சங்பரிவாரின்
இந்துத்துவ வெறியாட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது
2010 முதல் 2017 வரை மாட்டிறைச்சி மற்றும் மாடு தொடர்பான 63 வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட 28 பேரில் 86% பேர் இசுலாமியர்கள். இந்த வன்முறைச்
சம்பவங்களில் 97% மோடி பிரதமரான
பிறகு நடந்தவை. இந்தச் சம்பவங்களில் 126 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தத் தாக்குதல் சம்பவங்களில்
பாதிக்கும் மேற்பட்டவை வெறும் வதந்திகளின் அடிப்படையில் நடந்தவை. இந்தியா ஸ்பென்ட்
என்ற இணையதளம் நாளிதழ்களில் வந்த செய்திகள் அடிப்படையில் இந்த விவரங்களை தொகுத்து
வெளியிட்டுள்ளது.
வெறும் புரளியைக்
கிளப்பி மனிதர்களை வேட்டையாடுபவர்களுக்கு கொஞ்சம் மாடும் எதிரில் இருந்தால்
வசதிதான். பழனியில் ஒரு வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு யாரோ போனார்கள். அந்த
வழியாகப் போனார் மன்னார்குடி ஜீயர். நாடு முழுவதும் நடக்கும் மாட்டு அரசியலை
தமிழ்நாட்டில் நிகழ்த்தும் பேரவாவுடன் மாடுகள் சென்ற அந்த வாகனத்தை மறித்தார்.
மனிதர்களை ஒதுக்கி வைப்பதில் கைதேர்ந்த ஜீயருக்கு மாடுகளைப் பார்த்தபோது மனம்
பதைத்ததாம். போதுமான வசதிகள் இல்லாமல் கொடூரமான நிலைமைகளில் மாடுகள் அந்த
வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டனவாம். வாகனத்தில் மாடுகளுக்கு தண்ணீரும்
வைக்கோலும் இல்லை என்று அவர் அழுத்தமாகச் சொன்னபோது, பிரச்சனை எதுவும் வெடிக்காதா என்ற அவரது
நப்பாசை வெளிப்பட்டது. மாடுகள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தை நிறுத்தி, காவல் துறையில் புகார் செய்து, பிறகு, காவல்துறை தடியடி, கைது வரை கொண்டு
வந்து நிறுத்தி விட்டார். (அவர் தலித் மக்கள் வாழும் பகுதிகளின் நல்வாழ்வு மற்றும்
கல்விக்காக பணியாற்றுபவர் என ஒரு நாளிதழ் அவரை விவரிக்கிறது!)
ராமநாதபுரத்தில்
இன்னொரு முயற்சி நடந்துள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில்
மதரசா கட்டுவதா என்று பாஜக செயலாளர் அஸ்வின்குமார் கேள்வி எழுப்புகிறார். இந்தத்
தர்க்கப்படி இந்தியாவில் எங்குமே மதரசாக்கள் அமைக்க முடியாது. இந்தியாவில் எல்லா
பகுதிகளிலும் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்கள்
மத்தியில்தான் பலப்பல ஆண்டுகளாக இசுலாமியர்கள் எந்த பிரச்சனையும் இன்றி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இப்போது புதிதாக என்ன மதரசா பற்றிய கேள்வி? மதவெறி துருவச் சேர்க்கையை திட்டமிட்டு
உருவாக்கும் நோக்கம்தான் இதில் இருக்கிறது.
அங்கு மதரசா
கட்டப்படவுள்ள இடத்துக்கு 100 அடி தூரத்தில்
அய்யப்பன் கோயிலும் பிள்ளையார் கோயிலும் உள்ளனவாம். பிள்ளையார் கோயில் எங்குதான்
இல்லை என்று இந்துத்துவ வெறியர்கள் சொல்ல வேண்டும். அருகில் மதரசா வந்தால் அமைதி
குலைந்துவிடும் என்று அவர் சொல்கிறார். அஸ்வின்குமார், அந்தப் பகுதியின் அமைதியை குலைக்க
திட்டமிட்டுக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. திருவல்லிக்கேணி போன்ற ஒரு
நெரிசலான இடத்தில், இந்துக்கள்,
இசுலாமியர்கள், கிறித்துவர்கள் என சாமான்ய மக்கள் மிகவும் நெருக்கமாக
வசிக்கிற, கொடுக்கல்,
வாங்கல், வர்த்தகம், வாழ்க்கை எல்லாம் நடத்துகிற இடத்தில் எல்லாம்
நெருக்கமாகத்தான் இருக்கிறது. எல்லாம் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். எந்த
அமைதியும், யார் அமைதியும்
கெடவில்லை. நீங்கள் உங்கள் இந்துத்துவ வெறி பிடித்த கோரப் பற்களை வெளியே
நீட்டாதீர்கள்.
மதரசா
கட்டுவதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளைக் கண்டித்து சமூக ஊடகத்தில் அஸ்வின்குமார்
தொடர்ந்து எழுதுகிறார். அவருக்கு சமூக ஊடகத்தில் இசுலாமியர் ஒருவர் மிரட்டல்
விடுத்ததாகவும், அதன்
தொடர்ச்சியாகவே அவர் மீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்
எச்.ராஜா முதல் பொன்.ராதாகிருஷ்ணன் வரை கூவுகிறார்கள். தமிழ்நாடு கலவர பூமியாகும்
என்று ஒரு மத்திய இணையமைச்சர் சொல்கிறார். மக்கள் மத்தியில் வன்முறையை, கலவரத்தைத் தூண்டும் இந்தப் பேச்சுக்கு அவர்
மீது தேசவிரோத வழக்கு அல்லது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் பாயாதா?
அஸ்வின்குமார்
மீது தாக்குதல், அதற்கு எதிர்ப்பு
என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதரசா மீது கல்லெறிந்துள்ளனர். அங்குள்ள
பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு எதுவும் இல்லை.
பழனியிலும்
ராமநாதபுரத்திலும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக காவல்துறையினர்
சொல்கின்றனர். தமிழ்நாட்டின் காவல்துறையினர் தங்கள் தலையையும் வாலையும், காட்ட வேண்டிய இடத்தில், காட்ட வேண்டிய நேரத்தில் காட்டுகிறார்கள் என்றே
தெரிகிறது.
ராமநாதபுரத்தில்
இசுலாமியர்களுக்கும் அஸ்வின்குமார் மீது நடந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என்று சொல்கிற காவல்துறையினர் அந்தப் பகுதியில் நான்கு பேரை கைது
செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் கூட இசுலாமியர் இல்லை. இந்துக்கள்தானே
தாக்கியிருக்கிறார்கள். எப்போதுமே இந்துத்துவ விஷம் கக்கும் எச்.ராஜா அவர்களை விட்டுவிடச்
சொல்வாரா?
அஸ்வின்குமார்தான்
முதலில் மணிகண்டன் என்பவரை, வாய்த்தகராறு
முற்றியபோது தாக்கியிருக்கிறார். மணிகண்டன் தனது உறவினர், நண்பர்களுடன் வந்து பதில் தாக்குதல் நடத்தியது
எல்லாம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் சொல்கின்றனர்.
பாஜக தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன் இதை காவல்துறையினரின் கட்டுக்கதை என்று சொல்கிறார்.
சிறுபான்மை மக்கள் மீது, தலித் மக்கள்
மீது, நாடு முழுக்க
கட்டுக்கதைகளை, அதன் பிறகு
தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிற கூட்டத்தில் ஒருவர் காவல்துறையினர் சொல்வதை
நம்ப மறுக்கிறார். மிகச் சமீபத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை,
இசுலாமியர் செய்த கொலை
என்று சொல்லப் பார்த்து, அது சொந்தப்
பிரச்சனையில் தற்கொலை என்ற உண்மை வெளியான பிறகு காவி முகத்தில் கரி பூசிக் கொண்டதை
அதற்குள் மறந்துவிட்டார்கள். அஸ்வின்குமார் விசயத்திலும் இது நேரலாம்.
மறுபக்கம்,
மக்கள் தங்கள் வாழ்வுரிமை
காக்க நடத்தும் போராட்டங்களை, தீவிரவாதிகள்
ஊடுருவல் என்று கொச்சைப்படுத்தி வந்தவர்கள், இன்று அதிகாரத்தில் இருக்கிற மமதையில், ஒடுக்குமுறை செய்தது சரி என்று ஆணித்தரமாகப்
பேசுகிறார்கள். கதிராமங்க லத்தில் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள்,
அவர்கள் குடும்பங்கள்
வீதிகளில் நிற்கிறார்கள். மத்திய மாநில அரசுகள், அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்குப்
பதிலாக, கார்ப்பரேட்
விசுவாசம் கண்ணை மறைக்க, மக்கள்
துன்பத்தில் இன்பம் காண்கின்றன. மக்களாகப்பட்டவர்கள் அனைத்தும் அறிந்த அரசனுக்கு
அடிமைகளாக அல்லவா இருக்க வேண்டும்? போராட்டம் என்று
வீதிக்கு வரலாமா? காவல்துறையினர்
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியே என்று அர்ஜ÷ன் சம்பத் சொல்லும் துணிச்சல் இன்று
தமிழ்நாட்டில் வந்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர் அணு உலையை
எதிர்க்கும் மாநிலத்துக்கு அணுமின்சாரம் கிடையாது என்று மிரட்டிப் பார்க்கிறார்.
மத்திய, மாநில அரசுகள் ‘ஒத்திசைந்து’ மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட கருத்தியல்
தளம் அமைத்துத் தரப்படுகிறது.
எச்.ராஜா,
தமிழிசை சவுந்தரராஜன்,
பொன்.ராதாகிருஷ்ணன்,
மன்னார்குடி ஜீயர்,
அஸ்வின்குமார், அர்ஜுன் சம்பத் என யாராக இருந்தாலும் அவர்களது நச்சுப் பேச்சுக்களில், தமிழ்நாட்டுக்குள் இந்துத்துவாவை புகுத்துவது
இந்த அளவுக்கு சிரமமாக இருக்கிறதே, இந்த அளவுக்கு
எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும் விரக்தியும் சேர்ந்தே
வெளிப்படுகின்றன.
இந்துத்துவ
வெறியர் கூட்டம் தமிழ்நாட்டில் வெள்ளோட்டம் பார்க்கிறது. பெரியார் மண்ணில்
இவர்களுக்கு சற்று துணிச்சல் வரப் பார்க்கிறது. தமிழ்நாட்டை இந்துத்துவ இருள் சூழ,
பிளவுவாத சக்திகள்
தலையெடுக்க விட்டு விடக் கூடாது. தமிழ்நாடு வேறு மாதிரிதான், இன்று சங் பரிவாரும் வேறு மாதிரி. விழிப்பு,
விழிப்பு, எப்போதும் விழிப்பு, முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவை.