COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, July 1, 2017

ஜாபருக்கு நீதி வேண்டும்!
பெரும்பான்மைவாதத் திமிருடன் கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுதலை வேண்டும்!

முகமது அக்லக், மஜ்லும் அன்சாரி, இம்தியாஸ் கான், பேலு கான், ஷேக் நயீம், முகமது ஹலீம், முகமது சஜ்ஜத், உத்தம் வர்மா, கணேஷ் குப்தா...... இந்த வரிசையில் இன்று ஜாபர் உசேன். வசுந்தரா ராஜேயின் ராஜஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்த நடந்த இரண்டு கும்பல் வன்முறை படுகொலைகளில் இது இரண்டாவது படுகொலை.
உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் அல்லது ராஜஸ்தான் மாநிலங்களில் இதற்கு முன்பு நடந்த கும்பல் வன்முறை படுகொலைகள், மாட்டுக்கறி சாப்பிட்டார்கள், மாடு கடத்தினார்கள், குழந்தையை கடத்தினார்கள் போன்ற திட்டமிடப்பட்ட வதந்திகளால்தூண்டப்பட்டவை. ஜ÷ன் 16 அன்று அதி காலையில் பிரதாப்கர் மாவட்டத்தில் ஜாபர் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுபோன்ற எந்த வதந்தியும் காரணமில்லை. பிரதாப்கரின் மஹதாப் ஷா காலனியில் உள்ள புறம்போக்கு இடத்தில் வசிக்கும் ஏழை பெண்களின் கவுரவத்தை பாதுகாக்க முயற்சி செய்தபோது, ஜாபர் அதற்கு தனது உயிரை விலையாகத் தர நேர்ந்தது. மோடி அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் பலி ஜாபர் உசேன்தான்.
2017 இறுதிக்குள் தமது மாநிலத்தை திறந்த வெளியில் மலம் கழிப்போர் எவரும் இல்லாத மாநிலமாக ஆக்க வசுந்தரா முயற்சி செய்கிறார். தங்கள் பகுதியை திறந்த வெளியில் மலம் கழிப்போர் எவரும் இல்லாத பகுதி என்று தூய்மை இந்தியா திட்டத்தில் அறிவிக்க ஊராட்சி, ஒன்றிய, மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. இந்த அதிகாரத்துவ நடவடிக்கை ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. கழிப்பறைகள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டப்படுகிறது. கழிப்ப றைகள் கட்டுவது என்ற பெயரில் பெரும்நிதி சுருட்டப்படுகிறது. கிராமப்புற அல்லது கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறமாகிக் கொண்டிருக்கும் பகுதிகளில் இதுபோன்ற பல முறைகேடுகள் நடப்பதாக உள்ளூர் பத்திரிகையாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அம்பலப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்தப் பிரச்சனையின் மறுபக்கம் கெடுநோக்கம் கொண்டது. மிகவும் கொடூரமானது. திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் மீது, மிகவும் மனிதத் தன்மையற்ற விதத்தில் கல்லெறியப்படுகிறது; அவர்கள் விரட்டப்படுகிறார்கள். அவர்களை நிழற்படம் எடுக்கிறார்கள். அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இந்த நடைமுறையை கண்டித்து ஜாபர் நகராட்சிக்கு கடிதம் எழுதினார். செயல்படும் கழிப்பறைகளை முதலில் கட்ட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தினார். அவர் அடித்துக் கொல்லப்பட்ட அந்த நாளில், திறந்தவெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்த அந்தப் பகுதி பெண்களை நிழற்படம் எடுப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜாபர் நீண்டகாலமாக இககமாலெ செயல்வீரராக, தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். ராஜஸ்தான் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான அவர், 2016ல் ராஞ்சியில் நடைபெற்ற, ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட, அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் ஏழை பெண்களை துன்புறுத்த, அவமானப்படுத்த நகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்தபோது, ஜுன் 14 அன்று ஜாபர் ஒரு குழுவுடன் சென்று மாவட்ட ஆட்சியர் நேஹா கிரியைச் சந்தித்தார். அங்கு அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. ஆயினும் அவர்களைச் சந்திக்க ஆட்சியருக்கு நேரம் இல்லாமல் போனது.
மறுநாள் அவர்கள், நகராட்சி ஆணையர் அசோக் ஜெயினை சந்திக்கச் சென்றனர். அவரும் அவர்களது மனுவை வாங்க மறுத் தார். பாஜக நகராட்சித் தலைவர் கம்லேஷ் தோசி, அவர்கள் மனுவை கிழித்து எறிந்ததுடன், கழிப்பறைகளை மறந்துவிடுங்கள், உங்களை உங்கள் இடங்களில் இருந்து வெளியேற்றப் போகிறோம், அதற்குத் தயாராக இருங்கள் என்றும் மிரட்டினார். மறுநாள் காலை அந்த புறம்போக்கு இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின், ஜாபருக்கு எதிராக தனது ஆட்களைத் தூண்டிவிட்டார். அடித்து நொறுக்குங்கள் அவனை, அவனுக்கு பெரிய தலைவர் என்று நினைப்புஎன்று அவர் தனது ஆட்களிடம் சொன்னதாக, ஜாபரின் இளைய மகள் சபாஸ் சொல்கிறார்.
பேலு கான் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டபோது, அது பற்றி கவலைப்படாத ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே இப்போது பிரதாப்கர் படுகொலை தொடர்பாக பதில்வினையாற்ற நேர்ந்தது. ஆனால், கும்பல் வன்முறையால் ஜாபர் கொல்லப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் வசுந்தரா ராஜேயின் ட்விட்டர் கருத்தில் அது வெறும் துரதிர்ஷ்டவசமான மரணம் என்று ஆனது. ஜாபர் மாரடைப்பால் இறந்தார் என்று உடற்கூறு ஆய்வு சொல்கிறது. இது சாதாரணமாக நடந்த விசயம்தான் என்று சொல்ல அரசாங்கம் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது. இப்போது ஜாபர்தான் தாக்கினார்என்று காட்டுவதாக ஒரு காணொளி காட்சி பரப்பப்படுகிறது; (‘தாக்கிய வர்’, அந்தப் போக்கில் எப்படி இறந்தார் என்ற மர்மத்தை அந்த காணொளி காட்சி விளக்கவில்லை). இப்போது ஜாபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்ட பின்னணியில், தனது வேலையாட்கள் கடமையைச் செய்ய விடாமல் ஜாபர் தடுத்தார் என்று நகராட்சி ஆணையர் ஜாபர் மீது புகார் பதிவு செய்திருக்கிறார்.
மறுபக்கம், ரூ.2 லட்சம் இழப்பீடு தந்து ஜாபரின் குடும்பத்தின் வாயை அடைக்க முடியுமா என்று நிர்வாகம் முயற்சி செய்கிறது. ஜாபரின் மனைவி ரஷீதா, தனக்கு நீதிதான் வேண்டும் என்று சொல்லி அதை வாங்க மறுத்துவிட்டார். இரங்கல் தெரிவிப்பது, கருணை நடவடிக்கை எடுப்பது போன்ற அதிகாரபூர்வ வெளிப்பாடுகளுக்கு அக்கம்பக்கமாக, கடத்தல் மிரட்டல், கொலை மிரட்டல் வருகிறது. ரஷீதாவும் அவரது மகள்களும் அந்தப் பகுதி மக்களும் இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுக்கிறார்கள். ஜாபரை கொன்றவர்களும் கொலையைத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் வாழும் பகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும், அனைவருக்கும் கழிப்பறைகள் கட்டித்தரப்பட வேண்டும், தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் வறிய மக்கள் துன்புறுத்தப்படுவதற்கு, அவமானப்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் ஆகிய தங்கள் மய்யமான கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஜாபருக்கு நீதி வேண்டும் என்று ஜனநாயகத்துக்காக போராடும் அனைவரும், சட்டமும் வலியுறுத்தும் இந்த நேரத்தில், நாடு முழுவதும் இரண்டு மய்யமான பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டின் பாஜக ஆட்சியின் அடையாளமாக கும்பல் வன்முறை மாறிக் கொண்டிருக்கிறது. கிழக்கில் ஜார்க்கண்ட் முதல் மேற்கில் ராஜஸ்தான் வரை, கடந்த சில மாதங்களில் கும்பல் வன்முறைச் சம்பவங்கள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். ராஜஸ்தான் கும்பல் வன்முறையால் ஜாபர் படுகொலை செய்யப்பட்டது, இது போன்ற பத்தாவது படுகொலை என்று மாநிலத்தின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சொல்கின்றனர். ஜாபர் கொல்லப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2015, மே 30 அன்று நகார் பகுதியில் பசு பாதுகாப்புகாலிகளால் அப்துல் கஃபார் குரேஷி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். மத்தியில் மோடியும் மாநிலங்களில் அவரது முதலமைச்சர்களும் ஆட்சி நடத்தும்போது, நீதிபரிபாலனத்துக்கு அப்பாற்பட்ட ஒடுக்குமுறையும் கும்பல் வன்முறையும் நாட்டின் பல பகுதிகளிலும் அன்றாட யதார்த்தங்களாகி வருகின்றன. அரசியல் சாசன ஜனநாயகம் இப்படி மீறப்படுவதை இந்தியா அனுமதிக்க முடியாது. கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த நாம் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று ஜாபரின் உயிர்த் தியாகம் நமக்கு அறைகூவல் விடுக்கிறது.
பெண்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் கவுரவத்துக்கான போராட்டத்தில் ஜாபர் கொல்லப்பட்டார். தூய்மை இந்தியா திட்டம் கூட அவர்களை சமூகரீதியாக ஒடுக்கும், இழிவுபடுத்தும் இன்னொரு கருவியாகிவிட்டது. சாதுர்யமான வியாபாரிஎன்று அமித் ஷா காந்தியை விவரித்தாலும், தூய்மை இந்தியா திட்டத்துக்கு காந்திதான் உத்வேகமளிக்கிறார் என்று சொல்வதில் மோடி அரசாங்கம் களைப்புறுவதே இல்லை. ஆனால், திறந்த வெளியில் மலம் கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மீது கல்லெறிய வேண்டும், அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று காந்தி எப்போதாவது சொன்னாரா? காந்தி எப்போதும் தானே முன்னோடியாக இருந்தார்; தனது சபர்மதி ஆசிரமத்தில் (ஜாபர் கொல்லப்பட்ட மறுநாள்தான் அந்த ஆசிரமத்தின் நூறாவது ஆண்டு தினம்) நூல் நூற்பது, உடலுழைப்பில் ஈடுபடுவது ஆகியவற்றை வலியுறுத்தியதைப் போலவே அவரவர் கழிப்பறைகளை அவரவர் சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். கழிப்பறைகளை கட்டுவது, சுத்தம் செய்வது ஆகியவற்றின் மூலம் கழிப்பறைகள் பயன்பாட்டை முன்னகர்த்துவதற்கு பதிலாக, தூய்மை இந்தியா திட்டம், எல்லா விதமான பலவந்த யுத்திகளையும் கையாள்கிறது. வறிய மக்களின், ஏதிலிகளின் கவுரவத்தை கேலிக் கூத்தாக்குகிறது.
வறிய மக்கள் மீதான, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான இந்த திணிப்பும் வன்முறையும்தான், சங் - பாஜக பிரச்சாரத்தின் அடிநாதமாக இருக்கின்றன. அவை வெளிப்படையாக பிளவுவாத பிரச்சனைகளைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன. அல்லது வளர்ச்சிஎன்ற பெயரில் நடத்தப்படுகின்றன. அமிதாப் பச்சன் நடித்த அரசு விளம்பரங்கள் கூட, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் மீது கல்லெறிவது என்ற பலவந்த யுத்திகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டப்படுகிறது.
இந்த பலவந்த யுத்தியில் துப்புரவு தொழிலாளர்களை பயன்படுத்துவது என்ற, பாஜக அரசியல் சதியின் இன்னுமொரு ஆபத்தான அம்சத்தையும் பிரதாப்கர் சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது. உனா எழுச்சியில் முன்னிறுத்தப்பட்ட தலித் - இசுலாமியர் ஒற்றுமையின் உள்ளாற்றலை தலைகீழாக்க சங் - பாஜக ஆட்சி வெறித்தனமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இந்த கெடுநோக்கம் கொண்ட போக்கை நாம் சஹரன்பூரில் பார்த்தோம். இப்போது பிரதாப்கரில் பார்க்கிறோம்.
தன்னைத் தானே பாராட்டிக் கொள்ளும் தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பின்னால், இந்த அரசாங்கம், துப்புரவு தொழிலாளர்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை கவுரவத்தை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாடு முழுவதும் துப்புரவு தொழிலாளர்கள் அமைப்பாகி வரும்போது, தங்கள் உரிமைகளுக்காக உத்வேகம் தரும் போராட்டங்களை நடத்தி வரும்போது, தலித்துகள், இசுலாமியர்கள் இடையே பிளவு உருவாக்க, மனுவால் பாதிக்கப்பட்டவர்களை, மதவெறி வன்முறையால், ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நிறுத்த, சங் - பாஜக ஆட்சியை நாம் அனுமதிக்கக் கூடாது. எனவே, சுதந்திரம், நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக போராடுபவர்கள், கும்பல் வன்முறையால் ஜாபர் கொல்லப்பட்டதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்; சாமானிய மக்களை பல வந்தப்படுத்த துப்புரவு தொழிலாளர்கள் கருவிகளாக பயன்படுத்தப்படும் சதியை முறியடிக்க வேண்டும். தேசியம்என்ற பெயரில், ‘வளர்ச்சிஎன்ற பெயரில், கும்பல் வன்முறைக்கு, பலவந்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா அடிபணியாது. போராடுவோம். வெற்றி பெறுவோம்.

(எம்எல் அப்டேட் தொகுப்பு 20, எண் 26, 2017 ஜுன் 20 – 26)

Search