இஸ்ரேல்
சிறைகளில் பாலஸ்தீன போராளிகள்
ஏப்ரல் 17 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
எஸ்.குமாரசாமி
இஸ்ரேல்
ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடி, இஸ்ரேலிய உயர்
பாதுகாப்பு சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ள 1500 போராளிகள் ஏப்ரல் 17, 2017 முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தி
வருகின்றனர். 300 குழந்தைகள்
உட்பட 6500 பாலஸ்தீனர்கள்
இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர்.
1984லிருந்து 33 வருடங்களாக கரீம் யூனிஸ்மஹர் யூனிஸ் சிறையில்
உள்ளனர். ஏகாதிபத்திய ஆதரவுடன் யூத இனவாத ஜியானிஸ்ட்கள் பாலஸ்தீனத்தை முற்றிலுமாக
ஆக்ரமித்த 50ஆவது ஆண்டில்,
இந்த பட்டினிப் போராட்டம்
துவங்கி உள்ளது.
ஜுன் 5,
1967ல் அரபு நாடுகளின் மீதான 6 நாட்கள் போரை இஸ்ரேல் துவக்கியது. ஜுன் 10 அன்று எகிப்திடமிருந்து மொத்த சினாய் பாலைவனம் மற்றும் பாலஸ்தீன மக்கள் திரள்
குவிந்திருந்த மத்தியத் தரைக்கடல் காசா திட்டையும், ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும் கிழக்கு
ஜெருசலேத்தையும், சிரியாவிடமிருந்து
கோலன் குன்றுகளையும் கைப்பற்றியது. பழைய ஜெருசலத்தின் மேற்கு சுவர் முன் நின்ற
இஸ்ரேலிய தளபதி மோஷே தயான், ‘நாங்கள் எங்கள்
புனிதத் தலங்களுக்கு வந்துவிட்டோம். அவற்றை விட்டு இனி ஒரு போதும் செல்ல மாட்டோம்’
என்றார். இஸ்ரேல் மற்றும்
எகிப்திற்கிடையிலான கேம்ப் டேவிட் உடன்பாட்டின்படி, இஸ்ரேல் சினாயிலிருந்து பின்வாங்கியது. முதல்
பாலஸ்தீன எழுச்சிக்குப் பிறகு (இன்டிஃபடா), 1990களின் துவக்கப் பகுதி ஆஸ்லோ ஒப்பந்தங்களின் படி,
இஸ்ரேல் மேற்கு கரையிலும்
காசாவிலும், பாலஸ்தீன
அத்தாரிட்டி நிறுவ சம்மதித்தது. 2000 முதல் 2005 வரை நடந்த
இரண்டாவது எழுச்சிக்குப் பிறகு (இன்டிஃப்டா), காசா திட்டிலிருந்து போர் வீரர்களையும்
ஆக்கிரமிப்பு யூதக் குடியிருப்புக்களையும் இஸ்ரேல் திரும்பப் பெற்றது.
1969ல் வாஷிங்டனில் ஜோர்டான்
அரசர் உசேன் சொன்னார்: ‘இஸ்ரேல் பூமியையோ
அல்லது அமைதியையோ, அவற்றில்
இரண்டில் ஒன்றைத்தான் பெற முடியும். ஒரே நேரம் இரண்டையும் பெற முடியாது’ என்றார். இஸ்ரேல், 50 ஆண்டுகளாக அமைதியைத் தேர்வு செய்யவில்லை.
ஆக்கிரமித்த பூமியையே தேர்வு செய்துள்ளது.
இருபது லட்சம்
பாலஸ்தீன அரபு மக்களைக் கொண்டுள்ள காசா திட்டு, இஸ்ரேலின் காலனியாக உள்ளது. இஸ்ரேலுக்கும்
எகிப்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது. உலகத்தின் மிகப் பிரும்மாண்டமான
திறந்தவெளி சிறையாக உள்ளது. வருங்கால பாலஸ்தீன அரசின் தலைநகராக அமைய வேண்டிய
ஜெருசலேம், சிரியாவிடமிருந்து
கைப்பற்றப்பட்ட கோலன் குன்றுகள் இன்னமும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில்தான் உள்ளன.
ஆக்கிரமிப்புக்கு
எதிராக, சிறுமைப்படுத்துதலுக்கு
எதிராகப் போராடி வருகிற பாலஸ்தீனர்களை, பயங்கரவாதிகள் என எப்போதுமே இஸ்ரேல் சித்தரித்து வந்துள்ளது. சர்வதேச
பயங்கரவாதிகள் பட்டியிலில் அய்க்கிய அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாம் இடத்தில் இருப்பது இஸ்ரேல் ஆகும்.
பாலஸ்தீன
போராளிகள், இஸ்ரேல்
ஆக்கிரமித்த பகுதிகளிலேயே தங்களைச் சிறையில் வைத்திட வேண்டும் எனக் கோருகிறார்கள்.
சர்வதேச விதிகள்படி சிறையில் தங்களை உறவினர்கள் காண அனுமதி வேண்டும் எனவும்,
சிறை நிலைமைகள் மேலானதாக
வேண்டும் எனவும் கோருகிறார்கள். 1967லிருந்து சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால், மருத்துவக் காரணங்களை முன்னிட்டு 50 சிறைவாசிகள் இறந்தனர்; சித்திரவதைக்கு ஆளாகி 150 பேர் இறந்துள்ளனர். 5ணீ வருடங்களாக சிறையில் இருக்கும் ஒருவரின்
குடும்பத்தினர், இதுவரை, ஒரே ஒரு முறைதான் அவரைச் சந்திக்க
அனுமதிக்கப்பட்டனர் என ஆம்னெஸ்டி இன்டர்னேஷனல் குற்றம் சுமத்துகிறது.
நீதிமன்றத்திற்கே அழைத்துச் செல்லப்படாமல், ‘நிர்வாகக் காரண சிறைவாசி’, ‘இரகசிய சாட்சிய அடிப்படையிலான சிறைவாசி’
என 550 பேர் உள்ளனர். 2012ல் சிறைவாசிகள் ஒரு பெரும்திரள் பட்டினிப்
போராட்டம் நடத்தினர்.
நிர்வாகக் காரண
சிறைவாசத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும், குடும்பத்தினர் கூடுதலாகக் காண வாய்ப்பு
தருவதாகவும், அப்போது
வாக்குறுதி அளித்த இஸ்ரேல், வழக்கம்போல்
வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியது.
2002லிருந்து 15 ஆண்டுகளாக ஃபடா இயக்கத் தலைவர் மார்லன்
பர்கவுட்டி சிறையில் உள்ளார். அவரே ஏப்ரல் 17, 2017 துவங்கிய காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை
முன் இருந்து வழிநடத்தினார். தற்போதைய பாலஸ்தீன ஆட்சித் தலைவர் 82 வயது மஹ்மூத் அப்பாசுக்குப் பிறகு மார்லன்
பர்கவுட்டி (58 வயது) ஆட்சித்
தலைவர் ஆக, ஏகப்
பெரும்பான்மை பாலஸ்தீன மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புக்கள் சொல்கின்றன.
பாலஸ்தீன் இருப்பதும், பாலஸ்தீனர்கள்
எதிர்ப்பதும், குற்றம் என்றும்,
தான் செய்வதெல்லாம் நியாயம் என்றும், இஸ்ரேல்
சொல்கிறது. பர்கவுட்டி, போராட்டம்,
மேலான மானுடத் தன்மை
கொண்ட, நியாயமான, கவுரவமான சிறை நிலைமைகளை அடைவதை நோக்கமாகக்
கொண்டது என்கிறார். இஸ்ரேல், பர்கவுட்டியை
தனிமைச் சிறையில் அடைத்துவிட்டது. காசா திட்டில் ஆட்சி செய்யும் ஹமாசும் பட்டினிப்
போராட்டத்தை ஆதரிக்கிறது. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட புதிய பாலஸ்தீன
அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும், ஃபடா ஹமாஸ்
அமைப்புக்கள் இணைந்து கவுரவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராட வேண்டும் என
மார்லன் பர்கவுட்டி அறைகூவல் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவ
அமைச்சர் அவினார் லீபர்மன், பட்டினிப் போராட்டம்
இருப்பவர்கள் சாவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என, தம் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹிட்லர்
வேட்டையாடியதால் உலகின் அனுதாபம் பெற்று, சர்வதேச நிதி மூலதன உதவியுடன் அதன் தேவைக்காக உருவான இஸ்ரேல், இன்று நீடித்ததொரு பாசிச நாடாக மாறி உள்ளது,
வரலாற்றின் சோக முரண்.
ஏப்ரல் 17
முதலான மார்லன்
பர்கவுட்டி மற்றும் அவரது பாலஸ்தீன தோழர்களின், காலவரையற்ற பட்டினிப் போராட்டத்திற்கு ஆதரவாக,
நமது கரங்களையும்
குரல்களையும் இணைத்துக் கொள்வோம்.