COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 1, 2017

கோவையில் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் மீண்டும் சண்டை

கோவையில் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் மீண்டும் சண்டை. டேவிட் கையில் அன்று இருந்த அதே கவண்தான் இன்றும் இருக்கிறது. கோலியாத் அன்று போலவே இன்றும் விவரமற்றவனாகவே இருக்கிறான். எனவே டேவிட்தான் இந்தச் சண்டையிலும் வெல்வான்.

விவசாய நெருக்கடியால் கடுமையான துன்பங்களுக்கு ஆளான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதிர்ச்சி மரணங்கள் அவர்களை பலி கொண்டன.  பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். விவசாயிகள் விரோத மோடி அரசு அவர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் துன்பப்படும் விவசாயிகளோடு சேர்ந்து நின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 25 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.
சங்க எல்லைகளுக்கு அப்பால், மக்கள் பிரச்சனைகளில் என்றும் தலையிட்டு வருகிற பிரிக்கால் தொழிலாளர்களும் தொழிலாளி - விவசாயி ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தனர். அந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். சமயம் பார்த்துக் கொண்டிருந்த பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களைத் தண்டித்தது. ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததால் வேலை நிறுத்தம் செய்த ஒரு நாளும் தண்டனையாக 8 நாட்களும் சம்பளப் பிடித்தம் செய் தது. கிட்டத்தட்ட ரூ.8000. உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களுக்கு அது பெரிய தொகை. பள்ளிகள் கல்லூரிகள் திறக்கும் நேரத்தில் மிகமிக அவசியமான தொகை. நிர்வாகத்துக்குத் தெரியும். முதலாளித்துவம் குரூர புத்தி கொண்டது அல்லவா?
அதன் குரூரம் ஜுன் 19 முதல் ஒவ்வொரு நாளும் இன்னும் குரூரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொடுத்தது தொழிலாளி. அவன் உழைத்துக் கொடுத்ததால்தான் இன்று உலகெங்கும் வியாபித்திருக்கிறேன் என்று கூவுகிறாய். 12 நாட்களாக பட்டினி கிடக்கிறானே. மானுட மனம் என்றால் இரங்க வேண்டும். பதற வேண்டும். ஓடோடிச் சென்று உணவு தர வேண்டும். சாகட்டும் என்று காத்திருக்கிறது பிரிக்கால் நிர்வாகம். மக்கள் சேவை, விவசாயம் காப்பது என்று தனக்குத் தானே விளம்பரம் செய்துகொள்ளும் பிரிக்கால் நிர்வாகத்தின் முகத்திரையை தமிழகத் தொழிலாளர்கள் கிழிக்கிறார்கள். ஆட்கொல்லி முதலாளித்துவம் இப்படித்தான் நடந்துகொள்ளும்.
கூடவே தமிழக அரசின் முகமும் கிழிந்து தொங்குகிறது. நிர்வாகம் முதலமைச்சர் வரை பேசி வைத்திருப்பதாக தகவல்கள் உள்ளன. தொழிலாளர் துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் என அனைவருக்கும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என்று தகவல் தெரிவித்தும், பட்டினிப் போராட்டம் துவங்கிய பிறகு நேரில் சந்தித்து கோரிக்கையை சொன்ன பிறகும் 12 நாட்களாக தொழிலாளர்கள் பட்டினியாய் கிடக்கிறார்கள் என்று தெரிந்தும், தலை யிடாமல், அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. இந்த அரசு யாருக்கானது என்பதும் பிரிக்கால் தொழிலாளர்களின் பட்டினிப் போராட்டம் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அம்பலமாகிறது.
பிரிக்கால் தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது அல்ல. மெனக்கெட வேண்டியதில்லை. பிரிக்கால் முதலாளிக்குக் கூட உடனடி பொருளில் நட்டம் இல்லை. தொழில் தகராறு சட்டம், 1947 பிரிவு 10 (1)ன் கீழ் சம்பளப் பிடித்த பிரச்சனையை நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும், பிரிவு 10 பியின் கீழ், வழக்கு முடிவுக்கு உட்பட்டு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை, முன்பணமாக தொழிலாளர் களுக்குத் தர நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்பவை கோரிக்கைகள். இவற்றைச் செய்யக் கூட, இந்த அரசு தயாராக இல்லை.
போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு பெருகுகிறது. சென்னையில், ஜுன் 19 அன்று சென்னையிலும் கோவையிலும் துவங்கிய பட்டினிப் போராட்டத்தை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு.அரிபரந்தாமன் துவக்கி வைத்தார். 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்ய வழிவகுக்கும் சம்பளப் பட்டுவாடா சட்டம் 1936ன் பிரிவு 9 IIன் புரொவிசோ வெள்ளையர் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராகப் போராடிய இந்திய தொழிலாளர்களைத் தண்டிக்க கொண்டு வரப்பட்டது எனச் சொன்ன அவர், இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று இந்திய தொழிலாளர் வர்க்கம் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். போராட்டம் ஒன்று மட்டும்தான் நிர்வாகத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் புரிகிற மொழி என்பதால் அதில் தொழிலாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் போராட்டத்தை சென்னையிலும் கோவையிலும் துவக்கி வைத்த திரு.அரிபரந்தாமன், ஒரு போராட்டத்தை காணொளி காட்சியில் துவக்கி வைப்பது இங்குதான் முதலில் நடக்கிறது என்றார். தொழிலாளர் கூடத்தின் தோழர் சந்திரிகா காணொளி காட்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் உறுதுணையாக இருந்தார்.
அதே நாளில் மாலையில் கோவையில் பட் டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப.உதயகுமாரன் சந்தித்து உரையாற்றினார். அடுத்தடுத்த நாட்களில், எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, வழக்கறிஞர் பாலமுருகன் உட்பட கோவையின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலரும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களைச் சந்தித்தனர். ஆதரவு தெரிவித்தனர். பிரிக்கால் மற்றும் வேறு ஆலைத் தொழிலாளர்கள், பட்டினிப் போராட்டம் நடக்கும் சங்க அலுவலகம் அருகில் திரண்டிருந்தனர்.
சென்னையில், திருவெற்றியூர், திருபெரும்புதூர், அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். பட்டினிப் போராட்டம் துவங்கிய முதல் நாளே ஏஅய்யுடியுசியின் தோழர் சிவகுமார், யுஎல்எஃப்பின் தோழர் ரமேஷ், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தோழர் சம்பத், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தோழர் கீதா ஆகியோர் பட்டினிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். அடுத்தடுத்த நாட்களில் சிஅய்டியு, ஏஅய்டியுசி, தொமுச, என்டியுஅய் ஆகிய சங்கங்களின் தலைவர்களும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஜுன் 20 அன்று திருபெரும்புதூரின் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஹுண்டாய், ஏசியன் பெயின்ட்ஸ், சிஅண்டுஎஃப், டென்னகோ என பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
ஜுன் 21 அன்று முற்போக்கு பெண்கள் கழகத் தோழர்கள் அயனாவரத்தில் தீடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 45 பெண் தொழிலாளர்களுக்கும் மேல் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 40 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தில் வீடியோ எடுத்துவிட்டு காவல்துறையினர் சென்றனர். ஆர்ப்பாட்ட முழக்கங்கள், பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களையும் ஈர்க்க, ஜுன் 19 முதல் ஒரே இடத்தில் அமர்ந்தும் படுத்தும் இருந்த தோழர்கள், சாலை வரை சென்று அந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சிறிது நேரம் நின்றுவிட்டு வந்தனர்.
ஜுன் 22 அன்று அனைத்துத் தொழிற்சங்க கூட்டம் நடந்தது. மீண்டும் மய்ய தொழிற் சங்கங்களின் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பட்டினிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜுன் 22 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏஅய்சிசிடியு, அவிகிதொச, புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
ஜுன் 22 அன்று நாடெங்கும் இருந்து ஜனநாயக சக்திகள் 100 பேர் கையெழுத்திட்ட பேஸ்புக் மனு ஒன்றும் அரசுக்குச் சென்றது. சிஅய்டியு, ஏஅய்டியுசி, ஏஅய்யுடியுசி, எல்பிஎப், எச்எம்எஸ் ஆகிய மய்ய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அகில இந்திய மக்கள் மேடையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. எச்எம்எஸ் சங்கத்தின் மய்ய தலைமை தமிழக முதலமைச்சருக்கும் தொழிலாளர் அமைச்சருக்கும் பிரிக்கால் தொழிலாளர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.
தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்துகொண்டிருந்த நேரத்தில், அழையா விருந்தினராக அயனாவரம் காவல்நிலைய அதிகாரிகள், கியூ பிரிவு காவல் துறையினர், பட்டினிப் போராட்டம் நடந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வந்தனர்.
அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சென்னையில் நடந்த பட்டினிப் போராட்டம் ஜுன் 22 அன்று முடித்துக் கொள்ளப்பட்டது. கோவையில் தோழர்கள் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையில் பிரிக்கால் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மக்களிடம் பெற்ற 20,000 கையெழுத்துக்களை அமைச்சரிடம் நேரில் ஒப்படைக்க சென்னை வந்தனர். போராட்டத்தில் இருக்கிற தொழிலாளர்களைச் சந்திப்பதை விட ஒரு தொழிலாளர் அமைச்சருக்கு வேறு என்ன முக்கியமான கடமை இருக்க முடியும்? அவர் தொழிலாளர்களைச் சந்திக்க மறுத்தார். கூரியரில் அந்த கையெழுத்துக்கள் அனுப்பப்பட்டன.
புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் அவிகிதொச  தோழர்கள் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் ஜுன் 23 அன்று ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தினர். 
ஜுன் 23, 24 மற்றும் 25 தேதிகளில் பணியில் இருந்த பிரிக்கால் தொழிலாளர்கள் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் தொழிலாளர்கள் நாட்கணக்கில் பட்டினி கிடப்பதை வேடிக்கை பார்க்கும் நிர்வாகம், பணியிலிருந்த தொழிலாளர்கள் தங்கள் வர்க்கச் சகோதரர்களுக்கு ஆதரவாகவும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் உணவுப் புறக்கணிப்பு செய்தபோது, நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக அவர்கள் உணவுப் புறக்கணிப்பு நடத்துவதாகவும் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது. இந்த மிரட்டலையும் தொழிலாளர்கள் பொருட்படுத்தவில்லை.
ஜுன் 24 அன்று புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள், பட்டினிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஜுன் 24 அன்று ஏஅய்சிசிடியு தலைமை தோழர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து, பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனை பற்றி சட்டமன்றத்தில் பேச வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
ஜுன் 28 அன்று ஏஅய்சிசிடியு நாடு முழுவதும் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்து எதிர்ப்பு நாள் கடை பிடிக்க அழைப்பு விடுத்தது. அன்று காலையில் கோவை, திருவள்ளூர், புதுக்கோட்டை, நாகை, நாமக்கல், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்து சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்ற புரட்சிகர இளைஞர் கழக, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத் தோழர்களை காவல் துறையினர் சேப்பாக்கம் மேம்பாலத்தின் அருகி லேயே தடுத்து நிறுத்தினர். பிரிக்கால் தொழிலாளர்கள் அந்த எதிர்ப்பில் கலந்துகொண்டனர்.
காவல்துறையினருக்கு போராட்டம் பற்றி முறையானசெய்தி அன்று சேர்ந்திருக்கவில்லை என்று போராட்டக்காரர்களை அணுகிய விதத்தில் தெரிந்தது. போராட்டக்காரர்கள், முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக காவல் ஆணையர் சொன்னார். அன்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அன்று மாலை நடந்த அனைத்துத் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காவல்துறை வாகனம் ஏற்பாடு செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றது. அது வரை அவர்கள் வெயிலில் நிற்காமல் அருகில் இருந்த பூங்காவில் அமரவும் ஏற்பாடு செய்தது. கைது செய்யவில்லை.
அடுத்த நாள் ஜுன் 29 அன்று அவர்களுக்கு முறையானசெய்தி சேர்ந்திருந்தது தெரிந்தது. சட்டமன்றத்தை மீண்டும் தோழர்கள் முற்றுகையிட்டனர். இந்த முறை, சேப்பாக்கம் மேம் பாலம் அருகிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்த முடியாமல் போனது. தோழர்கள் வேறு வேறு வழிகளில் சட்டமன்ற வளாகத்தின் அருகில் சென்றுவிட்டார்கள். அவர்களைத் தடுத்த தடுப்பரண்கள் தாண்டிச் செல்ல முயற்சி செய்தபோது காவல்துறையினரின் உண்மையான செயல்பாடு வெளிப்பட்டது. அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதாவை கைது செய்ய வழக்கம்போல் அய்ந்து ஆறு காவலர்கள் தேவைப்பட்டனர். மிகுந்த சிரமத்துக்கு அப்பால் தோழர் சீதாவை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். பிரிக்கால் தொழிலாளர்களின் குரலைக் கேட்க மறுக்கும் சட்டமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும், காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தபோதுகாயங்கள் ஏற்பட்டன. தோழர் சீதாவுக்கும் காயங்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். தோழர்கள் சாந்தி, அதியமான், ஜான் பால், ஹீரா பாஸ்வான் ஆகியோரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிமன்ற காவலுக்கும் தயாராகவே இருந்தார்கள். காவல் துறை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கத் தயாராக இல்லை. அன்றுதான் மதுரை உயர்நீதி மன்றக் கிளை, அனுமதி இல்லாமல் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பு தந்தது! தீர்ப்பு தந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கிறார்களா? இங்குள்ள சூழலில் தமிழக மக்கள் அன்றாடம் ஏதாவது எங்காவது ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்று காவல்துறை துவங்கினால், அதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அப்படிச் செய்யத்தான் தமிழ்நாட்டில் போதுமான உள்கட்டுமான வசதிகள் உள்ளனவா? அன்று மாலை காவல்துறையினர் நமது தோழர்களை விடுதலை செய்துவிட்டனர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சட்டமன்ற முற்றுகை பற்றிய செய்தி பிரேக்கிங் நியுசாக உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. ஜுன் 19 முதல் நடந்து கொண்டிருக்கும் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் பற்றி செய்தி வெளியிடத் தயங்கிய, கண்டுகொள்ளாத சில தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் இந்தச் செய்தியை தவிர்த்துவிட முடியவில்லை.
ஜுன் 29 அன்று நெல்லையிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில் 12ஆவது நாளாக பிரிக்கால் தொழிலாளர்கள் 7 பேர் தங்கள் மிக சாதாரணமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பட்டினிப் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
இதற்கு மேல் என்ன நடக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது? இதயத்தின் ஒரு துண்டை வெட்டித் தா என்று சொன்ன ஷைலாக் போல், ஈவிரக்கமற்ற நிர்வாகம் நினைப்பதுபோல், பட்டினிப் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் சாகட்டும் என்று நினைக்கிறதா?
சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரிக்கால் தொழிலாளர்களுக்கான பட்டினிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வேலை நிறுத்த உரிமை பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டதல்ல என்று சொல்கிறது. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் பிரிக்கால் நிர்வாகத்தின் நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிக்கை சொல்கிறது. இதுபோன்ற தண்டனை நடவடிக்கைகள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. மாறாக, வர்க்கப் போராட்டப் பாதையில், விடாப்பிடியான போராட்டங்களில், நாம் தொடர்ந்து செல்ல அவை நம்மை மேலும் உறுதிப்படுத்துகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பிரிக்கால் தொழிலாளர்கள் ஏற்கனவே பல முறை இந்த உறுதியை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். இப்போ தும் அது நிகழ்த்தப்படும்.

கோரிக்கைகளை எல்லாம் தாண்டி மக்களை மக்கள் அமைப்புக்களை ஈர்ப்பதில், வீரத்தில் வர்க்க உறுதியில் இந்தப் போராட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது.

Search