COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 1, 2017

நக்சல்பாரி நாயகர்கள்

விவசாயிகளுக்காக உங்கள் கட்சி என்ன செய்தது, கட்சியை வளர்ப்பதுதான் சங்கத்தின் நோக்கமாக இருக்கிறதே தவிர, தொழிலாளர்கள் பற்றி சங்கத்துக்கு சற்றும் அக்கறை இல்லை என்று பிரிக்கால் நிர்வாகம் சொன்னது.

நக்சல்பாரி இயக்கத்தின் அய்ம்பதாவது ஆண்டு தினமான மே 25 அன்று, புதிய தொழி லாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் கூடியபோது, அவர்களது சங்கத்தின் தலைவர் சொன்னார்: விவசாயிகளுக்காக உங்கள் கட்சி என்ன செய்தது என்று நிர்வாகம் கேட்கிறது. நாட்டின் விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் அரசியல் அறுதியிடலுக்கான போராட்டம்தான் நக்சல்பாரியில் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் கட்சி நடத்தியது. இந்தக் கட்சி விவசாயிகளுக்கானது என்பதற்கு வேறு சான்று எதுவும் வேண்டுமா என்று கேட்டார்.
உழைக்கும் மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினருக்கு மார்க்சின் கூலியுழைப்பும் மூலதனமும் கட்டுரையில் இருந்து நக்சல்பாரி மரபு வரை எளிதாகப் புரிந்துவிடுகிறது. மெத்தப் படித்தவர்களுக்கு அதை புரிய வைப்பதில் இன்று வரை சிரமம் இருப்பது உண்மைதான்.
அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதால் அதன் புரட்சிகர மரபுகள் மறைந்துவிட்டதாக ஆகிவிடாது. நக்சல்பாரி இயக்கம், நக்சல்பாரியில் இன்று இல்லாவிட்டாலும், அன்று அது நாடு முழுவதும் அது காட்டுத் தீயாய் பரவியது. மேற்கு வங்கத்தின் வேறு பகுதிகளில், பீகாரில் தன் உறுதியான வேர்களை பரவ விட்டுள்ளது. அந்த மாபெரும் எழுச்சியில் அளப்பரிய தியாகம் செய்தவர்கள், அறியப்படாத, எழுதப்படாத கதாநாயகர்கள் பலர் இன்றும் இகக மாலெ விடுதலை வடிவத்தில் அதன் போற்றத்தக்க மரபை பாதுகாத்து வருகின்றனர்.
நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு தினத்தை ஒட்டி நக்சல்பாரி இயக்கத்தின் முக்கியமான நிகழ்வுகள் நடந்த இடங்களான பாரா ஜாரா ஜோட் மற்றும் நக்சல்பாரியில் மே 25 அன்று இகக மாலெ விடுதலை தோழர்கள் அதன் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் தலைமையில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மே 26 - 28 தேதிகளில் சிலிகுரியில் இகக மாலெ மத்திய கமிட்டி கூட்டம் நடந்தபோது, அது போன்ற கதாநாயகர்கள் சிலரை சந்திக்கும் பெருவாய்ப்பு ஏற்பட்டது.
மத்திய கமிட்டி கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அவர்கள் கூட்ட அரங்குக்குள் வந்தார்கள். மிகவும் எளிமையான தோற்றம் கொண்டிருந்தார்கள். அவர்கள் பிரதிநிதியாக வந்த அவர் பேசத் துவங்கியபோது அவர்களது எளிமையின் பின் இருந்த பிரம்மாண்டமும் கம்பீரமும் வியப்பில் வாயடைக்க வைத்தது.
அவர் பெயர் நேமு சிங். அவரது வயது, முழுவதுமாக நரைத்து விட்ட அவரது சிகையிலும் முகத்தின் லேசான சுருக்கங்களிலும் மட்டும் தெரிந்தது. அவர் நின்ற, அமர்ந்த தோற்றத்தில் ஓர் இளைஞருக்குரிய மிடுக்கு இருந்தது.
1978 டிசம்பர் 31. இகக மாலெயின் சீர்செய் இயக்கத்தின் உச்சகட்ட காலத்தின் ஒரு நாள். கட்சி வழி மாறிச்செல்லும் கட்டத்தில் இருந்தது. வெகுமக்கள் அணிதிரட்டல் நடக்கத் துவங்கியிருந்தபோதும் ஆயுதப் போராட்டம் கட்சியின் முக்கியமான நடவடிக்கையாக இருந்தது. நக்சல்பாரியோடு அழிந்துவிடாமல் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் பரவிய அந்த இயக்கத்தை அடியோடு அழித்துவிட மாநிலத்தின் அய்க்கிய முன்னணி அரசும் மத்திய காங்கிரஸ் அரசும் மிகத் தீவிரமான முயற்சிகளில் இருந்த காலம் அது.
நேமு சிங்கின் கிராமமான போரோபோது ஜோட் நக்சல்பாரிக்கு அருகில் இருக்கிறது. நக்சல்பாரி, கோரிபாரி, பான்சிதோ என்ற மூன்று ஒன்றியங்களை மய்யங்கொண்டு இயக்கம் நடந்துகொண்டிருந்தது. தோழர் நேமு சிங்கின் கிராமம் பான்சிதோ ஒன்றியத்தைச் சேர்ந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த ஒன்றியத்தில் கோஷ்புகுர் என்ற இடத்தில் காவல் புறநிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இயக்கத்தினர் ஆயுதங்களைக் கைப்பற்றினர். இந்த நடவடிக்கையில் தோழர் நேமு சிங் கமான்டர். இந்த நடவடிக்கையால் இகக மாலெ தோழர்கள் மீது காவல் துறையினர் கடுமையான வெறுப்பில் இருந்தனர்.
அன்று அங்கு கட்சியின் கூட்டம் ஒன்று நடக்கவிருப்பதும், அதில் தோழர் வினோத் மிஸ்ரா கலந்து கொள்ளக் கூடும் என்பதும் அரசுக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களை எப்படியாயினும் அழித்துவிட அரசு முடிவு செய்தது.
அங்கு கூட்டம் நடப்பது தெரிந்திருந்தாலும் குறிப்பாக எந்த இடத்தில் என அரசுக்குத் தெரியவில்லை. எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் 1979 ஜனவரி 1 அன்று காலை 7.30 மணி அளவில் போரோபோதுஜோட் கிராமத்தைச் சுற்றி வளைக்கின்றனர்.
அங்கு தோழர்கள் வினோத் மிஸ்ரா, நேமு சிங், தோழர் வினோத் மிஸ்ராவின் மெய்காப் பாளர் தோழர் தபன் சக்ரவர்த்தி, தேயிலைத் தோட்டத் தொழிலாளியான கோகுல் சென், தோழர் ரங்டா முர்மு, இன்னும் சிலர் அங்கு இருந்தனர். வரவிருக்கிற ஆபத்தை உணர்ந்த அவர்கள் அதை எதிர்கொள்ள தயாராகின்றனர். நவீன ஆயுதங்களுடன் படையினர் 200 பேர். இவர்களிடம் ஆயுதங்கள் இருந்தாலும் தோட்டாக்கள் போதுமான அளவு இல்லை. தப்பிச் செல்வது தவிர வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வழியில்லை. இரவு வந்தால் அதன் பாதுகாப்பில் தப்பிச் செல்லலாம். அது வரை நேரத்தை கடத்த வேண்டும்.
அங்கு ஓர் இடத்தில் கொத்தாக ஆறு குடிசைகள் இருந்தன. அந்த ஆறு வீடுகளில் எந்த வீட்டில் கூட்டம் நடக்கிறது என்பது படையினருக்குத் தெரியவில்லை. மொத்த கிராமத்தையும் சுற்றி வளைத்த படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் துவங்குகின்றனர். கிராமத்தில் இருந்த மக்கள் பல திசைகளிலும் ஓடுகின்றனர். இப்போது அந்த நான்கு தலைவர்கள் மட்டும் உள்ளே இருக்கின்றனர். அந்த ஆறு குடிசைகள் சுற்றி வளைக்கப்படுகின்றன.
குடிசைக்குள் இருந்து தோழர் கோகுல் சென் படையினர் நோக்கி நெருக்கமாக முன்னேறி படை வீரர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு திரும்புகிறார். தோழர் நேமு சிங் படையினர் நோக்கிச் சுடுகிறார். அப்போது தோழர் நேமு சிங் தோளில் குண்டு பாய்கிறது. ரத்தம் வழியத் துவங்குகிறது. தோழர் தபன் இதே போன்ற முயற்சி செய்ய, காவலர் ஒருவர் கொல்லப்பட தோழர் தபன் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து அந்த குடிசைகளை நோக்கி படையினர் சரமாரியாக சுடத் துவங்குகின்றனர். தோழர்கள் கோகுல் சென்னும் ரங்டா முர்முவும் காயமின்றி தப்ப, தோழர் வினோத் மிஸ்ராவின் கால்களில் ஏழு குண்டுகள் பாய்ந்து துளைத்து வெளியேறுகின்றன. இரண்டு கால்களிலும் ஏற்பட்ட காயங்களில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
மதியம் இரண்டரை மணி ஆகிறது. நேரம் கடத்த வேண்டும். உள்ளே யாருக்கும் எதுவும் ஆகிவிடவில்லை, ஆயுதம் இருக்கிறது, தாக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்று வெளியே உள்ள படையினர் நம்ப வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை துப்பாக்கியில் படையினர் நோக்கிச் சுடுகிறார்கள். இது படையினரை அதற்கு மேல் முன்னேறி இன்னும் நெருங்கி வந்து விடாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் படையினர் தங்களுக்கு மேலும் படையினர் வேண்டும் என்று கேட்டுவிட்டு தங்கள் சுற்றி வளைப்பை விட்டுவிடாமல் அதே இடத்தில் தொடர்ந்து நிற்கிறார்கள்.
ராணுவ விதிகளின் படி சுற்றி வளைத்து நிற்பவர்கள், முழு வட்டத்தில் நிற்பதில்லை. அப்படி நின்றால், அவர்கள் சுடும்போது அவர்களது பக்கமே இழப்பு நேரும். எனவே ஏதாவது ஒரு பக்கம் யாருமற்ற பகுதியாக இருக்க வேண்டும். அந்தப் பகுதியின் மூலம் வெளியே சென்றுவிட முடியும். இந்த உத்தியை கைகொள்ளத் தயாராகிற தோழர் நேமு சிங், நாம் இங்கிருந்து நிச்சயம் வெளியேறுகிறோம் என்று தோழர் வினோத் மிஸ்ராவிடம் சொல்கிறார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு குண்டு செலுத்துவதுடன், ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்குச் செல்ல தரையைத் தோண்டி பாதையமைக்கும் வேலையும் நடக்கிறது. நான்கு பேரில், கடுமையான காயங்களுடன் இருப்பவர்கள் இரண்டு பேர். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்ல முடியாது. ஆயுதங்களை விட்டுவிட்டு ஒவ்வொரு வீடாக மாறிச் செல்கின்றனர். படையினர் தங்களது சுற்றி வளைப்பில் எந்த இடத்தில் இடைவெளி விட்டிருக்கக் கூடும் என்று நேமு சிங் சரியாக கணிக்கிறார். அந்த இடம் நோக்கி வீடுகளுக்குள்ளேயே நகர்கின்றனர். தோழர் வினோத் மிஸ்ரா ஊர்ந்து செல்கிறார்.
இரவு வருகிறது. வெளியில் இருந்து மீண்டும் துப்பாக்கிச் சூடு நடக்கத் துவங்குகிறது. தோழர் கோகுல் சென் கொல்லப்படுகிறார். குடிசைகள் பற்றி எரிகின்றன. மற்ற மூன்று தோழர்களும் இடைவெளி இருந்த பகுதியின் வழியாக கிராமத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர். ஊர்ந்தே செல்வது, யாரும் இல்லாத இடத்தில் எழுந்து நடப்பது இப்படியாக ஒரு கி.மீ சென்று அடுத்த தங்குமிடத்தை (ஷெல்டர்) அடைகின்றனர்.
காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை. அந்த பழங்குடி மக்களிடமும் அந்த இரவு நேரத்தில் அவர்களுக்குத் தர எதுவும் இல்லை. தோழர்கள் இரண்டு பேரும் வேக வைக்கப்படாத அரிசியை மென்று விழுங்கி தண்ணீர் குடித்து இளைப்பாறுகின்றனர். காயங்களுக்கு கட்டு மட்டும் போடப்பட்டு, சீழ் பிடிக்காமல் இருக்க ஊசி போடப்படுகிறது. தோழர் வினோத் மிஸ்ராவுக்கு தோழர் நேமு சிங்கும் தோழர் நேமு சிங்குக்கு தோழர் வினோத் மிஸ்ராவும் ஊசி போடுகின்றனர். தலைமறைவு நடைமுறை விதிகள் படி முதல் தங்குமிடத்தில் அதிக நேரம் தங்கக் கூடாது. இரண்டாவது தங்குமிடத்திலும் அப்படியே. குறைந்தபட்சம் மூன்றாவது தங்குமிடத்துக்கு சென்றுவிட வேண்டும். தோழர்கள் நேமு சிங்கும் வினோத் மிஸ்ராவும் அந்த இரவு நேரத்தில் மீண்டும் நகரத் துவங்குகின்றனர்.
போரோபோது ஜோட் கிராமத்தில் சுற்றி வளைத்திருந்த படையினர், உள்ளே இருந்த அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர், விடிந்த பிறகு அவர்கள் உடல்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அங்கேயே காத்திருக்கின்றனர். காலையில் அவர்களுக்கு தோழர் கோகுல் சென் உடல் மட்டும் கிடைக்கிறது. மற்றவர்கள் தப்பி விட்டார்கள் என்பது அவர்களது வெறுப்பை மேலும் அதிகரிக்கிறது. சிலிகுரி முழுவதும் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மருத்துவமனைகள், மருந்து கடைகள் எல்லாம் சலித்து எடுக்கப்படுகின்றன. அவர்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தோழர்கள் அடுத்து நகர வேண்டும். தீவிர தேடுதல் நடவடிக்கைகள் இருந்ததால் கொல் கத்தா செல்வது உசிதமல்ல என்று தோழர் வினோத் மிஸ்ரா கருதுகிறார். கொல்கத்தாவுக்கு எதிர்த் திசையில் நகர முடிவு செய்கிறார். இருவரும் அசாம் நோக்கிச் செல்லத் துவங்குகின்றனர். தோழர் டி.பி.பக்ஷி அப்போது அசாமில் பணியாற்றி வந்தார்.
சிலிகுரியில் இருந்து கவுகாத்திக்குச் செல்ல மேற்கு வங்க எல்லையைக் கடக்க வேண்டும். எல்லைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் இருந்தன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆட்டோ போன்ற ஒரு வாகனத்தில் வந்து மது அருந்தி ஆடிப்பாடி மகிழ்ந்து செல்வது வழக்கம். அது போன்ற ஒரு வாகனத்தில் தோழர்கள் இரண்டு பேரும் ஏற்றப்பட்டனர். அவர்களை மறைத்துக் கொண்டு அவர்களைச் சுற்றி பழங்குடி மக்கள் நின்றனர். ஆடிப்பாடி, படையினர் கவனத்தைத் திசைத் திருப்பி இரண்டு பேரையும் கவுகாத்திச் செல்ல ரயிலில் ஏற்றி விட்டுத் திரும்பினர்.
கவுகாத்தியை அவர்கள் வந்தடைந்தது பற்றியும் அவர்கள் நிலைமை பற்றியும்  இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு தோழர் பக்ஷிக்குத் தெரிய வருகிறது. அவர் அவர்களை அழைத்துச் செல்ல வந்தபோது, தோழர் வினோத் மிஸ்ரா காயங்களில் இருந்து கடுமையான வீச்சம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. வீச்சத்தை மறைக்க வாசனை திரவியம் வாங்கி காயத்தின் மேல் ஊற்றினார். பிறகு காயப்பட்டிருந்த இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். துப்பாக்கியால் சுடப்பட்டு அய்ந்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு முறையான சிகிச்சை துவங்கியது.
இன்று நம்முடன் தோழர் வினோத் மிஸ்ரா இல்லை. அவர் உருவாக்கிய கட்சி இருக்கிறது.  நாடு முழுவதும் இருக்கிறது. இந்தியாவின் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரியின் மரபை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
தோழர் நேமு சிங் போன்ற, தோழர் நேமு சிங்கையும் தோழர் வினோத் மிஸ்ராவையும் அந்த நெருக்கடியான சமயத்தில் பாதுகாத்த, வரலாற்றில் பிரபலமாக அறியப்படாத தலைவர்கள் பலர் நம்முடன் வாழ்கிறார்கள்.
வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் பெரிதாக எழுதப்படாத அவர்களது அர்ப்பணிப்புமிக்க பணிகள், அதற்காக அவர்கள் சந்தித்த ஆபத்துகள், இழப்புகள், வெற்றிகள் போன்றவற்றை ஆவணப்படுத்த இகக மாலெ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

நக்சல்பாரி தினம் அனுசரிக்க சுவரொட்டி ஒட்டும் எங்கள் தோழர்களை நீங்கள் இன்று தடுத்துவிடலாம். ஒரு விசயத்தைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். வரலாறு எங்களுடையது. எதிர்காலமும் எங்களுடையது.

Search