COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 1, 2017

மோடி ஆட்சியின் ஜிஎஸ்டி எனும் சூதாட்டத்தில் நாட்டின் வறிய மக்களுக்குத்தான் கூடுதல் சுமை

ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைகள் உயராது என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னார். பாஜக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பே இல்லையே? பிறகு விலை உயராமல் எப்படி...? ஆடம்பரக் கார்களின் விலை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை குறைகிறது. சாதாரண கார்களின் விலையும் ரூ.5,000 முதல் ரூ.75,000 வரை குறையும். நிர்மலா சீதாராமன் சொல்வது உண்மை! அறிவு கெட்ட விவசாயி... தற்கொலை செய்துகொள்கிறானே... மோடியின் ஆட்சியில் நல்ல காலம் வந்துவிட்டதல்லவா? ஆடம்பரக் கார் வாங்குவதை விட்டுவிட்டு உயிரை விட்டுவிடுகிறான்....

நாடு முழுவதும் ஒரே விலை, ஒரே வரி, சமத்துவம், புரட்சி, வளர்ச்சி என்று மோடி அரசு பேசிக் கொண்டிருக்கிறது. பொதுபுத்திக்கு சரி என்று கூட பட்டுவிடும். ஆனால், வரி என்பது எதற்கு விதிக்கப்படுகிறது? இருப்பவரிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்குத் தரத்தான் வரி விதிக்கப்படுகிறது. பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அனைவருக்கும் இப்போதும் ஒரே விலைதான். ஒரே வரிதான். இருப்பவர் பொருளையும் சேவையையும் வாங்குவார். இல்லாதவர் வாங்க மாட்டார். ஜிஎஸ்டி வந்த பிறகும் இது இப்படித்தான் இருக்கும். இருப்பவர் வாங்குவார். இல்லாதவர் ஏங்குவார். என்ன பெரிய வித்தியாசம்? என்ன பெரிய பாதிப்பு, குழப்பம்?
முன்பு பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தனித்தனியே வரி விதிக்கப்பட்டன. இப்போது கிட்டத்தட்ட 1211 பொருட்களும் சேவைகளும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விதமான வரி கட்டமைப்புக்குள் வந்துவிடுகின்றன. வரியில் இருந்து விலக்கு பெறுகிற பொருட்களும் சேவைகளும் கூட உள்ளன. இந்த பொருட்கள், சேவைகள் தவிர மற்ற அனைத்துக்கும் குறைந்த பட்சம் 5% முதல் அதிகபட்சம் 28% வரை வரி செலுத்தியாக வேண்டும். அன்றாட பயன்பாட்டுக்கான 107 பொருட்களின் விலை குறையும் என்று இகனாமிக்ஸ் டைம்ஸ் இதழின் பட்டியல் ஒன்று சொல்கிறது. அப்படியானால் வரிவிதிப்புக்குள் இருக்கிற 1100 பொருட்களுக்கும் மேல் விலை உயரப் போகிறது. எந்த பொருள் எந்த அளவு வரிவிதிப்பில் முன்னர் இருந்தது, இப்போது அது எப்படி மாறியிருக்கிறது, இந்தப் பொருளுக்கு முன்னர் வரிவிதிப்பு இருந்ததா, இப்போதுதான் விதிக்கப்பட்டதா என்றெல்லாம் நாம், ‘பணமதிப்பகற்றும் நடவடிக்கையில் நடந்தது போல் அனுபவித்துஅறிந்து கொள்வோம். பெரும்பாலும் நமக்குப் புரியாமல் போகும். கார் விலை குறைந்ததைக் காட்டி, விலை குறைந்துவிட்டது என்று மோடி தலைமையிலான பொய்யர் கூட்டம் பஜனை பாடும். மீதமுள்ள இரண்டு ஆண்டு ஆட்சிக் காலம் ஓடிவிடும். இந்திய மக்கள் பலர் இன்னும் ஒட்டாண்டியாகி இருப்பார்கள்.
மோடியின் ஜிஎஸ்டி பெருமைக்குப் பின் இருக்கும் கார்ப்பரேட் விசுவாசம்தான், வசதி படைத்தவர்கள்பால் அவர் கொண்டுள்ள விசுவாசம்தான் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். ஜிஎஸ்டி மறைமுக வரி. இது அனைவருக்குமானது. ஏழையையும் பணக்கார னையும் ஒரே தட்டில் வைத்து அது பார்க்கிறது. ஆனால் சீர்திருத்தம் வர வேண்டியது நேரடி வரிவிதிப்பில்தான். சொத்துவரி விலக்கு, கார்ப்பரேட் வரிவிலக்கு என பணக்காரர்களிடம், கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வர வேண்டிய நேரடி வரிவிதிப்புக்கு விலக்குகள் கொடுத்து விட்டு, அதை மறைமுக வரி மூலம் சரி கட்டும் முயற்சி இதில் உள்ளது. இதிலும் பணக்காரர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையிலும் வறியவர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையிலும் இருக்கிற நம் நாட்டில், ஜிஎஸ்டி வரியின் சுமை வறிய மக்கள் மீதுதான் பெரிதும் ஏற்றப்படும்.
மாநில அரசாங்கங்கள், தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் மேலோட்டமான நல நடவடிக்கைகளையும் ஜிஎஸ்டியை காரணம் காட்டி தவிர்த்துவிடலாம். இதில் மாநில சுயாட்சி என்ற உரிமை பற்றியும் பிரச்சனை எழுப்பப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் பெருங்குழப்பம் ஒன்று இந்திய மக்களைத் தாக்க வருகிறது.

Search