவர்கள் (அவர்கள் மாவோயிஸ்டு களானாலும், தேர்தலில் போட்டியிடுபவர்களானாலும்), வன்முறையில் பெரும் நம்பிக்கையும் ஈடுபாடும்
கொண்டவர்கள்; வெறுப்பு
அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் என, முத்திரை
குத்தப்படுகிறது.
இகக, இகக(மா) கட்சிகளை விமர்சிப்பதோ, பாஜக காங்கிரஸ் மற்றும் மற்ற தேசிய பிராந்தியக்
கட்சிகளின் கொள்கை மற்றும் பொதுப்புத்தி தொடர்பான கருத்தொற்றுமையை எடுத்துச்
சொல்வதோ, தேவையற்ற
நடவடிக்கைகள்; அவை, இடதுசாரி ஜனநாயகக் குரல்கள் பலவீனமடையவும்,
வலதுசாரி அரசியல்
பலப்படவும் உதவும் என உபதேசிக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க அரசியல் சுதந்திரம்,
இடதுசாரி அறுதியிடல்
என்பவை எல்லாம், தூய்மைவாதம்,
மேட்டிமைவாதம் எனச்
சொல்லப்படுகிறது. இடதுசாரிகளின் தலையாய பணி, முதலாளித்துவ தாராளவாதக் கட்சிகளை
ஒருங்கிணைப்பது என்றும், மோடியின்
இந்துத்துவா அரசியலின் ஆபத்தான எழுச்சியின் முன்பு எல்லா வேறுபாடுகளையும் மறந்து
மோடியை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க இடதுசாரிகள் ஒரே கட்சியாக
வேண்டும் என்றும் கூட ஆலோசனை வழங்கப்படுகிறது.
இடதுசாரிகளும்
இந்துத்துவர்களும் 1920களில் தமது
பயணத்தைத் துவங்கினர், இடது சாரிகள்
பிரிந்து சிதறி செல்வாக்கிழந்துள்ளனர்; சங்பரிவார் விடாப்பிடியாகவும் நீக்குப்போக்காகவும் நடந்து கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு பாசிசத்தை
நீடித்து நிலைபெறச் செய்ய முயற்சிக்கிறது என்றும் வேறொரு தளத்தில்
சொல்லப்படுகிறது. வலதுசாரி அரசியல், வெறுப்பை மய்யமாகக் கொண்ட ஜனரஞ்சக அரசியல், அய்ரோப்பாவிலும், டிரம்ப் மூலம் அய்க்கிய அமெரிக்காவிலும் வெற்றி
பெற்றுள்ளன; அப்படி இருக்க
எங்கே இடதுசாரி அரசியலுக்கான வாய்ப்புக்கள் என எகத்தாளமாய்க் கேட்கப்படுகிறது.
நக்சல்பாரி
என்பதை ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டம்
மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்று மட்டுமே சுருக்கிப் பார்த்தால், ஆயுதப் போராட்டம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற
முடியவில்லை, அதனால்
நக்சல்பாரி தோற்றுவிட்டது என வாதாட முடியும். ஆனால், இப்படிச் சுருக்கிப் பார்க்க முடியுமா? அத்தகைய பார்வை வரலாற்றுக்கும் உண்மைக்கும்
நியாயமானதா? நேர்மையானதா?
நக்சல்பாரி உழவர்
புரட்சி, உழைக்கும் மக்கள்
அதிகாரத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய எழுச்சி. இந்திய இடதுசாரி இயக்கம் முதலாளித்துவ
நாடாளுமன்ற அரசியலால் முடக்கி வைக்கப்பட்டிருந்ததற்கு எதிராகப் போராடி, விடுதலையை நோக்கி அதிகாரத்தை நோக்கி, அவர்களது போராட்டங்கள் மூலம் செல்ல முடியும்
என்ற நம்பிக்கையை இந்திய மக்களிடம் விதைத்த, சுதந்திர இடதுசாரி அரசியலின் எழுச்சியே,
நக்சல்பாரி ஆகும். அந்த
வகையில், நக்சல்பாரி,
வர்க்கப் போராட்டத்தைக்
குறிப்பதாகும். அந்த வகையில், நக்சல்பாரி,
உழைக்கும் மக்களின்
அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணத்தின் ஒரு வரலாற்று மைல் கல்லாகும். அந்த வகையில்
நக்சல்பாரி அழிவற்று வாழ்கிறது. அந்த வகையில், 1857 முதல் சுதந்திரப் போர், கப்பற்படை எழுச்சி, தஞ்சை, புன்னபுர வயலார், தெபாகா, தெலுங்கானா எழுச்சிகளின் தொடர்ச்சியே
நக்சல்பாரி. ஏகாதிபத்திய -நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ பிணச்சுமையை
தூக்கியெறியும் கடமையை, இந்திய அரசியல்
நிகழ்ச்சிநிரலில் வலுவாக இடம் பெற வைத்ததே, நக்சல்பாரி. மரணப் பள்ளத்தாக்கில் வாழ்வின்
இசையை ஒலித்த, வசந்தத்தின் இடி
முழக்கமே நக்சல்பாரி.
நக்சல்பாரி
இயக்கத்தினர், தேசபக்தர்கள்.
அவர்கள் மக்களை நேசித்தவர்கள். அவர்கள் வாழ்வை நேசித்தவர்கள். அவர்கள் வாழ்வை
ரசித்து ருசித்து நேசிக்கும் நிலை மக்களுக்கு வர வேண்டும் என விரும்புபவர்கள்.
அதற்காக அர்ப்பணிப்புடன் தியாகம் செய்தவர்கள். படிப்பை, வருமானத்தை, வேலையைத் துறந்தவர்கள். சிறைவாசத்தை, சித்திரவதையை, மோதல்/காவல் படுகொலைகளைச் சந்தித்தவர்கள்.
மக்கள் நலனை முதன்மைப்படுத்தியவர்கள். அவர்கள் மக்கள் எதிரிகள் மீது சீற்றம்
கொண்டிருந்தனர்.
இன்றும்
உலகெங்கும், மக்களை
நேசிக்கும் மக்கள் இயக்கத்தினர், மக்கள் விரோதிகள்
மீது சீற்றம் கொள்ளாமல் இருக்க முடியுமா? ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா? நமது அன்பிற்குரிய நாடும் அதன் வளங்களும், சூறையாடப்படும்போது, கொள்ளையர்கள் மீது கோபம் கொள்ளாமல் இருக்க
முடியுமா? அப்படிச் செய்வது,
வெறுப்பரசியலா? பாரதியோ பாரதிதாசனோ, ‘நக்சல்பாரிகள்’ அல்ல. தாராளவாத மொழியின் வேறு வார்த்தைகளில்
சொல்வதென்றால், இடதுசாரி
தீவிரவாதிகள் அல்ல. கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என பாரதிதாசன் அறைகூவி அழைத்ததையும், இழி செயல் புரிந்தோர் முகத்தில் உமிழுமாறும்
மோதி மிதிக்குமாறும் பிள்ளைப் பிராயத்தில் இருந்தே சொல்லித்தர பாரதி சொன்னதும்,
வெறுப்பரசியலா?
முதலாளித்துவ
உலகில், உழைக்கும் மக்கள்
அதிகாரத்தைக் கைப்பற்ற எடுத்த முதல் முயற் சியான பாரிஸ் கம்யூன் 1871ல் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு
தோற்கடிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி 1905ல் தோற்றது. அது 1917ன் இரண்டாவது
கட்டத்தில்தான் சோசலிசப் புரட்சியாக வென்றது, பாரிஸ் கம்யூன் தோல்வியும், 1905 புரட்சியின் தோல்வியும், வெற்றிகரமான நவம்பர் 1917 சோவியத் புரட்சிக்கான ஒத்திகைகளே.
நக்சல்பாரியும், நாளைய
வெற்றிகரமான இந்தியப் புரட்சிக்கு ஒத்திகையே!
நக்சல்பாரிகளின்
வழிவந்த அனைவரும், அந்த இயக்கத்தின்
மீது மரியாதை உள்ள அனைவரும் வன்முறையாளர்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த வாதம்
உண்மைக் குற்றவாளிகளைத் தப்பவிடுகிறது. ஏகாதிபத்திய நாடுகள், இராணுவ தளவாடங்களை விற்கும் சாவு வியாபாரிகள்.
அவர்களுக்குப் போர் என்ற கட்டற்ற வன்முறை வேண்டும். ஆனால் நக்சல்பாரி இயக்கம் மீது
நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்ட்கள், புதியதோர் உலகம்
செய்வோம் கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம் என்ற பாரதிதாசனின் பிரகடனத்தில்
நம்பிக்கை உள்ளவர்கள். எல்லாப் போர்களுக்கும் முடிவுகட்டும் வர்க்கப் போரில்,
சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பகைமை, கட்டமைக்கப்பட்ட வன்முறை ஆகியவை இல்லாத,
மானுட சாரம் மீட்கப்பட்ட,
ஓர் உலகுக்கான கருத்தில்,
நம்பிக்கையுடன் களம்
இறங்குபவர்கள். செல்வமும் தானியங்களும் குவிந்திருக்க, வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி
வதைப்பதுதான், மிகப் பெரிய
வன்முறை. இந்த வன்முறை, அரச வன்முறையாக,
தேர்தல் மூலம் வந்த,
தேர்தல் மூலம் வராத
அரசுகளால் ஏவப்படுகிறது. சுரண்டலை நிலைநாட்ட வன்முறை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.
நக்சல்பாரியைப்
போற்றும் கம்யூனிஸ்ட்கள், பகைவனுக்கு
அருள்வாய் நன்நெஞ்சே என்ற கவித்துவ ஈர மனம் கொண்டவர்கள்; ஒரு சொட்டு மானுட இரத்தமும் அநாவசியமாக இந்தப்
பூமியில் சிந்துவதை விரும்பாதவர்கள். வன்முறைக்கு எதிரான அரசியல் போராளிகள்.
பொதுவில் வன்முறை தவிர்ப்பதும், மக்கள்
மத்தியிலான பிரச்சனைகளில் எப் போதும் வன்முறை தவிர்ப்பதும், ஓர் அரசியல் கோட்பாடு என்ற விதத்தில் வன்முறையை
நிராகரிப்பதும், வேறு வேறாகும்.
ஆனால், மக்களுக்கு எதிராக,
ஆளும் வர்க்கங்களும்
ஆட்சியாளர்களும் கொலை வாளை வீசும்போது, மக்கள் எப்போதும் நிராயுதபாணியாக இருக்க வேண்டும் என்று உபதேசிப்பது, யார் பக்கம் நிற்பதாக ஆகும்? மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள், மக்களை நிராயுதபாணியான பலி ஆடுகளாக்கச்
சம்மதிக்க முடியாது.
வன்முறை தொடர்பாக,
1919லும் 2017லும் இந்தியாவில் நடந்த இரு சம்பவங்களை
பார்த்தா சாட்டர்ஜி கவனப்படுத்துகிறார்: ஒன்று வெள்ளைக்காரர் ஆட்சியில் நடந்தது.
மற்றொன்று சுதந்திர இந்தியாவில் நடந்தது.
1919ல்
பிரிட்டிஷாரின் இராணுவத்தை பஞ்சாபில் மக்களுக்கெதிராக ஜெனரல் டயர் ஏவினார். ஒரு
முறை, அவர், ஒரு பிரிட்டிஷ் பெண்மணி தாக்கப்பட்ட தெரு
புனிதமானது எனச் சொல்லி, அங்கே வாழும்
இந்தியர் அனைவரும், அந்தத் தெருவில்
வயிறு தரையில் பட ஊர்ந்து செல்ல வேண்டும், அப்போது அவர்களை பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் உதைக்க வேண்டும், துப்பாக்கி முனையால் குத்த வேண்டும் என
உத்தரவிட்டார். ‘கூட்டத்தை
வெறுமனே கலைப்பது மட்டும் போதுமான தல்ல. நான் அவர்களைச் சிறிது நேரம் கலைக்கலாம்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்ப வருவார்கள். என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
அவ்வாறு அவர்களை சிறிது நேரம் மட்டுமே கலைப்பது, என்னை நானே முட்டாளாக்கிக் கொள்வதாகும் என்று
நான் கருதுகிறேன். அங்கு அரசின் முழு அதிகாரத்தை நிலை நிறுத்துவது மட்டுமே
தேவைப்பட்டது’ என்றார் ஜெனரல்
டயர்.
ஏப்ரல் 1919ல், பைசாகி திருவிழாவை ஒட்டி, ஜாலியன்
வாலாபாக்கில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது 10 ரவுண்ட்களில் 650 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்த ஜெனரல் டயர்
உத்தரவிட்டார். அன்றைய அரசு, 379 பேர் இறந்தார்கள்
என்றது. ஆனால் சில ஆயிரம் பேர் இறந்திருக்க வேண்டும். இது பற்றி ஜெனரல் டயர்
சொன்னார்: ‘மிகவும் கசப்பான
கொடூரமான இந்தக் கடமையை நிறைவேற்றுவதா? ஒழுங்கீனத்தை அடக்குவதா? அல்லது
எதிர்காலத்தில் சிந்தப் போகும் எல்லா இரத்தப் பெருக்குக்கும் பொறுப்பேற்கும் என் கடமையை
நிராகரிப்பதா? இதுவே என் முன்
இருந்த விருப்பத் தேர்வு. அது வெறுமனே கூட்டத்தைக் கலைக்கும் பிரச்சனையாக மட்டும்
இல்லை. இராணுவத்தின் கண்ணோட்டத்தில் அங்கே இருந்தவர்கள் மீது மட்டுமல்ல, மிகவும் குறிப்பாக பஞ்சாப் முழுவதும் தேவையான
அளவுக்கு மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. மட்டுமீறிய கொடூரத்தை
நிகழ்த்துகிறோமே என்ற எந்தவிதமான கேள்விக்கும் இடமில்லை’ ஜெனரல் டயர், பிரிட்டனின் தேசிய கதாநாயகனாகக்
கொண்டாடப்பட்டதும், அவருக்கு,
அப்போதே 26,000 பவுண்டுகள் திரட்டித் தரப்பட்டதும் வரலாறு.
இப்போது சுதந்திர
இந்தியாவில், காஷ்மீரத்தின்
இந்தியக் குடிமகன் எனச் சொல்லப்படு கிற ஒருவரை, மேஜர் கோகாய் ஜீப்பில் கட்டி மனிதக் கவசமாய்
நிறுத்தி ஊர் ஊராய் இழுத்துச் சென்றார். அவரைப் பாராட்டிய இந்திய இராணுவ தலைமைத்
தளபதி ராவத், ‘எனது படைவீரர்கள்
என்ன செய்வது என்று என்னைக் கேட்கும்போது, கொஞ்சம் பொறுத்திருங்கள், செத்துப்
போய்விடுங்கள் என்று நான் சொல்ல வேண்டுமா? ஓர் அழகான சவப் பெட்டியை தேசியக் கொடியுடன் கொண்டு வந்து மரியாதையுடன் அனுப்பி
வைப்பேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டுமா?’ எனக் கேட்கிறார். காஷ்மீர் மக்களை எதிரிக ளாக
நிறுத்தி, அவர்களுக்கெதிரான
போரில், உச்சி முதல்
உள்ளங்கால் வரை வன்முறை வெறி தெறிக்க, ஒரு வாக்கியத்தைச் சொல்லத் துவங்கி அதை முடிக்காமலேயே விட்டார்: ‘உண்மையில் இந்த மக்கள், எங்கள் மீது துப்பாக்கிக் குண்டுகளையோ
எறிகுண்டுகளையோ பயன்படுத்தி இருக்க வேண்டும் என, நான் விரும்பினேன். அப்படிச் செய்திருந்தால்
நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதன்பிறகு நான் என்ன செய்ய வேண்டுமோ........?’
என்றார். அதாவது மக்களைப்
போட்டுத் தள்ளியி ருப்போம் என்றார். அரசுக்கெதிராகப் போராடும் மக்களைப் போட்டுத்
தள்ளுவது, கொடூர மான
வன்முறையை ஏவுவதே அரசு தர்மம் என, ஜெனரல் டயரும்,
சுதந்திர இந்தியாவின்
தலைமை இராணுவத் தளபதி ராவத்தும் சொல்கிறார்கள். ராவத், இனி, இந்திய இராணுவத்தில் பெண்கள் படை வீரர்களாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனச்
சொல்லும்போதே, பெண்
கிளர்ச்சியாளர்களை கையாள பெண் இராணுவ வீரர்கள் வேண்டும் என்கிறார். நாடு முழுவதும்
கிளர்ச்சிகள் நடக்கும், அவற்றில் பெண்கள்
பங்கேற்பார்கள், பகை
நாடுகளிடமிருந்து எல்லையை காக்கும் என்று சொல்லப்படும் ராணுவம், உள்நாட்டு போராட்டக்காரர்கள் மீது ஏவப்படும் என
ராவத் சொல்லாமல் சொல்கிறார்.
ஆக மக்கள் மீது
அன்றும் இன்றும் வன்முறை தொடர்கிறது. இன்னும் தொடரும். அதைக் கேள்வி கேட்காதீர்கள்,
அரசியல் கோட்பாட்டளவில்
வன்முறையை நிராகரிக்கும், மக்களை
நிராயுதபாணிகளாக நிர்க்கதியாக நிறுத்தும் ‘கம்யூனிஸ்ட் கனவான்கள்’ வேண்டும் என,
தாராளவாத அறிவாளிகள்
கோருகிறார்கள். நாம் அவர்களிடம், அவரவர் வேலையை அவரவர்
பார்ப்போம் எனச் சொல்வோம்.
இகக மற்றும் இகக
(மா)வை, எம்எல்
இயக்கத்தினர் விமர்சிப்பது இடதுசாரி ஜன நாயகக் குரலை பலவீனப்படுத்தும், வலதுசாரி அரசியலைப் பலப்படுத்தும் என்ற வாதம்
ஏற்கத் தக்கதல்ல. சிங்கூர் நந்திகிராமை, எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? நவதாராள வாத நிகழ்ச்சி நிரலை மற்ற மாநில
அரசுகளைக் காட்டிலும், முனைப்புடன்
அமல்படுத்திய மேற்குவங்க இடது முன்னணி அரசை, எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்?
எம்எல் கட்சியின்
விமர்சனத்தால், திரிணாமூல்
வெற்றி பெறவில்லை. இடது முன்னணி செய்த தவறுகளாலும் செய்யத் தவறியவற்றாலும்தான்,
திரிணாமூல் வென்றது. அதே
போல், தேசிய பிராந்தியக்
கட்சிகள் எல்லாம், மக்கள் விரோத
உலகமயக் கொள்கைகளில், வன்மையான அரசு,
கடுமையான சட்டங்கள்,
மென்மையான இந்துத்துவா
என்பவற்றில் கருத்தொற்றுமை கொண்டிருப்பதை, எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? இடதுசாரிகள் சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்ள
வேண்டும். சொந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மற்ற மக்கள்
போராட்டங்களோடு உறவாடி ஆதரிக்க வேண்டும். இந்தக் கடமை களை முதன்மைப்படுத்தி,
பாஜகவை எதிர்க் கும்
மற்றவர்களோடும் பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்றுபடலாம். பாஜக எதிர்ப்பு, அனைத்துக் கட்சி பரந்த எதிர்ப்பு என்று சொல்லி,
சுதந்திர இடதுசாரி
அரசியல் செயல்பாட்டை முடக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வால்பிடித்து ஓடக்கூடாது.
இடதுசாரி
அரசியலுக்கு எதிர்காலம் இல்லை என்று திரும்பத்திரும்பச் சொல்லும், கருத்துருவாக்கும், ஏற்க வைக்கும் பணி மும் முரமாகவே நடக்கிறது.
சோவியத் ஒன்றியம், அதனோடு சேர்ந்து
வந்த சோசலிச முகாம் சிதைந்துவிட்டது என்பது உண்மைதான். செஞ்சீனம், இன்று ஆகக் கூடுதல் டாலர் பில்லியனர்களோடு,
முதலாளித்துவ உலகப்
பொருளாதாரத்தோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். அமெரிக்க
கண்டத்தின் மறுபகுதியில், இளஞ் சிவப்பு அலை
வடிகிறது என்பதையும் கூட மறுக்க முடியாதுதான்.
சரி, அதனால் எல்லாம் சோசலிசம் தவறு, இடதுசாரி அரசியல் தவறு, என்றாகி விடுமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வன்முறை மூலம், தனிச்சொத்தைக் காக்க சிறுபான்மை பெரும்பான்மையை
ஆண்டது என்பதும் முதன்முறையாக, முதலாளித்துவச்
சிறுபான்மையினரின் தனி உடமையை சோசலிசப் பொது உடைமை 1917ல் வென்று, 70 ஆண்டுகள் ஒரு மாற்று ஆட்சி நடத்தியதும்
உண்மைதானே? மனிதகுல
வரலாற்றில், பத்தாண்டுகள்
நூறாண்டுகள், கால அளவில்
சிறியவையே ஆகும். முதலாளித்துவம் வெல்லுமா சோசலிசம் வெல்லுமா என்ற கேள்விக்கு விடை
காண, சில நூறு ஆண்டு கள் தேவை
என்றார் மாவோ.
தனிஉடைமை -
முதலாளித்துவம் -சந்தைக்கேற்ற லாபத்துக்கான உற்பத்தி, சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்வது, இவற்றை நீடிக்க வைப்பது ஆகியவை வலதுசாரி
அரசியல் ஆகும். இதற்கு மாற்றாக, பொது உடைமை -
சோசலிசம் - மக்கள் தேவைக்கேற்ற உற்பத்தி - சுரண்டல் மறுப்பு - பெரும்பான்மை
சிறுபான்மையை ஆள்வது - அந்த நிலையிலிருந்து வர்க் கங்களே இல்லாத, சுரண்டல் இல்லாத, கட்டமைக்கப்பட்ட வன்முறை நிறுவனமான அரசு
என்பதற்கான தேவையே இல்லாத கம்யூனிசம். இந்தத் திசையில் பயணம் செய்வது, இடதுசாரி அரசியல். இன்றைய உலகில் இன்றைய
இந்தியாவில், இன்றைய
தமிழ்நாட்டில் இடதுசாரி அரசியல் சாத்தியமானது, தேவையானது, தவிர்க்க முடியாதது. ஏனெனில், ஒரு நாள் இல்லை ஒரு நாள், மக்கள் தமக்கானவர்களாக மாறுவார்கள். அப்போது,
இடதுசாரி அரசியல் வென்றே
தீரும்.
சமீபத்திய
பிரிட்டன் அரசியல் நடப்புக்கள், உடனடிப் பொருளில்,
ஒரு மிகப் பெரிய
ஏகாதிபத்திய நாட்டில் கூட, காத்திரமான
இடதுசாரி அரசியல், மிகப்பெரிய
போட்டியாளராக எழ முடியும் எனக் காட்டியுள்ளது. முதலாளித்துவக் கட்சியாக மாறிய
லேபர் கட்சிக்குள் இருந்து கொண்டு, அந்தக் கட்சியின்
ஏகாதிபத்தியப் போர் ஆதரவு மற்றும் நவதாராளவாத பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக 1983ல் இருந்து 424 முறை வாக்களித்தவர் ஜெர்மி கோர்பின். 65 வயதுக்கு மேலானவர். எளிமையானவர். எளிய
மனிதர்களுக்கானவர். இங்கிலாந்து இடது திசை திரும்பியதால், இங்கிலாந்தின் இளைய தலைமுறை இடது திசையில்
திரும்பியதால், லேபர் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் எதிர்ப்பை எல்லாம் மீறி, கோர்பின், லேபர் கட்சியின் தலைவர் ஆனார். இங்கிலாந்து
அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னணியில், பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி பிரதமர் தெரசா
மே தேர்தல் அறிவித்தார். கோர்பின் தேற மாட்டார், அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சி படுதோல்வி
அடையும், தாமே
பிரும்மாண்டமான வெற்றி பெறுவோம் என கன்சர்வேட்டிவ் கட்சியினர் நினைத்தார் கள்.
கோர்பின், ‘சிலருக்காக அல்ல,
மிகப் பலருக்காக’ என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்நிய
போர் தலையீடு எதிர்ப்பு, அடிப்படை
உள்கட்டுமான வசதிகளை தேச உடைமையாக்கல், கல்விக் கட்டணக்குறைப்பு, மருத்துவ சேவை
விரிவாக்கம், கட்டணக் குறைப்பு,
நலிந்தோர், விளிம்பு நிலையோர் நலன் காத்தல், கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் பணக்காரர்களுக்கு
கூடுதல் வரி என்ற, துணிச்சலான
காத்திரமான நிலை எடுத்த ஜெர்மி கோர்பின் தலைமையில், சென்ற முறை பெற்றதை விட இந்த முறை தொழிலாளர்
கட்சி 9.3% கூடுதல்
வாக்குகளைப் பெற்றது. 262 இடங்கள்
வென்றது. கன்சர்வேட்டிவ் கட்சியால் 650ல் 325 என்ற
பெரும்பான்மையைக் கூட பெற முடியவில்லை. பிரக்சிட், டிரம்ப் வெற்றி என்ற பின்னணியில், இங்கிலாந்து உள்பட அய்ரோப்பா எங்கும் வலதுசாரி
திசைப் பயணம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து, தகர்ந்துள்ளது. கோர்பினை ஆதரித்தவர்களில் 70% பேர் இளைஞர்கள். இடதுசாரி அரசியலுக்கு,
இளைய தலைமுறையினர்
மத்தியில் இங்கிலாந்தில் ஆதரவு இருக்கும் போது, சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த
இந்தியாவில், இடதுசாரி
அரசியலுக்கு நிச்சயமாக வாய்ப் புக்கள் நிறையவே உள்ளன.
‘தனி ஒருவர் பிறர்
ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் மற்றொரு தேசத்தைச் சுரண்டுவதும்
ஒழிக்கப்படும். தேசத்திற்குள் வர்க்கங்களுக்கிடையிலான பகைமை நிலை எந்த அளவுக்கு
மறைகிறதோ, அதே அளவுக்கு
தேசங்களுக்கு இடையிலான பகையும் இல்லாது ஒழியும்’. இதுதான், 1848ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்வைத்த
இடதுசாரி அரசியல். மானுட விடுதலை நோக்கிய, சோசலிச சமூகம் நோக்கிய இடதுசாரி அரசியல் கோட் பாடுகள் அழிவற்றவை.
நக்சல்பாரியின்
லட்சியம் வென்றே தீரும்.
இடதுசாரி இயக்கத்தின் எதிர்கால வெற்றிக்காக
நிகழ்காலத்தில் போராடுவோம்.