COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 1, 2017

அதிகபட்ச தலைவரின் ஆட்சியில் புதிய இந்தியா

அந்தாரா தேவ் சென்

(2017, மே 24 தேதிய டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில் வெளியான கட்டுரை)

நம்புவதா? வேண்டாமா?.... மோடியின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிவுறும்போது வாழ்க்கை அழகாக இருப்பதாக நமக்குச் சொல்லப்படுகிறது. ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது, சீர்திருத்தங்கள் மக்கள் வாழ்க்கையை உயர்த்திவிட்டன, நாம் இப்போது ஒரு சுத்தமான இந்தியாவில், அழகான இந்தியாவில் வாழ்கிறோம், நமக்கு வேலை இருக்கிறது, உணவு இருக்கிறது, பொருளாதார வளர்ச்சி இருக்கிறது, நாம் கூடுதல் செல்வங்களை உருவாக்குகிறோம், எனவே விவசாயிகள் முதல் ஆலை அதிபர்கள் வரை கொண்டாடுவோம் என்று சொல்லப்படுகிறது. மோடி நமது அதிகபட்ச தலைவர் என்று, அவர் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் தீர்மானகரமாக செலுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது
. அவர் ஏழைகள் பக்கம் இருக்கிறார் என்றும் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு நாளும் நாம் காணும் செய்திகள், நமது நாட்டுக்கு என்ன நடக்கிறது என்று நம்மை கவலையுறச் செய்கின்றன. கும்பலாகச் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெரும்பான்மைவாத கண்காணிப்புக்கு அரசின் ஒப்புதல் இருக்கிறது. ஒரு கும்பல் முன்வைக்கும் நீதி சாதாரணமான தாகிவிட்டது. குடிமக்கள் கொல்லப்படும்போது காவல்துறை அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறது. வரலாறு அப்பட்டமாக திரித்து எழுதப்படுகிறது. அரசியல்சாசனம் உத்தரவாதம் செய்துள்ள ஜனநாயக உரிமைகள் கண்டனத்துடன் புறந்தள்ளப்படுகின்றன.
ஜனநாயகத்தின் கடைசி தூண்கள் கூட அச்சுறுத்தப்படுகின்றன. நீதி எப்போதும் கண் கட்டி இருப்பதில்லை. அது எப்போதும் நீதியானதாகவும் இருப்பதில்லை. அரசியல்ரீதியாக பிரச்சனைக்குரிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் பரஸ்பரம் தீர்வு காணுங்கள் என அது சொல்லத் துவங்கிவிட்டது. ............ மோடி ஆட்சியின் மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் அரசியல் சாசன உத்தரவாதங்களை பின்னுக்குத் தள்ளுவதில் அரசாங்கம் வெற்றிகண்டுவிட்டது. .... அரசியல்சாசனம் உறுதி செய்திருக்கிற, அனைவரையும் உள்ளடக்கிய, பன்மைவாத, பகுத்தறிவுபூர்வமான இந்திய தேசியத்தின் இடத்தில், ஒரு தனிப்பிரிவினருக்கான, பிளவுவாத, நம்பிக்கை அடிப்படையிலான இந்து தேசியவாதம் வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணத் தவறுகிறோம்; ஊடகங்களின் பளபள விவாதங்களும் நம்மை குழப்புகின்றன.
இப்போது, திடீரென்று, நாம், எந்தத் தேசத்தினர் என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட, ஒரே விதமான உரிமைகள் கொண்ட இந்தியர்கள் அல்ல. இன்று நாம் இந்துக்கள். இசுலாமியர்கள். கிறித்துவர்கள். சீக்கியர் அல்லது இன்ன பிறர். நாம் தலித்துகள் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் அல்லது உயர்சாதியினர். நாம் பெண்கள் அல்லது ஆண்கள். நமது உரிமைகள் இவற்றுக்கு ஏற்றாற்போல் மாறுபடுகின்றன. நமது தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்டது அல்லது என்று இந்த மூன்று ஆண்டுகளில் நாம் நம்பத் துவங்கியுள்ளோம். நமது அரசாங்கம் திடீரென நமது ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்குகிறது. நாள் ஒன்றில் அல்லது ஒரு வாரத்தில் நமது சொந்த பணத்தில் நாம் எவ்வளவு செலவழிக்கலாம் என்று நமக்குச் சொல்கிறது. தன்விருப்ப ஆதார் அட்டை கட்டாயம் என்கிறது. அது இல்லை என்றால் உங்களுக்கு உரிமையானதை நீங்கள் பெற முடியாது; அது இல்லையென்றால் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மதிய உணவு கிடைக்காது. எனவே எல்லாவற்றுடனும் இணைக்கப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அரசாங்கமும் அதன் நட்பு நிறுவனங்களும் உங்களது எல்லா விவரங்களையும் வைத்திருப்பார்கள். தரவு திருடுபவர்களுக்கு உகந்த நமது நாட்டில் அவர்களிமும் நமது விவரங்கள் இருக்கும்.
மற்றவர்களது தனிப்பட்ட விசயங்களில் தலையிடலாம் என்று நாம் நம்பத் துவங்கிவிட்டோம். ஒருவர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று நாம் கருதினால் அவரை அடித்துக் கொலை செய்யலாம். பசு நமது தாய் என்பதால் மாடு விற்பனை செய்யும் ஒருவரை கும்பலாக அடித்துக் கொல்லலாம். ஓர் இந்துப் பெண்ணுடன் ஓர் இசுலாமியர் ஓடிச் சென்று விட இன்னொரு இசுலாமியர் உதவி செய்தால் நாம் அவரை கொன்றுவிடலாம். ஓர் இந்துப் பெண்ணுடன் பழகினார் என்பதற்காக நாம் ஒருவரை அவரது வீட்டில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அடிக்கலாம். பசு திருடினார், மாட்டுக் கறி தின்றார், குழந்தை திருடினார், பாலியல் வன்முறை செய்தார் என்று எந்த வதந்தி வந்தாலும் அதனடிப்படையில் யாரையும் கொலை செய்யலாம். நீங்கள் செய்வது சரியா, தவறா என்பது பொருட்டல்ல. அப்படிச் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிகிறது. அரசாங்கத்தின் ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது.....
பன்மைவாதத் தன்மைகொண்ட நமது நாட்டில் மதச்சார்பின்மை கோட்பாடுகளை புறந்தள்ளிவிடுவது சாத்தியம் என நாம் காண்கிறோம். இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையில் எளிதாக மோதல் விளைந்துவிடக் கூடிய, பாப்ரி மசூதி, ராம்ஜென்ம பூமி இருக்கிற உத்தரபிரதேசம் போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு மாநிலத்தில் இசுலாமியர் விரோத கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பு குழு தலைவர் ஒருவரை நீங்கள் முதலமைச்சர் ஆக்கலாம்.
சில விசயங்கள் வெகுதூரத்தில் இல்லை. பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்கும் ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் நடக்கும் ஒரு கருத்தரங்கை இந்து யாகம் நடத்தி துவக்கிவைக்கிறோம். பல்கலை கழகங்களில் சுதந்திரச் சிந்தனையைத் தடுக்கிறோம். ஓர் இந்து வரலாற்றை உருவாக்குவதற்காக நாம் பாடப் புத்தகங்களை மாற்றுகிறோம். மகத்தான இசுலாமிய மன்னர்களை இழிவுபடுத்தி, நாட்டுக்கு இசுலாமியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அழித்துவிட முயற்சி செய்கிறோம். நினைவுச் சின்னங்களின், தெருக்களின் பெயர்களை மாற்றுகிறோம். டில்லியின் அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் வைக்கிறோம்.
தாஜ்மகால் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற இந்து கோயில், குதுப் மினார் உண்மையில் விஷ்ணு ஸ்தூபி என்கிற இந்து கட்டிடம் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. விமானங்களும், சோதனைக் குழாய் குழந்தைகளும் பண்டைய இந்து இந்தியாவில் உருவாக் கப்பட்டவை என்றும் நமக்குச் சொல்லப்படுகிறது....... பகுத்தறிவின் இடத்தில் மதநம்பிக்கை வந்துவிடும்போது, வன்முறையும் உடனடி நீதியும் நாட்டின் சட்டமாகிவிடும்போது, நமது முன்னோர்களின் நாட்டில் இருந்து நாம் சென்று விடுகிறோம். தர்க்கத்தில், சகிப்புத்தன்மையில், புதிய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில், கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானபூர்வ அறிவு, உடல் வலிமையை நம்பும் பெரும்பான்மைவாதத்துக்கு வழிவிட்டுவிடுகிறது; இந்திய தேசியம் இந்து தேசியத்துக்கு வழிவிட்டுவிடுகிறது.

அதிகபட்ச தலைவரின் மூன்று ஆண்டு கால ஆட்சியில், நாம் தலை குனிந்து நடக்கவும், பிரச்சனைகளில் இருந்து நமது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளவும் பழகிவிட்டோம். புத்தரின், நானக்கின், கபீரின், காந்தியின், தாகூரின், நேருவின், அம்பேத்கரின் பூமியில் இருந்து விலகிவிட பழகிவிட்டோம். பகுத்தறிவின் தெளிந்த நீர் பாய்ந்த, இந்திய குடிமக்கள் அனைவரும் தாங்கள் நினைத்ததை அச்சமின்றி பேசி, தலை நிமிர்ந்து நடந்த நமது தாய்நாட்டில் இருந்து விலகிச் சென்றுவிட பழகிவிட்டோம்.

Search