COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, July 13, 2017

டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்!
விவசாய நெருக்கடிக்கு தீர்வு வேண்டும்!

ஆர்.வித்யாசாகர்

குடிக்கத் தண்ணி இல்ல; ஆக்கச் சோறு இல்ல, எதுக்கு சார் எண்ணெய்?’
மக்களே இல்லாமல் போனதுக்கப்புறம் யாருக்கு சார் வேணும் பெட்ரோலும் காஸும்?’  
வீட்டு வாசல்ல போலீஸ்காரங்க முகத்திலதான் முழிக்க வேண்டியிருக்கு
ஆண்கள், பெண்கள்  குழந்தைகள், சாதி, மத வேறுபாடு இல்லாமல் கதிராமங்கலத்து மக்கள் அனைவரும் குமுறுகிறார்கள்.

விவசாய நெருக்கடியால் தற்கொலைக்கு உள்ளாகும் விவசாயிகள், இறால் பண்ணைக ளாலும் நிலத்தின் முகத்தை குடைந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் எண்ணெய் எடுக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தாலும் ஏற்படும் நிலத்தடி நீர் மாசால், குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் திண்டாடும் மக்கள் என காவிரிப்படுகை பகாசுர கார்ப்பரேட் லாபவெறியால் ஏற்கனவே பாலைவனமாக்கப்பட்டுவிட்டது.
காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கப் போவதாக மத்திய அரசு சொல்லும்போது, பெரிய அச்சுறுத்தும் ராட்சத எந்திரங்கள் கும்ப கோணத்திற்கு அடுத்துள்ள திருவிடைமருதூர் அருகிலுள்ள கதிராமங்கலம் கிராமத்தில் வந்து இறங்கின. அது முதல், ஒரு மாத காலமாக இந்த கிராமம் போராட்டக் களமாக மாறியுள்ளது.
ஜுன் 2, 2017 அன்று ராட்சத எந்திரங்கள் கதிராமங்கலத்தில் வேலை செய்யத் துவங்கிய போது மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மக்கள் கூடி ஓஎன்ஜிசியின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது பற்றி விவாதித்தனர். ஏற்கனவே பதித்திருந்த எண்ணெய் குழாய்களை பழுது பார்ப்பதற்காக எந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் மக்கள் இதை நம்பத் தயாராக இல்லை.
ஜுன் 5 அன்று சுமார் 350 பேர் ஓஎன்ஜிசியே திரும்பிப் போஎன்று முழக்கமெழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி அவர்கள், பேராசிரியர் ஜெயராமன் உட்பட கைது செய்யப்பட்டனர். அது முதல் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கதிராமங்கலத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டாலும், ஜெயராமன் உட்பட 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆங்காங்கே எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, புகை கிளம்புகிறது, விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது என்று மக்களின் கவலைக் குரல்கள் அரசின் காதுகளுக்கு எட்டவில்லை. அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மக்களுக்கு ஆதரவாக முடியவில்லை.
ஜுன்  30 அன்று காலை 5 ஏக்கர் நிலம் உள்ள ஸ்ரீராம் என்ற விவசாயி தன் நிலத்திற்குச் சென்று பார்க்கையில் சுமார் ணீ ஏக்கர் அளவிற்கு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்தத் தகவல் அறிந்த மக்கள் மீண்டும் ஒன்று கூடி எண்ணெய்க் கசிவை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓஎன்ஜிசி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தும் மாலை வரை மாவட்ட ஆட்சியர் வரவில்லை.
மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது சாலையில் கிடந்த குப்பை விறகுகள் எரிந்துள்ளன. மக்கள்தான் தீ வைத்தனர் என்று சொல்லி காவல்துறையினர் மக்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது பிராத்தல் வழக்குப் போடுவதாக காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். ஏற்கனவே கைதாகி பிணையில் வெளிவந்திருந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் பிணையில் வர முடியாத சட்டப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம், கடையடைப்பு என்று தொடர்ந்து பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தஞ்சை, நாகை மாவட்டங்களில் பல்வேறு பிரிவினர்கள், மாணவர்கள், கைத்தறி நெசவாளர்கள், பல அரசியல் இயக்கங்கள் என போராடி வருகின்றனர். கிட்டத்தட்ட 20 இடங்களில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகளைப் பாதுகாக்க காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
மீத்தேன், ஷேல் திட்டங்களால் பாலைவனமாகும் தஞ்சைத் தரணி
காவிரி டெல்டா பகுதிகளில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு எடுத்து வருகிறது. இதனால் இங்கு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் சுற்றுப்புறச் சூழலும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. கதிராமங்கலம் தற்போது நிம்மதி இழந்து பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. இங்கு மீத்தேன் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள்  அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனத்தை ஏவி நசுக்குகிறார்கள். தெருவுக்குத் தெரு இரும்பு தடுப்பரண் நிறுவி மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் கிராமத்திற்குள்ளேயே சிறை வைத்தது போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல்துறை வீடுவீடாகப் புகுந்து மிரட்டுகிறது. இவையனைத்தையும் வளர்ச்சிக்காகஎன்று அரசு சொல்கிறது. யாருடைய வளர்ச்சிக்காக இந்த கிராமங்கள் பாலைவனங்களாக, சுடுகாடுகளாக மாற்றப்படுகின்றன? காலம் காலமாக விவசாயம் செய்யும் மக்களின் வாழ்வு பறிக்கப்படுகிறது. நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்ற காவிரி டெல்டா பகுதியை மத்திய அரசு எண்ணெய் வளம் மிக்க பகுதியாக அறிவித்து, அதைக் கார்ப்பரேட் கொள்ளைக்கு தாரை வார்த்துக் கொடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் விரட்டிவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கத் திட்டம் தீட்டுகிறது.
மீத்தேன் எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை சுமார் 6,000 அடி ஆழம் வரை துளையிட்டு அந்த நீர் அனைத்தும் இறைக்கப்படும். கடுமையான உப்பும், மாசுகளும் கலந்த இந்த நீர், நிலத்தை முழுவதுமாக பாழாக்கி நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும். நிலம் சுடுகாடாய் மாறும், கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகும். பாரம்பரிய கட்டிடங்களும் புராதன கோயில்களும் ஆட்டம் காணும். குடிநீர் வற்றி மக்கள் அல்லலுறுவர். விவசாயம் செய்ய முடியாது. மற்ற நீர் நிலைகளும் பாழாகும். மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும் இந்த நாசகர வேலைக்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தரப்படவுள்ள இடம் 691 சதுர கிலோ மீட்டர். இது சுமார் 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும் என சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
ஓஎன்ஜிசியின் ஈவு இரக்கமற்ற சுரண்டல்
எத்தகைய கனிம பொருட்கள் எடுப்பதற்கு முன்பும் அப்பகுதியின் சூழலியல் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்து சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திற்கு அந்த அறிக்கையை முதலில் தாக்கல் செய்து பாதிப்பு ஏதும் இல்லை என்று அனுமதி பெற வேண்டும்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ல் திருத்தம் செய்யப்பட்டு 2006 முதல் இந்த விதி நடைமுறையில் உள்ளது. காவிரிப் படுகையில் விருப்பம்போல் துளை போட்டு எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த ஓஎன்ஜிசிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு அறிக்கை மத்திய மாநில சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டு அது மக்கள் பார்வைக்கு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்புதான் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் எண்ணெய்க் கிணறு தோண்ட முடியும்.
தவறான தகவல் அடிப்படையில் ஓஎன்ஜிசி அனுமதி பெற முயற்சித்து தஞ்சை மாவட்டத்தில் 10.07.2004 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்குப் பிறகு எந்தக் கூட்டமும் நடைபெற வில்லை. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனம் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை மக்கள் கருத்துக் கேட்பிற்கு அவசியம் இல்லை எனவும் தவறான முறைகேடான தகவல்களை உயர்நிலைக் குழுவிற்கு அனுப்பி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இது பற்றி பேராசிரியர் ஜெயராமன் அதிகாரிகளுக்கு எழுதிய புகார்கள் எதற்கும் மேலிடத்திலிருந்து பதிலில்லை.
கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக சத்தமின்றி விதிகளை மாற்றும் மோடி அரசு
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒற்றை உரிம திட்டத்தை நெல்ப்என்ற பெயரில் மோடி அரசு ஜ÷லை 1 முதல் சத்தமின்றி துவங்கியிருக்கிறது. இதற்கு முன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், ஷேல் ஆயில் போன்ற கனிமப் பொருட்களை அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. 1998ல் அன்றைய மத்திய அரசு நெல்ப்’ (நியு எக்ஸ்ப்லரேஷன் லைசென்சிங் பாலிசி) என்ற முறை மூலம் தனியார் நிறுவனங்களுக்கும் இந்தப் பொருட்களை எடுக்க அனுமதி அளித்தது.
உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை 2022க்குள் உயர்த்தப் போவதாகச் சொல்லும் மோடி அரசு, அரசுசார் பொதுத் துறை நிறுவனங்களைப் புறம்தள்ளி லாபவெறி தனியார் முதலாளிகள் கனிம வளங்களைத் தோண்டி எடுக்க எளிமையாக அனுமதி பெறும்விதம் ஹெல்ப்’ (ஹைட்ரோகார்பன் எக்ஸ்ப்லரேஷன் லைசென்சிங் பாலிசி) என்ற ஒற்றை உரிம அனுமதி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம்தான் ஜெம் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஹெல்ப்அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு கனிமப் பொருட்களுக்கு தனித்தனி உரிமம் என்பது மாறி, ‘ஹெல்ப்ஒரே உரிமம் மூலம் எந்தப் பொருளையும் எடுக்கலாம். இந்த திருத்தம் மக்கள் நலன்களை பேரிடியாய்த் தாக்கும். எண்ணெய் முதல் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தனியார் நிறுவனங்கள் எந்த விலையை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதில் கட்டுப்பாடுகள் கிடையாது. இறக்குமதி வரி ரத்து, ஆழமான கடல் பகுதிகளில் எண்ணெய் எடுக்க 7 ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை, முன்வைப்புத் தொகை இல்லை என்று கார்ப்பரேட் கொள்ளைக்குத் தாராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களிடம் கருத்துக் கேட்காமலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்ப்முழுமையாக விவசாயிகளை சீரழிக்கும் திட்டம்.
மோடி அரசின் நிழலான தமிழக அரசு
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக பாசிச பாஜக அரசு கொண்டுவரும் திட்டங்களை அடிபிறழாமல் செயற்படுத்தும் தமிழக அதிமுக அரசு மக்களின் போராட்டங்களை வெறித்தனமாக அடக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடக்கும் கதிராமங்கலத்தின் மக்கள் போராட்டம் அந்த கிராமத்துடன் நிற்காது. கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக மக்கள் உரிமைப் போராட்டங்களை மொத்த தமிழ்நாட்டையும் கதிராமங்கலங்களாக மாற்றும்.
கதிராமங்கலத்திற்கு சென்று அம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இகக (மாலெ) (விடுதலை) தோழர்கள் இளங்கோவன், குணசேகரன், கார்த்திக், பாரதி, ஜெயபால் ஆகிய தோழர்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை தொடர வாழ்த்து தெரிவித்ததோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கதிராமங்கல மக்களின் கோரிக்கைகளான ஓஎன்ஜிசியே வெளியேறு’, ‘கைது செய்தவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்என்ற கோரிக்கைகள் வெல்லட்டும்.

Search