தலையங்கம்
மே தினப்
பேரணியின் எச்சரிக்கை!
நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது!
முதலாளித்துவ
நாடாளுமன்ற ஜனநாயகம் முதலாளிகளுக்கு, வசதி படைத்தவர்களுக்கு, அதிகாரத்தில்
இருப்பவர்களுக்கு மட்டுமானது, சாமான்யர்களுக்கு
எதிரானது என்பதை அம்பலப்படுத்தும் பணியை, இன்றைய தமிழக அரசு செம்மையாகச் செய்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அரசு
செயல்பட வில்லை என முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், சாராயக் கடைகளைப் பாதுகாக்க மக்கள் மீது
ஒடுக்கு முறை ஏவுகிற அரசு, விவசாயிகளுக்கு
ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை, மற்றவர்களை கைது செய்யும் அரசு, அந்த அரசின் மக்கள் விரோதத் தன்மைக்கேற்ப மிகச் சிறப்பாகவே இயங்கிக்
கொண்டுதான் இருக்கிறது. அந்த இயக்கத்தின் எல்லைகள் எந்த அளவுக்கு ‘தொலைநோக்கு’ கொண்டவை என்பதை ‘தெர்மகோல்’ ராஜு போன்றவர்கள் நடவடிக்கைகள் போதுமான அளவுக்கு வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில்
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு
சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரம், ஜெயலலிதா
வழியில்தான் பழனிச்சாமி ஆட்சி நடக்கிறது என்பதற்கு சான்று. விவசாய நெருக்கடியின்
சுமை தாளாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிற விவசாயிகளின் தற்கொலையை
கொச்சைப்படுத்துவதை தொழிலாகக் கொண்ட ஆட்சி இது. ஏனென்றால், தீர்வுகள் இன்றி தொடரும் நெருக்கடிகளுக்குக்
காரணம் இந்த அரசு. இனியும் தீர்வு எதுவும் காணத் தயாராக இல்லாத அரசு இது.
சுமங்கலித் திட்டம் இல்லை என்றவர்கள், இன்று விவசாயிகள் தற்கொலை இல்லை என்கிறார்கள். டாஸ்மாக் கடைகளே தமிழ்நாட்டில்
இல்லை என்று சொன்னாலும் நாம் நம்ப வேண்டும் என்பார்கள். அந்தக் களமும் இன்று
பற்றியெரிகிறது.
கழக
ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு வளங்களை கொள்ளை அடித்ததன் விளைவாக உழைக்கும் மக்களின் வாழ்வாதார
நெருக்கடிகள் நாளும் முற்றி வருகின்றன. தங்கள் உண்ணும் உணவு பற்றிய தேர்வை கூட
மறுக்கும் மத்திய ஆட்சி முன் மண்டியிட்டு இருக்கிற மாநில அரசு, பற்றி எரிகிற எந்தப் போராட்டத்துக்கும் பதில்
சொல்ல மறுக்கிறது. பதில் சொல்ல நிர்ப்பந்திக்கும் போராட்டங்களும் மாநிலத்தின்
திசைகளெங்கும் தீவிரமடைகின்றன.
கோவையில் மேதினப்
பேரணியில் கூடிய தமிழகத்தின் உழைக்கும் மக்கள், மத்திய அரசின் பிளவுவாத, கார்ப்பரேட் மதவெறி அரசியலுக்கும்
தமிழ்நாட்டின் கொள்ளை கும்பல் ஆட்சிக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
நெருப்பை
பொட்டலம் கட்ட முடியாது!
(மாலெ தீப்பொறி 2017 மே 01 – 15)