வாராது போல வந்த
பாஜகவின் மாமணிகள்
மாமணி 1: பாஜக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
சமீபத்தில், தனது டிவிட்டர்
செய்தி ஒன்றில் கோபாலகிருஷ்ண கோகலே பற்றிய செய்தியைப் போட்டு பாலகங்காதர திலகரின்
நிழற்படத்தைப் போட்டிருந்தார். இவர் பெரிய அறிவாளி என்று கருதப்படுகிறார். ஆங்கில
இந்து நாளேட்டில் அவரது கட்டுரைகள் அடிக்கடி வெளியாகின்றன. அந்தக் கட்டுரைகளில்
அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நாம் நம்ப முடியுமா?
மாமணி 2: பாஜக மத்திய அமைச்சரவையில் இன்னொரு முத்து
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர். அவர் சொல்கிறார்: மோடி தலைமையிலான பாஜக அரசு
கடந்த மூன்று ஆண்டுகளில் 813.76 கோடி பேருக்கு
வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது. 120 கோடி பேர் உள்ள நாட்டில் 813 கோடி பேருக்கு
வேலையா என்று குழம்பத் தேவையில்லை. வேலை வாய்ப்பே உருவாகவில்லை என்று
எதிர்க்கட்சியினர் பொய் சொல்கிறார்களா என்று கொந்தளிக்கவும் தேவையில்லை. அமைச்சர்
சொல்கிற புள்ளிவிவரம் சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர் விளக்குகிறார். அதைச்
சொல்லும் விதத்தில் வெளிப்படுகிற அந்த மாமணியின் மேதமையைத்தான் நாம் அல்லது
பாஜகவினர் மெச்ச வேண்டும். எதிர்க்கட்சியினர் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை
என்று சொல்வதும் உண்மையே.
தேசிய ஊரக வேலை
வாய்ப்புத் திட்டத்தில் நாடு முழுவதும் வேலைகள் தரப்பட்ட நாட்களின் எண்ணிக்கை
மூன்று ஆண்டுகளில் 636.78 கோடி. மூன்று
ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட வேலை
வாய்ப்புக்களின் எண்ணிக்கை இதுதான் என்றால் இது மிகவும் குறைவானது. இன்னும் சில
இது போன்ற மத்திய அரசு திட்டங்களில் உருவாக்கப்பட்ட வேலை நாட்களை எல்லாம் சேர்த்துத்தான்
நரேந்திர சிங் தோமர் இப்படிச் சொல்கிறார். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
காங்கிரஸ் ஆட்சியின் தோல்விக்கு சாட்சி என்று மோடி சொன்னார். இப்போது, அந்தத் திட்டத்தில் உருவாக்கப் பட்டுள்ள வேலை
வாய்ப்பு எண்ணிக்கையை தங்கள் சாதனையாகச் சொல்லிக்கொள்வது, புத்திசாலித்தனமாக திரித்துச் சொன்னாலும்,
மோடி அரசாங்கத்தின்
தோல்வியை ஒப்புக்கொண்டதாக ஆகாதா?
அதே அறிக்கையின்
பின்பகுதியில் வேலைவாய்ப்பு விசயத்தில் பாஜக அரசின் மேன்மையைச் சொன்ன அவரது
திறமையும் பல்லிளித்துவிடுகிறது. நாட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 96% தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊதியம்
வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் 2016 - 2017ல் 1.23 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர் என்றும் சொல்கிறார். 2014ல் மோடி ஆட்சியைப் பிடித்த பிறகுதான் விவசாயத்
தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் கூலி என்ற ஏழரை சனி பிடித்தது. ஓர் ஆண்டில் 1.23 கோடி பேர் என்றால், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் 800 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டனவா என்று
நாம் கேட்க முடியும் அல்லவா? ஆர்வமிகுதிக்கும்
அளவிருக்க வேண்டும் அமைச்சரே!
மாமணி 3: புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடியை
ஏற்றுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் சொன்னார். அதாவது தமிழகத்தில்
பாஜக ஆட்சியைப் பிடிக்கப் போகிறதாம். அப்படியேப் பிடித்தாலும் புனித ஜார்ஜ்
கோட்டையில் தேசியக் கொடியைத்தான் ஏற்ற முடியும் அம்மையாரே! காவிக் கொடி ஏற்றுவது
உங்கள் நீண்டகாலத் திட்டம் என்பதை நாங்கள் அறிவோம். அதற்கு இன்னும் பலப்பலப்
படிகளை நீங்கள் தாண்ட வேண்டும். பலரை பல காரணங்கள் சொல்லி கொல்ல வேண்டும். அப்போது
கிட்டத்தட்ட இந்தியாவில், தமிழ்நாட்டில்
மனிதர்களே இல்லாமல் பசுக்களும் மயில்களும் மட்டும் கூட இருக்கலாம்.
இன்னும் பல
மாமணிகள், மாமாமணிகள்
பாஜகவுக்குள் இருக்கலாம். நம் கண்களுக்கு இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை.
எடுக்க முடியவில்லை. எடுத்துக் கோர்க்க முடியவில்லை.