சர்வதேச
உறவுகளும் கத்தார் நடப்புகளும்
எஸ்.குமாரசாமி
ஒரே நேரத்தில்,
வளர்ந்த நாடுகளில்,
கூலி உழைப்புக்கும்
மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைகிறது; ஏகாதிபத்தியத்துக்கும் மூன்றாம் உலக
நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமடைகிறது.
இவற்றின்
பிரதிபலிப்பை மக்கள் எதிர்ப் புக்களின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியில் காண
முடிகிறது.
நவதாராளவாத
அமைப்பு முறை, கடுமையான
பொருளாதார நெருக்கடி, நிரந்தரமான
உலகளாவிய போர், வளரும் சுற்றுச்
சூழல் பேரிடர் என்ற ஆபத்தான பயணப் பாதையில், இன்றைய அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான
முதலாளித்துவ உலகம் செல்கிறது.
மக்களின்
புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு, முதலாளித்துவ
உலகின் ஆபத்தான பயணப் பாதையை வெல்லும், தற்போதைய அரசியல் சமநிலையை மாற்றும்,
பயங்கரவாதம் மற்றும்
ஏகாதிபத்தியத் தலையீடு என்ற சுழலேணியை வெல்லும், உள்ளாற்றல் உள்ளது.
உலகம், பல துருவங்கள் நோக்கி நகர்கிறது. இந்தப் போக்கு
சிக்கலான சர்வதேச உறவுகள் என்ற வலை மூலம் செயல்படுகிறது.
இப்படியாக,
சர்வதேச அரசியல் சூழல்
தொடர்பாக இகக (மாலெ) 2013 காங்கிரஸ்
அறிக்கை சொல்கிறது.
அய்க்கிய
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், டிரம்ப் தலைமையிலான தங்கள் நாடு, இப்போது போருக்கு ஆயத்தமாக இல்லை என்றும்,
அதற்கு, முந்தைய ஒபாமா அரசே காரணம் என்றும் சொல்கிறார்.
தங்களது நாட்டிற்கு, ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் மற்றும்
பயங்கரவாதிகள் என்ற அய்ந்து முனைகளிலிருந்து ஆபத்து வருவதாகவும், அந்த ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள இராணுவச்
செலவை ரூ.41.53 லட்சம் கோடி என்ற
அளவிற்கு உயர்த்தப் போவதாகவும் சொல்கிறார். அய்க்கிய அமெரிக்காவின் அயல் விவகாரக்
கொள்கையில் ராஜ தந்திரத்திற்கு இடமில்லை. அதிபர் மகள் இவங்கா, அவருடைய கணவர் புஷ்ணர், இராணுவ தளபதிகள், ஆயுதத் தளவாட நிறுவனங்கள் ஆகியோரே, அதை தீர்மானிக்கன்றனர். டிரம்ப், டிவிட்டர் செய்திகளில் அயல் விவகாரக்
கொள்கைகளைத் தட்டி வருகிறார். எக்ஸôன் நிறுவன தலைமை
அலுவலராய் இருந்து அயல் விவகாரத் துறை அமைச்சரான டில்லர்சன், சிரியாவின் ஆசாத் தொடரலாம் என்றும் அவர் போயே
ஆக வேண்டும் என்றும் மாற்றி மாற்றிப் பேசுகிறார். ஈரான் அணு ஆற்றல் ஒப்பந்தத்தை
மீறவில்லை என்று சொல்லி, பிறகு மீறி
விட்டது என்றும் சொல்கிறார். உண்மை ஒத்துவராததால், தங்கள் நாட்டு சாவு வியாபாரிகளுக்காக
நிரந்தரமான உலகளாவிய போருக்கு வழி செய்கிறார். அய்க்கிய அமெரிக்காவின் பல
நாடுகளுக்கான தூதர்கள், தமக்கு வேலையே
இல்லை என்றும், தாம் வெறும்
குறிப்பெடுக்கும் வேலை பார்ப்பதாகவும், தமது வேலைகளை ராணுவ தளபதிகளே பார்ப்பதாகவும் புலம்புகிறார்கள்.
அய்க்கிய
அமெரிக்காவின் அய்நா தூதர் நிக்கி ஹாலே. இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்.
இவர், அய்நா பாதுகாப்பு
கவுன்சில் உறுப்பினர்களுடன் டிரம்ப்பை ஏப்ரல் மாதம் சந்தித்தார். அப்போது
அவர்களிடம் டிரம்ப் சொன்னார்: ‘உங்களுக்குப்
பிடித்திருந்தால் நிக்கி பதவியில் இருப்பார்; நீங்கள் வேண்டாம் என்றால், அவர் அந்தப் பதவியில் வேண்டாம்’, ‘இல்லை, இல்லை நிக்கி பிரமாதமாக வேலை செய்கிறார்; நான் உறுதி அளிக்கிறேன், அவர் வேலையில் இருப்பார்’. வல்லரசுக்கு, மனம் போனபடி செயல்படும் அதிபர்.
டிரம்பின்
அய்ரோப்பிய பயணம் வினோதமான விபரீதங்கள் கொண்டது. பாரிஸ் பருவ நிலை மாறுதல்
மாநாட்டிலிருந்து டிரம்ப் வெளியேறினார். சீனாவும் இந்தியாவும், பருவ நிலை மாறுதலுக்குக் காரணம் என்றார். புவி
வெப்பமயமாதல் எல்லாம் மோசடி, அதற்கெல்லாம்
அய்க்கிய அமெரிக்கா பொறுப்பெடுக்காது எனக் கையை உதறிக் கொண்டு போன டிரம்பைப்
பார்த்து, அவரது அய்ரோப்பிய
ஏகாதிபத்திய கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரம்ப், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)
நாடுகளிடம், உங்கள் ராணுவச் செலவுகளை
நீங்கள் கணிசமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என, ஆணையிடும் தொனியில் சொன்னார். 28 நேட்டோ நாடுகளின் ராணுவச் செலவில், மூன்றில் இரண்டு பகுதியான 700 பில்லியன் டாலரை அய்க்கிய அமெரிக்கா மட்டுமே
செலவழிக்கிறது. உண்மையில் அய்ரோப்பாவின் ராணுவ கை, அய்க்கிய அமெரிக்கா என்பதுதான் நிலைமை.
அய்ரோப்பா, புதிய ராணுவ
உடன்படிக்கை அமைக்கவும் முடியாது, அய்க்கிய
அமெரிக்கா சொல்வதை எல்லாம் செய்ய முடியாது, அய்க்கிய அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளவும்
முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அய்ரோப்பாவிலேயே
வலுவான பொருளாதாரம் கொண்டுள்ள ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் சொல்கிறார்; ‘மற்றவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும்
காலம் போய்விட்டது; அய்ரோப்பியர்கள்
தம் தலைவிதியைத் தம் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்’.
டிரம்ப்,
‘பயங்கரவாதம், அகதிகள் குடியேற்றம்’ என்ற இரட்டை பிரச்சனைகளை எதிர்கொள்ளுமாறு
அய்ரோப்பிய நாடுகளுக்கு உபதேசம் செய்தார். யுகோஸ்லவியா, ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா
போர்களுக்கு காரணமான அய்க்கிய அமெரிக்கா, தமக்கு உபதேசம் செய்ய என்ன தகுதி கொண்டுள்ளது என அய்ரோப்பியர் பொருமுகின்றனர்.
நீங்கள் என்னதான், சுதந்திரம்
ஜனநாயகம் மனித உரிமைகள் பேசினாலும், எங்களது எல்லா போர்களிலும் உங்கள் கைகளிலும் ரத்தம் தோய்ந்துள்ளது, எங்களைக் கேட்கும் தார்மீக உரிமை உங்களுக்கு
இல்லை என டிரம்ப் மனதுக்குள் சிரிக்கிறார்.
ஆக, ஏகாதிபத்திய உலகின் தலைவன் அய்க்கிய அமெரிக்கா
ஒரு துருவம் என்றால், அதற்கு
வெளியேதான் அய்ரோப்பா தனித்து நிற்கிறது.
அய்ரோப்பா,
இனி தனக்கு அய்க்கிய
அமெரிக்க போர்களில் பங்கு வேண்டாம் எனவும், இந்த போர்களால்தான் ஏகாதிபத்திய தலையீடு -
பயங்கரவாதம் என்ற சுழலேணி தோன்றியதாகவும் கருதுகிறது.
வடகொரியாவோடு, ஈரானோடு போர் என்பதை அய்ரோப்பா விரும்பவில்லை.
அய்ரோப்பா
சீனாவோடு ரஷ்யாவோடு பொருளாதார உறவுகளை
பலப்படுத்த விரிவுபடுத்த விரும்புகிறது.
இதே
நிலைப்பாட்டையே பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் எடுக்க விரும்புகின்றன.
ஆக பல்துருவப் போக்கு, சர்வதேச உறவுகளில் நன்கு வெளிப்படுகிறது.
நிச்சயமாக,
அய்ரோப்பாவின் சிக்கன
நடவடிக்கைகள், கூலி
உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாட்டை அங்கு, தீவிரப்படுத்தி உள்ளது. அய்க்கிய அமெரிக்காவிலும்,
மணிக்கு 10 டாலர் குறைந்தபட்ச சம்பளம், வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கங்கள்,
மூலதன நெருக்கடியை
வெளிச்சம் போட்டுக் காட்டின. பய் அமெரிக்கன் ஹயர் அமெரிக்கன் என டிரம்ப்
பேசும்போது, வேலை இன்மை குறை
சம்பள பாதுகாப்பில்லா வேலை உருவாக்கிய எதிர்ப்பலைகளின் மீது சவாரி செய்து
ஆட்சிக்கு அவர் வந்துள்ளபோது, மூன்றாம் உலக
நாடுகளும், உலகமயம், மேலை ஏகாதிபத்திய நாடுகளுக்கானது என்கிறார்கள்.
சீனாவின் பிரிக்ஸ் பலப்படுகிறது. சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில்
இந்தியாவும் பாகிஸ்தானும் அங்கம் வகிக்கின்றனர். சீனா தனது நிதி மற்றும் பொது
முதலீட்டின் மூலம், ஆசியா, அய்ரோப்பா, ஆப்பிரிக்கா நெடுக, உள்கட்டுமான வசதிகள் பெருக்கம், ஒன் பெல்ட் ஒன் ரோட் என புதிய புதிய வேறுவேறு
மட்ட பொருளாதார கூட்டாளிகளை நண்பர்களை தேடிக்கொண்டுள்ளது. அய்க்கிய அமெரிக்காவின்
அயல் விவகாரக் கொள்கை, இராஜதந்திரத்
தால் அல்லாமல் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும்போதும், சீனமோ, பொருளாதார உறவுகளும் உதவிகளுமே தனது அயல் விவகார ராஜதந்திரம் என்கிறது. ஈரான்,
சமாதானத்தை நாடுவது,
பொருளாதார சுயசார்பை
மேற்கொள்வது, தமது பாணி
தேர்தல் ஜனநாயக முறையைப் பின்பற்றுவது என்பதோடு, புதிய கூட்டாளிகளை பெற கவனம் செலுத்துகிறது.
ரஷ்யா, புடின் தலைமையில் பழைய
பெருமையை மீட்க ஒரு பக்கம் முயன்றாலும், நேட்டோ முற்றுகையைத் தவிர்ப்பது தளர்த்துவது, மற்ற நாடுகளோடு உறவாடுவது என்பவற்றுக்கு
அழுத்தம் வைக்கிறது.
இந்தப்
பின்னணியில் நடந்த பிரான்ஸ், இங்கிலாந்து
தேர்தல்களும் சில முக்கிய விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. பிரான்ஸ் அதிபர்
தேர்தல் மே 7 நடந்தபோது,
குடியேறும் அகதிகளுக்கெதிராக
நஞ்சைப் பரப்பும் லீ பென்னைத் தோற்கடிக்க, 75% பேர் வாக்களித்தார்கள். சிக்கன நடவடிக்கைகளை,
கார்ப் பரேட் ஆதரவு
நடவடிக்கைகளை மேக்ரன் தொடர்வதால், அவருக்கான ஆதரவு ஜுன் 18ல் வடிந்துவிட்டது. கூட்டாளி மோடமுடன் 577ல் 350 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே மேக்ரன் வெல்ல முடிந்தது. 400, 420 இடம் வரும் என்ற கருத்து கணிப்பு எடுபடவில்லை.
மே 7 அன்று 75% பேர் வந்து வாக்களித்த நிலை, ஜ÷ன் 15ல் 42.6% ஆகக் குறைந்தது. சிக்கன நடவடிக்கைக்கு எதிரான,
கூலி உழைப்பு மூலதனச்
சண்டைக்கான களம் பிரான்சில் சூடு தணியாமலே உள்ளது.
இங்கிலாந்தில்
ஜெர்மி கோர்பின் தலைமையிலான லேபர் கட்சி, லேபர் கட்சியாகச் செயல்படத் துவங்கிவிட்டது. ‘பலருக்காக, சிலருக்காக அல்ல’ என்ற முழக்கம் சிந்தை கவர்ந்து சிந்தை குளிர
வைத்தது. டிரைடன்ட் அணு ஆயுதங்கள் வைத்தல், குடியேற்றத்தில் சில சமரசங்கள் என்பவை போக,
முதலாளித்துவ எதிர்ப்பு
கார்ப்பரேட் எதிர்ப்பு மக்கள் சார்பு கொள்கைகளுடன் லேபர் கட்சி எதிர்நீச்சல்
போட்டுள்ளது. பயங்கரவாதச் செயல் நடந்தவுடன், தம் மீது பயங்கரவாத ஆதரவு எனப் பழிபோடுவார்கள்
என்ற தற்காப்பு நிலை எடுக்காமல், சிக்கன
நடவடிக்கைகளும் காவல் துறை ஆட்குறைப்பும், பயங்கரவாதத்துக்கு துணை புரிந்தன என லேபர் கட்சியால் துணிந்து பேச முடிந்தது.
தெரசா மே, இருக்கிற
சலுகைகளை பறிப்பேன், இந்த முடிவில்
உறுதியாய் நிலையாய் நிற்பேன் என்று சொன்னபோது, லேபர் கட்சி, ரயில்வே உள்ளிட்ட அடிப்படை உள்கட்டுமானங்கள்
நாட்டுடைமையாக்கம், கல்வி மருத்துவ
அரசு சேவைகள் இலவசமாக/குறைந்த செலவில், தரம் உயர்த்தி விரிவுபடுத்தி உறுதி செய்வோம் எனச் சொன்னது. ஏகாதிபத்தியத்
தலையீடுகளுக்கு எதிராக நிலை எடுத்தது. ஏகாதிபத்தியத் தலையீடுகளின் உடன் விளைவே
அகதிகள் குடியேற்றம் எனச் சுட்டிக் காட்டியது. உண்மை எடுபட்டது. இளைஞர்கள் இந்தக்
கருத்துக்களை எடுத்துச் சொல்லும் வாகனமாயினர். இங்கிலாந்தின் இடதுசாரி பயணம்,
இங்கிலாந்து இளைஞர்களின்
இடதுசாரி அரசியல் ஆதரவு நிலை, உலகெங்கும்
இடதுசாரி ஆர்வலர்க்கு உற்சாகம் தருகிறது.
மக்கள்
எழுச்சிகள், சர்வதேச சம
நிலையை மாற்றும்.
கத்தார் பிரச்சனையில்
அய்க்கிய அமெரிக்கா - சவுதி அரேபியா வேஷம் கலைகிறது
5.60 கோடி
வாக்காளர்கள் கொண்ட ஈரானில் 4 கோடி பேர்
கிட்டத்தட்ட 70% பேர்
வாக்களிக்கத் தயாரான நேரத்தில், சவுதி
அரேபியாவில் டொனால்ட் டிரம்ப் 50க்கும் மேற்பட்ட
இசுலாமிய சன்னி பிரிவு ஆட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். ‘பிராந்தியம் முழுவதும் அழிவையும்
குழப்பத்தையும் பரப்பும், பயங்கரவாதிகள்
போராளிக் குழுக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு, லெபனானில் இருந்து இராக் வரை, ஏமன் வரை ஈரான்தான் நிதி, பயிற்சி, ஆயுதங்கள் தருகிறது’ என டிரம்ப் குற்றம் சுமத்தினார். டிரம்ப்,
சவுதியில் இருந்து
ஏற்றுமதியாகும் வகாபிசம்தான், அல்கொய்தாவும்,
அய்எஸ்அய் எஸ்சும்
உருவாகக் காரணம் எனப் பேசாமல் தவிர்த்து, சவுதிக்கு ரூ.72,000 கோடி மதிப்பில் 72 எஃப்15 ரக போர் விமானங்களை வழங்கினார். 480 பில்லியன் டாலர் பேரங்கள் முடிந்தன. ஈரானில் மக்கள் வாக்களித்து
தேர்ந்தெடுத்த ஹாசன் ருஹானி, தேர்தலையே அறியாத
சவுதி அரேபியா, ஜனநாயகத்தின்
சுதந்திரத்தின் பாதுகாவலராக தன்னை முன்னிறுத்தி, ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஈரானால்
ஆபத்து என்பது, கேலிக்குரிய
கருத்து அல்லவா எனக் கேள்வி எழுப்பினார்.
டிரம்ப் வந்து
சென்ற பின், சவுதி அரேபியா,
அய்க்கிய அரபு அமீரகம்,
எகிப்து, லிபியா, மாலத்தீவுகள், பஹ்ரைன், ஏமன் நாடுகள் கத்தாருக்கு எதிரான தீவிரமான
பொருளாதாரத் தடைகளையும் முற்றுகையையும் திணித்தன. கத்தார் எண்ணெய் வளம் இல்லாமல்,
இயற்கை எரி வாயு வளம்
கொண்ட நாடு, அதற்கு ஈரானுடன்
சேர்ந்தே இயற்கை எரி வாயு வயல்கள் கடலில் உள்ளன. இந்த இயற்கை எரி வாயு, அய்க்கிய அமெரிக்காவின் ஷேல் வாயுவை விட
சந்தையில் எடுபடக் கூடியது. இதில் கைவைக்க, கத்தார், அல்கொய்தா, அய்எஸ்அய்எஸ், முஸ்லிம் பிரதர் ஹ÷ட் தீவிரவாதிகளுக்கும், வன்முறையைத் தூண்டும் அல் ஜசீரா தொலைக்
காட்சிக்கும் உதவுவதாகவும், கத்தாரின் அரபு
அண்டை நாட்டவர் குற்றம் சுமத்தினர். நிபந்தனை போட்டனர்.
இரட்டை கோபுரத்
தாக்குதலுக்குக் காரணமான சவுதி அரேபிய நாட்டினரிடம் நஷ்ட ஈடு பெறலாம், அவர்கள்
மீது வழக்கு போட்டு தனது நாட்டுக்கு இழுத்து வந்து விசாரித்து தண்டிக்கலாம்
என அய்க்கிய அமெரிக்கா சட்டம் போட்டுள்ளது. சவுதி ஏமனில் செய்யும் மனிதப்
படுகொலைக்கு எதிராக, ஒபாமா ஆட்சியின்
இறுதிக் காலத்தில் சவுதி அரேபியா மீது சில கெடுபிடிகள் இருந்தன. சொந்த நாட்டு
சட்டத்தை மீற முடியாத டிரம்ப், சவுதி அரேபியாவை
குஷிப்படுத்த 110 பில்லியன் டாலர்
ஆயுதம் தந்து, கத்தார் மீது
பாயவும் செய்தார்.
கத்தாரில் அல்
உபெய்த் ராணுவ விமான தளத்தை அய்க்கிய அமெரிக்கா வைத்துள்ளது. அங்கு 11,000 வீரர்களையும் 100 போர் விமானங்களையும் வைத்துள்ளது. கத்தாரில்
சிறு கடற்படையுடன் கூட்டு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளது. கத்தாரின் ஓராண்டு ராணுவ
செலவே ரூ.12,500 கோடிதான்.
குவைத் துபாய் ஓமன் நாடுகள் கத்தாருடனும் ஈரானுடனும் நல் உறவு நல்லதுதான் எனக்
கருதுகின்றன. இந்தப் பின்னணியில், கத்தாருக்கு
எதிரான சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகளின் தடை நியாயமல்ல என அய்க்கிய
அமெரிக்கா இப்போது சொல்கிறது. துருக்கிக்கு, கத்தாரில் 150 போர் வீரர்கள் உள்ள ஒரு ராணுவ தளம் உள்ளது.
துருக்கி அங்கே 3,000 போர் வீரர்
அனுப்பி கத்தாருக்கு உதவுகிறேன் என்கிறது. ஈரான், கத்தாருக்கு உணவு வழங்குகிறது. கத்தார்
முற்றுகை முன் மண்டியிடாமல், ஆதரவைத்
திரட்டிக் கொண்டு உறுதியுடன் நிற்கிறது.
கத்தார்
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு முக்கிய நாடாகும். 2016ல் கத்தாரின் 26 லட்சம் பேரில், 6ணீ லட்சம் பேர் இந்தியர்கள். கத்தார்
இந்தியர்கள் அனுப்பிய பணம் ஓராண்டில் ரூ.25810 கோடி. இரு நாடுகளின் வர்த்தகம் சுமார் ரூ.65,000 கோடி. 13 இந்திய நகரங்களிலிருந்து 102 விமான சேவைகளை இயக்குகிறது, கத்தார் ஏர்வேஸ். வாரம் 24,000 பேர் இரு நாடுகளுக்கு இடையில்
பணிபுரிகின்றனர். கத்தார் போர்க்களம் ஆகாமல் இருப்பதும், அங்கே அமைதி திரும்புவதும் இந்தியாவுக்கு
நல்லது.
இசுலாமிய உலகம்
பற்றிய ஒரு விரிந்த தெளிந்த பார்வை அவசியம். இசுலாமியர்கள் அனைவரும் அராபியர்கள்
அல்ல. இசுலாமியர்களாக, பெர்ஷியர்களும்
ஆசியர்களும் மங்கலாய்ட் இனத்தவரும் அய்ரோப்பியரும் ஆப்பி ரிக்க வமிசாவழியினரும்
கூட உள்ளனர். உலகில் அதிகம் பேர் பின்பற்றும் மதமாக இசுலாம் மாற வாய்ப்பு உள்ளது.
அனைத்து
இசுலாமியர்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால், அனைத்து
பயங்கரவாதி களும் இசுலாமியர்கள் என்ற நச்சுக் கருத்து ஆபத்தானது.
இசுலாமியர்க்கு
எதிராக பயங்கரவாதத்தை பெருமளவில் ஏவியது, அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகமே. பயங்கரவாதத் தாக்குதல்களில்
இது வரை இறந்தவர்களில் ஏகப்பெரும்பான்மையினர் இசுலாமியர்களே. ஈரான், சிரியா ஆகியவை ஷியா நாடுகள். இராக்கில்,
ஷியா கட்டுப்பாடு உள்ளது.
லெபனானில், ஷியா செல்வாக்கு
உள்ளது. ஆகவே அவற்றுக்கெதிராக, சவுதி அரேபியா,
சன்னி இசுலாமிய நாடுகளை
பிரித்து நிறுத்தப் பார்க்கிறது. ஷியா, சன்னி இசுலாமியர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்து பலவீனம் ஆகட்டும் என
அய்க்கிய அமெரிக்கா முயற்சி செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கெதிராக, இசுலாம் சாத்தான்மயமாக்கப்படுவதற்கு எதிராக,
தமக்குள் ஓர் ஒற்றுமை
உருவாக்கிக் கொண்டு, உலகெங்கும்
எழுந்துவரும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இசுலாமிய உலகம் கை கோர்த்தாக
வேண்டும்.