சோவியத் ரஷ்யா இரண்டாம்
உலகப் போரை எதிர்கொள்ள நேர்ந்தது
நிறைவு பகுதி
1945 ஏப்ரலில் மேற்கு
முனையில் மட்டும் அச்சு நாடுகளின் படையினர் 15 லட்சம் பேர் நேச நாடுகளிடம் சரணடைந்தனர்.
கிழக்கு முனையில் 8 லட்சம் பேரும்
இத்தாலியில் ஜெர்மானிய போர் வீரர்கள் 1,20,000 பேரும் சரணடைந்துவிட்டனர். போர்க்
குற்றவாளிகள் பலர் தப்பிச் சென்றனர்.
ஜெர்மனியில்
சித்திரவதை முகாம்களிலும் கட்டாய உழைப்பு கூடங்களிலும் இருந்தவர்கள்
விடுவிக்கப்பட்டனர்.
போரில்
நேசநாடுகளின் வெற்றி உறுதியாக தெரிந்த போதே, போர் இறுதியாக முடிவுக்கு வரும் முன்பு,
கிரிமியாவின் யால்டாவில் 1945 பிப்ரவரியில் ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் சந்தித்தனர். அந்த சந்திப்பில்
பசிபிக் போரில் சோவியத் ரஷ்யா இறங்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அந்த
சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள், போர் முடிந்த பிறகு 1945 ஜுலை - ஆகஸ்டில் ஜெர்மனியின் போட்ஸ்டேமில் நடந்த
மாநாட்டில் இறுதியாயின. இந்தச் சந்திப்பு நடந்த போது, ரூஸ்வெல்ட் மரணமுற்று அவரது இடத்தில் ட்ரூமேன்
இருந்தார். இங்கிலாந்தில் சர்ச்சில் தேர்தலில் தோல்வியுற்று அவரது இடத்தில் அட்லி
இருந்தார். முந்தைய சந்திப்புகளின் தொடர்ச்சி இந்த சந்திப்பில் இல்லாததும்,
ஸ்டாலின் மீதான
ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் கூடுதல் எதிர்ப்புணர்வும் ஸ்டாலின் தரப்பு
முன்வைப்புகள் ஒப்புக்கொள்ளப்படுவதை சிரமமாக்கின.
மன்சூரியாவில்
ஜப்பான் மீதான போரில் அய்க்கிய அமெரிக்காவுடன் இணைய யால்டா சந்திப்பிலேயே ஸ்டாலின்
ஒப்புக்கொள்ள நேர்ந்தது. ஜெர்மனி சரணடைந்த பிறகு உள் நாட்டில் புனரமைப்பு பணிகள்
மேற்கொள்ள வேண்டிய அவசர அவசியம் இருந்தபோதும் போட்ஸ்டேம் மாநாட்டில் ஜப்பான் மீதான
போர் சோவியத் ரஷ்யாவுக்கு கட்டாயமானது.
ஜெர்மனி நான்கு
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சோவியத் யூனியன், அய்க்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில்
வந்தது. போலந்தில் தற்காலிக கம்யூனிஸ்ட் அரசாங்கம் அமைக்கப்பட்டது. சோவியத்
யூனியன் அய்நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரானது.
போர் முழுவதுமாக
முடிந்து ஜெர்மானிய படைகள் பல பகுதிகளிலும் சரணடைந்த பிறகு, ஆகஸ்ட் 2 அன்று போட்ஸ்டேமில் போருக்குப் பிந்தைய
நடவடிக்கைகள் பற்றிய ஒப்பந்தத்தை இறுதி செய்ததற்குப் பிறகு, மன்சூரியாவில் ஜப்பான் மீதான போரில் சோவியத்
ரஷ்யாவும் இணைய ஸ்டாலின் ஒப்புக்கொண்ட பிறகு, அதன்படி ஆகஸ்ட் 9 அன்று ரஷ்யா, ஜப்பான் மீது போர் என்று அறிவிக்கும் முன்னர்,
ஆகஸ்ட் 6 அன்றே ஜப்பான் மீது அய்க்கிய அமெரிக்கா அணுகுண்டு
தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 9 அன்று மீண்டும்
ஒரு முறை ஜப்பான் அய்க்கிய அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.
சோவியத் ரஷ்யா மன்சூரியாவில் இருந்த ஜப்பான் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு
வந்த பிறகு, மன்சூரியாவை
விட்டு வெளியேறியது. அணுகுண்டு தாக்குதல்களில் ஜப்பான் முழுவதுமாக நிலைகுலைந்து
போன பிறகு, அங்கு அய்க்கிய
அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் மூலம் மறுகட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
போரின் முடிவில்
ஏகாதிபத்திய நாடுகள் மத்தியில் அய்ரோப்பா பங்கிடப்பட்டிருந்தது. ஏகாதிபத்திய
நாடுகளுக்கு எதிராக சோசலிச சோவியத் யூனியன் மிகப்பெரும் சக்தியாக, ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிர்முகாமாக
எழுந்திருந்தது.
மகத்தான
தேசப்பற்று போரை, மானுட விரோத
பாசிசத்தை தீர்மானகரமாக முறியடித்த போரை வெற்றிகரமாக நடத்தி முடித்த, மார்ஷல் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் அம்பாகப்
பாயத் துவங்கின. இன்று வரை பாய்ந்து கொண்டிருக்கின்றன.
அய்க்கிய சோவியத்
சோசலிச குடியரசு மக்களை அடியோடு அழிக்கும் போர் வேண்டும் என்று ஜெர்மானிய
ஆக்கிரமிப்பாளர்கள் விரும்புகின்றனர். நல்லது, அடியோடு அழிக்கும் போர்தான் ஜெர்மானியர்களுக்கு
வேண்டும் என்றால் அது அவர்களுக்குக் கிடைக்கும் என்று 1941 நவம்பரில் மாஸ்கோவில் பேசும்போது ஸ்டாலின்
சொல்கிறார். நாஜி பாசிசப் படைகளை அடியோடு அழிக்கும் போரை சோவியத் செம்படை
வெற்றிகரமாக நடத்தி முடித்த போது, சோவியத்
ரஷ்யாவும் பெரிய விலை கொடுத்திருந்தது.
போர் துவங்கி
நான்கு மாதங்களிலேயே மூன்றரை லட்சம் பேர் போரில் உயிரிழந்தனர், 3,78,000 பேர் காணாமல் போயினர், 10,20,000 பேர் படுகாயங்களுக்கு உள்ளாயினர் என ஸ்டாலின்
அந்த உரையில் குறிப்பிடுகிறார். போர் முடிந்தபோது, சோசலிச அரசைப் பாதுகாக்கும் மகத்தான கடமையில்
சோவியத் செம்படையினர், சோவியத் மக்கள் 2 கோடி பேர் உயிரிழந்தனர்.
தந்தை நாட்டை
காக்கும் போரில் செம்படை வீரர்களுடன் போர்முனைக்குச் செல்ல எந்த நேரமும் தயாராக
இருந்த தொழிலாளர்களும் விவசாயிகளும் செம்படைக்குத் தேவையான போர் தளவாடங்கள்
உட்பட்ட பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் கடமையில், போர் முடிவுக்கு வரும் முன்னரே பல மடங்கு
உற்பத்தி பெருகுவதை உறுதி செய்தார்கள்.
1922ல் சோவியத்
யூனியன் உருவானது. 1923ல் 76% என இருந்த சோவியத் யூனியனின் மொத்த தொழில்
உற்பத்தி போர் துவங்கும் போது 100%அய்
எட்டியிருந்தது. இதே காலத்தில் 4% என இருந்த மொத்த
விவசாய உற்பத்தி போர் துவங்கும் போது 99.7% எட்டியிருந்தது.
1942ல் சோவியத்
யூனியனின் மேற்குப் பகுதிகளில் ஜெர்மானியப் படைகள் ஊருடுவி விட்ட நிலையில்,
விவசாய சாகுபடி பரப்பே
குறைந்திருந்த நேரத்தில் நடந்த விவசாய உற்பத்தி, 1919ல் சோவியத் ரஷ்யா முழுவதும் நடந்ததை விட
பன்மடங்கு கூடுதலாக இருந்தது. போர் துவங்கும் நேரத்தில், 1918ல் சோவி யத் ரஷ்யாவில் இருந்ததை விட பன்மடங்கு
கூடுதலாக உணவு தானியங்களும் பிற உணவுப் பொருட்களும் இருப்பில் இருந்தன. மறுபக்கம்
போர் முனைக்கு முன்னுரிமை தர வேண்டியிருந்ததால், உற்பத்திசார் நுகர்வும் தனிநபர் நுகர்வும்
வெட்டப்பட்டன.
1943ல், சோவியத் யூனியனின் கிழக்குப் பகுதிகளில்
மட்டும் தொழில் உற்பத்தி 1920ல் ஒட்டுமொத்த
சோவியத் ரஷ்யாவில் இருந்ததை விட 20 மடங்கு கூடுதலாக
இருந்தது. நிலக்கரி உற்பத்தி 60 மடங்கும்
இரும்பு உற்பத்தி 65 மடங்கும்
கூடுதல் இருந்தது.
1943ல், பாசிச எதிர்ப்புப் போரில் செம்படை வெற்றிகள் பல
பெற்று முன்னேறிக் கொண்டிருந்த காலத்தில், உற்பத்திசார் நுகர்வில், தேசிய
வருமானத்தில், உழைக்கும்
மக்களின் தனிநபர் நுகர்வில், இருப்பில்,
தேசப் பொருளாதாரத்தின்
நிலையான மற்றும் சுழற்சியில் இருக்கிற முதலீட்டு நிதியில் உயர்வு காணப்பட்டது. 1943லும் 1944லும் போர்ச் செலவுகள் அதிகரித்ததற்கு
அக்கம்பக்கமாகவே உற்பத்திசார் நுகர்வும் தனிநபர் நுகர்வும் இருப்பும் அதிகரித்தன.
ஒரு புறம்
ஜெர்மானியப் படைகளை எதிர்த்து செம்படை போரில் முன்சென்று கொண்டிருக்க மறுபுறம்,
போர் முடிவுக்கு வரும்
முன்னரே, ஜெர்மானியப்
படைகள் ஆக்கிரமித்து இருந்த கிழக்குப் பகுதியில் மறுகட்டுமானப் பணிகளில் சோவியத்
தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் 1943 - 1944ல் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகளில் 2,250 பெரிய தொழில் நிறுவனங்கள் புதிதாகக்
கட்டப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 6,000 தொழில் நிறுவனங்கள் மீட்கப்பட்டன. 43,000 கி.மீ ரயில்வே மீட்கப்பட்டு மீண்டும்
பயன்பாட்டுக்கு வருகிறது. மின் உற்பத்தி, சுரங்கங்கள், கனரக ஆலைகள் என
இந்தப் பட்டியல் நீள்கிறது.
தொழில்துறையில்
திறன்மிகு வேலைகளில் பெண்களின் பங்கு இந்த காலகட்டத்தில் அதிகரித்தது. நீராவி எந்திரங்களை
இயக்கும் பெண்களின் எண்ணிக்கை 1941ல் 6% என இருந்ததில் இருந்து 1942ல் 33% என உயர்ந்தது. வாகன ஓட்டுநர்கள் 3.5% என்பதில் இருந்து 19% என உயர்ந்தது.
கம்ப்ரசர் ஆபரேட்டர், டை பிரஸ்
ஆபரேட்டர், மெட்டல் டர்னர்,
வெல்டர், மோல்டர், பிட்டர் என எல்லா பணிகளிலும் பெண்களின்
எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. சமவேலைக்கு சம ஊதியம் இருந்தது. பெண்கள்
உற்பத்தியில் ஈடுபடுவதை உறுதி செய்ய சிறுவர் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், தாய் - சேய் நிறுவனங்கள் மீட்கப்பட்டு
விரிவுபடுத்தப்பட்டன. சிறுவர் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் எண்ணிக்கை 1941ல் 6,83,000 என்பதில் இருந்து 1944ல் 12,10,000 என உயர்ந்தது. குழந்தைகள் அரசால் பார்த்துக்
கொள்ளப்பட்டார்கள்.
விடுவிக்கப்பட்ட
பகுதிகளில் தேசப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடமையில் வீட்டு வசதியை
மீட்டெடுப்பது முக்கியமான அம்சமாக இருந்தது. நகர்ப்புறங்களிலும்
கிராமப்புறங்களிலும் 54,18,000 பேர் புதிதாகக்
கட்டப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்ட னர். இதுவும் போர் முடிவுக்கு வரும்
முன்னரே, 1944ல் நடந்தது.
போரைக் காரணம்
காட்டி கூலி வெட்டு நடக்கவில்லை. மாறாக, 1940ல் தொழிலாளர்களின் மாதாந்திர சராசரி ஊதியம் 375 ரூபிளில் இருந்து 1944ல் 573 ரூபிளாக உயர்ந்திருந்தது.
போர் மிகவும்
தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த இந்த முன்னேற்றங்கள், போருக்கு முன் சோவியத் மக்கள் நிகழ்த்தியிருந்த
முன்னேற்றங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.
(போர் துவங்கிய
இரண்டாவது ஆண்டில் சோவியத் யூனியனில் தனிநபர் நுகர்வு கூட குறைந்தபோது, போர் உச்சத்தில் இருந்த சமயத்தில், சோவியத் யூனியன் இழப்புகளை சந்தித்துக்
கொண்டிருந்தபோது, அய்க்கிய
அமெரிக்காவில் வளர்ச்சி வேறுவிதமாக இருந்தது. 1939ல் 6.4 பில்லியன் டாலராக இருந்த முதலாளிகளின் லாபம், 1943ல் 24.5 பில்லியன் டாலராக அதிகரித்தது. போர் நடந்த நான்கு ஆண்டுகளில் அய்க்கிய
அமெரிக்க முதலாளிகள் 87 பில்லியன் டாலர்
லாபம் பார்த்தனர்).
போர்
நடந்துகொண்டிருக்கும்போதே ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் நடந்த இதுபோன்ற
மறுகட்டமைப்புப் பணிகளுக்கு அப்பால், போரின் முடிவில் சோவியத் யூனியன் சந்தித்திருந்த இழப்பு மிகப்பெரியது.
போரின் முடிவில்
ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் 31,850 ஆலைகள், 1,876 அரசுப் பண்ணைகள், 98,000 கூட்டுப் பண்ணைகள், 4,100 ரயில் நிலையங்கள், 6,000 மருத்துவமனைகள், 82,000 பள்ளிகள், 334 உயர்கல்வி நிறுவனங்கள், சில நூறு ஆய்வு கூடங்கள், நூலகங்கள், லட்சக்கணக்கில் எந்திரங்கள், மில்கள், உலைகள், விவசாய உற்பத்தி கருவிகள், பலப்பல லட்சக்கணக்கில் கால்நடைகள்
அழிக்கப்பட்டுவிட்டன.
நேரடி போர்
செலவினங்கள், போரால் ஏற்பட்ட
கூடுதல் செலவினங்கள், தேசிய வருமானத்தில்
ஏற்பட்ட இழப்பு, மக்கள், சோசலிச நிறுவனங்கள் எல்லாமாகச் சேர்த்து
இழப்பின் மதிப்பு 357 பில்லியன்
டாலர். இதற்கு முந்தைய போர்களில், முதல் உலகப் போர்
உட்பட வேறு எந்தப் போரிலும் இந்த அளவுக்கு இழப்பை வேறு எந்த நாடும்
சந்தித்திருக்கவில்லை. எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் போருக்கு முந்தைய
தொழில் உற்பத்தி நிலையை எட்ட, 1944ல் நடந்தது போல் 5ணீ மடங்கு கூடுதல் உற்பத்தி நடக்க வேண்டும்.
தொழில் உற்பத்தியில் போருக்கு முந்தைய நிலைமைகளில் இருந்த 66% அழிக்கப்பட்டுவிட்டது. உணவு தானிய
உற்பத்தியில் 70% உயர்வை
சாதித்தாக வேண்டும். வேறு பல அரங்குகளிலும் இதே போல் பல மடங்கு உயர்வு காணப்பட
வேண்டும்.
சோவியத் சோசலிச
பொருளாதாரத்தை அதன் வளர்ச்சித் தடத்தில்
மீண்டும் இருத்தும் மகத்தான பணியில் சோவியத் மக்களை அணி திரட்டிய ஸ்டாலின்,
இது ஒரு மகத்தான தேசிய
கடமை, இந்தக் கடினமான கடமையை நம்மால்
நிறைவேற்ற முடியும், நிறைவேற்ற
வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
(தகவல்கள் ஆதாரம்:
இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் பொருளாதாரம், என்.எ.வாஸ்நெசன்ஸ்கி, தலைவர், அரசின் திட்ட ஆணையம்)