COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, July 13, 2017

மோடியின் இஸ்ரேல் பயணமும்
வெறுப்பரசியல் வியாபாரிகளின் சந்திப்பும்

எஸ்.குமாரசாமி

ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்றவர்ஆகச் சிறந்தவராகக் கருதப்படுவாராம். மோடிக்கு எவ்வளவு கலைகள் தெரியும் என, நமக்குத் தெரியவில்லை. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கவும் செய்வார். பற்றி எரியும் பிரச்சனைகளில் வாயைத் திறக்காமலேயும் இருப்பார். பிரதமர் ஆனபிறகு, 64 நாடுக ளுக்குச் சென்று வந்துள்ள மோடி, விளம்பர மாடல்கள் போல் போஸ் கொடுப்பதில் நிபுணர்.
பல நாட்டுத் தலைவர்களைக் கட்டிப்  பிடித்தார். கை வலிக்க கை குலுக்கினார். ஆங் காங்கே அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்களிடம், ‘நிறைய சத்தமும் குறைந்த சாரமும்உள்ள உரைகளை நிகழ்த்தினார். இந்தியாவிலும், அவர் ஓர் அறிவிப்பு மன்னர். வாக்குறுதிகளை மறப்பதில்தேர்வு செய்த ஞாபக மறதி (செலக்டிவ் அம்னிஷியா) உள்ளவர்.
இந்தியாவுக்கு ஆயுதத் தளவாடங்கள் வழங்குவதில் மூன்றாவது இடம் பெற்றுள்ள இஸ்ரேலுக்கு, இப்போது மோடி சென்று வந்துள்ளார். புரோட்டோகோல் (ராஜீய மரபுகள்) பார்க்காமல், இஸ்ரேலியப் பிரதமர்  நெடன்யாஹுவும் அவரது நாட்டின் அனைத்து மதத் தலைவர்களும் விமான நிலையத்தில், மோடியை வரவேற்றனர். அய்க்கிய அமெரிக்க அதிபருக்கும் போப்புக்கும் தரப்படும் வரவேற்பு, மோடிக்கு தரப்பட்டது. கடல் அலைகளில் கால் நனைய மோடியும் நெடன்யாஹ÷வும், ஆகக் கூடுதல் நெருக்கமாய் நின்ற காட்சிகள், பத்திரிகைகளில் படமாய் வந்தன. நெடன்யாஹுவின் சகோதரர் பயங்கரவாதத்தால்கொல் லப்பட்டார் என்பதால், அவரது சமாதிக்குப் போய் மோடி மரியாதை செலுத்தியது, பயங்கரவாத எதிர்ப்புப் போராளிகள் இரண்டு பேரையும், மிகவும் நெருக்கமாக்கிவிட்டதாம்! டொனால்ட் டிரம்ப்பும் கூட இருந்திருந்தால், மும்மூர்த்திகள் ஆகி இருக்கும். உலகிற்கு அந்த அரிய அற்புதமான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
2016ல் மட்டும் ரூ.37,050 கோடி மதிப்புள்ள இராணுவ தளவாடங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து வாங்கியுள்ளது. இஸ்ரேலின் ஆயுத தளவாட ஏற்றுமதியில் 40% இந்தியாவுக்கு செய்யப்படுகிறது. அவப்பெயர் பெற்ற இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதும் இந்திய உளவு நிறுவனமான ராவும் நீண்ட காலமாய் நெருங்கிய செயல்பாட்டு உறவு கொண்டுள்ளன.
இஸ்ரேலுடனான, பாரக் ஏவுகணை வியாபாரத்தில் ஊழல் நடந்ததாக சிபிஅய் விசாரணை நடக்கிறது. இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கிய ட்ரோன்கள், இந்தியாவின் கருப்புப் பட்டியலில் உள்ள இஸ்ரேல் வாழ் இந்தியரால் வழங்கப்பட்டவை. இஸ்ரேல் - இந்திய ஆயுத தளவாட வியாபாரம், இரண்டு நாடுகளின் ராணுவ - தொழில் - அதிகார வர்க்க - அரசியல்வாதிகள் அச்சுக்கு, கோடி கோடியாய்ச் சம்பாதித்துக் கொடுக்கிறது.
மோடியும் பெஞ்சமின் நெடன்யாஹுவும், ஒரே வார்ப்பு, வலதுசாரி அரசியல்வாதிகள். மோடி, இந்துத்துவா தேசியாவதி, நெடன்யாஹு, யூத தேசியவாதி. இரண்டு பேருமே வெறுப்பரசியல் வியாபாரிகள். அதனால்தான், கிடைத்த நேரம் எல்லாம் தோழமை பாராட்டினார்கள். இஸ்ரேல் -இந்தியா உறவைப் பற்றிப் பேசும்போது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பூமியில் நடைபெறுவதாக, நெடன்யாஹு சொன்னார். 2017ல் மோடியிடம் சொன்னதை, சீன அதிபர் இஸ்ரேல் வந்த போதும், சொர்க்க நிச்சயதார்த்தம், பூமியில் திருமணம் என்ற புளித்துப் போன வசனத்தை, நெடன்யாஹு சொன்னார். மோடியின் பக்தர்களுக்கு அது தெரிவதில்லை. தெரிந்தாலும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு இந்தியாவுடனான ராணுவ தொழில் வியாபார உறவுகள் முக்கியம். இந்தியா இஸ்ரேலிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.6,525 கோடி மதிப்பில் கச்சா வைரம் தருவிக்கிறது. கட் & பாலிஷ் செய்யப்பட்ட வைரம் ஆண்டுக்கு ரூ.6,825 கோடி மதிப்பில் இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகிறது.
ஹாலந்தின் ஆண்ட் வெர்ப், அய்க்கிய அமெரிக்காவின் நியுயார்க், இந்தியாவின் சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில் நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த வேலையில் 10 லட்சம் பேர் வரை ஈடுபடுகின்றனர். வைரம் 1 கேரட் கட் & பாலிஷ் செய்ய தென் ஆப்பிரிக்காவில் 40 முதல் 60 டாலர் ஆகும், சீனாவில் 17 டாலர் ஆகும்; இந்தியாவில் 10 டாலர் ஆகும். குறைகூலியால் கூடுதல் வியாபாரம்! உலகமயக் கொடி உயரவே பறக்கிறது!
பெஞ்சமின் நெடன்யாஹு இந்தியப் பிரதமரின் வருகைக்காக, இஸ்ரேல் 70 ஆண்டுகள் (1947 முதல் 2017 வரை) காத்திருந்ததாகச் சொன்னார். 1948ல் இஸ்ரேல் உருவான பிறகு, இந்தியா இஸ்ரேலுக்கு எதிராகவே அய்நாவில் வாக்களித்தது. இந்தியா, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக, பாலஸ்தீன் பக்கமே நின்றது. 1992ல் புதிய பொருளாதாரக் கொள்கையும் நவதாராளவாதமும் நரசிம்மராவ் காலத்தில் அறிமுகமானபோது, இந்தியா இஸ்ரேலுடன் முழுமையான ராஜீய உறவுகளை நிலைநாட்டியது. வாஜ்பாய் காலத்தில் பலப்பட்ட அந்த உறவு, மன்மோகன் காலத்தில் மேலும் செழித்தது. மோடி காலத்தில் இந்த உறவு விஷ மரமாக வளர்ந்து காற்றில் நஞ்சைக் கலக்கிறது.
பாலஸ்தீன் அதிபர் முகமது அப்பாஸ் சில மாதங்கள் முன்பு இந்தியா வந்தபோது, மோடி - அப்பாஸ் கூட்டறிக்கை வந்தது. அதில் இருந்த, அய்நா தீர்மானங்கள்படி நடப்பது, இஸ்ரேல் அரசும் இருக்கும் பாலஸ்தீன அரசும் இருக்கும் என்ற இரு அரசுகளுக்கான தீர்வுபேச்சுவார்த்தையை உடனே துவக்குவது ஆகிய எந்த விஷயமும், மோடி - நெடன்யாஹு அறிக்கையில் இடம் பெறவில்லை.
இஸ்ரேலின் இதயபூர்வமான கூட்டாளி டிரம்ப் இஸ்ரேல் சென்றபோது, பாலஸ்தீனத்துக்கும் சென்றார். உத்தரபிரதேச தேர்தலில் இசுலாமியர் வாக்குகள் வேண்டாம் என்ற செய்தி சொல்ல ஓர் இசுலாமிய வேட்பாளரைக் கூட தம் கட்சி சார்பாக நிறுத்தாத மோடி, இப்போது பாலஸ்தீனர்களோ, அரபு இசுலாமியர்களோ தமக்கு ஒரு பொருட்டே அல்ல என்று காட்ட, பாலஸ்தீனம் செல்வதைத் தவிர்த்தார். Clash of Civilisations நாகரிகங்களின் மோதல்என்ற பிரபலமான நூலின்படி, யூத - கிறித்துவம், இந்துத்துவாவோடு கை கோர்த்துக் கொண்டு, இசுலாத்தை எதிர்க்கும். மேற்காசிய ராணுவ ரவுடியான, கொலைகார ஆட்சி நடத்துகிற இஸ்ரேலோடு, மோடியின் இந்தியா சேர்ந்து நிற்கிறது.
ஜியானிசத்தின் நிறுவனத் தலைவர் தியோடர் ஹெர்சல். பாலஸ்தீன பூமியில், பாலஸ்தீனர்களை விரட்டி, யூத ராஜ்ஜியம் உருவாக்கத் தோற்றுவிக்கப்பட்டதே ஜியானிசம். கடவுளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள், பரந்த யூத தாயகம் அமைப்பார்கள், அதற்கு பாலஸ்தீனத்தை இல்லாமல் செய்வார்கள் என்ற நிலை எடுத்ததுதான் ஜியானிசம். ஜெருசலேத்தில் இருந்து, அவர்களது ஆதி பூமியிலிருந்து விரட் டப்பட்ட ஒவ்வோர் யூதரும், ‘ஓ ஜெருசலேம், நான் மட்டும் எப்போதாவது உன்னை மறந்தால், எனது வலதுகை தனது எல்லா தந்திரத்தையும் இழக்கட்டும்’ (O JERUSALEM, IF I EVER FORGET THEE, LET MY RIGHT ARM LOSE ITS CUNNING) என வேண்டுவாராம். ஒற்றை யூத ராஜ்யம் எனக் கொக்கரிக்கும் நெடன்யாஹுவுடன் நெருக்கம் காட்டிய மோடி, நெடன்யாஹு இந்தியா வரும்போது, அவரை காந்தி சமாதிக்கு அழைத்துக் செல்ல வேண்டியிருக்கும். அப்போது, காந்தி, பாலஸ்தீனத்தை அடிமைப்படுத்துவதற்கு எதிராகச் சொன்ன, பின்வரும் விஷயங்களை நெடன்யாஹுவுக்கு மோடி நினைவுபடுத்தட்டும்.  
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுகாரர்களுக்குச் சொந்தமோ, அதேபோல் பாலஸ்தீனம் அரபு மக்களுக்குச் சொந்தமானது. யூதர்களை அராபியர்கள் மீது திணிப்பது தவறானது; மனிதத்தன்மையற்றது... பாலஸ்தீனத்தை பகுதியாகவோ, முழுவதுமாகவோ யூதர்களின் தேசிய இல்லமாக மாற்ற, பெருமைமிகு அராபியர்களை வெட்டிச் சுருக்குவது, நிச்சயம் மானுடத்துக்கு எதிரான குற்றமாகவே இருக்கும்’.            


இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள், தனிச் சிறை, விசாரணையின்றி சிறை, இஸ்ரேல் சிறைகளில் சர்வதேச விதிகள் மீறப்படுவது ஆகியவற்றுக்கு எதிராகஏப்ரல் 17 முதல் நடத்திய பட்டினி போராட்டம் 41 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. போராட்டத்தை முடித்தால்தான் போராட்டக்காரர்களுடன் பேச முடியும் என்று சொன்ன இஸ்ரேல் வேறு வழியின்றி பேச நேர்ந்தது. மாதத் தில் இரண்டு முறை குடும்பத்தினருடன் சந்திப்பு, அவர்களுடன் தொலைபேசி உரையாடல் போன்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. துவக்கத்தில் 1578 பேர் இந்த பட்டினிப் போராட்டத்தில் இறங்கினர். 41ஆவது நாள் போராட்டம் முடிவுக்கு வந்தபோது 834 பேர் போராட்டத்தில் இருந்தனர்.

Search