COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, July 13, 2017

இரண்டாம் உலகப் போருக்கு பின்
சோவியத் மறுகட்டுமானம்

அய்க்கிய அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல், உலகில் அணுஆயுதப் போட்டிக்கு வித்திட்டது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாக கருதப்பட்ட செம்படையில் போர் முடியும்போது இருந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம். 1950ல் அந்த எண்ணிக்கை 30 லட்சம் என குறைந்தது. நாட்டு மக்கள் ஆற்றல், போரால் சிதைந்திருந்த நாட்டின் புனர்நிர்மாண பணிகளில் செலுத்தப்பட்டது.

ஹிட்லரின் நாசகர பாசிசப் படைகளை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்ற சோவியத் யூனியனுக்கு, பாட்டாளி வர்க்க ஆட்சிக்கு, போருக்குப் பிந்தைய நிலைமைகளில் சர்வதேச அளவில் பெரிய அளவில் பாராட்டுக்களும் உதவிகளும் வந்து சேரவில்லை. மாறாக, சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்க ஆட்சிக்கு எதிரான முதலாளித்துவ கருத்துப் பிரச்சாரம் உலகம் முழுவதும் தீவிரமாக நடந்தது. உள்நாட்டில் மறுகட்டுமானப் பணிகளை முன்னகர்த்திக் கொண்டே, பாட்டாளி வர்க்க ஆட்சியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டே, இந்த கருத்தியல்ரீதியான தாக்குதல்களையும் சோவியத் யூனியன் எதிர்கொண்டு வந்தது. சோவியத் யூனியனும் அய்க்கிய அமெரிக்காவும் அய்க்கிய அமெரிக்காவின் மார்ஷல் திட்டத்தின் உதவியுடன் ஜப்பானும் போருக்குப் பின் வேகமாக வளர்ச்சி அடைந்த பொருளாதாரங்களாக இருந்தன.
போருக்குப் பிந்தைய அய்ந்தாண்டு திட்டம் சோவியத் யூனியனின் போருக்கு முந்தைய தொழில் வளர்ச்சியின் 1.5 மடங்கையும், தேச வருமானத்தின் 1.4 மடங்கையும் எட்ட இலக்கு நிர்ணயித்தது.
பாட்டாளி வர்க்க வல்லமை, பாசிச எதிர்ப்புப் போரில் வெளிப்பட்டதுபோல், போருக்குப் பிந்தைய புனர்நிர்மாணப் பணிகளிலும் வெளிப்பட்டது. போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளிலேயே, 1948லேயே 1938ல் இருந்த சராசரி தனிநபர் வருமானத்தை சோவியத் யூனியன் எட்டிவிட்டது என முதலாளித்துவ ஆய்வாளர்கள் சிலர் முன்வைக்கிற விசயங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. சோவியத் ரஷ்யாவில் போருக்குப் பிந்தைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமானது என்பதும் முதலாளித்துவ ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிற விசயம்தான். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழில் வளர்ச்சி சோவியத் ரஷ்யாவில்தான் அதிவேகமானதாக இருந்தது. மின்சாரம், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, எஃகு, இரும்பு, உணவுப்பொருட்கள் என அனைத்து வகையிலும் உற்பத்தி பெருகியது. சோவியத் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியில்தான் முதன்முதலில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பப்பட்டது. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியதும் சோவியத் ரஷ்யாதான். விண்வெளிக்கு ஒரு பெண்ணை முதன்முதலில் அனுப்பியதும் சோவியத் ரஷ்யாதான். 1953ல், போர் முடிந்து எட்டு ஆண்டுகளில், ஸ்டாலின் இறந்துவிடுகிறார். அதன் பின்னும், 1917 முதல் போடப்பட்ட உணர்வுபூர்வமான திட்டமிட்ட சமூக பொருளாதார அடிப்படைகளின் மேல் சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது.
சோவியத் அரசாங்கம் முன்வைக்கிற புள்ளிவிவரங்களும் தேசத்தின் வாழ்க்கையின், மக்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் போருக்குப் பிந்தைய வளர்ச்சி பற்றிய பார்வை தருகின்றன.
1940ல் ராணுவ செலவினம் 5.7 பில்லியன் ரூபிளாக இருந்தது. 1941 - 1945ல் 58.2 பில்லியன் ரூபிளாக உயர்ந்தது. போர் முடிந்ததும் 1946ல் இந்தச் செலவினம் 7.4 பில்லியன் ரூபிளாகக் குறைந்தது. 1940ல் தொழில் வளர்ச்சிக்கு 2.9 பில்லியன் ரூபிள் செலவிடப்பட்டது. 1941ல் இது சற்று அதிகரித்து, போர் உச்சத்தில் இருந்த 1942, 1943 ஆண்டுகளில் 1.8 பில்லியன் ரூபிள் என குறைந்து, பின் 1944லேயே 3.1 பில்லியன் ரூபிள் என அதிகரிக்கிறது. போர் முடிவுக்கு வந்தவுடன் 1946ல் 7 பில்லியன் ரூபிளை எட்டுகிறது.
சோவியத் யூனியனில் 1941ல் மக்கள் தொகை 19 கோடி. 1951ல் 20 கோடி. 1985ல் 27.77 கோடி. இந்த அளவில் மக்கள் தொகை கொண்ட நாட்டில் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் 1940ல் 2,359 இருந்தன. 1945ல் இது 2,061 என குறைந்திருந்தது. 1950லேயே இந்த எண்ணிக்கை 3,447 என உயர்ந்தது. போரில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நாடு போர் முடிந்த பிறகு அடுத்த அய்ந்து ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றம் இது. 1986ல் இந்த எண்ணிக்கை 5,070 என இருந்தது.
மருத்துவர்கள், முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளர்கள், முதுநிலை மற்றும் இளநிலை உதவி ஆராய்ச்சியாளர்கள், விரிவுரையாளர்கள் என அனைவரையும் சேர்த்து விஞ்ஞானிகள் என்று வகைப்படுத்துகிற சோவியத் அரசாங்கத்தின் ஒரு புள்ளி விவரத்தின்படி, போருக்கு முன் 1940ல் 98,300 விஞ்ஞானிகள் இருந்தார்கள். போருக்குப் பின் 1947ல் 1,45,600 விஞ்ஞானிகள் இருந்தார்கள். 1950லேயே இந்த எண்ணிக்கை 1,62,500 என உயர்ந்திருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து 1959ல் 3,10,000 என கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்திருந்தது. 1969ல் 8,83,400 என அதிகரித்த இந்த எண்ணிக்கை 1986ல் 15,00,500 என இருந்தது.
1950ல் 8,300 என இருந்த மருத்துவர் எண்ணிக்கை 1959ல் 10,500 என உயர்ந்திருந்தது. முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளர்கள், இளநிலை மற்றும் முதுநிலை உதவி ஆராய்ச்சியாளர்கள், விரிவுரையாளர்கள் எண்ணிக்கை 1950ல் 70,700 என்பதில் இருந்து 1959ல் 89,400 என்பதாக அதிகரித்திருந்தது.
கல்வி ஆறு நிலைகளாக வகை பிரிக்கப்படுகிறது. அந்த ஆறு நிலைகளிலும் 1963 முதல் 1987 வரை கல்வி கற்றோர் எண்ணிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் உயர்வு காணப்படுகிறது.
1966 முதல் 1977 வரை எல்லா துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் 40 மணி நேரமாக இருந்தது. நிலக்கரி துறையில் அது மிகவும் குறைவாக 34 மணி நேரமாகவும் உணவு துறையில் அதிகபட்சமாக 41 மணி நேரமாகவும் வேலை நேரம் இருந்தது. 1960 முதல் 1969 வரை விவசாயத் துறையில் கீழ்நோக்கிய மாற்றமும் கல்வி, மருத்துவம், அறிவியல் துறைகளில் மேல்நோக்கிய மாற்றமும் மற்ற துறைகளில் அதே விகிதத்திலும் தொழிலாளர் எண்ணிக்கை இருந்தது.
1940ல் தொழில்துறை தொழிலாளர் எண்ணிக்கை 83 லட்சம். 1952ல் 1 கோடியே 55 லட்சம். 1940ல் தொழிலாளர்கள் பெற்ற வருடாந்திர ஊதியம் 397 ரூபிள். 1952ல் இது 807 ரூபிளாக இருந்தது. ஓய்வு, பொழுதுபோக்கு, குழந்தைகள், மூத்தோர் நலன் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகிய அனைத்துக்கும் சோவியத் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் இருந்தன.
சர்க்கரை, அடுமனை பொருட்கள், மீன், எண்ணெய், இறைச்சி, பால், பால் பொருட்கள், முட்டை, காய்கறிகள், பழங்கள் என உணவுப் பொருட்கள் நுகர்வு, 1960 முதல் 1985 வரை தரப்பட்டுள்ள விவரங்கள்படி, ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வந்தது. 

1979ல் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ரஷ்யா போர் தொடுக்க முடிவு செய்கிறது. நிலைமைகள் மாறுகின்றன. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியின் துவக்கம் நிகழ்கிறது. 

Search