டாஸ்மாக் கடை யை
மூடக் கோரி இகக மாலெ தலைமையில் அம்பத்தூர் பகுதி
மக்கள் சாலை மறியல்
அம்பத்தூர் ரயில்
நிலையத்துக்கு மிக அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற ஜுன் 10 அன்று தயாரிப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்
கடை இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறது. இது புதிதாக வந்த கடை அல்ல. ரயில்
நிலையத்துக்கு மிக அருகில் இருப்பதால் பகுதி மக்களுக்கு எல்லா விதங்களிலும் பெரும்
இடையூறாகவே இந்தக் கடை இயங்கி வந்தது.
அம்பத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட
இகக மாலெ நடத்திய வெற்றிகரமான போராட்டங்கள் பகுதி மக்கள் மத்தியில் தாக்கம்
ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்தாரியா நகர்,
ஓ.வி.அழகேசன் நகர்
குடியிருப்போர் சங்கம், அம்பேத்கர் பொது
நல மன்றம் ஆகிய அமைப்புகள், பொது மக்களுக்கு
இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றும் போராட்டம் நடத்த இகக மாலெயை அணுகின.
இதற்காக இந்த அமைப்புகள் நடத்திய தயாரிப்பு கூட்டத்தில் குடியிருப்போர்
சங்கங்களின் டில்லிபாபு, ஆரோக்கியசாமி,
மற்றும் புரட்சிகர இளைஞர்
கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய
மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் உரையாற்றினர். 150 பேர் வரை கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில்
அடுத்தடுத்த போராட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. இந்தத் தயாரிப்பு கூட்டம்
நடப்பதை அறிந்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அப்போதே அந்த டாஸ்மாக்
கடைக்கு பாதுகாப்பை அதிகரித்தனர்.
ஜுன் 12 அன்று திட்டமிட்டபடி, பகுதி மக்கள் 500 பேர், தோழர் பாரதி தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பகுதியில் ஏற்கனவே இரண்டு கடைகளை மூடிய போராட்டங்கள் நடத்தியிருப்பதால் கடுமை யான
எரிச்சலில் இருந்த காவல் துறையினர் போராட்டத்தின் தலைவர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். நீங்கள் வந்துவிட்டால் நாங்கள் சென்றுவிட வேண்டுமா என்று கேட்டனர்.
அவர்கள் கெடுபிடி காட்டவே, கடையை
முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இரண்டு மணி நேரம்
நடந்த சாலை மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடை
மூடப்படாமல் அங்கிருந்து நகரப் போவதில்லை என்று பகுதி மக்கள் உறுதியாக
தெரிவித்தனர். அதனால் மூடப்பட்ட கடை மக்கள் கலைந்து சென்ற பிறகு மீண்டும்
திறக்கப்பட்டது. பகுதி மக்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகிறார்கள்.
ஆவடியை அடுத்துள்ள
கொள்ளுமேடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட வேண்டும் என்று
வலியுறுத்தி மே 28 அன்று பகுதியின்
பொதுமக்கள் இகக மாலெ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை மாநகரக் கமிட்டி
உறுப்பினர் தோழர் மோகன், டி.ஜி.அண்ணாநகர்
பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வைத்த வெற்றிகரமான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட
தோழர் புகழ்வேந்தன் ஜீவா ஆகியோர்
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர். பகுதி மக்கள் அடுத்த கட்ட போராட்டங்கள்
திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளூர்
மாவட்டம் அழிஞ்சிவாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட
வலியுறுத்தி ஜுன் 5 அன்று பகுதியைச் சேர்ந்த தோழர் கீதா தலைமையில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி நடந்து கொண்டிருக்கும் கையெழுத்து இயக்கத்துக்குப்
பிறகு ஆட்சியரைச் சந்திக்கவும், கோரிக்கை
நிறைவேறவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையில் டாஸ்மாக் அதிகாரிகள்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தான்
தலையிட முடியாது என்றும் ஆர்டிஓ ஏற்கனவே சொல்லிவிட்டார்.