நிக்சனுக்கு
வாட்டர்கேட். டிரம்புக்கு
ரஷ்யாகேட்
அய்க்கிய
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ரிச்சர்ட் நிக்சன், சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார்.
இவரும் இவரது அயலுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிசிங்கரும் சீனாவுடன் ராஜிய உறவுகளை
நிலை நாட்டியவர்கள். அதே நேரம் பதவி பறிப்பு தீர்மானம் வரும் என்ற சூழலில்,
பதவி விலகியவர் நிக்சன்.
ஜனநாயகக்
கட்சியினரின் தேர்தல் அலுவலகத்தில் ஊடுருவி ஆவணங்கள் திருடியதாகவும், தகவல்களை குற்ற ஆதாரங்களை மறைத்ததாகவும்,
அதிகமான துஷ்பிரயோகம்
செய்ததாகவும் நிக்சன் மற்றும் அவர் கூட்டாளிகள் மேல் புகார்கள் எழுந்தன. ஒரு
பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்ல, நிக்சன், இறுதியில் பதவி
இழந்தார்.
இப்போது டொனால்ட்
டிரம்ப், அவருக்கும் அவரது
ஆட்களுக்கும், குடியரசுத்
தலைவர் தேர்தலுக்கு முன்பும் பின்பும் ரஷ்யாவோடு கூடா நட்பு இருந்தது என்ற
புகாரைச் சந்திக்கிறார். இந்தப் புகார், அவரை நிழலாய்ப் பின்தொடர்கிறது. அய்க்கிய அமெரிக்க விசுவாசிகளுக்கு, அய்க்கிய அமெரிக்க அரசியல் ஒழுக்கம் எப்படி
சந்தி சிரிக்கிறது என்று காட்ட ‘ரஷ்யா கேட்’
ஒரு நல்ல
எடுத்துக்காட்டாகும்.
குடியரசுத்
தலைவர் போட்டிக்கான பிரச்சாரம் நடக்கும்போது, ஹிலாரி கிளின்டன், ஈமெயில் சர்வர் தொடர்பான பொதுப் பயன்பாட்டு
விஷயங்களை முறை தவறி சொந்தப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து செயல்பட்டார் என்று பல
தகவல்கள் கசிந்தன.
தமக்கு எதிரான
இந்தப் பிரச்சாரத்தில் ரஷ்யாவும் தம் நாட்டு எஃப்பிஅய்யும் இருப்பதாகக் குற்றம்
சொன்ன ஹிலாரி, பிறகு, தமது தோல்விக்கு கசிவுகளே காரணம் என்றார்.
அப்போது எஃப்பிஅய் இயக்குநர் கோமேயின் துணிச்சலை டிரம்ப் பாராட்டினார்.
இப்போது டிரம்ப்
வினோதமான முறையில், ஹிலாரி வழக்கை
எஃப்பிஅய் இயக்குநர் கோமே நடத்தியது சரி அல்ல எனக் காரணம் சொல்லி அவரைப் பதவி
நீக்கம் செய்துள்ளார். தமது செயலை எஃப்பிஅய் நிறுவனம் வரவேற்பதாக வேறு சொன்னார்.
டிரம்ப்
குடியரசுத் தலைவர் ஆன பிறகு, அவரது
கூட்டாளிகளான பால் மேனஃபோர்ட், கார்ட்டர் பேஜ்,
ரோஜர் ஸ்டோன் போன்றோர்,
அவர்களுக்கு ரஷ்யாவோடு
இருக்கும் உறவுகளால் பதவிகள் வகிக்க முடியாமல் போனது. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக
டிரம்ப் நியமனம் செய்யப் பார்த்த மைக்கேல் ஃப்ளின்னும், ரஷ்ய உறவால் பதவி ஏற்க முடியாமல் போனது.
டிரம்ப்பின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜெஃப் செஷன்ஸ், ரஷ்ய உறவு தொடர்பான விசாரணையில் இருந்து,
தமது மாஸ்கோ தொடர்புகளால்
விலகிக் கொண்டார். டிரம்ப் பிரச்சாரத்திற்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்புகள் என,
தமது புலனாய்வு நடந்து
வருவதாக அய்க்கிய அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கோமே தெரிவித்திருந்தார். ‘விசாரணை நடத்துபவரை’ விசாரணை நடத்த முடியாமல், பதவி நீக்கம் செய்துவிட்டார் டிரம்ப். பொறுப்பு
இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரு மெக்கபே, கோமே தமது சகாக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக
சொல்வது சரியல்ல என்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை தொடரப்படும்
என்றும் சொல்லியுள்ளார். கோமேயை நீக்கிய ட்ரம்ப், மெக்காபேயையும், அடுத்தடுத்து வருபவர்களையும் நீக்குவாரா?