COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 15, 2017

காஷ்மீரில் என்ன நடக்கிறது?’

அகில இந்திய மக்கள் மேடையின் அரங்கக் கூட்டம்

அகில இந்திய மக்கள் மேடையும், உழைக்கும் மக்கள் மாமன்ற தொழிற்சங்கமும் இணைந்து காஷ்மீரில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் சென்னை உழைக்கும் மக்கள் மாமன்ற அலுவலகத்தில் ஜுன் 5, 2017 அன்று அரங்கக் கூட்டம் நடத்தியது.

கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் துரைராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் என்டியுஅய் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கவுதம் மோடி, மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், காஷ்மீரில் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவரும், மனித உரிமை மீறல்களை வெளி உலகுக்கு கொண்டு செல்பவரும், சமீபத்தில் பொது பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு 76 நாட்கள் சிறையில் இருந்து, அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடெங்கும் எதிர்ப்பு எழுந்த பின், உயர்நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தவருமான திரு.குர்ரம் பர்வேஸ் ஆகியோர் உரையாற்றினர்.
2016 டிசம்பரில் இந்தியாவின் பல பகுதிகளையும் சேர்ந்த முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்த 25 பேர் ஒரு குழுவாக காஷ்மீர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து, அந்த சந்திப்புகளில் அவர்கள் தெரிந்துகொண்டவற்றை காஷ்மீர் மக்கள் ஏன் எதிர்த்துப் போராடுகிறார்கள்என்ற ஆவணமாக வெளியிட்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக சென்னையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
என்டியுஅய்யின் தோழர் கவுதம் மோடி, தனது உரையில் போராட்டத்திலிருக்கும் காஷ்மீர் மக்களுக்கு நாம் எந்த வகையில் ஒருமைப்பாடு தெரிவிக்கலாம், எப்படி உதவலாம் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்றார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது உரையில், தான் உண்மை நிலை அறிய காஷ்மீரத்துக்கு சென்றபோது அங்கு சிறை வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்போது தரப்பட்ட வாக்குறுதிகள் நேரு காலத்திலேயே கைவிடப்பட்டன என்றார்.
மனித உரிமைப் போராளி குர்ரம் பர்வேஸ், இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது என்பதிலிருந்து தனது உரையைத் துவங்கினார். காஷ்மீரைப் பொறுத்தவரை இந்துத்துவா சக்திகள் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம் என்கின்றனர், அமர்நாத் யாத்திரைக்கு 500 முதல் 2000 பேர் வரை வந்த இடத்தில் இப்போது வகுப்பு வெறியூட்டப்பட்டு 5 லட்சம் முதல் 6 லட்சம் பேர் வரை வருகின்றனர் என்றார்.
காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை ஊடகங்கள் தவறான தகவல்களை அளிக்கின்றன என்ற அவர், காஷ்மீரில் இதுவரை 70,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 8,000 பேர் காணாமல் போயுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்றார். காஷ்மீரில் நடப்பது பற்றி நாட்டின் பிற பகுதிகளில் யாரும் போதுமான அளவு கேள்வி கேட்காத நிலையே தொடர்கிறது என்றார். காஷ்மீரில் இராணுவம் நடந்து கொள்வது மற்ற இடங்களுக்கும் தொற்று நோயாய் பரவும் என எச்சரித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நீதிக்கான குரல் ஒலிக்க வேண்டும் என்றும் காஷ்மீரைப் பாதுகாக்க அல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமானால் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் அகில இந்திய மக்கள் மேடையின் மாநில அமைப்பாளர் தோழர் வித்யாசாகர் வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் வசந்திதேவி உட்பட ஆய்வு மாணவர்கள், வழக்கறிஞர்கள் என ஜனநாயக சக்திகள், இகக(மாலெ), ஏஅய்சிசிடியு தோழர்கள் கலந்துகொண்டனர். அகில இந்திய மக்கள் மேடையின் தோழர் தேசிகன், குர்ரம் பர்வேஸ் மற்றும் கவுதம் மோடி உரைகளை மொழியாக்கம் செய்தார்.

Search