COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, July 13, 2017

பழனிச்சாமி அரசாங்கம் பதவி விலக வேண்டும்

நெடுவாசலில் 90 நாட்களுக்கும் மேலாக இரண்டாம் கட்டமாக போராட்டமும் கதிராமங்கலத்தில் 11 நாட்களுக்கும் மேலாக கடையடைப்பும் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் தமிழக அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை வைத்திருந்தாலும் அதை கை விட்டு விடலாம்.
அவர்களது விடாப்பிடியான போராட்ட மொழி மட்டுமே தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் புரியும். நடந்து கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்ட விவாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் கொள்கை குறிப்புகள் தமிழ்நாடு சந்திக்கும் விவசாய நெருக்கடிக்கு, கடன் தள்ளுபடி உட்பட, எந்தத் தீர்வும் முன்வைக்கவில்லை. விவசாயிகளின் தற்போதைய கோரிக்கைகளை கணக்கில் கொள்ளவில்லை. விவசாயத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை ஆகிய துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் விவசாயிகள் குறை தீர்க்கும் அறிகுறிகள் எதையும் காட்டவில்லை.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2,92,096 விவசாயிகளுக்கு ரூ.928.12 கோடி தர ஒப்பளிக்கப்பட்டுள்ளது என விவசாயத் துறைக்கான கொள்கை குறிப்பு சொல்கிறது. இதற்கு மேல் விவசாயிகளுக்கான கொள்கை எதுவும் குறிப்பாக இல்லை. பாஜகவை விட பாஜகவுக்கு விசுவாசமாக முதலமைச்சர் பழனிச்சாமி நடந்துகொள்கிறார். பாஜக முன்வைக்கும் வாதங்களை சட்டமன்றத்திலேயே முன்வைக்கிறார். வேதனையில் உள்ள விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், மக்கள் போராட்டங்கள் அரசுக்கு களங்கம் கற்பிக்கவே நடக்கின்றன என்று சட்டமன்றத்தில் சொல்கிறார். பெண்களை, குழந்தைகளை போராட்டங்களில் கலந்துகொள்ளச் செய்வது பாஷனாகிவிட்டது என்கிறார். வஞ்சகத்தின் மறுபக்கத்தில், தமிழ்நாடு கேட்ட வறட்சி நிதி என்னாயிற்று என்று மோடியிடம் கேட்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்கள் மட்டுமே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்கிறது.
புதிய ஏரிகள் உருவாக்கம், நதிகள் இணைப்பு திட்டங்கள், புதிய நீர்தேக்கங்கள் உருவாக்கம் போன்ற திட்டங்களை முன்வைக்கிற பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, இவற்றுக்கான ஆய்வுப் பணிகள், திட்ட அறிக்கை தயாரித்தல் ஆகியவை நடைபெறுவதாகவும் இந்தத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது எனவும் சொல்கிறது. சில பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்கிறது. இந்தத் திட்டங்கள் எப்போது நிறைவேறும், நிதி யார் தருவார் போன்ற வற்றைச் சொல்லவில்லை. இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவை எப்போது நிறைவேறும், அது வரை விவசாயி என்ன செய்வான் என்ற கேள்விகள் உள்ளன.
இருக்கிற கொந்தளிப்பில் தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கொள்கை குறிப்பு, நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் 2011 - 2012 முதல் 2016 - 2017 வரை 211.85 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ரூ.24,006.33 கோடி ஊதியமாக தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறது. சராசரி கணக்கொன்று பார்த்தால் இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு விவசாயத் தொழிலாளி தோராயமாக ரூ.114 கூலியாகப் பெற்றுள்ளார். ஆண்டில் ரூ.10க்கும் குறைவு! இதைத்தான் அஇஅதிமுககாரர்கள் சாதனை ஆட்சி என்று இன்னும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திட்டத்தில் 2015 - 2016ன் கூலி பாக்கி ரூ.1471.16 என்று குறிப்பிட்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் 2016÷லை 21 அன்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. சென்ற ஆண்டு கூலி பாக்கி ரூ.1,314.65 கோடி. இந்த ஆண்டில் ரூ.2,492.5 கோடியாக உள்ளது. இந்த பாக்கிகளுக்கு பதில் சொல்லும்படியான கொள்கை எதுவும் குறிப்புகளில் இல்லை.
இந்தத் திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். 85 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 79 லட்சம் வேலை அட்டைகள் தரப்பட்டுள்ளன. 01.04.2017 முதல் சட்டக் கூலி ரூ.205. இதுவரையில் சட்டக் கூலி அமலானதுபோல்தான் இந்தக் கூலியும் அமலாகும். வேறு சிறப்பு கொள்கை எதுவும் குறிப்பில் இல்லை.
எந்த வகையிலும் தமிழ்நாட்டின் கிராமப்புற தொழிலாளர்களின் வேலையின்மை பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை. மாறாக, விவசாயத் துறைக்கான கொள்கை குறிப்பு, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நெல் எந்திர நடவினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 2016 - 2017ல் (1.72 லட்சம் எக்டர்) 4.25 லட்சம் ஏக்கரில் எந்திர நடவு செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டு இதை 2 லட்சம் எக்டராக உயர்த்த திட்டமுள்ளதாகவும் சொல்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத் தில் கூட வேலை கிடைக்காமல் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாக பொய்யான கொள்கை குறிப்புகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழக மக்களின் வாழ்வாதாரம், தண்ணீர், கல்வி, மொழி, கலாச்சாரம், மாநில அதிகாரம், வருவாய் என அனைத்து உரிமைகளையும் பழனிச்சாமி அரசாங்கம் கார்ப்பரேட் மதவெறி மோடி அரசின் காலில் போட்டுவிட்டது.
டாஸ்மாக்கோ, நீட்டோ, கதிராமங்கலமோ, நெடுவாசலோ எதுவானாலும் இந்தப் பிரச்சனைகளில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் மக்களுடைய குறைந்தபட்ச கவுரவமான வாழ்க்கையை மட்டுமே, உயிர்வாழும் குறைந்தபட்ச உரிமையை மட்டுமே கோரிக்கைகளாக முன்வைக்கின்றன. மக்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து முற்றிலும் தவறி தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பது மட்டுமின்றி, தங்களது சாதாரணமான, கவுரவமான வாழ்க்கைக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுகிற மக்களை பழனிச்சாமி அரசாங்கம் கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் எல்லா சொத்துக்களும் எங்களுக்கே, மக்களுக்கு எதுவும் இல்லை என்று சொல்கிற, கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க, பதவியை தக்க வைத்துக் கொள்வதை மட்டுமே கடமையாகக் கொண்டு செயல்படுகிற பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.

Search