சத்திரிய
கதாநாயகன் பாகுபலி
சாதிகளால்
பிளவுண்ட, பெருமைமிகு இந்து குலத்தை ஒன்றுபடுத்த வந்தவர்
பாகுபலி
ஜி.சம்பத்
பசு
சுற்றுவட்டாரப் பகுதி என்று அழைக்கப்படுகிற வட மாநில பார்வையாளர்களை, தங்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு நாயகர் கூட
இல்லாத பாகுபலி எப்படிக் கவர்ந்தது என்று எல்லோருக்கும் ஆச்சரியமே.
இந்தப் படத்தின்
பிரசித்திக்குப் பல காரணங்கள் இருந்தாலும், ‘அமர் சித்ர கதா’ என்ற புனைவை திரைக்கதையாக சொன்னவிதம், 3 மணி நேரம், நிஜ அனுபவமாக பார்வையாளர்களை அதில்
மூழ்கடித்தது.
இயக்குனர்
எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிறப்புமிக்க இந்திய கதாநாயக பாத்திரத்தின் கலாச்சார
உள்ளடக்கம் என்ன? முதலில் அவர் ஓர்
இந்து. சத்திரிய சாதியால் அடையாளப்படுத்தப்படும் இந்து. இந்துப் படைக்குத் தலைமை
தாங்கும் ஒரு சத்திரிய நாயகன். இராஜ்ஜியத்திற்குள் நுழையும் காட்டுவாசிகளின்
கூட்டத்தை அழித்தொழிக்கிறார். பாகுபலியின் இரண்டு படங்களும் இந்துக்களை உடல் வலிமை
கொண்ட இனமாக சக்தி வாய்ந்த விதத்தில் கற்பனை செய்து காட்டியிருக்கின்றன.
இந்துத்துவவாதி ஒருவர் பண்டைய இந்தியாவின் அருமை பெருமைகளை திரையில் காட்ட
விரும்பினால் அவருக்கு இதை விட மிகச் சிறந்த திரைப்படம் கிடைத்திருக்காது. ஆனால்
இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருந்திருக்கும் என்று சொல்ல
முடியாது. அவர்கள் அது பற்றிய உணர்வற்று கூட எடுத்திருக்கலாம்.
பாகுபலி என்ற
படைத்தளபதி நாயகனும் அவனது சாதி அடையாளமும் கதைக் களத்தில் தற்செயலாக அமைந்தது
என்று சிலர் விவாதிக்கக் கூடும். ஆனால் அது உண்மையல்ல.
அந்தக்
கதாபாத்திரமும் அதன் உலகப் பார்வையும் சத்திரிய முறைப்படி
வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்கவும், நிகழ்வுகள் நடைபெறும் மகிழ்மதி
இராஜ்ஜியத்திலும், கதாபாத்திரங்களிலும்
இந்து விழுமியங்கள் கட்டமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதியும்
செய்யப்பட்டுள்ளன. வசனங்கள், படமெடுக்கப்பட்ட
நிலப்பரப்பு, அலங்காரங்கள்,
படத்தில் வரும் கிளைக்
கதைகள் என பலவும் இந்து அடையாளம் கற்பிதம், திரு உருவகப்படுத்தல் ஆகியவற்றில் ஆழமாக
வேரூன்றியிருந்தது. மாபெரும் யானைகள், லிங்கங்கள், யாகம் வளர்க்கும்,
ஸ்லோகங்கள் சொல்லும்,
இக்கட்டான தருணங்களில்
ஜோதிட ஆலோசனை வழங்கும் பிராமண ஆச்சாரியார்கள் என அமைந்திருந்தது. மகிழ்மதி மீது
தாக்குதல் நடத்துபவர்கள் கருத்த தோளுடைய பூர்வகுடிகளாக
சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளைத் தோலுடன் ஆரியர் போல் இருக்கிற சத்திரிய கதாநாயகர்கள்,
அதிக எண்ணிக்கையில்
இருந்தாலும் புத்திக் கூர்மை இல்லாத, சாதிகளற்ற ஆதிவாசிகளை வெற்றிகரமாக கீழ்படிய வைப்பதாக படம் கதை சொல்லுகிறது.
முழுமையான
இந்துவை சுற்றி அணிதிரள்வது
கைதேர்ந்த கதைக்
கள அமைப்பு, பளபளக்கும்
தயாரிப்பு ஆகியவற்றுக்குப் பின்னால் அடிநாதமாக பாகுபலி சாதிய படிநிலையை புகழ்வதை
காண முடியும். படம் சாதியால் பிரிந்து கிடக்கிற இந்து குலத்தை, சாதியை அழித்துவிட்டு ஒன்றுபடுத்துவதற்குப்
பதிலாக, சத்திரிய படைத்
தளபதியை முழுமையான இந்துவாக சித்தரித்து அவனைச் சுற்றி மக்கள் அணிதிரளும் வகையில்
காட்சிப்படுத்தியிருக்கிறது. அனைத்து இந்துக்களுக்குமே சத்திரியர் போல கவுரவமாக
இருப்பதே சிறந்தது என்று படம் சொல்லப் பார்க்கிறது. ஆட்சிபுரிய சத்திரியர்களுக்கு
உள்ள உரிமையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்து
கொள்வது தாழ்த்தப்பட்ட சாதிகளின் தர்மமாக சொல்லப்பட்டிருப்பதில் சந்தேகம் எதுவும்
இருக்க முடியாது.
இதுபோன்ற
கதாநாயகர்களையே மக்கள் உலகத்தோடு, மற்றவர்களோடு,
தங்களோடு கலாச்சார
அடையாளங்களாக பொருத்திப் பார்ப்பார்கள். இந்து தேசியவாத உணர்வுகள் உச்சத்தில்
இருக்கின்ற இந்த காலகட்டத்தில் பாகுபலி போன்ற படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்க
கலாச்சார தலையீடாகவே அமைந்துள்ளது.
(நன்றி: தி இந்து, 24.05.2017)
தமிழில்: தேசிகன்