COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, July 13, 2017

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் உணர்த்தும் செய்தி

நாடோடி

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கஃபில், தொழிலாளர் துறையின் செயலாளர் அமுதா, தொழிலாளர் ஆணையர் பாலசந்திரன் ஆகியோர் 03.07.2017 அன்று பிற்பகல் 2 மணி வாக்கில் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளரும் புரட்சிகர இளைஞர் கழகத் தின் தேசியச் செயலாளருமான தோழர் பாரதி, கோவை மாவட்ட  பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜன் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.

தொழிலாளர் தரப்பில் 15ஆவது நாளாக பட்டினிப் போராட்டம் நடப்பதால், அரசு உடனடியாகப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்கம் தனது கோரிக்கையைச் சற்று மாற்றிச் சொன்னது. தோழர் குமாரசாமியின் கையெழுத்தில் எழுதப்பட்டு, தோழர் நடராஜன் கையொப்பமிட்ட கடிதத்தை அமைச்சர் படித்துப் பார்த்தார். கோரிக்கையை அரசு அப்படியே ஏற்பதாக அமைச்சரும் தொழிலாளர் துறை அதிகாரிகளும் சொல்லி, தொழிலாளர்கள் பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். சங்கம் ஒப்புக் கொண்டது. அதன்படி, 04.07.2017 காலை 8 மணி அளவில் பட்டினிப் போராட்டத்தின் 16ஆம் நாள், கோவையில் சங்க அலுவலக பால்கனியில் இருந்து, திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் தோழர் குமாரசாமி பேசி, பழச்சாறு தர பட்டினிப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
05.07.2017 அன்று  தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அரசாணை (ஜிடி) எண்.383 மூலம் பின்வரும் எழுவினாவிற்கு கோவை தொழிலாளர் நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்குமாறு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பி உள்ளது:
எழுவினா
கோரிக்கை எண் 1
25.04.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக தொழிலாளர்களின் 8 நாட்கள் சம்பளத்தை பிரிக்கால் லிமிடெட் பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3 நிர்வாகங்கள் பிடித்தம் செய்துள்ளது நியாயமானதுதானா?
இல்லையெனில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் என்ன?
கோரிக்கை எண் 2
எழுவினா 1ன் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு, 8 நாட்கள் சம்பளத்தை பிரிக்கால் லிமிடெட் பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3 நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்க இடைக்காலத் தீர்வம் (இன்டெரிம் அவார்ட்) பிறப்பிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆம் எனில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் என்ன?
போராட்டத்தின் மூலம் 05.07.2017 அன்று  பெறப்பட்ட அரசாணை பற்றி, மாலை பல நூற்றுக்கணக்கான பிரிக்கால் தொழிலாளர்கள் மத்தியில் சொல்லப்பட்டது.
பிரிக்கால் லிமிடெட்: ஒரு பார்வை
1974ல் துவக்கப்பட்ட பிரிக்கால் நிறுவனம், இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சாலையில் ஓடாத (ஆஃப் ரோட்) வாகனங்கள், பொது பயணிகள் வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்குகிறது. வோக்ஸ்வேகன், ஸ்கோடா, வோல்வோ, ரெனோ நிசான், டேய்ம்லர், மாருதி, ஃபியட், மெர்சிடஸ் பென்ஸ், பஜாஜ், டாடா மோட் டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்ட், அசோக் லேலண்ட், டாஃபே, யமாஹா மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், கேட்டர் பில்லர், ஜேசிபி, கம்மின்ஸ், ஜெனரக், ஜான் டீயர், சிஎன்எச், ஈஷர், ஜிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிரிக்கால் உதிரிபாகங்கள் தயாரித்து வழங்குகிறது. டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (39%), பம்ப்ஸ் அண்ட் மெக்கா னிக்கல் பிராடக்ட்ஸ் (29%), அசெட் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் (18%), சென்சார்ஸ் (11%), டெலிமாடிக்ஸ் (2%), இதர (1%) தயாரிப்பில், பிரிக்கால் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பிரிக்கால் நிறுவனம் சமீபத்தில், 2016ல் ரூ.250 கோடி விற்றுமுதல் கொண்டிருந்த பிஎம்பி பால் நிறுவனத்தை அசோக் பிரமலிடமிருந்து வாங்கியுள்ளது. இதன் மூலம், பிரிக்காலுக்கு, மகாராஷ்டிராவின் சத்தாரா, மெக்சிகோவின் பியூபெலா, செக் குடியரசின் பிரேக் நகரங்களிலும், தொழிற்சாலைகள் இருக்கும். இந்த பிஎம்பி பால் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பிரிக்கால் நிறுவனம், இன்டக்ரேட்டட் வைப்பர் சிஸ்டம் சந்தைக்குள்ளும் நுழைகிறது. பிரிக்கால் நிறுவனம் தரும் கணக்குப்படி பிரிக்காலில் 5,290 பணியாளர்கள் உள்ளனர். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (ஆர் அண்ட் டி) துறையில் 248 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பிரிக்காலுக்கு இந்தோனேஷியாவின் ஜாகர்தா, பிரேசிலின் சாபோலோ, இந்தியாவின் பண்ட் நகர், புனே, குர்கான் மற்றும் கோவையில் ஆலைகள் உள்ளன.
பிரிக்கால் நிறுவனத்தின் இந்தோனேஷிய தொழிற்சாலை சுமார் ரகத்தில் உள்ளது. பிரேசிலில் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில், ரூ.46 கோடி, ரூ.32 கோடி நஷ்டம் வந்துள்ளது. 2017ல் வாங்கிய புனே பிளாண்டை நவீனப்படுத்த ரூ.85 கோடி செலவழிக்க உள்ளது. 2016 - 2017ல் ரூ.1,268.42 கோடி வருவாய் ஈட்டிய நிறுவனம், அதே ஆண்டில் ரூ.62.43 கோடி லாபம் சம்பாதித்தது. ஆண்டுக்கு 20% வரை வளர்ச்சி வேண்டும், 2020ல் ஆண்டு வருவாய் ரூ.3,000 கோடி என ஆக வேண்டும் என விரும்பும் பிரிக்கால் நிறுவனம், ரிசர்வ்ஸ் அண்ட் சர்பிளஸ் ரூ.833 கோடி வைத்துள்ளது.
பிரிக்காலுக்கு, ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட், அய்க்கிய அமெரிக்காவின் சிகாகோ, ஜப்பானின் டோக்கியோ, தாய்லாந்தின் பேங்காக் மற்றும் சிங்கப்பூரில் அலுவலகங்கள் உள்ளன. பிரிக்கால் தானும் ஒரு சர்வதேச தடம் பதித்த தொழிற்சாலை என்கிறது. பிரிக்கால் நிறுவனம், ஒசூரிலும் சென்னைக்குப் பக்கத்தில் ஆந்திராவில் உள்ள தடாவிலும் தொழிற்சாலைகள் துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பிரிக்கால் நிர்வாகம் 07.07.2017 அன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் மாநிலம் அறிந்த, நாடேயறிந்த, உலகறிந்த செய்தியான பிறகு, பிரிக்கால் நிர்வாகம் தற்காப்பு நிலையில், ஒரு தன்னிலை விளக்க ஊடக சந்திப்பை 07.07.2017 அன்று நடத்தியது. இந்த சந்திப்பில் பிரிக்கால் நிர்வாக இயக்குநர் திரு.விக்ரம் மோகன், நிறுவனத் தலைவர் திரு.சுந்தரராமன், தலைமை மனிதவள அலுவலர் திரு.மலர்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தி இந்து, பிரிக்கால் தொழிலாளர் ளின் நலன் காக்க நிர்வாகம் உறுதி எனத் தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டது. சம்பளப் பிடித்தம் பிரச்சனை நீதிமன்றத்தில் முடிவாகும் எனச் சொன்ன நிர்வாகம், ‘இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றால், கோவையில் உள்ள ஆலையை மூடிவிட்டு, வேறு இடத்தில் தொழில் துவங்குவது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் என்றனர்என முடித்தது. ஆலையை கோவையில் மூடி வேறு இடம் செல்வதுதான், தொழிலாளர் நலன் காப்பதா?
குர்கான் ஆலையில் உள்ள 900 ஊழியர்கள் கொண்டு ரூ.350 கோடி உற்பத்தி நடப்பதாகவும், கோவையில் 1,300 பேர் கொண்டு ரூ.270 கோடி மட்டுமே உற்பத்தி நடப்பதாகவும், ஆனாலும் கோவையில் உள்ள ஊழியர் பெறும் ஊதியம் இரண்டு மடங்கு என்றும் பிரிக்கால் நிர்வாகத்தின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. (குர்கானில் சங்கம் இல்லாததால் எவ்வளவு மோசமாக சுரண்டல் நடக்கிறது என்பதற்கான பிரிக்கால் நிர்வாகத்தின் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டுள்ளது).
ஏப்ரல் 25 வேலை நிறுத்தத்திற்குப் பிறகு பிரிக்கால் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியார் தூண்டுதலால்ஆலையின் சுமுக செயல்பாடு பாதிக்கப்படுவதாக நிர்வாகம் புகார் சொன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி சொன்னது.
முன் அறிவிப்பு தராமல், உற்பத்தி தேவை அதிகம் இருந்த நேரம் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால், 8 நாட்கள் தண்டனைப் பிடித்தம் நியாயம் என நிர்வாகம் வாதாடியது. சம்பளப் பிடித்தத்துக்கு எதிராக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துவிட்டனர். இதன் பிறகு சம்பளப் பிடித்தம் செய்வது என்ற முடிவை மாற்றினால், நிர்வாகம் இறங்கி வருவதாக தொழிலாளர்கள் தரப்பில் கருதப்படும் என்பதால் சம்பளப் பிடித்தம் என்ற தனது முடிவில் நின்றதாக நிர்வாகம் சொன்னது.
நிர்வாகத்திற்கு, சங்கம் இருப்பதோ, போராட்டங்கள் நடப்பதோ, நிர்வாகம் தானாக அறிவிப்பதற்கு பதிலாக சம்பள உயர்வு மற்றும் உற்பத்தி பற்றி சங்கத்துடன் பேசி ஒப்பந்தம் போடுவதோ பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ஏஅய்சிசிடியுவில் இணைக்கப்பட்டுள்ள சங்கத்துடன் 2012ல் 2014ல் ஒப்பந்தங்கள் போட்டுள்ளதை முழுமையாக மூடி மறைத்து, ‘வெளியார் தூண்டுதல்எனப் புகார் சொல்லி கோவையை விட்டு வெளியேறி விடுவேன் என 2007 போல் திரும்பவும் அச்சுறுத்துவதுதான் ஊடக சந்திப்பில் நடந்துள்ளது.
நிர்வாகம் தவறாகச் சொன்ன, செய்த விஷயங்களும்
நிர்வாகம் தவறு செய்ததாக அரசும் நீதிமன்றமும் சொன்ன விஷயங்களும்
             பிரிக்காலில் மார்ச் 2007 முதல், சில ஆயிரம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை, கோவை மாவட்ட பிரிக்கால் எம்ப்ளாய்ஸ் டிரேட் யூனியனும் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் தொழிற்சங்கமும் வழிநடத்தியது, பிரிக்கால் நிர்வாகத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கோவை பிரின்சி பல் சபார்டினேட் ஜட்ஜ் முன்பு ஓ.எஸ் 137/2007 என்ற வழக்கில் நிர்வாகம் 10.07.2007 அன்று, போராட்ட சங்கங்களோடு சம்பந்தமே இல்லாத, நிர்வாகத்துக்கு நெருக்கமான சங்கத் தலைவர்கள் 6 பேருக்கு எதிராக, ஆலை வாயிலில் போராட்டம் நடத்தக் கூடாது என தடை உத்தரவு வாங்கியது. உண்மையை மறைப்பது பொய் சொல்வதாகும் (சப்ரஷியோ வெரி சஜஷியோ ஃபால்சி) என்ற சட்டக் கோட்பாடு, நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொருந்தும். 2017லும் நடக்காத வேலை நிறுத்தத்திற்கு ஏஅய்சிசிடியு சங்கத்திற்கு எதிராக நிர்வாகம் தடை பெற்றுள்ளது.
             01.07.2007 முதல், தொழிற்தகராறு சட்டம் 1947ன் 12(3) பிரிவு ஒப்பந்த ஊதிய உயர்வுகளைத் தர மறுத்தது. ஏஅய்சிசிடியு சங்கங்களை விட்டு வெளியேறினால் இந்த ஊதிய உயர்வைத் தருவதாக, பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டது.
             தமிழக அரசின் தொழிலாளர் துணை ஆணையர், கோவை, 09.04.2009 அன்று நிர்வாகம், பயிற்சியாளர்களை ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்துவது முதல் பார்வையில் (பிரைமா ஃபாசி) தெரிவதாகவும், அவ்வாறு செய்யக் கூடாது எனவும் ஆலோசனை தந்தார். நிரந்தரத் தொழிலாளிக்கு  பிளாக் ஹாலிடேஸ் வழங்கிய நாட்களில் உற்பத்தி நடந்துள்ளதாகவும், அந்த உற்பத்தியை பயிற்சியாளர்களே செய்திருக்க முடியும் எனவும், தாம் கோரிய ஆவணங்களைத் தரவில்லை எனவும், தம் அறிவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
             21.06.2009, 22.06.2009 தேதிகளில் பிரிக்கால் லிமிடெட் பிளாண்ட் 1, பிளாண்ட் 3க்கு ஆய்வுக்குச் சென்ற தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வக அதிகாரிகள், நிரந்தர தொழிலாளர்களுக்கு பிளாக் ஹாலிடேஸ் தந்துவிட்டு, பயிற்சியாளர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதாக அரசுக்கு அறிக்கை தந்தனர். இந்த விவரம் 29.06.2009 தேதிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (டி1) துறையின் அரசாணை (டி) எண் 394ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தரத் தொழிலாளியின் வேலை வருமானம் ஊக்க ஊதியத்தைப் பாதிக்கும் விதம் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை நிர்வாகம் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற அரசாணைக்கு எதிரான நிர்வாகத்தின் ரிட்  மனு 13764, 13765/2009 உயர்நீதிமன்றத்தால் 22.03.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் 10(1) 10(3) 10 பி பிரிவுகளில் அரசு போட்ட ஆணைகளை எதிர்த்து நிர்வாகம் தாக்கல் செய்த வழக்குகள் எல்லாம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வத்தால், 10.12.2007 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
             பிரிக்கால் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், 20.09.2009 அன்று சங்க அலுவலகத்தில் கொலை சதி நடந்தது எனச் சாட்சி சொன்னதை, செஷன்ஸ் நீதிமன்றம், செஷன்ஸ் வழக்கு எண் 75/2011ல் ஏற்க மறுத்து, சதியில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட 18 பேரை 03.12.2015 அன்று விடுதலை செய்தது.
             சென்னை உயர்நீதிமன்றம், தோழர் குருசாமி பிளாண்ட் 3 தொழிற்சங்கத் தலைவர் என்பதால் அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டது எனச் சொல்லி உள்ளது. குணபாலனுக்கு எதிரான வழக்கு, முதல் தகவல் அறிக்கை அனைத்துமே செயற்கையானவை ஜோடிக்கப்பட்டவை எனத் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தில், யாரைத் திருப்திப்படுத்த வழக்கை ஜோடித்தீர்கள் என நீதிபதிகள் விசாரணை அதிகாரியைக் கேட்டார்கள்.
             விவசாயிகள் பிரச்சனையில் வேலை நிறுத்தம் செய்ததற்கு 8 நாட்கள் சம்பளம் பிடித்த தண்டனையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், 50 பேருக்கு விடுப்பு தரத் தயார், விவசாயிகளுக்குப் பணம் தரலாம் என்றெல்லா தான் 25.04.2017க்கு முன்னமே சொன்னதாக, பிரிக்கால் நிர்வாகம் ஜோடிக்கிறது. 25.04.2017க்கு முன் அப்படி எந்தக் கடிதமும் சங்கத்துக்குத் தரப்படவில்லை.
             ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தில் 950 உறுப்பினர்கள் உள்ளதாக நிர்வாகம் காவல் துறைக்கு கடிதம் தருகிறது. ஏஅய்சிசிடியு சங்கத்தில் இல்லாத 400 பேரும், வேறு ஒரு சங்கத்தில் இருப்பதாகத் தவறாகச் சொல்கிறது.
             முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமல், வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறையிடம், 15.05.2017 அன்று கூசாமல் ஒரு பொத்தாம் பொதுவான புகாரைத் தந்துள்ளது. மேற்படி கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தை வழிநடத்தும் அதன் மய்யத் தலைவர் திரு.எஸ்.குமாரசாமி, மற்றும் மேற்படி சங்கத்தின் நிர்வாகிகளான திரு.சாமிநாதன், திரு.நடராஜன், திரு.ஜெயப் பிரகாஷ்நாராயணன், திரு.ரதிஸ்குமார், திரு . தனுஷ்கோடி, திரு.பாபு ஆகியோரும், மேலும் சங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கொண்டு, மீண்டும் 2007 முதல் 2009 வரை எங்களது தொழிற்சாலைகளில் நடை பெற்ற வகையில் பல்வேறு வன்முறையும் அசாதாரண நிகழ்வுகளையும், நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எங்கள் தொழிற்சாலையில் 2009ல் நடைபெற்ற வன்முறையில், தனது அலுவலகத்தில் பணியில் இருந்த வைஸ் பிரசிடென்ட் திரு ராய் ஜே ஜார்ஜ் என்பவரைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்தது குறித்த குற்றவியல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சி அளித்த பல ஊழியர்களையும் அவர்கள் தாக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறதுஎன்று அந்தப் புகார் சொல்கிறது.
             யாரிடமிருந்து எப்போது எங்கு யாரால் தெரிந்துகொள்ளப்பட்டது என எதுவும் சொல்லாமலே, கூட்டுபேர முகவரான சங்கத்தின் மீது, இரண்டு ஒப்பந்தம் போட்டவர்கள் மீது கூசாமல் பொய்ப் புகார்களை பிரிக்கால் நிர்வாகத்தினர் சொல்லியுள்ளனர். காவல்துறை கொண்டு சங்கத்தை முடக்க, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
             வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள 88 பேரின் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தாமலே, தள்ளுபடி செய்ய வைக்க இழுத்தடிக்க கடுமையான முயற்சிகள் எடுக்கிறது. 65க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை வைக்காமல் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்குகளில், நிர்வாகம்தான் முதலில் சாட்சி விசாரித்து குற்றத்தை நிரூபிக்க வேண்டும். குறுக்கு விசாரணைக்கு அஞ்சி வழக்கையே நடத்தாமல் இழுக்கப் பார்க்கிறார்கள்.
தண்டனை வகைப்பட்ட 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் மட்டும்தான் பிரச்சனையா?
பிரிக்கால் நிர்வாகம் 08.06.2012 மற்றும் 02.08.2014 தேதிகளில் ஏஅய்சிசிடியு இணைப்பு சங்கத்துடன்தான் ஒப்பந்தம் போட்டது. முதல் ஒப்பந்தம் போட திருவாளர்கள் ரகுபதி, ஹைதாரி என்ற வெளியாரும், மனிதவளத் துறை துணைத் தலைவர் திரு.பிரசாத்தும் பங்காற்றினர். இரண்டாவது ஒப்பந்தத்தில், திருவாளர்கள் சத்யநாராயணா, காந்திமதிநாதன் மனிதவளத் துறை தொழில் முறையாளர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டனர். ஒப்பந்தம் முடிந்தவுடன், புரபஷனல்ஸ் வெளியேறும் சூழல் உருவானது. தனிப்பட்ட பகை வஞ்சம் ஆகிய உணர்வுகளுடன் சங்கத்தை அப்புறப்படுத்த முயற்சிகள் நடக்கிறது.
2007ல் ஏஅய்சிசிடியு நுழையும் முன்பு, நிர்வாகம் கேட்கும் உற்பத்தி தந்து, தரும் சம்பளம் வாங்கிக் கொண்டு, சொன்னதைச் செய்யும் அடிமைகளாகத் தொழிலாளர்கள் இருக்க நேர்ந்தது. 5 வருட போராட்டம், பல இழப்புகள், பல வழக்குகள் தாண்டி, தொழிலாளர்களை ஈடுபடுத்தி தொழிலாளர் சம்மதத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த மாற்றத்தை நிர்வாகத்தால் ஜீரணிக்க முடியவில்லை. 30.06.2018 அன்று தற்போதைய ஒப்பந்தம் முடிகிறது. ஒப்பந்த ஷரத்துப்படி, ஒப்பந்தம் முடிவதற்கு 6 மாதங்கள் முன்பே ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கி, 30.06.2018க்குள் ஒப்பந்தம் முடிக்க இரு  தரப்பினரும் முயற்சிக்க வேண்டும். அடுத்த ஒப்பந்தத்தை ஏஅய்சிசிடியு சங்கம் போடக் கூடாது என நிர்வாகம் உறுதியேற்று காய்களை நகர்த்துகிறது. மூலதனம், கூலி உழைப்பை துணையற்றவர்களாக்கி அடக்கி ஒடுக்கி ஒட்டச் சுரண்டத் தயாரானது. சங்கமும் சுதாரித்துக் கொண்டு தயாரானது. குறுகிய கால அவகாசத்தில் 800 பேர் விவசாயிகளுக்காக வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள், ஏஅய்சிசிடியு இகக(மாலெ) முடிவு துவங்கும் என நம்பித்தான், நிர்வாகம் 8 நாட்கள் சம்பளப் பிடித்தக் கத்தியை எடுத்தது. பெரும்பான்மைத் தொழிலாளர்கள் அஞ்சவில்லை. சீற்றத்துடனும் நப்பாசையுடனும் தண்டனையாய் 8 நாட்கள் சம்பளம் பிடித்தது.
விவகாரம், 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் தாண்டி, கொத்தடிமை முறையை மீட்பது தொடர்பானதாகும்.
புதிய வியூகமும் புதிய தந்திரங்களும்
2007ல் 10 பி இல்லன்னா பத்தாது என மே நாளில் கோவையில் பல்லாயிரம் பேர் உறுதியேற்றனர். சென்னை சென்று தொழிலாளர் துறையை முற்றுகையிட்டனர். பெண் தொழிலாளர்கள் அமைச்சர் வீடு சென்று நீதி கேட்டனர். 24.05.2007 அன்று அரசாணை எண் 398 மூலம் தொழிற்தகராறு சட்டம் 1947ன் 10 பி பிரிவின் கீழ் தமிழக அரசு ஆணை போட்டது. 15.06.2009 முதல், மீண்டும் ஒரு 10 பி ஆணை கேட்டு காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. அரசு, நிரந்தரத் தொழி லாளியின் வேலை, ஊதியம், ஊக்க ஊதியத்திற்கு பாதிப்பு வரும் வகையில், நேரடி உற்பத்தியில் ஒப்பந்த, பயிற்சித் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என, பட்டினிப் போராட்டத்தின் 15ஆம் நாள், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதம் வரும்போது 25.06.2009 அன்று 10 பி ஆணை போட்டது.
2007ல் சங்கத்தின் போராட்டத்தில் சில ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இப்போது 2017ல் வேலை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு நடத்துபவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் 1050 பேர்தான் உள்ளனர். எல்லோருக்கும் 10 வயது கூடி விட்டது. குடும்பத் தேவைகள் அதிகரித்துவிட்டன. தணிந்த சூழல் நிலவுகிறது. ஆன போதும், சங்கத்தைக் காக்க வேண்டும் என்ற விழிப்போடும் விசுவாசத்தோடும் சங்கத்துடன் நின்றனர்.
1. 88 வேலை நீக்க வழக்குகள் விசாரணை 2. மணிவண்ணன், ராமமூர்த்தி என்ற இருவர் ஆயுள் தண்டனைக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கு. 3. 01.07.2018 முதலான ஒப்பந்தம் என்ற 3 கடமைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளத் தொழிலாளர்கள் தயாராயினர். 8 நாட்கள் சம்பளம் பிடிக்கப்பட்டவர்கள், தனித்தனியாய் சென்று நிர்வாகத்தை மொத்தமாகத் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கோரினர். தனித்தனியாய், முன்பணம் கேட்டு கடிதம் தந்தனர். 01.06.2017 முதல் 18.06.2017 வரை தோழர் குமாரசாமி கோவையில் தங்கி, பிரிக்கால் தொழிலாளர்களைத் திரும்பத் திரும்பச் சந்தித்து உரையாடினார். 19.06.2017 முதல் துவங்க உள்ள போராட்டத்திற்கு தயார்படுத்தினார்.
எழுக செங்கொடிகள் மே தினப் பேரணியில், தண்டனையாக 8 நாட்கள் சம்பளப்  பிடித்தத்திற்கெதிரான வேலை நிறுத்த அறிவிப்பு தரப்பட்டது. வேலை நிறுத்தம் 19.06.2017 என தள்ளி வைக்கப்பட்டது. இககமாலெ மாநிலக் குழு கூட்டம் கோவையில் 17.06.2017, 18.06.2017 தேதிகளில் நடத்தப்பட்டது. 18.06.2017 அன்று போராட்ட ஆதரவு பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வேலை நிறுத்தம் வேண்டாம் எனவும், 19.06.2017 முதல் சென்னையிலும் கோவையிலும் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
302, கொலை, கொலைச் சதி என நம்மீது எப்போதும் முத்திரை குத்தப்பட்ட பின்னணியில்தான், முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் மூலம் பட்டினிப் போராட்டம் துவக்கப்பட்டது. அவர் தன் பங்கிற்கு, காலனிய கால தண்டனைப் பிடித்த சம்பள பட்டுவாடா சட்ட 9 ண்ண்ன் பிரொவிசோ, சுதந்திர நாட்டிற்கு ஜனநாயகத்திற்கு பொருந்தாது, போராட்டங்களே தலை எழுத்தை மாற்றும், தொழிலாளர் கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்ற செய்தியுடன் பட்டினிப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
சம்பளப் பிடித்தம் நியாயம்தானா என 10 (1) பிரிவில் நீதிமன்ற விசாரணை, வழக்கு தீர்ப்பிற்கு உட்பட்டு எட்டு நாட்கள் சம்பளம் முன்பணமாக நிர்வாகம் தர 10 பி ஆணையிட வேண்டும் எனக் கோரினோம். அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிக்கை விடுத்தனர். உத்தர்காண்டில் நமக்கு நியாயம் கேட்கப்பட்டது. இந்தியா எங்கும் செய்தி பரவி எதிர்ப்பு வலுத்தது.
பிரிக்கால் நிர்வாகம் தான் சர்வதேச நிறுவனம் என்றபோது, 5 கண்டங்களில் 9 கோடியே 20 லட்சம் உறுப்பினர்கள் உள்ள உலகத் தொழிலாளர் சம்மேளம் பிரிக்கால் தொழிலாளிக்கு ஆதரவாக இரண்டாம் முறை களம் இறங்கியது. (முதல் முறை, இரட்டை ஆயுள் தண்டனையைக் கண்டித்தது).
பட்டினிப் போராட்டத்தில் துவக்கம் முதலே, இகக(மாலெ), ஏஅய்சிசிடியு, அவிகி தொச, ஆர்ஒய்ஏ, டா, முற்போக்கு பெண்கள் கழக தோழர்கள் களம் இறங்கினர். கோவையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் நம்மோடு பட்டினிப் போராட்டம் நடத்தினர். சென்னையில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள் நம்மோடு இணைந்தனர். ஜ÷ன் 22 மாலை சென்னை பட்டினிப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இயக்கத் தோழர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஒருமைப்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
÷ன் 25, 26, 27 தேதிகளில் சட்டமன்றம் கூடவில்லை. ஜ÷ன் 28 அன்று பட்டினிப் போராட்டம் 10ஆம் நாளைத் தொட்டது. ஜ÷ன் 30, ÷லை 1, 2 விடுமுறை தினங்கள். இந்தப் பின்னணியில் ஜ÷ன் 28 அன்று அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடந்தது. ஜ÷ன் 28, 29, ÷லை 3 தேதிகளில் சட்டமன்ற முற்றுகைக்குத் திட்டமிடப்பட்டது.
கோவை அமைச்சரோ, தொழிலாளர் துறை அமைச்சரோ அதுவரை போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. மக்களிடம் பெற்ற 23,000 கையெழுத்துக்கள் அமைச்சருக்கு கூரியரில் அனுப்பப்பட்டன.
28.06.2017 அன்றைய முற்றுகை, காவல் துறை அதிகாரிகள் தலையீட்டால், ஆர்ப்பாட்டமாக மாறியது. மாநகரக் காவல் ஆணையர், தொழிலாளர் துறை ஆணையர் சந்திப்புக்கள் நடந்தன. முன்னேற்றம் இல்லாததால், வெற்றிகரமாக 29.06.2017 சட்டமன்ற முற்றுகை நடந்தது. பிரிக்கால் தோழர்கள், கட்சியின் சென்னை, கோவை, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள், புரட்சிகர இளைஞர் கழக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தோழர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், பெண்கள் முற்றுகையில் கலந்துகொண்டனர். முற்றுகை பெரும் செய்தியானது. நெல்லையில் ஒரு மறியல் நடந்தது. தொழிலாளர் அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள்.
02.07.2017 அன்று இரண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தாக்குதல் தற்காப்பு, முன்னேறுதல் பின்வாங்குதல், மோதுதல் முடித்தல் என்ற இரட்டைகள் பிரிக்க முடியாத முழுமையின் பகுதிகளே ஆகும். ஜ÷லை 6 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சட்டமன்ற முற்றுகை என்ற சுவரொட்டி சென்னையில், கோவையில் ஜ÷லை 2 அன்று ஒட்டப்பட்டது. ஜ÷லை 3 அன்று காலை பிரிக்காலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜ÷லை 6 தேதிக்கு விடுமுறை விண்ணப்பம் தந்தார்கள். இந்தப் பின்னணியில் ஜ÷லை 3 மற்றும் ஜ÷லை 6 தேதிகளில் முற்றுகைக்குத் தயாரானோம். அதே நேரம், தமிழக அரசின் இன்றைய ஒருங்கிணைப்பற்ற நிலை, கொங்கு வளர்ச்சி கவுன்சில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது கொண்டுள்ள செல்வாக்கு, தொழிலாளர் துறைக்குள் இருந்த நெருக்கடிகள், காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தால் தோழர்களின் உடல்நிலை நாளும் மோசமாதல், பட்டினிப் போராட்டத்தில் இருந்த ஒரு தோழர் உயிரிழப்பு என்ற தவறான செய்தி, திரும்பத் திரும்ப சட்டமன்ற முற்றுகை என்ற பின்னணியில் அரசு தரப்பிலும் ஏதாவது தீர்வு வேண்டும் என்ற மனநிலை ஆகியவற்றின் பின்னணியில், நாம் ஒரு சமரச தீர்வை 02.07.2017 முதல் சொல்லத் துவங்கினோம். 10 பி ஆணை போட நாளாகலாம், போட்டாலும் இழுப்பார்கள், புதிதாக ஒரு முயற்சி செய்ய முடிவெடுக்கப்பட்டது.
8 நாட்கள் சம்பளம் முன்பணமாக நிர்வாகம் தர வேண்டுமா என்பதில் இடைக்காலத் தீர்வம் வழங்க நீதிமன்றத்திடம் அனுப்பக் கோரினோம். இந்தக் கோரிக்கை, கடைசியில் எடுபட்டது. காலவரையற்ற பட்டினிப் போராட்டம், பலதரப்பு, பலசங்க, பல கட்சி, தேசிய, சர்வதேசிய ஆதரவு, சட்டமன்றத்தில் கேள்வி எழும் வாய்ப்பு, சில ஆயிரம் சுவரொட்டிகள், முற்றுகை, சமரச முன்வைப்பு, பலதரப்பு அதிகாரிகள் தலையீடு என்ற பல்வேறு நடவடிக்கைகள் சேர்ந்து, தொழிலாளர் கோரிக்கையை அரசு ஏற்கும் நிலையை உருவாக்கின.

பிரிக்கால் தொழிலாளர்கள் விவசாயிகளுக் காக குரல் கொடுத்தனர். அதற்காக தண்டிக்கப்பட்டனர். அனைத்து சங்கங்கள் டபுள்யு எஃப்டியு, மாணவர், இளைஞர்கள், பெண்கள், வழக்கறிஞர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பிரிக்கால் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தனர்; அரிவாள் சுத்தியல் இணைவதும் போராடும் இடதுசாரி அரசியல் சுதந்திரமாக துணிச்சலுடன் நம்பிக்கையுடன் எழுவதும் நடந்தது. நிர்வாகத்தால் ரூ.65 லட்சத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஆனால், பிரிக்கால் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களும் உலகெங்கும் உள்ள மூலதனக் கூட்டத்தின் கைகளில் தங்கள் உழைப்பால் குவிந்துள்ள, 65 லட்சம் லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்துக்களை தம் கைகளில் திரும்ப எடுத்துக் கொள்ளும் ஒரு புரட்சிகர பயணத்தில் தங்களை இணைத்துக்கொள்ள தயாராகும் மாற்றம் வேகமடைந்துள்ளது.

Search