COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 15, 2017

தலையங்கம்

மாணவர்களை, பெற்றோர்களை துன்புறுத்தும் மத்திய மாநில அரசுகள்

தனக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தவிர வேறு எது பற்றியும் அக்கறை காட்டாத அமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால், அதை சற்றும் வெட்கம் இல்லாமல், இப்படி வெளிப் படையாக, நாடே கைகொட்டி சிரிக்கும்படி செய்வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை என்பது உண்மைதான்.
ஏதோ கொஞ்சமாவது நாசுக்கை இன்னும் கூட எதிர்ப்பார்க்கிறோம். மாற்றம் தந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் என்று 2011லேயே ஜெயலலிதா சொல்லிவிட்டார். அவர் வழியில் தப்பாது ஆட்சி நடத்தும் அமைச்சர்கள் மக்களுக்கு அள்ளஅள்ளக் குறையாமல் ஏமாற்றத்தைத் தருகிறார்கள்.
சமீபத்திய ஏமாற்றம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் இருந்து வந்தது. தமிழ்நாட்டின் கல்வித் துறை, மத்திய அரசின் தொலைதொடர்புத் துறைபோல், மத்திய மாநில அரசுகளின் பொதுப்பணித் துறைகள்போல், நிதி புரளும் ஒரு துறை. அந்தத் துறைக்கும் தமிழக மாணவர்கள் கல்வி பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையே தவிர, கல்வி பெயர் சொல்லி காசு பார்க்க உகந்த ஒரு துறை. பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரி சபிதா பெயர் ஊழல் செய்பவர்கள் பட்டியலில் இடம்பெற்று சென்னையில் பிளக்ஸ் பேனரே வைக்கப்பட்டது. இது ஜெயலலிதா இருக்கும்போதே நடந்தது. இப்போது கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கையொப்பத்துடன் அவரது லெட்டர் பேடில், சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கைக்கு அவர் சிபாரிசு செய்த கடிதம் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அமைச்சர், அதிகாரிகள் யாரும் இது பற்றி விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. சில மாநிலங்களில் முதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்ற செய்திகள் வரும்போது நாமும் சேர்ந்துதான் காரி துப்புகிறோம். இப்போது செங்கோட்டையன் தனியார் பள்ளிக்கு அளித்துள்ள சிபாரிசு கடிதத்துக்கும் நாடே காரி துப்புகிறது.
மாணவர்களை, பெற்றோர்களை துன்புறுத்துவதில் இந்த அரசாங்கம் இன்பம் காண்கிறதா என்று நமக்கு அய்யம் ஏற்படும் அளவுக்கு கல்வித் துறையில் குளறுபடிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. நீட் தேர்வைச் சுற்றிய குழப்பங்கள், கவலைகள், தீராத நிலையில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்கப் போகிறது என்றே தெரியப் போகிறது. தமிழக மாணவர்களுக்கு இன்னும் பல துன்ப, துயரங்களை, நிச்சயமின்மைகளை  கல்விச் சூழல் தனக்குள் கொண்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் அவற்றை அனுப விக்க தயாராக வேண்டியுள்ளது.
ஆனால், இது போன்ற கொடுமைகளை மாணவர்களும் பெற்றோர்களும் அனுபவிக்கும் காலம் வரும் முன்னரே, நீட் தேர்வைச் சுற்றி எழுந்த சில விவாதங்களை சாக்காக்கி தமிழக அரசின் கல்வித் துறை சில மாற்றங்களை வேக வேகமாக செய்து முடித்துள்ளது. இந்த மாற்றங்களும் மாணவர்களையும் பெற்றோர்களையும் அச்சுறுத்துபவையே.
இந்த மாற்றங்கள் அறிவிப்புகளின் முதல் அறிவிப்பு உண்மையில் மகிழ்ச்சியே தந்தது. இந்த அரசா இப்படிச் செய்தது என்று வியப்படைய வைத்தது. + 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது, மதிப்பெண் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்காமல் தர அடிப்படையில் அறிவித்தபோது, முதல் மதிப்பெண் பெற ஓயாது விரட்டப்பட்ட மாணவர்கள், அப்படி விரட்டிய பெற்றோர்கள் என மிகச் சிலருக்குத் தவிர, கல்வி முதலாளிகளுக்குத் தவிர, அது நிம்மதியே தந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இதே முறையில் அறிவிக்கப்பட்டன.
தமிழக அரசு திருந்திவிட்டது என யாரும் கருதிவிடக் கூடாது என்று எச்சரிப்பதாகவே அடுத்த அறிவிப்பு வந்தது. சமூக நீதி, கிராமப்புற மாணவர்களின் இடம், நாளைய மருத்துவம் என அனைத்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புகள் எழுந்தபோது, இந்த அடிப்படையான அம்சங்களில் பதில்வினையாற்றாமல்நீட் தேர்வு எழுதும் அளவுக்கு தமிழகத்தின் கல்வித் தரம் இல்லை என முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டும் வசதியாகத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு பதில் சொல்லப் பார்த்தது.
+2 தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, தனியார் பள்ளிகள் +1 பாடமே கற்பிக்காமல் நேரடியாக +2 பாடத் திட்டத்துக்குச் சென்றுவிடுகின்றன என்பதால்தான் இந்தப் பிரச்சனை என்று சொல்லி, +1 தேர்வும் பொதுத் தேர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அப்படியானால், மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாணவர்கள் பொதுத் தேர்வுகள் எழுத வேண்டும். என்ன பாவம் செய்தார்கள்? சிபாரிசு கடிதம் தருவது போன்ற கேவலமான நடவடிக்கைகளை மூடி மறைக்க, கல்வி விசயத்தில் மிகவும் கறாராக இருப்பதாகக் காட்டிக் கொள்வது அமைச்சர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு மேல் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற உயர்நோக்கம் எதுவும் இல்லை. இது மாணவர்களை மேலும் எந்திரங்களாக்கும், கல்வியை மேலும் எந்திரத் தனமாக்கும் விளைவையே உருவாக்கும். கல்வியின் தரத்தை உயர்த்தும் அக்கறை உண்மையில் இருந்தால், கல்விக்கு அரசு முழுவதுமாக பொறுப்பேற்பது மட்டுமே வழி என்பதும் அவர் களுக்குத் தெரிந்த விசயம்தான்.
எந்த நுழைவுத் தேர்வும் எழுதாமல் மருத்துவம் படித்த தமிழக மருத்துவர்களிடம் மருத் துவம் பெறத்தான் நாடெங்கும், உலகெங்கும் இருந்து ஓடோடி வருகிறார்கள் என்று ஆன மட்டும் கத்திப் பார்த்தாலும், கல்வியை காசாக்கி ருசி பார்த்தவர்கள் காதில் வாங்கிக் கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து சேர்த்த சொத்தைப் பாதுகாக்கும் மாபெரும் கடமை முன்னின்று விரட்டுவதால் பாஜகவின் விரலசைவுக்கு தமிழக ஆட்சியாளர்கள்  ஆடும் போது, பாஜகவை விட வேகமாக, விசுவாசமாக தமிழ்நாட்டில் அந்தக் கொள்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் அமலாக்கிவிடுவார்களோ என்று கூட, அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் தவிர் என்றெல்லாம் சிறுவயதிலேயே கற்றுவிடுகிற நாம், மோசமாக அச்சுற வேண்டியிருக்கிறது.
+1 தேர்வு பொதுத் தேர்வாக்கப்படும் என்ற அறிவிப்பு மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் சில கூறுகளைக் கொண்டிருப்பதாகப் படுகிறது. தற்போதைய இடைநிறுத்தம் இல்லை என்ற கொள்கை அய்ந்தாம் வகுப்பு வரை என்று மாற்றப்படும் என்று மோடியின் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இடை நிறுத்தம் கொண்டு வரப்பட்டால், திறன்குறை மாணவர்கள் தாமாகவே இடைநிற்றலை தேர்ந்தெடுத்துவிடுவார்கள். பிறகு அவர்களை, குலத் தொழிலுக்கு அனுப்பிவிடலாம். +1 தேர்வு பொதுத் தேர்வாக மாற்றப்பட்டால் அந்தக் கட்டத்தில் பலர் வடிகட்டப்பட்டுவிடுவார்கள். காசுள்ளவர்கள் கல்வி கற்பது என்பதுடன், பின்தங்கிய பிரிவினர் கல்வி கற்க முடியாது என்ற விளைவையும் இந்த நகர்வு உருவாக்கும். மக்கள் விரோத நடவடிக்கைகளை பரிசோதனை அடிப்படையில் அமலாக்குவதில் அஇஅதிமுக வுக்கு திறமை உண்டு.
நீட் தேர்வோ, +1 பொதுத் தேர்வோ எதுவாக இருந்தாலும் நோக்கம் மிகவும் தெளிவானது. எந்த விதத்திலும் கல்விக்கு அரசு பொறுப்பேற்பது என்று வந்துவிடக் கூடாது. எப்படியா வது கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்க வேண்டும். கல்வியின் பெயரால் கொள்ளை நடத்துபவர்கள் வீசுகிற எலும்புத் துண்டுகளைக் கவ்விக் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை நியாயப்படுத்த, நீதிபதிகள் நியமனத்துக்கு, அது போன்ற தேர்வு நடத்த மோடி அரசு பரிசீலித்து வருகிறது. பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு என்று பேசுகிறது. அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என்று சொல்வதுபோல், அனைத்துக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று ஆக்கிவிட்டால், நீட் தேர்வு நியாயமாகி விடாதா என்று மோடி அரசு எதிர்ப்பார்க்கிறது. ஒண்ணுக்குப் போக, ஆதார் கட்டாயம், நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று தமிழக ஆட்சியாளர்கள் சொல்லிவிடுவார்களோ என்றுதான் நமக்கு அச்சமாக இருக்கிறது.

Search