ஜிஎஸ்டி
வரிவிதிப்பை ரத்து செய்!
ஜிஎஸ்டி
வரிவிதிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் விசைத்தறி முதலாளிகள் விசைத்தறி கூடங்களை
மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், விசைத்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்
ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரியும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால்
பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம், 50 கிலோ அரிசி மற்றும் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
விலையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத் தியும் நாமக்கல் மாவட்டத்தின்
குமாரபாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஜுலை 9 அன்று முற்றுகையிட்டனர்.
இகக மாலெ
மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டம்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருந்த பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
காவல் துறையினர் ‘விரைந்து’
செயல்பட்டு முற்றுகை
போராட்டம் நடத்திய தோழர்களை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் அடைத்து
வைத்தனர். பிறகு மாலை விடுதலை செய்தனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட
பிறகும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குக் காவல் போடப்பட்டது.
இறைச்சிக்காக
கால்நடை விற்பனைக்கு மோடி அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய
வலியுறுத்தியும், நெடுவாசல்,
கதிராமங்கலம் ஆகிய இடங்களிலும்
டெல்டா மாவட்டங்களின் வேறு பல இடங்களிலும் விவசாயத்தை, நிலத்தடி நீரை பாதிக்கும் எண்ணெய் கிணறுகள்,
எரிவாயுத் திட்டங்கள்
ஆகியவை ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட
வேண்டும், கருப்புடையான்பட்டி
பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை உடனடியாக அகற்றப்பட வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் மீதும் ஜுலை 7 அன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது. இககமாலெ, அவிகிதொச நடத்திய
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.