COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 1, 2017

தலையங்கம்

நீதிமன்றத் தீர்ப்புக்களும் கட்சிகளின் செயல்பாடுகளும்

தமிழ்நாட்டில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புக்கள் ஜனநாயகத்தின் வேரில் நச்சு கலக்கும் தன்மை கொண்டவை. மாண்புமிகு நீதிபதிகள் நல்ல எண்ணத்தோடு, நோக்கத்தோடு தீர்ப்பு எழுதுவதாக கருதியிருக்கலாம். ஆனால், நரகத்துக்கான பாதை பல நேரங்களில் நல்லெண்ணங்களால் போடப்படுகிறது.

கல்வி தனியார்மயமானதும் வர்த்தகமயமானதும்தான் பிரச்சனை, தாய்மொழி கல்வி, அறிவியல்பூர்வமான கல்வி பலப்படுத்தப்படாததால் சமூக நீதியும் ஜனநாயகமும் மறுக்கப்படுகிறது, வழங்கப்படுகிற கல்வி தகுந்த வேலை வாய்ப்புக்கள் மூலம் வாழ்வுரிமையை உறுதி செய்யவில்லை போன்ற விசயங்களை எல்லாம் கணக்கில் கொள்ளாத ஒரு தீர்ப்பு, ஆசிரியர்கள் மீது சாட்டையை வீசுகிறது. ஆசிரியர்கள் சங்கம் வைப்பது சரியல்ல என்கிறது. தீர்ப்பு, அதிகார வரம்பு தாண்டி கொள்கை வகுக்கிறது, சட்டம் இயற்றும் இயல்பு கொண்டுள்ளது என்பவை சட்டபூர்வமான விமர்சனங்கள் மட்டுமே. தாய்மொழி கல்விக்கு கழக ஆட்சிகள் கவனம் செலுத்தவில்லை, எம்ஜி ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா மூவருமே கல்வியை காசு கொட்டும் தொழிலாக மாற்றி பொது நிலத்தை பொது பணத்தை கல்வி முதலாளிகளுக்கு வாரித் தந்தார்கள் என்பதை தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி சந்துரு, தீர்ப்பு, அரசியல்சாசனம் வழங்கும் அமைப்பாகும் உரிமையை மீறுகிறது என்று சொல்வது சரிதான். ஆனால், அதை விட முக்கியமாக, தீர்ப்பு, மக்கள் விரோத கல்வி முறையின் அடிப்படைகளின் நுனியைக் கூட தொட்டுப் பார்க்கவில்லை என்பதுதான் முதன்மையான விமர்சனமாக இருக்கும். உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டு நிரபராதிகளை தண்டிப்பது நீதியாகாது.
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி பெறாத அனைத்து போராட்டங்களையும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கச் சொல்லி ஒரு பொது நல வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது. இந்தத் தீர்ப்பை சியாமளபுரத்தில் சாராயக் கடை வேண்டாம் எனப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்து அரசிடம் பதவி உயர்வும் பெற்ற காவல் அதிகாரி பாண்டியராஜனுக்கு சமர்ப்பணம் செய்யலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில்தான் ஆகக் கூடுதல் போராட்டங்கள் நடக்கின்றன என்று சட்டமன்றத்திலேயே சொன்னார். போராட்டங்கள் நல்ல நாள் பார்த்து நட்சத்திரங்கள் பார்த்து நல்ல வேளை பார்த்து நடந்ததாக உலக வரலாறு சொல்லவில்லை. தேவாலயங்களின் வாயில்களில் இருந்த கந்துவட்டிக் கயவர்களை ஏசுபிரான் அரசு அனுமதி பெற்று சாட்டையால் அடித்து விரட்டவில்லை. தமிழ்நாட்டில் மேல் சாதி நிலப்பிரபுக்கள் சவுக்கடி, சாணிப்பால் கொண்டு உழவர்களை தண்டித்தபோது, அந்த உழவர்களும் வறியவர்களும் அரசு அனுமதி பெற்று நிலப்பிரபுத்துவத்தின் நெஞ்சுக்குழியில் கால் வைக்கும் போராட்டங்கள் நடத்தவில்லை. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன பெரியார், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்றும் கூடவே சொன்னார். அரசு அனுமதி பெற்று ஆத்திரம் கொண்டு அடிக்க முடியாது. தமிழ்நாட்டின் மக்கள் பெருமளவுக்கு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் மட்டுமில்லாமல் பிற அடிப்படையான சமூகக் கலாச்சார பொருளாதார போராட்டங்களிலும் ஈடுபட்டதால்தான், இங்கே ஓரளவுக்காவது தலித் நீதிபதிகளும் பெண் நீதிபதிகளும் கணிசமான பார்ப்பனர் அல்லாத நீதிபதிகளும் இருக்கின்றனர். இந்தி எதிர்ப்புப் போராட்ட மொழிப் போர் தியாகிகளை அனைவரும் போற்றுகிறோம். தாளமுத்து, நடராஜன் போன்றோரும் இடதுசாரிகளும் அனுமதி பெற்று இந்தித் திணிப்பை எதிர்க்கவில்லை. பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண் டேலா, பகத்சிங் ஆகியோர் எல்லாம் அனுமதி பெற்று போராட முடிவு எடுத்திருந்தால், நாடுகள் விடுதலை அடைந்து இருக்காது.
மக்கள் சமூகத்தில் சட்டம் ஒழுங்குக்கு இடமே இல்லை என்பதல்ல வாதம். தமிழ்நாட்டில் மாநகரங்களுக்கு மட்டுமே மாநகரக் காவல் சட்டம் பொருந்தும். மாநகரக் காவல் சட்டம் அல்லாத, பிரிட்டிஷ் காலத்தின் மற்றொரு காவல் சட்டமே, தமிழ்நாடு முழுவதும் பொருந்தும். அடிமைப்படுத்திய வெள்ளைக்காரர்கள் காலத்தின் அந்தச் சட்டத்தில், போராட்டங்களுக்கு முன் அனுமதி வாங்கும் சரத்துக்கள் இல்லை.
கட்டற்ற மக்கள் விரோத வன்முறை, தாங்க முடியாத அநீதிகள், ஆட்சியாளரின் குற்றமய அலட்சியம் ஆகியவை தலைவிரித்தாடும்போது, மக்கள் போராட்டங்கள் வெடித்து எழுவது மனித இயல்பு. மனித இயல்புக்குப் போடப்படும் விலங்குகளை நிச்சயமாக மனிதர்கள் உடைப்பார்கள். மேல், கீழ், இருப்பவர், இல்லாதவர் எனச் சமூகம் பிளவுண்டுள்ளபோது, அரசு, சுரண்டுபவர், ஒடுக்குபவர், அநீதி இழைப்போர் பக்கம் நிற்கும்போது, அவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது, அவற்றை சட்டம் ஒழுங்கு கொண்டு கையாளாமல், சமூக பொருளாதார அரசியல் வரலாற்று கூருணர்வோடு அணுகுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
கொள்ளையைத் தொடர, கொள்ளையடித்ததைக் காப்பாற்றிக் கொள்ள அஇஅதிமுக ஆட்சி, மத்திய அரசிடம் மண்டியிட்டுள்ளது. பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தோடு, தினகர னும் போட்டி போட்டுக்கொண்டு பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கின்றனர். கார்ப்பரேட், இந்துத்துவா, பாஜக ஆட்சியின், பிராந்திய வடிவமே அஇஅதிமுக ஆட்சி. வெடித்தெழுந்த விவசாயப் போராட்டங்களால், மத்திய அரசு மூன்றாண்டுகள் சாதனை தம்பட்டத்தை அடக்கி வாசித்தது.
விவசாய நெருக்கடி நகரங்களுக்கு உபரி மக்களைத் தள்ளி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் துன்பத்தில் தள்ளியுள்ளது. கொத்து கொத்தாய் செத்து மடிந்த விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அரசியல் கட்சிகள் வியாபாரிகள் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 25, 2017 அன்று வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தனர். அன்று அந்த அழைப்பை ஏற்று வேலை நிறுத்தம் செய்த பிரிக்கால் தொழி லாளர்கள் 840 பேருக்கு அந்த நிர்வாகம் தண்டனையாக 9 நாட்கள் சம்பளம் பிடித்தது. இந்த அநீதிக்கு எதிரான பட்டினிப் போராட்டம் ஜுலை 3 அன்று 15ஆம் நாளில் நுழைந்துள்ளது. இன்று வரை, ஆதரவு குரல் எதுவும் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை. ஆனால், இந்தப் போராட்டத்தை தொமுச உள்ளிட்ட சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், அறிவாளிகள் போன்ற எல்லா பிரிவினரும் ஆதரிக்கின்றனர். பாஜக வேட்பாளரை ஓடோடிச் சென்று ஆதரிக்கும் அஇஅதிமுக ஆட்சி, பட்டினிப் போராட்டம் நடத்துபவர்களை இன்று வரை என்ன, ஏது என்று கேட்கக் கூட இல்லை.

மக்களுக்குச் சாதகமான முடிவுகளை, மக்களுக்கான மாற்றங்களை, மக்கள் போராட்டங்கள் மூலம் சாத்தியமாக்கும் மக்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்வோம்.

Search