COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 15, 2017

சோவியத் ரஷ்யா
இரண்டாம் உலகப் போரை எதிர்கொள்ள நேர்ந்தது

பகுதி 2

ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது....
முதலாளித்துவத்தால் சூழப்பட்டுள்ள சோசலிசம் ஏகாதிபத்திய நாடுகளால் தாக்கப்படும் ஆபத்துகள் எப்போதும் இருக்கும்....
உலகின் முதல் சோசலிச குடியரசான சோவியத் குடியரசை பாதுகாப்பது பாட்டாளி வர்க்கத்தின் கடமை....
 இந்த அம்சங்களை சோவியத் பாட்டாளி வர்க்கத்திடம் லெனினும் ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
முதல் உலகப் போரில் அடிவாங்கிய பிறகும் நாடு பிடிக்கும் பேராசையால் பிடித்தாட்டப்பட்ட ஜெர்மனியின் ஏகாதிபத்திய விரிவாக்க முயற்சிகளில் சோசலிச குடியரசை அழித்துவிடும் நோக்கமும் இருந்தது. ஜப்பானும் இத்தாலியும் கூட தங்கள் ஏகாதிபத்திய விரிவாக்கக் கனவுகளில் மூர்க்கமாக முன்னேறத் தலைப்பட்டன. ஜெர்மனியும் ஜப்பானும் இத்தாலியும், முதல் உலகப் போரின் முடிவில் உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் எனப்படுகிற, தற்போதைய அய்க்கிய நாடுகள் சபை போன்ற, உலக நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு கட்டங்களில் விலகுகின்றன. 1936ல் கம்யூனிசத்துக்கு எதிரான சர்வதேசப் போர் என்ற ஒப்பந்தத்தில் ஜெர்மனியும் ஜப்பானும் கையெழுத்திடுகின்றன. அடுத்த ஆண்டில் இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைகிறது.
ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனியின் மூர்க்கமான நாடு பிடிக்கும் நடவடிக்கைகளை ஒரளவாவது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அது தன்னுடன் செக்காஸ்லோவகியாவை இணைத்துக் கொள்ள பிரான்சும் இங்கிலாந்தும் அனுமதித்தன. இதற்கு மேல் ஜெர்மனி நாடு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்ற ஒப்பந்தமும் மியுனிச்சில் ஜெர்மனியுடன் போடப்பட்டது. அந்த ஒப்பந்தமும் மீறப்பட்டு 1939ல் ஜெர்மானிய படைகள் போலந்தில் நுழைகின்றன. அதன் பிறகே ஜெர்மனி மீது பிரான்சும் இங்கிலாந்தும் போர் அறிவித்தன.  இரண்டாம் உலகப் போர் துவங்குகிறது. 1940ல் அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில், புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த தங்கள் மத்தியில் நாடுகளை எப்படி பிரித்துக் கொள்வது என்பதில் உடன்பாடு காணப்பட்டது.
ஜெர்மனி அடுத்தடுத்து நாடு பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. ஹங்கேரி, ரொமெனியா, பல்கேரியா நாடுகள் ஜெர்மனி கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றன. இங்கு உள்ள தனது ராணுவ தளங்களை பயன்படுத்தி கிரீசில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இருந்த இத்தாலிக்கு உதவ ஜெர்மனி திட்டமிட்டது. அதற்கு யுகோஸ்லோவியா வழியாகச் செல்ல நேர்ந்தபோது, அங்கு எதிர்ப்பு இருந்ததால் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. டென்மார்க், நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளும் நாஜிப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.
1940ல் ஜெர்மனியும் இத்தாலியும் நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரான்ஸ் வீழ்கிறது. இங்கிலாந்துக்குள்ளும் அச்சு நாடுகளின் படைகள் நுழையத் தலைப்படுகின்றன. ஆனால் நாஜிப் படைகளால் அது முடியவில்லை.
ரஷ்ய சோவியத் குடியரசு சோசலிசத்தை கட்டியெழுப்பும் மகத்தான கடமையை மேற்கொண்டிருந்தபோது, அந்தக் கடமையை நிறைவேற்றுவதில், நடந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய போரால் பாதிப்புகள் நேரக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அய்க்கிய குடியரசு, சோவியத் குடியரசு மீது போர் நடத்தப்பட மாட்டாது என்று ஹிட்லருடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தையும் ஜெர்மனி மீறியது. 1941, ஜுன் 22 அன்று நாஜிப் படைகள் சோவியத் ரஷ்யாவுக்குள் நுழைந்தன. லெனின்கிராட் வரை நாஜிப் படைகள் ஆக்கிரமித்துவிட்டன.
1941 டிசம்பரில் அய்க்கிய அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய பிறகே, அய்க்கிய அமெரிக்காவின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென சோவியத் ரஷ்யா வலியுறுத்திய பிறகே, 1942க்கு பிறகே, இரண்டாம் உலகப் போர் நடவடிக்கைகளில் அய்க்கிய அமெரிக்கா நேரடியாக இறங்குகிறது.
சோசலிசத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கருதுகிற, அதே நேரம் ஜெர்மானிய நாஜிப் படைகளின் ஆக்கிரமிப்புப் போரையும் எதிர்கொள்ள நேர்ந்த ஏகாதிபத்திய நாடுகள், சோவியத் ரஷ்யாவுக்குள் ஜெர்மனி நுழைந்த போது, சோவியத் ரஷ்யாவுக்கு பெயரளவில் ஆதரவு தெரிவித்து விட்டு, நேரடி போர் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. உலகை ஒரே குடைக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் மூர்க்கமாக முன்னேறிக் கொண்டிருந்த நாசிசத்துக்கு முடிவு கட்டுவது அவசியமாக இருந்த அதே நேரத்தில் அவர்களுக்கு சோசலிசமும் வீழ்த்தப்பட வேண்டிய சக்தியாகவே இருந்தது. பாசிசமும் சோசலிசமும் ஒன்றுடன் ஒன்று மோதட்டும் என்று ஒதுங்கி நிற்கும், அதன் மூலம் தங்கள் தரப்பில் இழப்புக்களை குறைத்துக் கொள்ளும் உத்தியை இங்கிலாந்தும் அய்க்கிய அமெரிக்காவும் கையாண்டன. இரண்டு பக்கங்களிலும் எத்தனை பேர் சாகிறார்களோ சாகட்டும் என்று ட்ரூமேன் சொன்னதாகவும் சொல்லப்படுவதுண்டு. அய்க்கிய அமெரிக்கா, அந்த நெருக்கடியான நேரத்திலும் நேச நாடுகளுக்கு குறைந்த விலையில் ஆயுத விற்பனை செய்து லாபம் பார்த்தது. இரண்டாவது உலகப் போரின் முடிவில், குறைவான சேதங்கள், ஒப்பீட்டளவில் பெரிய ஆதாயங்கள் பெற்ற நாடாக அய்க்கிய அமெரிக்கா இருந்தது.
ஜெர்மனியின் ஆக்கிரமிப்புப் போரை அதன் கிழக்குப் பகுதியில் சோவியத் ரஷ்யா தனியாக முழுவதுமாக எதிர்கொண்டது.  ஜெர்மனியின் கிழக்கு முனையில் இருந்து கொண்டு ரஷ்யாவுக்குள் ஊடுருவியிருந்த ஜெர்மானிய படைகளின் பலத்தை மட்டுப்படுத்த, நேச நாடுகள் ஜெர்மனி மீது அதன் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று சோவியத் ரஷ்யா எதிர்ப்பார்த்தது. 1943ல் டெஹ்ரானில் ஸ்டாலின், ரூஸ்வெல்ட், சர்ச்சில் சந்திப்பில், இரண்டாவது முனை துவங்கப்பட வேண்டும் என்ற ஸ்டாலினின் முன்வைப்பை இங்கிலாந்தும் அய்க்கிய அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக அப்படிச் செய்தால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லி நாஜிப் படைகளை தாக்க இரண்டாவது முனையை துவங்குவதைத் தவிர்த்தன. 1944 மே மாதத்தில் இரண்டாவது முனை துவங்கலாம் என்று திட்டமிடப்பட்டு, இறுதியில் ஜுன் மாதத்தில் நார்மண்டியில் அய்க்கிய அமெரிக்கப் படைகள் நுழைந்தன. நாஜிப் படைகளிடம் இருந்து பிரான்ஸ் விடுவிக்கப்படுகிறது. நேச நாடுகளின் படைகள் பிரான்ஸ் ஊடாக ஜெர்மனி நோக்கி நகர்கின்றன.
இரண்டாவது முனை துவக்கப்பட வேண்டும் என்று 1943ல் சோவியத் ரஷ்யா வலியுறுத்தியதற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஆப்பிரிக்க நாடுகளில் அச்சு நாடுகள் நடத்திக் கொண்டிருந்த ஆக்கிரமிப்புப் போரைக் கட்டுப்படுத்த நேச நாடுகளின் படைகள் அங்கு நுழைந்தன. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள இத்தாலிக்கு ஆதரவாக ஜெர்மனி தனது படைகளை அங்கும் அனுப்ப நேர்ந்தது. இந்தப் போரில் அங்கிருந்த இத்தாலிய படைகள் வீழ்த்தப்பட்டன. 1943ல் இத்தாலிக்குள்ளும் நேச நாடுகளின் படைகள் நுழைந்தன. இத்தாலியும் சரணடைந்தது.
நாஜிப் படைகள் நாடு பிடிக்கும் போரில் ஈடுபட்டபோது, செம்படைகள் நாடு காக்கும் போரில் ஈடுபட்டிருந்தன. 600 மீ தூரத்தில் கண்ணில் படுவது யாராக இருந்தாலும், அது முதியவரோ, பெண்ணோ, குழந்தையோ, யாரென்று பார்க்காதீர்கள், ரஷ்யர்களை சுட்டு வீழ்த்துங்கள் என்பது சோவியத் ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப் படைகளுக்கு தரப்பட்ட பொதுவான உத்தரவாக இருந்தது. 1941 முதல் இரண்டாவது முனை துவங்கும் வரை ஜெர்மானிய படைகளை தனியாக எதிர்கொண்ட சோவியத் ரஷ்யா துவக்கத்தில் கடுமையான இழப்புகளைச் சந்தித்தது. அதாவது இரண்டாம் உலகப் போர் நடந்த அய்ந்தாண்டு காலத்தில், 1941 ஜுன் முதல் 1944÷ன் வரையிலான  மூன்று ஆண்டுகளுக்கு சோவியத் செம்படைகள் மட்டுமே ஜெர்மானிய நாஜிப் படைகளின் பெரும்பலத்தை எதிர்கொண்டன. 1943 இறுதிக்குள்ளாகவே, செம்படை கிழக்கு முனையில் பெருமளவு முன்னேறி நாஜிப் படைகளை பின்னுக்குத் தள்ளியது. இத்தாலிக்கு உதவ ஜெர்மனி, சோவியத் ரஷ்யாவில் தனது தாக்குதல்களை சற்று மட்டுப்படுத்திய நேரத்தை பயன்படுத்தி செம்படை முன்னேறித் தாக்கியது. கெரில்லா தாக்குதல் உட்பட பல்வேறு போர் உத்திகளைக் கையாண்டது. மேற்கு முனையில் நேச நாடுகளின் படைகள் 15 ஜெர்மானிய படைப் பிரிவுகளை எதிர் கொண்டிருந்த அதே நேரத்தில், செம்படை 228 ஜெர்மானிய படைப் பிரிவுகளை எதிர்கொண்டது. 1944ல் இரண்டாவது முனையிலும் ஜெர்மனி மீது நேச நாடுகளின் தாக்குதல்கள் துவங்கியிருந்தபோது, சோவியத் ரஷ்யாவின் செம்படை, ஜெர்மனியின் கிழக்கு பகுதி உட்பட கிழக்கு அய்ரோப்பாவின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. பல்கேரியா, ரொமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் விடுவிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்கு துவக்கமாக இருந்த போலந்து ஆக்கிரமிப்பு செம்படைகளால் விலக்கப்பட்டது. போலந்தும் முழுவதுமாக சோவியத் செம்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
ஏப்ரல் 1945ல் கிழக்குப் பகுதியில் ஜெர்மனி நோக்கி நாளொன்றுக்கு 30 முதல் 40 கி.மீ வரை செம்படை முன்னேறியது. ஏப்ரல் இறுதி நாட்களிலும் மே துவக்க நாட்களிலும் ஜெர்மானிய நாஜிப் படைகள் சரணடைகின்றன. ஏப்ரல் 27 அன்று கைது செய்யப்படுகிற முசோலினி, அடுத்த நாள் தூக்கிலிடப்படுகிறார். ஏப்ரல் 30 அன்று ஹிட்லர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது இறுதி கடிதத்தில் ஜெர்மன் அதிபராக அறிவிக்கப்பட்ட கோயபல்ஸ் அடுத்த நாளே தற்கொலை செய்து கொள்கிறார். (அவருக்கும் அடுத்த நிலையில் இருந்த கார்ல் டோனிட்ஸ் மே 23 அன்று கைது செய்யப்படுகிறார்).

மே 2 அன்று பெர்லின் போர் முடிவுறுகிறது. ரீஷ்டாக் மாளிகை கைப்பற்றப்பட்டு மாளிகையில் செம்படை வீரர்கள் மெலிடன் கன்டாரியாவும் மிகெய்ல் யெகோரோவும் சோவியத் ரஷ்யாவின் செங்கொடியை பறக்க விடுகின்றனர்.

Search