COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, April 13, 2017

ஆர்கே நகர் தொகுதியில் இககமா வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு
இககமாலெ பிரச்சாரம்

அஇஅதிமுக, திமுக கட்சியினரின் பணப்பட்டுவாடாவைத் தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ரத்து செய்தி ஏப்ரல் 10 அன்று வெளியானது. இந்தத் தேர்தலில் இககமாவை ஆதரிப்பது என்ற கட்சியின் முடிவுக்கேற்ப இகக மாலெ தோழர்கள் ஏப்ரல் 5, 6, 7 மற்றும் 9 தேதிகளில் இககமா வேட்பாளர் தோழர் லோகநாதனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இககமா வேட்பாளருக்கு இககமாலெ ஆதரவு தரும் செய்தியுடனான இககமாலெ துண்டறிக்கையுடன் ஏப்ரல் 5, 6, 7 தேதிகளில் வீடுவீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏப்ரல் 9 அன்று இககமாவின் பிரச்சார வாகனத்தில் இககமாலெ தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். நான்கு நாட்களும் பல்வேறு குழுக்களாக நடந்த பிரச்சாரத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், சென்னை மாநகரச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் ஆகியோருடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) புதுக்கோட்டை 6ஆவது மாவட்ட  மாநாடு

இகக (மா - லெ) புதுக்கோட்டை 6ஆவது மாவட்ட மாநாடு தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதன் நினைவரங்கத்தில் மார்ச் 31 அன்று நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் கொடியேற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர்கள் தேசிகன், சத்யமூர்த்தி, சின்னதுரை, திரு மேனிநாதன், வனிதா ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டுக்கு தலைமை தாங்கியது.
பதவிக் காலம் முடியும் மாவட்ட கமிட்டியின் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி முன்வைத்த வேலை அறிக்கை மீது 8 பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். விவாதத்திற்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நான்கு பெண் தோழர்கள் உட்பட 23 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் பழ.ஆசைத்தம்பி தேர்வு செய்யப்பட்டார். மாநில பார்வையாளர் தோழர் இளங்கோவன் மாநாட்டில் வாழ்த்துரையாற்றினர்.
விவசாயத்தை அழிக்க வரும் ஹைட்ரோகார்பன் திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும், விவசாயத்தை நாசம் செய்கிற கால்ஸ் சாராய ஆலை மூடப்பட வேண்டும், விவசாய நிலங்களை பறிக்கிற விதத்தில் சிப்காட்டுக்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது நிறுத்தப் பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விழுப்புரம் 3ஆவது மாவட்ட  மாநாடு, பேரணி

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விழுப்புரம் 3ஆவது மாவட்ட  மாநாடு தோழர் அம்மையப்பன் நினைவரங்கத்தில் மார்ச் 28 அன்று நடைபெற்றது. தோழர் கண்ணம்மாள் கொடியேற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர்கள் கொளஞ்சிநாதன், செண்பகவள்ளி, கணேசன், பெரியான், வீரன் ஆகியோர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டுக்கு தலைமை தாங்கியது.
பதவிக் காலம் முடியும் மாவட்ட கமிட்டியின் செயலாளர் தோழர் வெங்கடேசன் முன்வைத்த வேலை அறிக்கை மீது 19 பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். விவாதத்திற்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டு பெண் தோழர்கள் உட்பட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் எம்.வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டார். மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாநில பார்வையாளர் தோழர் தனவேல் மாநாட்டில் வாழ்த்துரையாற்றினர்.
விவசாயக் கடன், மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும், பெண்கள் சுய உதவிக்குழுக்களை குறிவைத்து செயல்படும் தனியார் நுண் கடன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும், பழங்குடியின குடும்பங்களுக்கு தலா 10 ஏக்கர் நிலம் வேண்டும், 2006 வன உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும், சின்னசேலம் கூகையூர் கூட்டுரோடு அருகில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆட்டுப்பண்ணையை மக்களுக்கு பயன்படும் வகையில் பராமரித்து, மக்களுக்கு பல ரக ஆடுகள் இலவசமாக வழங்கி, விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கை வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டை ஒட்டி மார்ச் 29 அன்று உளுந்தூர்பேட்டையில் நூற்றுக்கணக்கான கிராமப்புற வறிய மக்கள் கலந்துகொண்ட பேரணியில் இககமாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்


விழுப்புரம் மாவட்டம் அசகளத்தூரில் குடிநீர் வழங்கக் கோரி ஏப்ரல் 7 அன்று சாலை மறியல் நடத்தப்பட்டது. இககமாலெ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்ததால் சாலை மறியல் முடித்துக் கொள்ளப்பட்டது.

(மாலெ தீப்பொறி 2017 ஏப்ரல் 16 – 30)

Search