COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 15, 2017

அதிகாரபூர்வமற்ற முறையில்
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை
இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை செய்ய வேண்டும்

தி ஹேக். இங்குதான் சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இந்தியா மனு செய்ததன் பேரில், இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் ஏப்ரல் 2017ல் வழங்கிய மரண தண்டனைக்கு, நெதர்லாண்டின் தி ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தடை வழங்கி உள்ளது.

குல்பூஷன் ஜாதவ், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி. அவர், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில், பாகிஸ்தானுக்கு எதிரான சதி வேலைகளில் இந்தியாவின் உளவாளியாகச் செயல்பட்டார் என மார்ச் 3, 2016ல் கைது செய்யப்பட்டார். இந்தியா, அவர் இரானில் வியாபாரம் செய்து வந்ததாகவும், அவரை பாகிஸ்தான் இராணுவம் இரானுக்குள் வந்து கடத்தி கைது செய்ததாகவும் சொல்லி வருகிறது.
இரண்டு நாடுகளிலும், மிகவும் வலுவான இராணுவ - தொழில் - அரசியல்வாதிகள் அச்சு உள்ளது. இரண்டு நாடுகளின் இராணுவ பட்ஜெட்களும், உயர்ந்து கொண்டே போகின்றன. சமூக செலவினங்கள் குறைந்து, இராணுவ பட்ஜெட் அதிகமாவது, இரண்டு நாடுகளின் மக்களுக்கும் பிணச் சுமைதான். இந்தியாவுடன் நல் உறவு பற்றி பாகிஸ்தானில் பேசுபவர்கள், பாகிஸ்தானோடு நல் உறவு பற்றி இந்தியாவில் பேசுபவர்கள், அவரவர் நாடுகளில், தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.
இப்போதும் காங்கிரஸ் கட்சி, பாஜக அரசை, நீ ஏன் இன்னமும் தனியான ஓர் இராணுவ அமைச்சர் நியமனம் செய்யவில்லை, நீ ஏன் சர்வதேச நீதிமன்றம் சென்றாய், இந்தியா இப்போது சர்வதேச நீதிமன்றம் சென்ற தால், இனி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் இழுக்க வாய்ப்பு உருவாக்கித் தந்து விட்டது என்று கேள்வி எழுப்பி உள்ளது. இந்த தேசபக்த போட்டிமோசமான விஷயமே.
இரண்டு நாடுகளிலும், பாகிஸ்தானிய அல்லது இந்திய உளவாளிகள்/ஒற்றர்கள், பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டைச் சந்திப்பவர்களுக்கு, வாதாட வழக்கறிஞர்கள் முன் வர மாட்டார்கள். தேசபக்திதடுக்கும். மனித உரிமைகள் மீறப்படும். பாகிஸ்தான் உயர்நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால், சர்வதேச நீதிமன்றம் சென்றதாக இந்தியா சொல்கிறது. பாகிஸ்தானுக்கும் இந்திய நீதிமன்றங்களில் நம்பிக்கை கிடையாது. சிக்கிக் கொண்ட, இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்.
பாகிஸ்தான் காஷ்மீரில் தலையிடுகிறது, அதனால் நான் பலுசிஸ்தானில் தலையிடுகிறேன் என நரேந்திர மோடி பேசுகிறார். ரிபப்ளிக் என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை துவங்கியுள்ள அர்ணாப் கோஸ்வாமி போன்ற கார்ப்பரேட் தேச பக்தர்கள், தப்பித் தவறியும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு வரக் கூடாது என முயற்சிக்கிறார்கள்.
குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும். அதிகாரபூர்வமற்ற முறையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை செய்ய வேண்டும். காஷ்மீர் மக்கள் வாழ்க்கையை நாசமாக்குவதை இரண்டு நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பரஸ்பர பகைமைக்குப் பதிலாக, பரஸ்பர நட்பும் ஒத்துழைப்பும் நிலவ பேச்சு வார்த்தைகள் என்ற கடினமானஅதே நேரம் ஒரே திறன்வாய்ந்தஅரசியல் தீர்வை இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

Search